ஞாயிறு, 11 ஜூலை, 2010
தமிழ்த்தொண்டர் தி.ப.சாந்தசீலனார் மறைவு
தி.ப.சாந்தசீலனார்(19.05.1959-11.07.2010)
புதுச்சேரியில் பொ.தி.ப.அறக்கட்டளை என்னும் அறநிலை வழியாகப் பல்லாயிரம் ஏழை எளிய மக்களுக்குப் பல்வேறு உதவிகள் புரிந்தவரும்,தமிழ்க்காவல்,தெளிதமிழ் உள்ளிட்ட தூயதமிழ் ஏடுகள் சிறப்பாக வெளிவரப் பொருட்கொடை புரிந்தவரும் மிகச்சிறந்த தமிழ் உணர்வாளருமாகிய பொ.தி.ப.சாந்தசீலனார்(அகவை 51) இன்று(11.07.2010) மாலை ஆறு மணிக்குப் புதுச்சேரியில் அவர் இல்லத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தமிழ்ப்பற்றாளர்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
புதுச்சேரியில் நான் பணிக்கு வந்த நாள் முதலாக அவர் செய்த தமிழ்ப்பணிகளை அவர் நாளிதழ்களில் தரும் விளம்பரம் வழியாக அறிந்து அவர் இல்லம் சென்று கண்டு வணங்கினேன். அவர் தமிழக நாட்டுப்புறக் கலைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.என் விருப்பமும் அதுவாகும்.அதனை உணர்ந்து அவர் முதல்நாள் சந்திப்பிலேயே என்னைக் கூடப்பாக்கம் என்ற ஊருக்கு ஓர் இரவில் அழைத்துச்சென்று நாட்டுப்புறப் பாடல்கள் பாடுவோரைப் பாடச்செய்து என் உள்ளத்தில் இடம்பெற்றார்.அவர் உள்ளத்தில் நான் குடிபுகுந்தேன்.அன்று தொடங்கி அவர் காட்டிய அன்பும் பரிவும் நினைத்து நினைத்துக் கலங்குகிறேன்.
காந்தியக் கொள்கைகளில் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்த சாந்தசீலனார் தூய காந்திய வாழ்க்கை நடத்தினார். அரச வாழ்வு நடத்தும் அளவு பொருள்வளம் பெற்றிருப்பினும் அதே வேளையில் மிக எளியவராக இருப்பார். நல்ல உடற்பயிற்சி செய்து நல்லுடல் வளம் பெற்றவர். அரியபுத்திரனார் உள்ளிட்ட தமிழாசிரியர்களிடம் தமிழக் கல்வி கற்ற அவருக்குத் திருப்புகழ் உள்ளிட்ட நூல்கள் மனப்பாடம். வேறு பல அரிய தமிழ்ப்பாடல்கள் மனப்பாடம் அடிக்கடி தம் பேச்சில் எடுத்துரைத்து மகிழ்வார். மூலிகைகளில் நல்ல ஈடுபாடு உடையவர். வேட்டையாடுவதில் வல்லவர். சுற்றுச்சூழல் ஆர்வலர்.மரபு மரங்கள் நடுவதைக் கடமையாகக் கொண்டவர்.
தமிழாசிரியர் ஒருவரை எளிய மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்றுவிக்க அமர்த்தி நாளும் திருக்குறள் தொண்டு செய்துவந்தவர். யோகம் பயிற்றுவிக்கப் பல ஊர்களில் ஆசிரியர்களை அமர்த்திப் பல மாணவர்களுக்கு இலவசமாக யோகக்கலை பயிற்றுவித்தவர். பள்ளி,கல்லூரித் திறப்புக் காலங்களில் எளிய குடும்பம் சார்ந்த மாணவர்களும் பெற்றோர்களும் அவர் இல்லத்தில் குழுமி நின்று அவர் வழங்கும் உதவி பெற்றுச்சென்றனர். உடைகள்,மிதியடிகள், பை,சுவடிகள்,உடை தைக்க பணம் என்று பல நூறு மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற உதவியதைக் கண்ணால் கண்டு களித்தவன்.
கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்கான கட்டணத்தை உறுதி செய்து கொண்டு பண உதவி செய்தவர்.தமிழ் விழாக்களுக்குப் பொருட்கொடை வழங்குவார்.மறைந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகன் அவர்களிடத்து நல்ல மதிப்பு கொண்ட சாந்தசீலனார் தம் குடும்ப நிகழ்வுகளுக்கு ஐயாவை அழைத்துப் பெரும் பொருள் வழங்குவதை மகிழ்வுச் செயலாகக் கொண்டவர்.
சாந்தசீலனார் கவிதைப்போட்டி,திருக்குறள் கட்டுரைப் போட்டி நடத்திப் பல இலட்சம் பரிசு வழங்கியவர். திருமுறை மாநாடு கண்டவர்.கோயில் குளங்களுக்கு வாரி வழங்கியவர் அத்தகு கொடையுள்ளம் கொண்ட தி.ப.சாந்தசீலனாரை இழந்து புதுச்சேரி மக்கள் கலங்கிக் கையற்று நிற்கின்றனர்.அவர் உதவியால் மணம் முடித்தோர்,அவர் வழியாகக் கல்வித்தொகை பெற்றோர்.அவர் வயலில் உழுது பயன்கொண்டோர் அவரை நம்பியிருந்த அனைவரும் கலங்கும்படியாகத் திடுமென இயற்கை எய்திய அன்னாரை இழந்து வருந்தும் உள்ளங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலும் உரியதாகும்.
தி.ப.சாந்தசீலனார் மறைந்த செய்தி மாணவர்களுக்குப் பரிசளிக்கும் ஒரு நிகழ்வில் இருந்த எனக்குத் தொலைபேசியில் அவர் உதவியாளர் வழியாகக் கிடைத்து நிகழ்ச்சியைப் பாதியில் முடித்துக்கொண்டு அவர் இல்லம் சென்று அக வணக்கம் செலுத்தினேன். புதுச்சேரியிலும் அயலூரிலும் உள்ள தமிழன்பர்களுக்குச் செல்பேசியில் தகவல் தெரிவித்தேன்.
நாளை(12.07.2010) மாலை 4 மணிக்குப் புதுச்சேரி கருவடிக்குப்பம் நன்காட்டில் தி.ப.சாந்தசீலனாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
3 கருத்துகள்:
அய்யாவைப் பற்றி தங்கள் வழி அறிந்து மகிழ்ந்தவன், அன்னாரின் திடீர் மறைவு பேரியழபேயாகும். வாழ்க அன்னாரின் புகழ்.
அய்யாவைப் பற்றி தங்கள் வழி அறிந்து மிக மகிழ்ந்தவன் நான். அவரின் இழப்பு ஈடுசெய்ய இயலா பேரிழப்பாகும்.
வாழ்க அன்னாரின் புகழ்.
சாந்தசீலனார் அய்யா அவர்கள் போன்றவர்களை இன்றைய தினத்தில் காண்பது மிக அரிது. அன்னார் அவர்கள் மறைவு நமக்கு பேரிழப்பு.. ஆழ்ந்த வருத்தங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கருத்துரையிடுக