மு.வளர்மதி, மு.இ. ,வீ.ப.கா.சுந்தரம், ஒப்பிலா, கண்ணன்.
சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நான் ஆராய்ச்சி உதவியாளனாகப் பணிபுரிந்தபொழுது (1997-98) இசைமேதை வீ.ப.கா.சுந்தரம் ஐயா அவர்கள் ஒரு கருத்தரங்கிற்கு வந்தார்கள். இசைமேதை அவர்களுக்குப் பணிவிடை செய்யும் வாய்ப்பு எனக்கு அப்பொழுது அமைந்தது. முனைவர் மு.வளர்மதி, முனைவர் ஒப்பிலா.மதிவாணன், உ.த.நி. கணிப்பொறித் தட்டச்சராகப் பணியேற்ற திரு.கண்ணன் யாவரும் ஐயாவுடன் நெருங்கிப் பழகினோம்.
வீ.ப.கா.சுந்தரம் அவர்கள் அப்பொழுதுதான் முனைவர் மு.வளர்மதி அவர்களைப் பறை என்ற ஒரு நூலினை எழுத ஊக்கப்படுத்தினார்கள். தொடர்ந்து வளர்மதி அக்காவுக்கு ஐயாவிடமிருந்து நாளும் ஒரு கடிதம் வரும். நூலை முடிக்க வேண்டும் என்பது அவரின் கட்டளை. அக்கா அவர்களின் நல்ல நூல்களுள் இதுவும் ஒன்று. நானும் ஒப்பிலா.மதிவாணன் அவர்களும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றினோம். தங்குவதற்கே எங்களுக்கு உரிய ஊதியம் போதுமானதாக இல்லை. இருப்பினும் எங்கள் இயக்கத்திற்கு உரிய இடமாக உ.த.நி. இருந்தது. எங்களின் பெருகிய வளர்ச்சிக்கு உ.த.நி யில் பணியாற்றியது பேருதவியாக இருந்தது.
இந்த நிறுவன நிகழ்ச்சிக்கு வந்தபொழுதுதான் ஐயா கழிவறைக்குச் சென்ற பொழுது வழுக்கி விழுந்து மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். மருத்துவமனையில் ஐயா இருப்பதறிந்து அங்கு விரைந்தேன். அவர்களுக்குப் பணிவிடை செய்து ஐயா உயிரைக் காத்தேன். இதனை அவர்களே ஒரு அஞ்சல் அட்டையில் "என் உயிர் காத்த கடவுளல்லவா நீ" என நன்றியுடன் எழுதினார்கள். ஐயாவுடன் பழகிய அந்த நாட்களை நேரம் கிடைக்கும்பொழுது எழுதுவேன். வேறு ஒரு படத்தைத் தேடிக்கொண்டிருந்தபொழுது ஐயாவின் இந்த அரிய படம் கிடைத்ததால் அனைவரின் பார்வைக்கும் உட்படட்டும் என்று என் பக்கத்தில் பதிந்தேன்.
1 கருத்து:
நெகிழ்ச்சியான பதிவு!
கருத்துரையிடுக