நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 26 நவம்பர், 2011

பிரான்சு நாட்டில் விருதுபெற்றவர்களுக்குப் புதுச்சேரியில் பாராட்டு விழா


பொறிஞர் பாலு, முனைவர் மு.முத்து, மருத்துவர் சித்தானந்தம்(அமெரிக்கா)

பிரான்சு நாட்டில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் கலந்துகொண்டு புதுச்சேரித் தமிழறிஞர்களும் ஆர்வலர்களும் விருதுபெற்றுத் திரும்பியுள்ளனர். அவர்களுக்கு இன்று புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கில் நடைபெற்ற விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

புதுவைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் முனைவர் மு.முத்து அவர்களின் தலைமையில் புதுச்சேரியிலிருந்து பிரான்சு நாட்டில் நடைபெற்ற கம்பன்கழக விழாவுக்குத் தமிழார்வலர்கள் பலர் சென்று உரையாற்றி மீண்டனர். அவர்களுள் முனைவர் மு.முத்து, பொறிஞர் பாலசுப்பிரமணியன், கஸ்தூரி வைத்தி உள்ளிட்டவர்களுக்கு இன்று தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற விழாவில் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பெற்றது.

இன்று(26.11.2011) மாலை 6.30 மணியளவில் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற நாடக அறிஞர் சங்கரதாசு சுவாமிகள் நினைவுநாள் விழாவில் முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் கரு.அழ.குணசேகரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நாடக அறிஞர் சங்கரதாசு சுவாமிகளின் நாடகப் பணிகளை நினைவுகூர்ந்து உரைநிகழ்த்தினர்.

பின்னர் நடைபெற்ற பாராட்டு விழாவில் அமெரிக்காவிலிருந்து வருகைபுரிந்துள்ள மருத்துவர் சித்தானந்தம் அவர்களுக்குப் பாராட்டும் வரவேற்பும் தெரிவிக்கும் முகமாகப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்யப்பெற்றது. மருத்துவர் சித்தானந்தம் அவர்கள் அமெரிக்காவில் தங்கி மருத்துவப் பணியும் தமிழ்ப் பணியும் செய்பவர் என்று அரங்கிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்றார். அதனை அடுத்துப் பிரான்சு சென்று விருது பெற்றுத் திரும்பியவர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கப்பெற்றது. புதுவைத் தமிழறிஞர்கள் பலரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.


முனைவர் மு.முத்து உரை


பாராட்டு பெறும் அறிஞர்கள்

2 கருத்துகள்:

balakavithaigal சொன்னது…

விழா முடிந்த ஒரு சில நிமிடங்களில் செய்திகளை இணையத்தில் வெளியிட்டு பெருமைப் படுத்திய முனைவர் அவர்களுக்கு எங்கள் நன்றியும் பாராட்டுகளும் .மிக்க நன்றி ஐயா

கவிஞர் கி. பாரதிதாசன் சொன்னது…

கம்பன் கழகத்தின் கன்னல் தமிழ்ப்பணியை எம்மண் இயம்ப எழுதிய - செம்பொன் மனத்து முனைவன் இளங்கோவன் வாழ்வோ இனத்தின் உயா்வென ஏத்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா் கம்பன் கழகம் பிரான்சு