நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

குவைத் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியில் என் பட்டறிவு…



       குவைத் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் பொறிஞர் சேதுமாதவன் அவர்களுடன் மு.இளங்கோவன்

  குவைத் பொங்கு தமிழ் மன்றமும் தமிழ்நாடு பொறியாளர் குழுமமும் ஏற்பாடு செய்திருந்த இரண்டுநாள்(14,15-12.2012) கண்காட்சிக்குச் சிறப்பு விருந்தினனாகக் குவைத் நாட்டிற்கு அழைக்கப்பெற்றிருந்தேன். திரு. தமிழ்நாடன் அவர்கள் இணையம் வழியாக என் முயற்சிகளை அறிந்து எனக்கு இந்த வாய்ப்பை வழங்கினார்.


  11.12.2012 இரவு புதுவையிலிருந்து புறப்பட்டு நள்ளிரவு 1 மணியளவில் சென்னை மீனம்பாக்கம் வானூர்தி நிலையம் வந்தேன். நண்பர் சீனு அவர்கள் என் பயண ஏற்பாட்டுக்கு உதவினார். சென்னை வானூர்தி நிலையம் வந்தவுடன் தம்பி சிலம்பரசன் அவர்கள் குவைத் கண்காட்சிக்குக் கொண்டுபோவதற்குத் திருவள்ளுவர் சிலை, துணிமணிகள் சிலவற்றுடன் வந்து காத்திருந்தார். அவற்றை வாங்கிக்கொண்டேன். வானூர்தி நிலைய ஆய்வுகளுக்கு என்னை உட்படுத்திக்கொண்டேன். 

  காலை 5.45 மணிக்குக் குவைத் வானூர்தி புறப்பட்டது. குவைத் நேரப்படி காலை 8.30(இந்திய நேரம்11 மணி) மணிக்குக் குவைத் வந்து சேர்ந்தேன்.

  வானூர்தி நிலைய ஆய்வுகளை முடித்துக்கொண்டு வெளியே வந்தபொழுது பொறியாளர் சேது மாதவன்(கடலூர்) எனக்காகக் காத்திருந்தார். இருவரும் இணைந்து அவரின் இல்லத்துக்கு மகிழ்வுந்தில் சென்றோம். குவைத் நாட்டின் திட்டமிட்ட நகரமைப்புகளும் சாலை வசதிகளும் எனக்குப் பெரும் மகிழ்வைத் தந்தன. போக்குவரவு நெறிமுறைகளை ஓட்டுநர்கள் சிறப்பாகப் பின்பற்றுகின்றனர். எல்லாம் நம்மூர் ஓட்டுநர்கள்தான் கோலோச்சுகின்றனர்.


குவைத் பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் மு.இளங்கோவன்

  குவைத் நகரத்தின் தெருக்கள் தூய்மையாக இருந்தன. சாலையை ஒட்டி மணல்வெளிகள் காட்சியளிக்கின்றன. நண்பர் சேதுமாதவன் அவர்கள் குவைத் நாட்டின் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே வந்தார். பொருட்களைக் கொண்டுபோய் வீட்டில் வைத்தோம். ஒரு குளியல் நடந்தது. இருவரும் பகலுணவுக்கு அருகில் இருந்த பாகில்(Fahaheel) நகரத்திற்குச் சென்றோம். தமிழர்கள் நடத்தக்கூடிய கடை என்பதால் தமிழர்கள் கடைக்குள் வருவதும் உரையாடியபடி உண்பதும் வெளியேறுவதுமாக இருந்தனர். உணவுக்குப் பின் இருவரும் அறைக்குத் திரும்பினோம். ஓய்வெடுக்கும்படி என்னைப் பணித்தனர். சிறிது நேரம் பயணக்களைப்பில் கண்ணயர்ந்தேன்.

  மாலையில் நண்பர் பழமலை கிருட்டினமூர்த்தி அவர்கள்(கங்கை கொண்டசோழபுரம் அடுத்த சம்போடை ஊரினர்) என்னைக் காண வந்தார். இருவரும் முன்பே அறிமுகம் ஆனவர்கள். இருவரும் அருகில் இருந்த நகரத்திற்கு இரவு உணவுக்குப் புறப்பட்டோம். குவைத் – சவுதி சாலையில் வண்டியை ஒரு பெரும் ஓட்டம் விட்டார்.

  30 ஆம் எண் சாலையை ஒட்டி இருந்த கன்னெய்(பெட்ரோல் தூய்மைசெய்யும் நிலையங்கள்) நிலையங்களை(Refineries) எனக்கு விளக்கியபடி வந்தார். இரவில் ஒளிவெள்ளத்தில் கன்னெய்த் தூய்மை நிலையங்கள் மின்னின. பாதுகாப்பு மிகுதி என்பதால் பல அடுக்கு முள்வேளி இட்டுக் காத்து வருகின்றனர். வெளி ஆட்கள் உள்ளே செல்ல இயலாது என்று கூறி ஒருவாறு எனக்குக் கன்னெய்த் தூய்மைப்பணிகளை விளக்கினார். 

  கடற்கரையின் ஓரமாகத் தூய்மைப்பணி நிலையங்கள் இருப்பதால் வெளிநாடுகளுக்கு எண்ணெய்க் கப்பலில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற விவரத்தையும் சொன்னார். குவைத் நாடு வெப்பம் மிகுதி என்று அறிந்து அதற்கான வெப்ப உடைகளுடன் வந்திருந்தேன். இங்கு வந்த பிறகுதான்  கடுங்குளிரும் இருக்கும் என்று அறிந்தேன். உடல் நடுங்கின. நண்பர்களின் குளிர் ஆடைக்குள் மறைந்தேன்.

  இரவு உணவுக்கு ஒரு தமிழரின் கடைக்கு அழைத்துச் சென்றார் நண்பர் சம்போடை கிருட்டினமூர்த்தி. ஒரு கோழியை உறித்து எண்ணெயில் பொறித்துக் கொண்டு வைத்தனர். முன்பாக ஒரு பரோட்டைவை உடைத்து உள்ளே போட்டிருந்ததால் கோழியின் சில பகுதிகளை மட்டும்தான் உண்ணமுடிந்தது. இருவரும் திணறினோம். அளவாக உண்டு முடித்து மீதியை வீட்டுக்குக் கட்டிக்கொடுக்கும்படி வேண்டினோம். அமெரிக்காவில் இதே முறை இருப்பதை உணர்ந்தவன் அல்லவா? பெருமையோடு மீதியைக் கட்டிக்கொண்டோம். இந்தக் காட்சியை நம் ஊரில் உள்ள மக்கள் பார்த்திருந்தால் திட்டித் தீர்த்திருப்பார்கள்.

  குளிர்க்குடிப்பு ஒன்றை வாங்கிக்கொண்டு நண்பர் கிருட்டினமூர்த்தியின் அறைக்குச் சென்றோம். அங்குச் செயங்கொண்டம், மதுரை சார்ந்த ஊரிலிருந்து வந்த தோழர்கள் தங்கியிருந்தனர். அவர்களைக் கண்டு உரையாடி அவர்களுக்கு என் வாழ்த்தைச் சொல்லி விடைபெற்றேன்.

  நண்பர் கிருட்டினமூர்த்தி அவர்கள் பள்ளி இறுதி வகுப்புவரை படித்தவர். ஆனால் சிலப்பதிகாரம், கம்பராமாயணம், தமிழ்க்கவிதைகளில் நல்ல பயிற்சியுடையவர். குவைத் வாழ் தமிழர்களால் நல்ல பேச்சாளர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் தமிழ் இலக்கியப் போக்குகள் குறித்து உரையாடியபடி நான் தங்குமிடம் வந்து சேர்ந்தேன். இரவு சிறிது நேரம் இணையத்தில் உலவினேன். குடும்பத்தாருக்குச் செய்தி தெரிவித்தேன். நாளைய நிகழ்வுகளை மனத்தில் தேக்கியபடி ஓய்வுகொண்டேன்…

கருத்துகள் இல்லை: