நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 அக்டோபர், 2010

நன்றி சொன்னவருக்கு ஒரு நன்றி…


திரு.நடராசன், பெருமழைப் புலவரின் மகனார் சோ.பசுபதி,அவரின் துணைவியார் சகுந்தலை அம்மா,நம் மழலைகள்

ஒரு கிழமையாகப் பணிகள் மிகுதியாக இருந்தன. தமிழ்மொழி வரலாறும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணமும் என்னும் பாட நூல் ஒன்று எழுதியளிக்கும் கடப்பாட்டில் இருந்தேன். இருநூற்றுக்கும் மேலான பக்கங்கள் கொண்ட அந்த நூல் இளங்கலையில் தமிழ் படிக்கும் மாணவர்கள் புரிந்துகொள்ளும்படியாக எளிமையாக எழுதப்பட்ட நூலாகும். இத்தகு வேலையில் இருந்ததால் வலைப்பூவில் எழுத எவ்வளவோ செய்திகள் இருந்தும் எழுத இயலாமல் போனது.

இதற்கு இடையே என் கல்லூரிப் பணி, குடும்பப் பொறுப்புகள், பிறந்த ஊரில் நடக்கும் வேளாண்மை மேற்பார்வை, உறவினர்களின் வருகை, நண்பர்களின் வருகை, பல ஊர்களில் நடந்த திருமணங்கள், வரவேற்பு நிகழ்ச்சிகள், இறப்பு நிகழ்வுகள், உள்ளூர், வெளிநாட்டுச் செல்பேசி அழைப்புகள், இடையே இதழ்கள் இரண்டொற்றிற்கு நேர்காணல், கட்டுரை வழங்கல், அறிஞர் மு.வ. அவர்களின் மண்குடிசைப் புதினப் படிப்பு, இணையம் கற்போம் நூலின் இரண்டாம் பதிப்புக்கான ஆயத்த வேலைகள்,அயலகத் தமிழர்களுக்கான இணையவழித் தமிழ் இலக்கிய வகுப்பு என்று பம்பரமாக இயங்க வேண்டியிருந்தது.

ஆயிடை, பெருமழைப்புலவர் பொ.வே.சோமசுந்தரனாரின் மூத்த மகன் திரு.சோ.பசுபதி ஐயாவும்(அகவை 63) அவர்களின் துணைவியார் ப.சகுந்தலை அம்மா அவர்களும் அந்த ஊரைச் சேர்ந்த திருவாளர் நடராசன் ஐயாவுடன் எங்கள் புதுவை இல்லத்துக்கு வந்திருந்தனர். என் நெருக்கடியான பணிகளுக்கு இடையேயும் அவர்களின் வருகையறிந்து அனைத்தையும் ஒத்திப் போட்டேன். நான் உயர்வாக மதிக்கும் புலவர் குடும்பம் ஆயிற்றே என்று அவர்களின் இனிய வருகைக்கு அனைவரும் காத்திருந்தோம்.

24.10.2010 ஞாயிறு பகல் ஒரு மணியளவில் அவர்களின் வருகை இருந்தது. திருத்துறைப்பூண்டியடுத்த பதின்மூன்று கல் தொலைவு உள்ள மேலைப்பெருமழையில் இருந்து நெடுந்தொலைவு பேருந்தில் வந்த காரணத்தால் வந்தவுடன் சிறிது ஓய்வெடுத்தனர். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.எங்கள் மழலைச் செல்வங்களுக்கு விளையாடக் கிடைத்தத் தாத்தா, பாட்டியாக அவர்கள் இருந்தனர். குழந்தைகள் நெடுநாழிகை உள்ளன்போடு ஓடியாடி விளையாடி மகிழ்ந்தார்கள். வந்திருந்தவர்களும் எம் மக்களைக் கொஞ்சி மகிழும் வாய்ப்புக்கு மகிழ்ந்தார்கள். பின்னர் பகலுணவு உண்டு மகிழ்ந்தோம்.

தமிழ்நாடு அரசு புலவர் குடும்பத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கருணையால் பத்து இலட்சம் உருபா வழங்கியப் பெருங்கொடையை நன்றியுடன் நினைவு கூர்ந்து குடும்பத்தினர் அனைவரும் முதல்வர் கலைஞர் அவர்களுக்கும், அவர்களின் குடும்ப நிலையை வெளியுலகிற்குத் தெரிவித்து உதவி கிடைக்க ஆவன செய்த தினமணி, நக்கீரன், குமுதம் இதழ்களுக்கும், எனக்கும் நன்றி கூறினார்கள்.

அதுபோல் நூற்றாண்டு விழாவைப் புலவரின் ஊரான மேலைப்பெருமழையில் நடத்திப் புலவரின் சிறப்பை ஊருக்கும், உலகுக்கும் தெரியப்படுத்திய பேராசிரியப் பெருமக்களையும், தமிழார்வலர்களையும் புலவரின் மகன் சோ.பசுபதி அவர்கள் நன்றியுடன் நினைவுகூர்ந்தார்கள்.

இரண்டு நாள் எங்கள் இல்லத்தில் தங்கிச் செல்லவேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டோம். ஆனால் ஊரில் உழவு வேலைகள் நடைபெறுவதால் கோடையில் வந்து தங்குவதாக உறுதியுரைத்தனர். மாலை 4.30 அளவில் விடைபெற நினைத்தனர். அவர்களுக்கு எங்களால் இயன்ற கையுறைப் பொருளை வழங்கி மகிழ்ந்தோம். எங்களின் பெற்றோர் போன்று விளங்கிய அவர்களின் பாசத்தை நினைத்து நினைத்து மகிழ்கின்றோம்.

மீண்டும் அவர்களின் வருகைக்குக் காத்துள்ளோம்.

இத்தகு நன்றி மறவாத உயர்பண்பாளர்களை நினைக்கும்பொழுது நெஞ்சம் நிறைகின்றது.

கருத்துகள் இல்லை: