ஆலவாய் அ. சொக்கலிங்கம்
அண்மைக்காலமாக என் வலைப்பதிவைப் பார்வையிட்டு, உலக அளவில் பல நாடுகளிலிருந்தும் தமிழ் அன்பர்கள் பலவகையில் தொடர்புகொண்டு ஊக்கப்படுத்தி வருகின்றனர். அதுபோல் தமிழகத்திலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும் தமிழ் ஆர்வலர்கள் என் தமிழ் இணையப் பணியைப் பாராட்டித் தொடர்ந்து இயங்கும்படி வலியுறுத்தி வருகின்றனர். அவ்வகையில் ஒரு கிழைமைக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
தம் பெயர் ஆலவாய் சொக்கலிங்கம் என்றும், தமக்கு அகவை எழுபத்தைந்து என்றும், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் என்றும், தா.பழூர் அடுத்த திருபுரந்தான் என்ற ஊரில் வாழ்வதாகவும் கூறினார். என் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதாகவும், நான் எழுதிய என் ஆறாம் வகுப்பு நினைவுகள் என்ற பதிவில் குறிப்பிடப்பட்டிருக்கும் பல ஆசிரியர்களைத் தமக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டார்கள். மேலும் தம் மகளை எங்கள் ஊருக்கு அடுத்துள்ள கடாரங்கொண்டான் என்ற ஊரில் பிறந்த திருவாளர் கிருட்டினமூர்த்தி அவர்களுக்கு மணம்செய்து கொடுத்துள்ளதாகவும் கூறினார்கள். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. மகிழ்ச்சிக்கு அடிப்படைக்காரணம் எங்கள் பகுதியின் புகழ் பெற்ற ஊர்களுள் ஒன்றான திருபுரந்தான் என்ற ஊரிலிருந்து ஒருவர் பேசுகின்றாரே என்பதுவும், திருபுரந்தானில் இணைய இணைப்பு சென்றுள்ளதே என்பதும்தான்.
திருபுரந்தான் என்று நாங்கள் தமிழ்ப்படுத்தி வழங்கும் ஊர் ஸ்ரீபுரந்தான் என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரின் உண்மை வடிவம் அறியாமல் மக்கள் வழக்கில் இவ்வாறு வழங்கப்படுகிறது. ஸ்ரீ பராந்தக சோழன் சதுர்வேதி மங்கலம் என்பது அந்த ஊரின் வரலாற்றுப் பெயர். அது மருவி ஸ்ரீ பராந்தகன் என்றாகி, இன்று ஸ்ரீ புரந்தான் என்று மக்கள் வழக்கில் வழங்குகிறது.
கொள்ளிடக்கரையில் வளம் கொழிக்கும் ஊராக இருந்த இந்த ஊர் சோழ அரசர்களின் காலத்தில் (சற்றொப்ப ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்) வேதம் வல்ல பார்ப்பனர்களுக்குத் தானமாக வழங்கப்பட்டது. அந்த ஊரில் அண்மைக்காலம் வரை பார்ப்பனர்கள் மிகப்பெரிய செல்வாக்குடன் இருந்துள்ளனர். மற்ற இனத்தார் குறைவாக வாழ்ந்தனர். நில உச்சவரம்பு உள்ளிட்ட சட்டங்களுக்குப் பிறகு நிலபுலங்களை விற்ற பார்ப்பனர்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். அந்த நிலங்களை மற்ற இன மக்கள் விலைக்கு வாங்கி வாழ்ந்து வருவதாக அறிந்தேன். இரண்டு சிவன்கோயில்களும், இரண்டு பெருமாள்கோயில்களும் உள்ளன. இடிபாடுகளுக்கு உள்ளாகி உள்ள ஒரு சிவன்கோயிலில் நுழைந்து பார்த்தேன். வௌவால் வாழ்க்கை நடத்துகிறது. ஒரே முடைநாற்றம். உள்ளே பாழும் மண்டபம்போல் உள்ளது. மக்களோ, அரசோ எந்த வகையிலும் அந்தக் கோயிலைப் போற்றவில்லை. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த சிவன்கோயில் தூண்களைக் கண்டு, போற்றுவார் இல்லாமல் போனதே என்று வருந்தினேன்.
ஸ்ரீ புரந்தான் ஊருக்கு அருகில்தான் கொள்ளிடம் என்ற காவிரியின் கிளையாறு ஓடி அந்தப் பகுதியை வளமுடையதாக்குகிறது. மேலும் குருவாடி அருகில் கொள்ளிடத்திலிருந்து ஒரு கிளையாறு பிரிகிறது. அது பொன்னாறு எனப்படுகின்றது. இந்தப் பொன்னாறுதான் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இராசேந்திரசோழன் உருவாக்கிய சோழகங்கம் என்ற பொன்னேரியினுக்கு வற்றாமல் நீர்வழங்கியிருக்கவேண்டும். (பொன்னேரியின் பெரும்பகுதி எங்கள் முன்னோர்களின் நிலமாக இருந்தது. அதனை ஆங்கிலேயர் வாங்கிப் பின்னாளில் ஏரியாக்கினர்). புவியியல் அமைப்பை நோக்கும் பொழுது இது உண்மையாகும் வாய்ப்புகள் நிறைய உண்டு. பொன்னாற்றின் தொடர்ச்சிதான் பொன்னேரியாகியிருக்கவேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. பொன்னாறு வடக்கே ஓடி வெள்ளாற்றில் கலந்ததாக முன்னோர்கள் சொல்வர்.
இன்று கொள்ளிடத்தில் ஆழ்துளைக்கிணறுகள் அமைத்துத் தண்ணீர் எடுக்கப்பெற்று உடையார்பாளையம் வட்டத்தின் தென், கீழ்ப்பகுதிகளில் உள்ள ஊர்களுக்குத் தண்ணீர் தட்டுப்பாடின்றி வழங்கப்படுகின்றது. ஸ்ரீபுரந்தான் ஊரில்தான் சில ஆண்டுகளுக்கு முன் திருவாளர் செல்வராசு என்னும் அரசியல் இயக்கத்தலைவர் வாழ்ந்துவந்தார். அவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபொழுது என் தந்தையார் உள்ளிட்டவர்கள் அவருக்கு ஆதரவாகச் செயல்பட்டமை நினைவுக்கு வருகின்றது. ஆனால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. அவர் மகன் திரு.செ.அண்ணாதுரை அவர்கள் பின்பு செயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றது தனிச்சிறப்புக்குரிய ஒன்றாகும். திரு.அண்ணாதுரை அவர்களும் என் சிறிய தந்தையார் திரு. காசி. அன்பழகன் (முன்னாள் செயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவராக விளங்கியவர்) அவர்களும் நெருங்கிய நண்பர்கள். இந்த அடிப்படையில் என் சிறிய தந்தையார் இல்லத்தில் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினர் திரு.செ.அண்ணாதுரை அவர்களைக் கண்டு உரையாடியுள்ளேன். இதனால் இந்தப் பகுதி அண்மைக்காலமாகக் கவனிப்புக்கு உள்ளானது.
ஸ்ரீபுரந்தானை அடுத்துள்ள ஊர்கள் ஒவ்வொன்றும் அரிய வரலாற்றுப் பெயர்களைத் தாங்கியுள்ளன. குருவாடி, விக்கிரமங்கலம் (விக்கிரம சோழன் சதுர்வேதிமங்கலம்), காரைக்குறிச்சி, அருள்மொழி (சோழனின் பட்டப் பெயர்களுள் ஒன்று), சிந்தாமணி, மதனத்தூர், வாணதிரையன்பட்டினம், நாயகனைப் பிரியாள், கோடங்குடி (சோழன்குடி என்று இருக்க வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம் சோழமண்டலத்தை உச்சரிக்கத்தெரியாத ஆங்கிலேயர்கள் கூழமந்தல் (cholamandal) என்றதுபோல் சோழன்குடியைக் கோடங்குடி என்றார்கள்? ஆராய வேண்டும்). அணைக்குடம், கோட்டியால், தென்கச்சிப்பெருமாள் நத்தம் (தென்கச்சி சுவாமிநாதன் பிறந்த ஊர்), வாழைக்குறிச்சி, காடுவெட்டான்குறிச்சி, முட்டுவாஞ்சேரி, நல்லணம், கடம்பூர், குணமங்கலம், (குணவல்லி,சுத்தவல்லி,காமரசவல்லி என்று மூன்று ஊர்ப்பெயர்களுள் முதலிரண்டும் குணமங்கலம் எனவும் சுத்தமல்லி எனவும் மருவின. காமரசவல்லி மட்டும் பெயர்மாற்றம் இன்றி வழங்கப்படுதவதாகவும் ஒரு செய்தி உண்டு.) என்ற எந்த ஊர்ப்பெயரும் ஒரு வரலாறு சொல்லும். கொள்ளிடத்துக்கும் திருபுரந்தானுக்கும் இடைவெளி ஒரு கல் தொலைவு இருக்கும். கொள்ளிடத்தைப் பல முனைகளிலிருந்து பார்த்து மகிழ்ந்திருந்தாலும் ஸ்ரீ புரந்தான் அருகிலிருந்து பார்ப்பது தனி அழகுதான்.
கொள்ளிடத்தின் அக்கரையில்தான் திருப்புறம்பியம் என்ற வரலாற்றுச்சிறப்பு மிக்க ஊர் உள்ளது. போர் நடைபெற்ற பகுதியை இன்றும் மக்கள் நினைவுகூர்கின்றனர். "உதிரம் வடிந்த தோப்பு" என்பது இன்று குதிரைத்தோப்பாக நிற்கின்றது. வரலாற்று அறிஞர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் பிறந்த ஊர் திரும்புறம்பியம்.
நீலத்தநல்லூர் அக்கரையில் உள்ள ஊர்களுள் ஒன்று. இங்கு நடைபெற்ற மாட்டுச்சந்தை புகழ்பெற்றது. அந்தச் சந்தையில் புகழ்பெற்ற மாடுகள் விற்பனைக்கு வரும். மாட்டுச் சந்தை (சாணிக் குத்தகை) ஏலம் எடுப்பதில் இணைபிரியாள்வட்டம் என்ற ஊரில் வாழ்ந்த பெரும் நிலக்கிழார் வரதபடையாட்சி அவர்கள்தான் முன்னிற்பார்கள். இவர்கள் மகன் திரு. இராமகிருட்டினன் எங்கள் அண்ணன் பொறியாளர் கோமகன் அவர்களின் தாய்மாமன் ஆவார். இவர்கள் குடும்பத்துப் பெண்ணைதான் அண்ணன் கோமகன் அவர்கள் உறவு பிரியாமல் இருக்க மணந்துகொண்டார். கோமகன் அண்ணன் திருமணம் குடந்தைக் கதிர். தமிழ்வாணன் தலைமையில் குடந்தையில் நடந்தது.
மதனத்தூர், நீலத்தநல்லூர் என்ற இரண்டு ஊர்களும் கொள்ளிடத்தின் இக்கரையிலும் அக்கரையிலும் உள்ள ஊர்கள். இரண்டு ஊர்களையும் இணைத்தால் கும்பகோணத்துக்கு மிக விரைந்து சென்றுவிடமுடியும். இப்பொழுது பாலம் வேலை நடக்கிறது.
கும்பகோணம்-செயங்கொண்டம்-உளுந்தூர்ப்பேட்டை-விழுப்புரம்-சென்னையை இணைக்கும் பாலம் இது. குடந்தையிலிருந்து சென்னை செல்பவர்கள் இந்தப் பாலத்தின் வழியாகச் சென்றால் 40 கி.மீ பயண தூரம் குறையும். சற்றொப்ப ஒரு மணி நேரம் பயண நேரம் குறையும்.
கோடைக்காலத்தில் நடந்தும், மழைக்காலத்தில் பரிசல்களிலும் மக்கள் கரை கடப்பர். எனவே பல ஆண்டு மக்களின் போராட்டத்துக்குப் பிறகு அண்மையில் பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி மக்களின் பல நூற்றாண்டுக் கனவான இப்பாலப்பணி சிறப்பாக நிறைவேறினால் இரண்டு மாவட்டங்களை இணைத்த பெருமை இந்த அரசுக்கு உண்டு. இவ்வளவு தகவல்களையும் முன்பே நான் தெரிந்து இருந்ததால் இணைய ஆர்வலர் திரு. சொக்கலிங்கம் ஐயா அவர்களின் தொலைபேசி உரையாடலில் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.
அறிமுகப் பேச்சாக இருந்த ஆலவாய் சொக்கலிங்கம் ஐயாவின் பேச்சு அடுத்த ஓரிரு நாளில் மிகப்பெரிய நெருக்கத்தைக் கொண்டுவந்தது. ஆம். அதற்குள் நம் சொக்கலிங்கம் ஐயா அவர்கள் என் ஆறாம் வகுப்பு நினைவுகள் பகுதியைத் தம் மருமகனார் திருவாளர் கிருட்டினமூர்த்தி அவர்களுக்குப் படியெடுத்து வழங்கிடத் தனிச்சுற்றாகப் பலர் பார்வைக்கு வந்தது. இதன் இடையே என் பணிகளை வரும், போகும் உறவினர்கள், நண்பர்களுக்குப் பரிமாறுவதை ஐயா அவர்கள் கடமையாகக் கொண்டார்கள். என் அனைத்து இடுகைகளையும் படிக்கத் தொடங்கியதுடன் தம் கணிப்பொறி,இணைய ஈடுபாட்டை விரிவாகச் சொன்னார்கள். எனக்கு மிகப்பெரிய வியப்பு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாகவே கணினி வாங்கிவிட்டதாகவும், இணைய இணைப்பு எட்டாண்டுகளுக்கு முன்பே வாங்கிவிட்டதாகவும் சிற்றூரில் தாம் வாழ்ந்தாலும் அறிவியல் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் தாம் முற்றாகப் பயன்படுத்தி வருவதாகவும் உரைத்தமை எனக்குப் பெருமகிழ்ச்சி தந்தது. ஓய்வுபெற்ற தமிழாசிரியரின் இணைய ஈடுபாடு எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
எங்கள் பகுதி மிகவும் வளம் நிறைந்த பகுதியாகவும் உழைக்கும் மக்கள் நிறைந்த பகுதியாகவும் இருந்தாலும் இங்குக் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்கள் இல்லை.அரசு சார்பில், தன்னுரிமைபெற்ற அறுபதாண்டுகள் ஆன பிறகும் எங்களுக்குக் கல்வி நிறுவனங்கள் கிடைக்காமல் போனது பேரிழப்பாகும். செயங்கொண்டத்தில் கல்லூரிகளோ, தொழில்நுட்பக் கல்லூரிகளோ, பல்தொழில்நுட்பக் கல்லூரிகளோ இல்லை. கல்வியார்வம் உடையவர்கள் அரசியலில் இல்லாது போனமை ஒரு காரணமாக இருக்கலாம்.
அரியலூர், கும்பகோணம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், திருச்சி என்று அயல் ஊர் சென்றுதான் படிக்க வேண்டும். இத்தகு வாய்ப்பு இல்லாத நிலையிலும் எங்கள் பகுதியில் சான்றோர் பலர் தோன்றியதுதான் சிறப்பு. முனைவர் பொற்கோ (சென்னைப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர்), திரு.சங்கரசுப்பையன் இ.ஆ.ப, மொழியறிஞர் செ.வை.சண்முகம், முனைவர் சோ.ந.கந்தசாமி, தென்கச்சி. கோ.சாமிநாதன், பேராசிரியர்கள் மருதூர் இளங்கண்ணன், மருதூர் பே.க.வேலாயுதம் உள்ளிட்டவர்கள் பிறந்த பகுதி இது. இங்கு இன்றுவரை அரசு கல்லூரிகள் ஏற்படுத்தப்படவில்லை. அரசு கல்லூரிகள் என்றால் குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் படிக்கமுடியும். படிப்பை இடையில் நிறுத்தாமல் உயர்கல்விக்கு வழிகோலும். எங்கள் காலத்திலாவது நாங்கள் ஒரு அரசு கல்லூரி கொண்டுவர பாடுபட்டாக வேண்டும்.
இந்தப் பின்புலத்தில் ஐயா சொக்கலிங்கம் எங்களுக்கு முன்னோடியாக இருந்தமை அறிந்து மகிழ்ந்தேன். ஓரிரு மின்னஞ்சல்களும் விடுத்தார். அவர்களுக்குத் தமிழில் தட்டச்சிடும் வசதியைத் தொலைபேசி வழியாகப் பயிற்றுவித்தேன். அதன் பிறகு தமிழில் மின்னஞ்சல் பறந்தன. என் நூல்கள் சில வேண்டினார். தனித்தூதில் விடுத்தேன். கற்று மகிழ்ந்தார். இணையம் கற்போம் நூல் அவருக்குப் பேருதவியாக இருந்தது. அடிக்கடி தொலைபேசியை நன்கு வேலை வாங்கினார். ஆம். நாளும் பல பேச்சுகள் தொடர்ந்தன. அவரின் பேச்சு அவருக்கு நெருக்கமாக என்னைச் சேர்த்தது. பேசு புக்கிலும் அவர் முயற்சியால் இணைந்தார்.
தம் மகள்களுக்குச் சீர்வரிசையாகவும், அன்பளிப்பாகவும் கணிப்பொறியை வழங்குவதையும், தம் பெயரர்களுக்குக் கணிப்பொறியை விரும்பி வாங்கி வழங்குவதையும் உரைத்தார். இவர்தம் தமிழ் ஆர்வம் எனக்குக் கூடுதல் பாசத்தை வழங்கினாலும் இவரின் கணினி,இணைய ஆர்வம் எனக்கு மிகப்பெரிய உந்துதலைத் தந்தது. விரைவில் இவர்களைக் காணவேண்டும் என்று விரும்பினேன்.
வெள்ளிக்கிழமை இரவு ஐயா சொக்கலிங்கம் அவர்களுக்குப் பேசினேன். இந்தக் கிழமை என் பிறந்த ஊர் வருவதாகவும் அங்கிருந்து இருபத்தைந்து கல் தொலைவுள்ள அவர் ஊருக்கு வர விரும்புவதாகவும் சொன்னேன்.
என் பிறந்த ஊரில் எங்கள் வீட்டுக்குக் கதவு அமைக்கத் தச்சர்,வண்ணம் பூச வண்ணக்காரர், சுதைமா வேலைகளுக்குக் கொத்தனார் எனப் பல முனைகளில் வேலை செய்ய ஆட்கள் வர இருந்தனர். எனவே ஊரில் நான் இருந்தால் வேலை சிறக்கும் என நினைத்தேன். புதுச்சேரியிலிருந்து 100 கல் தொலைவில் எங்கள் ஊர். காரிக்கிழமை வைகறை புறப்பட்டு, காலை 10 மணிக்கு என் இல்லம் அடைந்தேன்.உணவு உண்டு,அங்கு நடக்கவேண்டிய வேலைகளுக்கு உரிய குறிப்புகளை வழங்கிவிட்டு அரைமணிநேரத்தில் என் பணிமுடித்து உடன் சிற்றுந்து பிடித்து செயங்கொண்டம் சென்றேன்.
பிறகு.தா.பழூருக்கு நகர் வண்டி. அங்கு அரைமணி நேரம் பேருந்துக்குக் காத்திருப்பு. கிடைத்த மூடுந்து ஒன்றில் ஸ்ரீபுரந்தான் பயணம். அங்கிருந்து புலவரின் பெயரன் உதவியால் உந்து வண்டியில் ஐயாவின் இருப்பிடமான அரண்கோட்டை சென்றேன். பகல் ஒன்றேகால் மணிக்குப் புலவரின் இல்லத்தில் இருந்தேன். இதற்கிடையே ஐயாவுக்கும் எனக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்ட செல்பேசி உரையாடல்கள் நடந்திருக்கும். ஐயாவைக் கண்டு வணங்கினேன். அவரின் தூய அன்பில் நனைந்தேன்.
ஆலவாய் அ. சொக்கலிங்கம்
ஸ்ரீபுரந்தான் ஊர் பற்றியும், தாம் இந்த ஊரில் வாழும் வாழ்க்கை பற்றியும், இங்கு உருவாக்கப்பட்டுள்ள வீடு, மனை, வயல்வெளிகள் பற்றியும் விரிவாகப் பேசினார்கள். பகலுணவு உண்டபடி பேசினோம். வாழை, மா, பலா, சப்போட்டா எனப் பல மரங்கள் அழகுடன் விளங்குகின்றன. முருங்கை மரம் காய் தருகின்றது. அவரின் இணைய ஈடுபாடு நேரில் கண்டேன். பலவகையான கணிப்பொறிகள், அச்சுப்பொறிகள், மின்சேமிப்புக்கலங்கள் என்று அனைத்தும் அந்தச் சிற்றூரில் இருப்பது கண்டு வியந்தேன். ஒரு பழுதுபார்ப்பு கடைபோலப் பலவகையான பொருட்கள் இருந்தன. முனைவர் நா.கணேசன் அவர்கள் பதிப்பித்த காரானை விழுப்பரையன் மடலைப் படியெடுத்து ஐயா வைத்திருந்தார்.
வழிபடுபொருள் சிதைந்த நிலையில்
திருபுரந்தான் சிவன்கோயில் பராமரிப்பின்றி...
எல்லைக் கல்லாகச் சிவலிங்கம்
தம் ஊரில் மிகுதியான கற்சிலைகள் வயல்வெளியெங்கும் இருப்பதாகவும் ஆனால் அரசு இந்தத் தகவல் தெரிந்தால் நிலத்தை எடுத்துக்கொள்வார்கள் என்று மக்கள் அந்த விவரத்தைத் தெரிவிப்பது இல்லை என்றும் குறிப்பிட்டார். தம் வீட்டுக்கு அருகில் இருந்த ஒரு லிங்கம் வேலிக்கு எல்லைக்கல்லாக இருப்பதைக் காட்டினார்கள்.
கொள்ளிடக்கரையில் சொக்கலிங்கம், மு.இளங்கோவன்
பொன்னாற்றங்கரையில் பீறிட்டெழும் குழாய்நீர்
அடுத்து என் ஆசையை நிறைவேற்ற அருகில் இருந்த கொள்ளிடத்துக்கு அழைத்துச் சென்றார்கள். இடையில் பொன்னாற்றைக் காட்டினார்கள். கொள்ளிடம் கம்பன் சொன்ன "ஆறு கிடந்தன்ன அகன்ற" தோற்றம் கொண்டு விளங்கியது. சிறிய நீரோட்டம் இருந்தது. சிறு குழந்தைபோல் கால் நனைத்து மகிழ்ந்தேன். நினைவுக்குச் சில படங்கள் எடுத்துக்கொண்டேன்.
மீண்டும் ஐயாவில் இல்லம் வந்து அவர் வீட்டின் அமைப்பைக் கண்டு மகிழ்ந்தோம். தூய காற்று. நல்ல நீர். அமைதி வாழ்க்கை விரும்புபவர்களுக்கு உகந்த இடம். பேராசிரியர் தங்கப்பா இந்த வீட்டைப் பார்த்தால் மிக மகிழ்ந்திருப்பார். அண்ணன் கோமகன் வடிவமைத்த வீடு என்று அறிந்தேன்.
பாலம் வேலை
பாலம் இல்லாததால் உந்துவண்டிகளைத் தலையில் சுமந்து
ஆற்றைக் கடக்கும் நிலை
திட்ட மதிப்பீடு
கொள்ளிடம் பாலம் வேலை நடைபெறுகிறது
பின்னர் ஐயா, அவரின் மனைவி, நான் உட்பட மதனத்தூர் பாலம் கட்டும் பணியையும் கொள்ளிடத்தின் அந்த இட அழகையும் கண்டு மகிழ்ச்சென்றோம். குறுக்குவழியில் புகுந்து பொன்னாற்றங்கரையில் எங்கள் மகிழ்வுந்து சென்றது. நல்ல இயற்கைக்காட்சி. இன்னும் ஓரிரு மாதங்களில் பசுமைகொஞ்சும் என்று சொன்னபடி வந்தார்கள்.
மதனத்தூர் - நீலத்தநல்லூர் இணைப்புப் பாலம் மிகச்சிறப்பாக வேலை நடந்தது. இன்னும் ஓரிரு நாளில் கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்துவிடுவார்கள் என்பதால் ஆற்றில் கிடந்த பொருள்களைப் பாதுகாப்பான இடத்துக்குக் கரையேற்றினார்கள்.
தொழில்நுட்பப் பொறிகளின் துணையுடன் வேலை சுறுசுறுப்பாக நடந்தது. மாலை ஐந்து மணியளவில் அதனைப் பார்வையிட்டு ஐயாவின் மகள்வீடு தா.பழூரில் இருக்கிறது என்றார். அந்த வீட்டுக்குச் சென்று திரு.கிருட்டினமூர்த்தி உள்ளிட்ட அவர்களின் உறவினர்களைக் கண்டு மகிழ்ந்தேன். திரு.கிருட்டினமூர்த்தி நான் பயின்ற உள்கோட்டைப் பள்ளியில் பள்ளியிறுதி வகுப்புப் பயின்றவர். எங்களுக்கு மூத்த அணி. அவரிடம் கடந்த கால நினைவுகளை எடுத்துரைத்து உரையாடி மாலை 6 மணியளவில் ஐயாவிடமிருந்து விடைபெற்றேன்.
தமிழாசிரியர் பணிபுரிந்து, ஓய்வுபெற்ற பிறகும் தமிழுணர்வு குன்றாமல், புதிய தொழில் நுட்பங்களைப் பின்பற்றி வளமான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஆலவாய் சொக்கலிங்கம் அவர்களின் வாழ்க்கையை நினைக்கும்பொழுது "எண்ணத்தைப் போல் வாழுங்க மக்களா" என்ற நாட்டுக்கோட்டை செட்டியாரின் வரி நினைவுக்கு வந்தது.
ஆலவாய் அ.சொக்கலிங்கம் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு.
சொக்கலிங்கம் அவர்கள் க.மு;கல்.மு; பட்டம் பெற்றவர். பிறந்த ஊரான ஆலவாய் ஊரில் எழுந்தருளியுள்ள இறைவன் சொக்கநாதர் பெயரைப் பெற்றோர் சூட்டி மகிழ்ந்துள்ளனர். பெற்றொர் அப்பாதுரை, தருமாம்பாள்.
1936 ஆம் ஆண்டு மேத்திங்கள் இருபதாம் நாள் ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தாய்மாமா வீட்டில் பெற்றோருக்கு முதல் குழந்தை என்ற நிலையில் பிறந்தவர்.
பிறந்து ஏழாண்டுகள் வரையில் பெற்றோர் பள்ளியில் சேர்க்கவில்லை. பிறகு ஸ்ரீபுரந்தான் கிராமத்தில் தாய்மாமா வீட்டிற்கு அடுத்த வீட்டில் உள்ள பள்ளியில் சேர்த்தனர். முதல் மூன்று வகுப்புகள் வரை அங்குப் படித்தவர்.
நான்கு ஐந்தாம் வகுப்புகள் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள கீழநத்தம் என்ற ஊரில் உள்ள தொடக்கப்பள்ளியில் படித்தவர். மீண்டும் ஓராண்டுப் பள்ளிக்கு அனுப்பவில்லை.
பிறகு தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கூற்றம் உமையாள் புரம் என்ற ஊரில் உள்ள தனியார் பள்ளியில் மீண்டும் ஐந்தாம் வகுப்பிலிருந்தே படித்தவர். அந்தப் பள்ளியில் இந்தி படித்துப் பிராதமிக் தேர்வில் முதல்வகுப்பில் வெற்றிபெற்றவர். பிறகு அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்தவர்.
மீண்டும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சிறிய மலர் உயர்நிலைப்பள்ளியில் பத்து, மற்றும் பதினொன்றாம் வகுப்பில் படித்து 1955 மார்ச்சுத் திங்களில் 11 ஆம் வகுப்புத் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்.
பிறகு 1957- 59 முதல் ஒராசிரியர் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். 1959-1961 இல் இடைநிலை ஆசிரியப்பயிற்சி பெற்று அடுத்தநாளே ஆசிரியப்பணி ஏற்றார்.
அரியலூர் மாவட்டம் குணமங்கலத்தில் உள்ள நடுநிலைப்பள்ளியில் பணியாற்றத் தொடங்கி, 1962 ஆம் ஆண்டு முதல் அப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாகிய பொழுது அங்குப் பணியாற்றத் தொடங்கியவர். 1966-68 இல் வித்துவான் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர். 1970இல் தனித்தேர்வராகப் புகுமுக வகுப்பில் வெற்றி பெற்றவர்.
1973 இல் தனித்தேர்வராக பி.ஏ. வெற்றி பெற்றும், 1976-78 இல் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தொடர்ந்து, அஞ்சல்வழியில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
பல பள்ளிகளில் பணிபுரிந்து 1994 சூன் முதல் நாளில் ஓய்வு பெற்றவர்.
இவருக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்கள் உமையாள்புரத்தில் தமிழாசிரியர் திரு சுந்தரராமன் (வடசருக்கை), உடையார்பாளயத்தில் தமிழாசிரியர் திரு. கண்ணையன் (பேராசிரியர் க.இளமதி சானகிராமன் தந்தையார்), சிறியமலர் உயர்நிலைப்பள்ளி-புலவர் திரு ப.திருநாவுக்கரசு, திரு கு.கணேசன் ஆவார்கள்
ஆலவாயிலிருந்து ஸ்ரீபுரந்தானுக்கு 1998 இல் வந்து 2000 இல் அரண்கோட்டையில் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றார்.
இவருக்குக் குழந்தைகள் ஆண் 2, பெண் 3: அனைவருக்கும் திருமணம் நடத்தியுள்ளார். குடும்பத்தினர் அனைவரும் பங்கு பிரிக்காமல் ஒற்றுமையுடன் இருந்துவருவது பாராட்டுக்கு உரியது.
1 கருத்து:
ஐயா அவர்கள் குறித்த பதிவும்,படங்களும்,அருமை.
கருத்துரையிடுக