நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 13 டிசம்பர், 2012

குவைத் நாட்டில் இரண்டுநாள் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி




குவைத் நாட்டில் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சி 2012 டிசம்பர் 14-15 (வெள்ளி,சனி)ஆகிய இரண்டு நாள் நடைபெறுகின்றது. இதற்கான ஏற்பாடுகளைத் தமிழ்நாடு பொறியாளர் குழுமமும், பொங்குதமிழ் அறக்கட்டளையும் செய்துள்ளன. 

ஃபிந்தாசு அரங்கில் நடைபெறும் விழாவில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில் தமிழர்களின் மரபுவழி வாழ்க்கையை நினைவூட்டும் காட்சிப் பொருள்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

சிறப்புரைகள்

தமிழர் பண்பாட்டுக் க
ண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினராகப் புதுவைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அழைக்கப்பட்டுள்ளார். தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்தும், தமிழர் பண்பாட்டு வாழ்க்கை குறித்தும் உரையாற்ற உள்ளார். அதுபோல் தமிழ் இணையப் பயிலரங்கத்திலும் கலந்துகொண்டு தமிழ் இணைய வளர்ச்சியை அறிமுகப்படுத்த உள்ளார்.

கண்காட்சியில் தமிழர்களின் பண்டைய வாழ்க்கையை நினைவூட்டும் பாலை திரைப்படம் காட்சிப்படுத்தப்பட உள்ளது. நாட்டுப்புற நடனம், பரதநாட்டியம் இசைப்பாட்டு நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன.

கண்காட்சித் திறப்புவிழாவின் வரவேற்புரையை குரு. முத்துக்குமார் வழங்குகின்றார். இலட்சுமி நாராயணன் அறிமுக உரையாற்றுகின்றார். தமிழர் பண்பாடு குறித்து வளநாடன், செந்தமிழ் அரசு, இராவணன் உரையாற்றுகின்றனர். சிலப்பதிகாரம் குறித்து பழ.கிருட்டிணமூர்த்தி சொற்பொழிவாற்றுகின்றார். குவைத்தில் வாழும் பொறியாளர்கள் பலர் உரையாற்றுகின்றனர்.

கும்பகோணம் டிகிரி காபி

அரங்கில் கும்பகோணம் டிகிரி காபி, சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், கூழ், போன்றவையும் எலுமிச்சை சோறு, சாம்பார் சோறு உள்ளிட்ட உணவுகளும் விற்கப்படும். வெற்றிலைப் பாக்கு, சுக்கு காபி பானகம், மூலிகைக்குடிநீர் போன்றவை இலவசமாக வழங்கப்படும். 

பொருட்காட்சி

பழங்குடியினர் ஓவியங்கள், குறுந்தகடுகள், மென்பொருட்கள், நூல்கள் வாங்கக் கிடைக்கும். 2000க்கும் மேற்பட்ட படங்கள், தமிழகக் கலைப்பொருட்கள், உழவுக்கருவிகள், விளையாட்டுப் பொருட்கள், பனை ஓலைப்பொருட்கள் உள்ளிட்ட தமிழர் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் விளக்கும் விதம்விதமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும்.

மலர் வெளியீடு

கண்காட்சிக்கு வருகைதரும் தமிழ்நாடு பொறியாளர் குழுமம், பொங்குதமிழ் மன்றத்தின் உறுப்பினர்களுக்குத் “தமிழ் மருத்துவம்” என்ற நூல் இலவசமாக வழங்கப்படும். பல்வகைக் குறுந்தகடுகளும் சிறுநூல்களும் கண்காட்சியில் வெளியிடப்படும், பயனுள்ள பலசெய்திகளை உள்ளடக்கிய கண்காட்சி மலர் வெளியிடப்படும். 

கண்காட்சி காலை 10மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு நாளும் நடைபெறும். அனுமதி இலவசம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடன், சேது மாதவன்,இராமன், உள்ளிட்டோர் செய்துவருகின்றனர். 

குவைத் தொடர்பு எண்: திரு. தமிழ்நாடன் : 6685 2906 திரு. சேது மாதவன்: 65094097.

1 கருத்து:

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

அய்யா, வணக்கம்.
ஆகா... இரண்டுநாள் தமிழ்மணம் கமழும் -ஐம்புலனுக்கும் தமிழையே நுகரத்தந்து- விழா நடத்தும் குவைத் பொறியாளர் குழுமத்திற்கும், தங்களு்க்கும் எனது வாழ்த்துகள்...
இரண்டுநாள் செய்திகளையும் படங்களோடு தாருங்கள்.
எனது மகள் தன் கணவர் குழந்தைகளுடன் முன்பு குவைத்தில் இருந்தார் தற்போது துபையில் இருக்கிறார்... முன்னரே தெரிந்திருந்தால் தொடர்பு கொண்டு தங்களை நேரில் வந்து சந்திக்கச் சொல்லியிருப்பேன்... தாழ்விலை.
மகிழ்ச்சி... வாழ்த்துகள். வணக்கம்.