நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 15 ஜூலை, 2010

நேர்மையின் மறுபெயர் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.


திரு.சுவரன்சிங்.இ.ஆ.ப.அவர்களுடன் நான்

நான் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் ஆர்வமுடன் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில்(1993-97) திருச்சிராப்பள்ளியிலிருந்து வெளிவரும் நாளிதழ்களில் நாளும் திரு.சுவரன்சிங்.இ.ஆ.ப பற்றி செய்திகள் இருக்கும். திரு. சுவரன்சிங் அவர்கள் திருச்சிராப்பள்ளியின் மாநகராட்சி ஆணையராகப் பணியிலிருந்தபொழுது திருச்சிராப்பள்ளி மாநகராட்சி தன்னைப் புதியதாக மாற்றிக்கொண்டு மாநகரமே அழகாகக் காட்சியளித்தது. வடநாட்டிலிருந்து வந்தாலும் நன்கு தமிழ் பேசுகிறார் என்று மக்களும் ஏடுகளும் புகழ்ந்தனர்.

இரண்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் சுவரன்சிங் அவர்களைக் காணச் சென்றதாகவும் தப்பும் தவறுமாக அவர்கள் ஆங்கிலத்தில் உரையாட முயன்றபொழுது "தம்பி நீங்கள் தமிழில் பேசுங்கள்" என்று அழகுதமிழல் ஆணையர் சொன்னதும் அவர்கள் மருண்டு தமிழில் பேசித் தங்கள் கோரிக்கைகளைச் சொன்னதாகவும் உடன் அவர் ஆவன செய்ததாகவும் கல்வித் துறையினர் ஆர்வமுடன் பேசினர்.

மலைக்கோட்டையைச் சுற்றி விதிமுறைகளை மீறிப் பெரும் பணக்காரர்கள், அரசியல் வாணர்கள் கட்டடங்கள், அடுக்குமாடிகளைக் கட்டி விதிமுறை மீறல்களில் ஈடுபட்டபொழுது அவற்றை உரிய விதிகளைக் காட்டி இடித்து, மலைக்கோட்டையின் மாண்பு கெடாமல் காத்த பெருமை நம் சுவரன்சிங் அவர்களுக்கே உண்டு.அதுபோல் திருச்சிராப்பள்ளியின் சாலைகள் அழகுபெற்றதும் தெப்பக்குளம் உள்ளிட்டவை தூய்மையானதும் சுவரன்சிங் அவர்களின் முயற்சியால் என்றால் அது மிகையில்லை.

ஒவ்வொரு பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கும் திரு. சுவரன்சிங் இ.ஆ.ப.அவர்கள் முன்மாதிரியாக உள்ளத்தில் பதிந்தார்கள்.ஆ.ப.செ.அப்துல்கலாம் அவர்கள் குறிப்பிடுவதுபோல் எங்களுக்குக் கனவு நாயகனாக அப்பொழுது சுவரன்சிங் தெரிந்தார்கள். பள்ளி,கல்லூரிகளில் நடைபெற்ற விழாக்களில் தவறாமல் கலந்துகொண்டு மாணவர்களைச் சந்தித்து நாட்டுப் பற்றையும், மொழிப்பற்றையும்,சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளையும் மாணவ உள்ளங்களில் விதைத்தவர்.அவரை ஒரு முறை பார்ப்போமா?அவர் நற்பணிகளைப் பாராட்டிக் கைகுலுக்குவோமா? என்று நாங்கள் காத்துக்கொண்டிருந்த காலம் அது.

இந்தச் சூழலில் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்தில் என் பேச்சு ஒலிப்பதிவுக்காக நான் பேருந்தில் சென்றுகொண்டிருந்தேன். வானொலி நிலையம் அருகில் சாலைகளில் கைகாட்டிப் பலகைகளில் மஞ்சள்,கறுப்பு நிறங்களில் சாலைகளின் பெயர்கள் ஆங்கிலத்தில் அழகாக எழுதப்பட்டிருந்தன. தமிழ் இல்லை. எனக்கு இச்செயல் உறுத்தலாக இருந்தது.என் வானொலிப் பேச்சைப் பதிவு செய்துவிட்டு வந்து முதல் வேலையாக ஆணையர் சுவரன்சிங் ஐயா அவர்களுக்கு ஒரு வேண்டுகை மடல் பின்வருமாறு விடுத்தேன். பெரும் மதிப்பிற்குரிய ஐயா, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சாலைகளில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக BHARATHIDASAN ROAD என்று எழுதப்பட்டுள்ளது.ஆங்கிலக் கல்வியறிவில்லாத மக்கள் பலரும் பயன்படுத்தும் சாலைகளில் தமிழில் பெயர் எழுதப்பட்டால் மகிழ்வேன் எனவும் தேவையெனில் ஆங்கிலப்பெயரைச் சிறிய எழுத்தில் தமிழுக்குக் கீழ் வரையலாம் எனவும் ஆவன செய்யும்படியும் வேண்டியிருந்தேன்.

அவர்கள் மடல் கண்ட மறுநாள் திருச்சிராப்பள்ளி நகருக்கு இயல்பாகச் செல்லும் வாய்ப்பு அமைந்தது. குறிப்பிட்ட அந்தச் சாலை வழியாகச் சென்றேன். அந்தச் சாலை உள்ளிட்ட பெயர்ப்பலகைகள் யாவும் தமிழில் பெரிய எழுத்திலும் ஆங்கிலத்தில் சிறிய எழுத்திலும் மாற்றப்பட்டு எழுதப்பட்டிருந்தன. திரு.சுவரன்சிங் ஐயா அவர்களுக்கு மீண்டும் நன்றி தெரிவித்து ஒரு மடல் விடுத்தேன். அதன் பிறகும் ஐயா அவர்களின் பணிகளை நாளேடுகளில் கண்டு களித்தேன்.

அவருக்குச் சில மாதங்களின் பின்னர்ப் பணி மாறுதல் அமைந்தது. திருச்சிராப்பள்ளி மக்களும் சமூக ஆர்வலர்களும் திரண்டு அரசு அவரைப் பணிமாறுதல் செய்யக்கூடாது என்று தம் எதிர்ப்பைப் பல வழிகளில் தெரிவித்தனர். அதன் பிறகு பணி மாறுதலால் நானும் பல ஊர்களுக்குச் சென்றேன். அவ்வப்பொழுது வேறு துறைகளில் சுவரன்சிங் அவர்கள் பணிபுரிவதை நாளேடுகளின் வழியாக அறிந்தேன்.

அண்மையில் கோவை செம்மொழி மாநாட்டுக்குச் சென்றபொழுது உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அ.வ.வேலு அவர்கள் விருந்தோம்பும் அன்பர்களை ஆய்வுசெய்தபடி அங்கும் இங்கும் ஆர்வமுடன் செயல்பட்டார்கள். அவர் அருகில் தலைப்பாகை அணிந்த சீக்கியப் பெருமக்களின் தோற்றத்தில் ஓர் அதிகாரி நின்றிருந்தார். இவர் முகம் எங்கோ பார்த்ததுபோல் உள்ளதே என்று நினைத்துப்பார்த்தபடி உணவு உண்டேன். நினைவுகள் நிழலாடின.

ஆம்.17 ஆண்டுகளுக்கு முன் எங்கள் உள்ளத்தில் குடிபுகுந்த, நேர்மைக்குப் பெயர் பெற்ற அதே திரு.சுவரன்சிங்.இ.ஆ.ப.அவர்கள் இவர்தான் என்ற முடிவுக்கு வந்தேன்.ஓய்வு நேரமாகப் பார்த்து அருகில் சென்று என்னைப் பற்றி அறிமுகம் செய்துகொண்டு கடந்த கால நிகழ்வுகளை நினைவூட்டினேன். அவர்கள் மகிழ்ந்தார்கள். அன்பொழுக நன்மொழிகள் பகர்ந்தார்கள்.கையிலிருந்த என் நூல்கள் இரண்டை அன்பளிப்பாக வழங்கினேன்.

பதினேழு ஆண்டுகளாக நான் சந்திக்கக் காத்திருந்த அந்தக் காத்திருப்பைப் பாராட்டினார்கள். அவருடன் அருகில் இருந்து படம் எடுத்துக்கொள்ளும் ஆசையை வெளிப்படுத்தினேன்.இசைவு தந்தார்கள்.நேர்மையுடன் பணியாற்றி மக்கள்தொண்டு செய்து நாட்டை முன்னேற்றும் அதிகாரிகளுள் திரு.சுவரன்சிங் இ.ஆ.ப.அவர்கள் முதன்மையானவர் என்றால் அது புகழ்மொழி மட்டும் இல்லை.நூற்றுக்கு நூறு உண்மையாகும்.

8 கருத்துகள்:

சித்தன்555 சொன்னது…

குடிநீர் வழங்கல் துறையிலும் மிகச்சிறப்பாக பணியாற்றினார்.தவிர
மக்களோடு உள்ளன்போடு பழகுபவர்.

சித்தன்555 சொன்னது…

குடிநீர் வழங்கல் துறையிலும் மிகச்சிறப்பாக பணியாற்றினார்.தவிர
மக்களோடு உள்ளன்போடு பழகுபவர்.

Mohan சொன்னது…

Is it possible to collect all the most important achievements of Mr. Swaran singh I.A.S? That will be the best tribute to him.

Bruno சொன்னது…

அவர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்து மாறியபோதும் இது போல் மக்கம் அவர் செல்லக்கூடாது என்று கூறினார்கள்

--

ELANGO T சொன்னது…

இன்றைக்கும் திருச்சி நகர மக்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை “இதுக்கெல்லாம் ஸ்வரண்சிங் இருக்கணும்”

இனியா சொன்னது…

WOW!!! He is a real HERO....!!! I was studying at St. Joseph's Trichy when Swaransingh was the commissioner..

ராஜ நடராஜன் சொன்னது…

ஆக்கபூர்வமானவர்களை அறிமுகப்படுத்துவதே மாறுதலுக்கான வழிகளை உருவாக்கும்.அறிமுகத்திற்கு நன்றி.

ஞாபகம் வருதே... சொன்னது…

எளிமையானவர். ஒரு அரசியல் வாதியின் பெரிய கட்டிடம் குளத்தில் கட்டப்பட்டிருக்கிறது என கண்டறிந்து நடவடிக்கை எடுத்தவர்.திருச்சிக்கு அவருக்குப் பின் யாரும் வாய்க்கவில்லை.