நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 13 ஜூலை, 2010

மூதறிஞர் வ. சுப. மாணிக்கனாரின் மனைவி ஏகம்மை ஆச்சி இயற்கை எய்தினார் ...


தெய்வத்திரு.ஏகம்மை ஆச்சி அவர்கள்

மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் மனைவி ஏகம்மை ஆச்சி அவர்கள் இன்று(13.07.2010) காரைக்குடியில் உள்ள தம் கதிரகம் இல்லத்தில் காலை 10.30 மணிக்கு இயற்கை எய்தினார். 90 அகவை கொண்டு நிறைவாழ்வு வாழ்ந்த ஆச்சி அவர்கள் அறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஐயா அவர்களின் தமிழ்ப்பணிகளுக்குப் பேருதவியாக விளங்கியவர்கள்.வ.சுப.மாணிக்கனார் அவர்கள் தம் இறுதிக்காலத்தில் விருப்பமுறி எழுதி வைத்தார்கள்.அதன்படி தம் விருப்பம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அவற்றை முற்றாக நடைமுறைப் படுத்தியதில் ஆச்சி அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு. வ.சுப.மாணிக்கனாரிடம் பயின்ற மாணவர்கள் யாவரும் ஆச்சி அவர்களை அம்மா என்று அன்பொழுக அழைத்து மதிக்கும் சிறப்பிற்கு உரியவர்கள்.

ஏகம்மை ஆச்சி அவர்கள் நெற்குப்பை என்ற ஊரில் இலட்சுமணன் செட்டியார்,கல்யாணி ஆச்சி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தவர்கள். ஆச்சி அவர்களுக்கும் அறிஞர் வ.சுப. மாணிக்கனார் அவர்களுக்கும் 14.11.1945 திருமணம் நடந்தது. மணப்பயனாக இவர்களுக்குத் தொல்காப்பியன்,பூங்குன்றன்,பாரி,தென்றல்,மாதரி,பொற்றொடி என ஆறு மக்கட் செல்வங்கள்.

வ.சுப.மாணிக்கனார் தம் மனைவியாகிய ஏகம்மை ஆச்சி பற்றி பின்வருமாறு பதிவு செய்துள்ளர்.

" நான் படிப்பிலும் எழுத்திலும் ஆய்விலும் பதவிப் பணியிலும் முழுநேரமும் ஈடுபடுமாறு குடும்பப் பொறுப்பை முழுதும் தாங்கியவள் ஏகம்மை என்ற என் ஒரே மனைவி.திட்டமிட்டுக் கணக்கிட்டுக் குடும்பம் நடத்தும் கலை வல்லவள்.உலகியலறிவு மிக்கவள்.நான் மேற்கொண்ட பல துணிவுகட்கு எளிதாக உடன்பட்டவள்.பதவிகளை இடையே துறந்த காலையும்,எதிர்காலம் என்னாகுமோ என்று கலங்காமல், உங்கட்கு இது நல்லது என்று பட்டால் சரிதான் என்று சுருங்கச் சொல்லி அமைபவள். குடும்பவுழைப்புக்கு ஓர் எடுத்துக்காட்டு. ( தற் சிந்தனைகள், கையெழுத்துப்படி பக்.68-69) - மேற்கோள் முனைவர் இரா.மோகன்)

காரைக்குடியில் 15.07.2010 இல் ஆச்சி அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பெற உள்ளது.

தெய்வத்திரு.ஏகம்மை ஆச்சி அவர்கள்

வ.சுப.மாணிக்கனார் இல்ல முகவரி:

"கதிரகம்"
சுப்ரமணியபுரம் 6 வது வீதி,
காரைக்குடி,தமிழ்நாடு

3 கருத்துகள்:

தமிழ்நாடன் சொன்னது…

தமிழ்த் தொண்டருக்கு இவர் ஆற்றியக் கடமை தமிழிற்காற்றியது போலாகும். அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள். வாழ்க அம்மா புகழ்!

V.Subramanian சொன்னது…

ஓம்.
அன்னையார் ஏகம்மைமாணிக்கனார் ஆன்மா மரணமில்லா சாந்திபெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
அன்புடன் வெ.சுப்பிரமணியன் ஓம்

nerkuppai thumbi சொன்னது…

அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை இரைஞ்சுகிறேன்.

ஆச்சி எங்கள் ஊர் என இன்று தான் தெரிய வந்தது.

எங்கள் கல்லூரி அந்நாள் முதல்வரை மீண்டும் ஒரு முறை நினைவு கூறுகிறேன்