நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 6 ஜூன், 2013

மலேசியா உலகத் தமிழாசிரியர் மாநாடு நிறைவு விழா- காட்சிகள்மலேசிய அமைச்சர் டத்தோ மு.சரவணன் அவர்களிடம் மு.இளங்கோவன் அவர்கள் நூல்களை அளித்தல். அருகில் பேராசிரியர் ம.மன்னர்மன்னன் அவர்கள்

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில்  மூன்றுநாள் நடைபெற்ற உலகத் தமிழாசிரியர் மாநாடு நேற்று(05.06.20130) முற்பகல் நிறைவடைந்தது. நிறைவு விழாவில் உலகத் தமிழாசிரியர் மாநாட்டின் தலைவர் பேராசிரியர் மன்னர்மன்னன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

மலேசியாவின் இளைஞர் நலன், விளையாட்டுத் துறையின் துணைஅமைச்சர் டத்தோ மு. சரவணன் அவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு நிறைவுரையாற்றினார். தமிழ்மொழியின் சிறப்பினையும், தமிழர்களின் பண்டைய வாழ்க்கை முறையினையும் எடுத்துரைத்து அரியதோர் இலக்கிய உரை வழங்கினார். தேவாரம்திருவாசகம், கம்பராமாயணம், பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து உள்ளிட்ட கவிஞர்களின் - படைப்புகளிலிருந்து இலக்கிய நயம் பொருந்திய வரிகளை எடுத்துரைத்துப் பேசி அவையினரின் உள்ளங்களில் இடம்பெற்றார்.

சமூகத்தில் மாற்றங்களைக் கொண்டுவரும் ஆற்றல் ஆசிரியர்களிடம் மட்டுமே உள்ளது என்று எடுத்துரைத்து நல்ல மாணவர்களைச் சமூகத்திற்கு உருவாக்கி வழங்கவேண்டும் என்று துணை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களிடத்தில் வேண்டுகோள் வைத்தார்.

ஆசிரியர்கள் தொடர்ந்து கற்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்ட அமைச்சர், உங்களுக்கு எது மறுக்கப்பட்டதோ அதனை எல்லாம் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் வைத்தார்.

மாநாட்டில் மலேசியா, சிங்கப்பூர், இந்தியா, ஆத்திரேலியா, கனடா, இலங்கை, அமெரிக்கா,தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 520 பேராளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.

நிறைவு விழாவில் பேராசிரியர் ம.மன்னர்மன்னன் வரவேற்புரை

டத்தோ மு.சரவணன் அவர்களுடன் பன்னாட்டுப் பேராளர்கள்

கருத்துகள் இல்லை: