நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 19 ஜூலை, 2010

தமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் ஆவணப்படம்


தமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் ஆவணப்படம்

பாவாணர் பைந்தமிழ்த்தொண்டரும் குடந்தைப் பகுதியிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தனித்தமிழ்ப்பணிகளை முன்னெடுத்தவருமான குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் மறைந்து ஓராண்டாகிறது.ஐயாவின் வாழ்க்கையை ஆவணப்படுத்தும் முயற்சியில் அவரின் குடும்பத்தினரும் தமிழன்பர்களும் ஈடுபட்டுத் தமிழாய் வாழ்ந்த தமிழ்வாணன் என்ற ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். இதற்காகக் கடுமையாக உழைத்துப் பணிபுரிந்துள்ள இயக்குநர் சி.எம்.மணி அவர்கள் நம் அனைவரின் பாராட்டிற்கும், நன்றிக்கும் உரியவர். ஒரு மணி நேரம் ஓடும் இந்தக் குறுவட்டில் கதிர். தமிழ்வாணன் அவர்களின் ஆளுமை மிகச்சரியாகப் பதிவு செய்யப்பெற்றுள்ளது.

தமிழுக்கு உழைத்த கால்டுவெல், போப் அடிகளார், சீகன் பால்கு, வீரமாமுனிவர், பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர்ந்து தொடங்கப்பெறும் இக்குறும்படம் கதிர். தமிழ்வாணன் அவர்கள் பிறந்த தஞ்சை மாவட்டக் கதிராமங்கலம் பகுதியையும் அதன் அடையாளமாகக் காவிரி வளத்தையும் காட்டும் காட்சிகள் சிறப்பு. கதிர். தமிழ்வாணன் அவர்களின் இளமைக்காலத்தை நினைவுகூர சில காட்சிகளைப் படைத்துக்காட்டியுள்ளமை இயக்குநரின் ஆளுமைத்திறனுக்கு நல்ல சான்று. மாணவப்பருவத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரைகேட்டுத் தமிழ்வாணன் அவர்களுக்குத் தமிழ்ப்பற்று உண்டான வரலாறு மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளது.

கதிர். சுப்பையன் என்ற பெயர்கொண்ட ஐயா தமிழ்வாணனாக மலர்ந்துள்ளமையும் அவர்களின் முதல்மனைவியாரின் இல்லறச் சிறப்பும், இரண்டாம் மனைவியார் ஐயாவின் மறைவுக்குப் பிறகு ஆற்றிவரும் பணிகளும் மிகச்சிறப்பாகப் பதிவாகியுள்ளன. கதிர். தமிழ்வாணன் அவர்களின் இல்லத்தில் உள்ள நூலகம், அவர் பயன்படுத்திய பொருட்கள், திருக்குறள் சுழற்சிமுறையில் எழுதிய பாங்கு திருக்குறள் தம் வீட்டிலிருந்து ஒலிபரப்பிய செயல் யாவும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் எசு.எம்.உபயதுல்லா அவர்கள் கதிர். தமிழ்வாணன் அவர்களின் சிறப்பைப் பலபடப் புகழ்ந்துரைத்துள்ளமை போற்றுதலுக்கு உரியது. கதிர். தமிழாவணன் கல்வி பெற்றதும், அவருக்குப் பயிற்றுவித்த ஆசிரியப்பெருமக்களும் பள்ளிகளும் நன்கு அறிமுகம் செய்யப்பெற்றுள்ளன.

கதிர்.தமிழ்வாணனை அறிந்தோர் உரிய இடங்களில் பேசி ஐயாவின் பெருமைகளை நினைவுகூர்ந்துள்ளதும் சிறப்பு. கதிர். தமிழ்வாணன் அவர்கள் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தபொழுது ஆற்றிய மிகச்சிறந்த தமிழ்ப்பணிகள் சான்றுகளுடன் காட்டப்பட்டுள்ளன. பிற ஊர்களுக்குச் சென்று தனித்தமிழ் வகுப்புகள் நடத்தியமை, திருமணம், புதுமனைப் புகுவிழா, கோயில் குடமுழுக்கு நடத்தியுள்ள பாங்குகளும் தக்கபடி காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
உடல் நலம் குன்றிப் புதுச்சேரி மகாத்துமாகாந்தி மருத்துவமனையில் ஐயா பண்டுவம் பெற்றுவந்த பொழுது நான் எடுத்து வைத்திருந்த சில அரிய படங்களையும் இயக்குநர் நன்கு பயன்படுத்தியுள்ளார்.அவர்க்கு என் நன்றி.

பின்னணி இசையும்,காட்சிப்பொருத்தங்களும் சிறப்பு. 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என ஒலிக்கும் இசையமைப்பாளர் செல்வநம்பியின் பாடலும் இசையும் நெஞ்சில் நிலைக்கும். அதுபோல் ஒளியோவியம் வரைந்து காட்சிப்படுத்திய பிரேம்குமார், படத்தொகுப்பில் ஈடுபட்ட வீரா உள்ளிட்ட கலைஞர்களுக்கு நம் பாராட்டுகள்.தமிழார்வமுடையவர்கள் கண்டு மகிழ வேண்டிய அரிய ஆவணப்படத்தின் குறுந்தகடு தொடர்பாக விவரம் வேண்டுவோர் இயக்குநர் திரு.சி.எம்.மணி அவர்களுடன் தொடர்புகொள்ளலாம்.

அவர் செல்பேசி எண் + 91 9843990686
மின்னஞ்சல் cm.mani@gmail.com
குறுவட்டின் விலை 180 உருவா

கருத்துகள் இல்லை: