நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 28 டிசம்பர், 2012

தமிழ் இணைய மாநாடு- முதல்நாள் நிகழ்வுகள்




முனைவர் மா.இராமநாதன் அவர்கள் தமிழ் இணைய மாநாட்டு ஆய்வுக்கட்டுரை மலர் வெளியிடுதலும் முனைவர் செ.வை.சண்முகம் அவர்கள் பெறுதலும்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இன்று(28.12.2012) காலை 10.15 மணிக்கு உலகத் தமிழ் இணைய மாநாடு தொடங்கியது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் அரசர் வாழ்த்தும் இசைக்கப்பட்டன. மாண்புமிகு துணைவேந்தர் முனைவர் மா.இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றி  மாநாட்டைத் தொடங்கிவைத்தார். 

மொழியியல் துறைப் பேராசிரியர் முனைவர் மா. கணேசன் அவர்கள் வரவேற்புரையாற்றினார். உத்தமம் அமைப்பின் தலைவர் மணி. மணிவண்ணன் அவர்கள் தலைமையுரையாற்றினார். துணைவேந்தர் முனைவர் மா.இராமநாதன் அவர்கள் மாநாட்டின் தொடக்கவுரையாற்றி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்தார். மாநாட்டு மலரினைத் துணைவேந்தர் வெளியிட முனைவர் செ.வை.சண்முகம் பெற்றுக்கொண்டார்.

திரு.சிவாப்பிள்ளை(இலண்டன்), திரு.மணியம்(சிங்கப்பூர்), திரு.அனுராஜ் (இலங்கை),முனைவர் இல.இராமமூர்த்தி(மைசூர்), திரு.இளந்தமிழ் (மலேசியா) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடக்கவிழாவிற்குப் பிறகு உலகத் தமிழ் இணையமாநாட்டின் கண்காட்சியையும், மக்கள் அரங்கத்தையும் துணைவேந்தர் மருத்துவர் மா.இராமநாதன் அவர்கள் திறந்துவைத்தார். திரு.அ.இளங்கோவன், வள்ளி மென்பொருள் நிறுவன உரிமையாளர் ஆனந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

பொது அமர்வில் அடோபி நிறுவனத்தின் பொறுப்பாளர் திரு மோகன் கோபால கிருட்டிணன் அவர்கள் மையக்கருத்துரை வழங்கினார்.  மக்கள் அரங்கில் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் தலைமையில் முனைவர் மு.இளங்கோவன் கட்டுரை படித்தார். அதனைத் தொடர்ந்து துரை. மணிகண்டன், முனைவர் மு.பழனியப்பன், பேராசிரியர் சீதாலெட்சுமி, திரு. யோகராஜ் ஆகியோர் கட்டுரை வழங்கினர். ஆய்வரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கட்டுரைகளை வழங்கினர். 

உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்குத் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்னாடகா சார்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். மேலும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இலண்டன் உள்ளிட்ட அயல்நாடுகளிலிருந்து பேராளர்கள் கலந்துகொண்டனர்.

கண்காட்சி, மக்கள் அரங்கு, ஆய்வரங்கு நாளை(29.12.2012) காலை 10 மணிமுதல் இரவு 8 மணிவரை தொடர்ந்து நடைபெறும்.  


துணைவேந்தர் மா.இராமநாதன் அவர்கள் குத்துவிளக்கேற்றுதல்



உலகத் தமிழ் இணைய மாநாட்டு மேடையில் அறிஞர்கள்



மக்கள் அரங்கிற்கு வருகை தந்த துணைவேந்தர் மா.இராமநாதன் அவர்களுடன் மு.இளங்கோவன்,அ.இளங்கோவன், மா.கணேசன், துரை. மணிகண்டன்,  வள்ளி ஆனந்தன், ப.அர.நக்கீரன்




தமிழ் இணையப் பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் ப.அர.நக்கீரன் அவர்கள் தலைமையுரை, மு.இளங்கோவன்(கட்டுரையாளர்)


பொறியாளர் வள்ளி ஆனந்தன் அவர்களுடன் மு.இளங்கோவன்

1 கருத்து:

Unknown சொன்னது…

Glad to see you in all matters connected with Tamil internet