நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 21 டிசம்பர், 2011

மருந்து மூல நூலாசிரியரும் உரையாசிரியர்களும்

திருக்குறள் நூல் பன்னெடுங் காலத்திற்கு முன்பு பெரும்பேராசான் திருவள்ளுவரால் தமிழகத்தின் அறிவுக்களஞ்சியமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் சுவையுணர்ந்த சான்றோர்கள் பலர் அவர்தம் காலச்சூழல், பட்டறிவு, கல்வியறிவு, கொள்கை ஆகியவற்றிற்கு ஏற்பத் தத்தம் விளக்கங்களைக் - கருத்துகளை உரையாக வரைந்துள்ளனர். இவ்வுரைகளில் மூல நூலாசிரியர் வழிநின்றும், மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணாகவும் செய்திகள் இடம்பெற்றுள்ளன. மூல நூலாசிரியர் சுருக்கிச் சொன்னதை விரித்தும், அவர் ஒரு கருத்து எல்லையில் நின்று உரைத்ததைத் தம் கால நூலறிவுகொண்டு பன்மடங்கு வகைப்படுத்தியும் உரைக்கும் போக்கினையும் உரையாசிரியர்கள் கைக்கொண்டுள்ளனர். இவ்வுரை வரையும் போக்குகள் பல அறிவுக்கருத்துகளை முன்வைக்கின்றன. இதனை மருந்து எனும் அதிகாரக் குறட்பாக்களின் துணைகொண்டு அவற்றிற்கு எழுந்த பல்வேறு உரைகளை ஒப்பிட்டு விளக்கும் நோக்கில் இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது.

மருந்து அதிகாரத்தின் சிறப்பு

திருக்குறளின் அனைத்து அதிகாரச் செய்திகளும் முதன்மை வாய்ந்தவையாகும். திருவள்ளுவரே தம் ஒவ்வொரு அதிகாரத்தையும் முதன்மைப்படுத்தியும், தம் ஒவ்வொரு கருத்துகளையும் வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் உயர்வுப்படுத்தியும் உரைப்பதை அவரின் குறட்பாக்கள் வழியாகவே உணரமுடியும்.

“யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற” (குறள் 300)

என்று வாய்மையின் மேன்மையைப் போற்றிப் பாடுவார். அவரே,

“பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற” (குறள் 61)

எனக் குழந்தைப்பேற்றின் சிறப்பினைக் கொண்டாடுவார்.

இவ்வாறு திருவள்ளுவர் எடுத்துரைக்கும் அனைத்துச் செய்திகளும் உயர்வானதாகவே இருக்கின்றன. திருவள்ளுவரின் மற்ற அதிகாரங்களுக்கு இல்லாத தனிச்சிறப்பு “மருந்து” அதிகாரத்திற்கு மட்டும் உண்டு.

கடவுள் வாழ்த்தில் கடவுளின் பெருமையைப் போற்றுவார். புதல்வரைப் பெறுதல் அதிகாரத்தில் மக்கள் பேற்றின் மாண்பினை எடுத்துரைப்பார். ஆனால் மருந்து எனும் அதிகாரத் தலைப்பிட்டு எழுதிய திருவள்ளுவர் மருந்து வேண்டாம் என்று புதுமையான முறையில் கருத்தினை முன்வைக்கின்றார். திருவள்ளுவர் குறிப்பிடும் மருத்துவமுறை நோய் வராமல் காக்கும் தடுப்பு முன்னெச்சரிக்கை மருத்துவமுறையாகும். உணவுச்சார்பு, பழவினை, மரபுவழி(Generation), சுற்றுச்சார்பு காரணமாக நோய் வந்தால் அதனைப் போக்கிக்கொள்ளும் முறையினையும் திருவள்ளுவர் தம் மெய்யறிவு புலப்பட வரைந்துள்ளார்.

மருந்து என்னும் அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள குறட்பாக்கள் உணவே மருந்து என்னும் வாய்மொழிக்கு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்குகின்றன. மேலும் இவ்வதிகாரக் குறட்பாக்களுக்கு உரையாசிரியர்கள் வரைந்துள்ள உரைகள் மருத்துவம் - உடல் ஓம்பல் குறித்த மேலதிகத் தகவல்களைத் தருகின்றன.

திருக்குறளின் மருந்து அதிகார முதல் குறட்பா ஊதை(வளி), பித்தம், கோழை(ஐ) என்னும் மூவகை உடற்கூறும் மிகினும் குறையினும் நோய் உண்டாகும் என்று பொதுவாகக் குறிப்பிடுகின்றது. அதனை அடுத்து நோய் வராமல் தடுக்கும் முற்காப்பினை அடுத்த ஆறு குறட்பாக்கள் குறிப்பிடுகின்றன. நிறைவாக உள்ள மூன்று குறட்பாக்களில் உணவுத் தவறாலும், பிற காரணங்களாலும் நோய் வந்துற்றபொழுது மருத்துவர் செய்யும் மருத்துவமுறைகள்- நோயாளிகளின் கடமைகளைக் குறிப்பிடுகின்றன.

திருவள்ளுவர் தமிழ் மக்களின் வாழ்வியல்-அரசியல்-வணிகம்-மெய்ப்பொருளியல் முதாலன எண்ணங்களைப் பதிவுசெய்தவர். அதுபோலவே தமிழக மருத்துவமுறைகளை உளங்கொண்டு தம் குறட்பாக்களை எழுதியுள்ளார். அதனை உணராதவர்போல் பரிமேலழகர் வடமொழிச் சார்பான விளக்கங்களைப் பல இடங்களில் முன்வைத்துள்ளார். குறிப்பாக மருந்து அதிகாரத்தில் பரிமேலழகர் ஆயுர்வேதம் என்னும் ஆரிய மருத்துவநூல் முறையைப் பின்பற்றி உரை வரைந்திருப்பதைப் பாவாணர் போன்ற உரையாசிரியர்கள் தக்கவாறு தம் உரைகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.

மாந்த உடல்களை நோய் தாக்குவதற்குப் பல காரணங்களை இன்றைய மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. மரபு வழியாகவும், நோய்த்தொற்று அடிப்படையிலும், உணவு, உடை, நஞ்சு, போர், அச்சம், சுற்றுச்சூழல்(காற்று, ஒலி, நீர்) முதலியவற்றின் காரணமாகவும் நோய் மாந்தர்களை, விலங்குகளை, பறவைகளைத் தாக்குகின்றன. திருக்குறள் ஆசிரியரோ சுருக்கிச்சொல்வதுபோல் உடலில் உள்ள ஊதை(வளி), பித்தம், கோழை என்னும் மூன்றும் தம் சுரத்தல் தொழிலில் மிகுதியாக இருப்பினும் குறைவாக இருப்பினும் உடலில் நோய் உண்டாகும் என்று குறிப்பிடுகின்றார்.

ஊதை, பித்தம், கோழை(ஐ) என்னும் மூன்றும் உடல் இயக்கத்திற்கு இன்றியமையாதன. மூச்சு, பேச்சு, உட்பொருள் இடம் மாற்றம், வெளியேற்றத்திற்குத் தனியாகவும் பிற தாதுக்களுடன் இணைந்தும் ஊதை(வளி) செயல்புரிகின்றது. அதுபோல் நாம் உண்ணும் உணவு செரிப்பதற்குப் பெரிதும் உதவுவது பித்தநீர் ஆகும். தசைநார்களின் மழமழப்பான இயக்கத்திற்குக் கோழை உதவுகின்றது. இவை மருத்துவ அறிஞர்களின் கருத்தாக இருப்பதைப் பாவாணர் கற்று உணர்ந்து தம் உரையில் எழுதியுள்ளார். இம்மூன்றும் குறைவதற்கும் மிகுவதற்கும் பல காரணங்கள் உண்டு. உணவு, உடை, செயல்கள், ஒவ்வாமை, பழக்கவழக்கங்கள், மரபுவழி எனக் காரணங்களைச் சுட்டலாம். இம்மூன்றின் இயக்கமும் சரியாக இருக்கும்பொழுதே உடல்நோய் இல்லாமல் இருக்கும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார்.

பாவாணர் போன்ற தமிழ்நெறி சார்ந்தவர்கள் திருவள்ளுவரின் கருத்துக்கு இயையவே உரை கண்டுள்ளனர். ஆனால் பரிமேலழகரோ மிகினும் குறையினும் என்பதற்கு உணவும் செயலும் அவரவர் உடல் வலிவுக்குத் தகுந்தவாறு இருக்க வேண்டும் எனவும் இதில் மிகுதியாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் நோய் உண்டாகும் எனவும் விளக்கம் தருகின்றார்.
பரிமேலழகர் உரையின்படி நோய்க்குக் காரணம் உணவும், செயலும் மிகுவதும் அல்லது குறைவதும் என்பது பெறப்படுகின்றது. மணக்குடவரும் உணவும் உறக்கமும் இணைவிழைச்சும் தன் உடம்பின் அளவிற்கு மிகினும் குறையினும் நோய்தரும் என விளக்கம் தருகின்றார்.

பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகள் சரி எனப்படினும் ஆனால் இவை மூல நூலாசிரியரின் கருத்துக்கு முரணியதாகப்படுகின்றது. ஏனெனில் வள்ளுவப் பெருந்தகை தம் குறட்பாவில் வளி முதலான மூன்றும் என்று குறித்தாரேயன்றி, உணவையோ, செயலையோ நேரடியாகத் தம் குறட்பாவில் இடம்பெறச் செய்தாரில்லை. எனவே பரிமேலழகரும் மணக்குடவரும் கூறும் கருத்துகளை ஏற்கத் தயக்கம் ஏற்படுகின்றது.

உணவுநெறி

உடல் தோற்றம், செயல்பாடுகள், அறிவுமலர்ச்சி, நோயின்மை இவற்றிற்குத் தக்க உணவுகளே அடிப்படையாக அமைகின்றன. இத்தகு உணவினைப் பயன்படுத்தும் முறைகளில் மாறுபாடுகள் உண்டானால் மேற்கண்ட யாவும் குலையும். பெரும்பாலும் நோய்களுக்குக் காரணமாக இருப்பவை உண்ட உணவு செரிக்காமல் இருப்பது, பொருந்தா உணவு, மிகை உணவு என்பனவாகும். எனவே உடல் பாதுகாப்பு, வாழ்க்கைக் காப்பிற்கு உதவும் உணவுகளை உண்ணுவதாலும், உண்ணாமையாலும் ஏற்படும் நோய்களை - உடல்மாறுபாடுகளைத் திருவள்ளுவர் ஆழமாகச் சிந்தித்துள்ளார். இதற்கென இவர் ஆறு குறட்பாக்களைத் தருகின்றார்.

முன்பு உண்டது செரித்துப் பசித்த பிறகு உண்ண வேண்டும்(944). அளவுடன் உண்ணவேண்டும்(946). குறைவாக உண்ணவேண்டும்(947) உடல்கூறு, பருவம், விருப்பம், காலம், இடம் இவற்றிற்கு மாறுபாடு இல்லாத உணவை உண்ணவேண்டும்(945). நாவின் சுவைக்கு இடம் தராமல் வயிற்றில் வெற்றிடம் இருக்கும்படி உண்ணவேண்டும் என்று உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்தும்படி குறிப்பிடுகின்றார். மேற்கண்ட கருத்துகளைத் திருக்குறளின் வழியாக அறியும் அதே நேரத்தில் உரையாசிரியர் பரிதியார், செரித்தால் சாமம் பார்த்து அன்னம் இரண்டுகூறும் தண்ணீர் ஒரு கூறும் வாயு சஞ்சரிக்க ஒருகூறும் வாத பித்த சிலேட்டுமத்திற்கு வேண்டாக் கறியைவிட்டு அசனம் பண்ணக்கடவன்” என விளக்குவது உணவு உண்ணும்பொழுது கவனத்தில்கொள்ளவேண்டியதை நினைவூட்டுகின்றது.

எனவே நம் முன்னோர்கள் உணவு உண்ணுவதில் மிகச்சிறந்த நெறிகளைப் பின்பற்றியதால் நெடிதுய்க்கும்(943) முறையினைத் தெரிந்துள்ளனர் என்பது புலனாகின்றது.

“மாறுகொள்ளாத உண்டி”யை உண்ணும்படி வள்ளுவரும் வள்ளுவர் குறளுக்கு உரைவரைந்த உரையாசிரியர்களும் வலியுறுத்தியுள்ளனர். மாறுகொள்ளுதல் என்பது உண்ணும் அளவு, காலம், சுவை, வீரியம் இவற்றில் இருத்தல்கூடாது. உண்ணும் அளவில் மிகுதலும், பகலில் உண்பதை இரவிலும், இரவில் உண்பதைப் பகலிலும், மழைக்காலத்தில் உண்பதை வேனிற்காலத்திலும் வேனிற்காலத்தில் உண்பதை மழைக்காலத்திலும் மாற்றி உண்பதும், சுவை கருதி நெய்யும் தேனும் சம அளவுகலந்து உண்டால் நஞ்சாக மாறிக்கொள்ளும் என மணக்குடவர் உரையில் விளக்கம் தருவர்.

இன்றைய நிலையில் Food Poison எனும் நோய்க்கு இதுவே காரணம். இறைச்சி அல்லது காலம் கடந்த மாவு, பூச்சியுற்ற பொருளில் செய்யும் உணவு யாவும் நஞ்சு உணவாக மாறித் துன்பம் செய்யும்(இக்காலத்தில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் மீண்டும் பயன்படுத்திச் செய்யப்பெறும் பண்ணியங்களை உண்பதால் புற்றுநோய் உண்டாதலும் எண்ணிப்பார்க்கவும்). எனவே உடலுக்கு மாறுபாடு இல்லாத உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். அதனால்தான் நம் முன்னோர்கள் பசித்திருக்கச் சொன்னார்கள் போலும்(!).

உணவை உண்ணுவதில் தோன்றும் மகிழ்ச்சியைவிட உண்ட உணவு செரிப்பதில்தான் மகிழ்ச்சி. உண்ட உணவு இல்லாமல் போவதுதான் பெரு மகிழ்ச்சியை நமக்குத் தரும்.

இதனை உணர்ந்து பார்த்த வள்ளுவர் காமத்துப்பாலில்

“உணலினும் உண்ட தறலினிது காமம்
புணர்தலி னூடல் இனிது(1326) என்பார்.

எனவே வயிற்றில் உணவு அற்றுப்போகும் தன்மையில்தான் உண்மை இன்பம் உண்டு என்பதைப் பொறி புலன்களால் உணர்ந்து அறிக!.

உலக உயிர்களில் மாந்தப் பிறப்பு உயர்வானதாகும். இம்மாந்தப் பிறப்பு வாய்க்கப்பெற்றவர்கள் தத்தம் உடம்பினைப் பேணிக்காத்து நெடிதுநாள் வாழவே விரும்புவர். துறவிகளோ இப்பிறவி வேண்டாம் என்றும் பிறப்பு நீக்கிச் செம்பொருள் நுகர்வு வேண்டும் என்றும் விரும்புவர். ஆனால் திருவள்ளுவப் பேராசான் போன்ற சித்தர் மரபினர் உடம்பினைப் பேணிக் காப்பதைத் தேவையென மாந்த குலத்திற்கு அறிவுறுத்தியுள்ளனர்.

“உடம்பால் அழியின் உயிரால் அழிவர்”(724) “உடம்பினை யானிருந்து ஓம்புகின்றேனே”(725) என்பர் திருமூலர். இவ்வுடம்பினைப் போற்றும் வகை தெரியாமல் மிகுதியாக உண்டோ அல்லது வேறு வகையில் உண்டோ உடல்நலம் கெட்டால், உய்யும்பொருட்டு மருத்துவம் பார்த்தல் குறித்த பல செய்திகளைத் திருவள்ளுவரும் அவரின் குறட்பா வழி உரையாசிரியர்களும் தருகின்றனர்.

நோயாளியின் சொல்லாலும், நாடியினாலும், பிற உடற்குறிகளாலும், சிறுநீர் முதலான கழிபொருள்களின் இயல்பாலும் நோய் இன்னதென்பதை ஆராய்ந்து- அந்த நோய் தோன்றியதற்கான காரணத்தை ஆராய்ந்து, பிறகு அந் நோயைப் படிப்படியாக நீக்கும் வழியை மருத்துவன் கைக்கொள்ள வேண்டும் என்கின்றார் திருவள்ளுவர் வழிநின்று பாவாணர்(948).
நோய்நாடி எனத்தொடங்கும் குறட்பாவில் திருவள்ளுவர் “நாடி” எனும் சொல்லை நோய்நாடி, நோய்முதல்நாடி, வாய்நாடி என மூன்று முறை பயன்படுத்தியுள்ளது குறிப்பாக நாடிப்பார்த்தல் எனும் தமிழ் மருத்துவமுறையை உள்ளம்கொண்டே எனப் பாவாணர் கருதுகின்றார். ஏனெனில் நாடிப்பார்த்து நோய்தீர்க்கும் முறை தமிழர்கள் பன்னெடுங்காலம்தொட்டுச் செய்துவரும் மருத்துவமுறையாகும்.

மேலும் “உற்றவன் தீர்ப்பான்..” (950) எனத்தொடங்கும் குறட்பாவில் அரிய மருத்துவத்துறைச் செய்திகளைத் திருவள்ளுவர் வைத்துள்ளார். அவற்றைக் கண்டு காட்டும் உரையாசிரியர்களுள் பரிமேலழகரும், பாவாணரும் பல புதிய நுட்பங்களைத் தருகின்றனர். மருத்துவம் வெற்றியாக நிறைவேற நோயுற்றவன், நோய்தீர்க்கும் மருத்துவன், அம்மருத்துவனுக்குக் கருவியான மருந்து அல்லது மருத்துவமுறை, அம்மருத்துவனுக்குத் துணையாக இருந்து மருந்துகொடுப்பவன் எனும் நான்கு கூறுகளையும் விரித்துக்காட்டும் பரிமேலழகரும், பாவாணரும் மிகச்சிறந்த உலகியல் அறிவுகொண்டு இக்குறட்பாக்களுக்கு விளக்கம் வரைந்துள்ளனர். மருந்து அதிகாரக் குறட்பாக்களும், உரைகளும் தமிழர்களின் மருத்துவமுறையினை எடுத்துக்காட்டுவதில் முன்னிற்கின்றன.

1 கருத்து:

துரைடேனியல் சொன்னது…

Arumaiyana pathivu.
Tamilmanam Vote 1.