நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 20 ஜூன், 2013

பொறியாளர் ஆ.கருப்பையா மறைவு

பொறியாளர் ஆ.கருப்பையா அவர்கள்

நெய்வேலியில் பொறியாளராகப் பணியாற்றி, பணி ஓய்விற்குப் பிறகு விருத்தாசலத்தில் தங்கித் தமிழ்ப்பணியாற்றிய திருக்குறள் தொண்டரும் இயற்கைநெறி வாழ்வினருமான ஐயா ஆ.கருப்பையா அவர்கள் திடுமென இயற்கை எய்தினார் என்னும் செய்திகேட்டு வருந்துகின்றேன். அன்னாரின் பிரிவால் வருந்தும் தனித்தமிழ் அன்பர்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த வருத்தங்கள்.


பொறியாளர் ஆ.கருப்பையா அவர்கள் புதுக்கோட்டையை அடுத்த சிற்றூர் ஒன்றில் பிறந்தவர். நெய்வேலியில் அவர் தங்கியிருந்தபொழுது தமிழ்ப்பற்றாளர்கள் பலருக்கும் பலவகையில் உதவியவர். மாணவராற்றுப்படை என்ற என் முதல் நூலை வெளியிட்டு மகிழ்ந்த பெருமைக்குரியவர். விருத்தாசலம் செல்லும்பொழுதெல்லாம் ஐயா அவர்களையும் அம்மா அவர்களையும் கண்டு மகிழ்வது வழக்கம். மிகச்சிறந்த தமிழ்த்தொண்டரை இழந்து வருந்துகின்றோம். அன்னாரின் உடல் இன்று அவர் பிறந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக அறிகின்றேன்.

ஏத்தும் புகழின் கருப்பையா
இருகண் சிந்தி அழுகின்றோம்!


கரிகள் நிறைந்த நெய்வேலி
கணக்கில் தமிழரைக் கண்டதுண்டு.
எரிபோல் பேசும் பெரியாரின்
இளவல் பலரும் அங்குண்டு.
எரிபோல் பேசும் பெரியாரின்
இனத்துள் ஒருவராம் கருப்பையா
அரிமா நேற்று இறந்தமையை 
அறிந்து கண்ணீர் உகுக்கின்றேன்!

மூத்தத் தமிழ்த்தாய் தொண்டராக
மூவேளை தமிழுக்கு அவர்உழைத்தார்.
காத்த மறவர்கள் கணக்கிலையே!
கமுக்கம் நிறைந்தது அவர்வாழ்வு!
காத்த மறவரின் துணையாகக்
கண்ணிகர் மகனைத் தாமளித்தார்!
ஏத்தும் புகழின் கருப்பையா
இருகண் சிந்தி அழுகின்றோம்!

பூத்த மலர்போல் சிரித்திடுவாய்!
பொய்மை கண்டு கொதித்திடுவாய்!
கூத்துத் தமிழை முன்னேற்றக்
கோடித் திட்டம் வகுத்தனையே!
கூத்துத் தமிழின் சிறப்புணரக்
குறள்மறை போதும் என்றுணர்ந்து
தாத்தன் வள்ளுவன் தமிழ்பேசித்
தமிழகம் எங்கும் பறந்தனையே!

இயற்கை உணவு நீபடைப்பாய்!
இளகிய நெஞ்சில் தமிழ்தேக்கிச்
செயற்கை மருந்தைத் தவிர்த்திடுவாய்!
செய்வாய் நூறு தமிழ்மருந்து!
செயற்கை மருந்தைச் சேர்க்காமல்
சிறந்த வாழ்வு போதுமெனக்
கயல்புரள் கடலாம் வாழ்வொதுக்கிக்,
கண்ணில் நீங்கிப் போயினையோ!

கருத்துகள் இல்லை: