நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 6 ஜூலை, 2010

என் ஆறாம் வகுப்பு நினைவுகள்...


நான் ஆறாம் வகுப்பில் படித்தபொழுது எடுக்கப்பெற்ற படம்

 எங்கள் ஊருக்கு முகவரி கங்கைகொண்டசோழபுரம். இதனை அடுத்துள்ள சிற்றூர் இடைக்கட்டு.

 எங்கள் ஊரான இடைக்கட்டிற்கு அடுத்துள்ள ஊர்தான் உள்கோட்டை. இரு ஊர்களும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் போன்று நெருக்கமானவை. உள்கோட்டைக்குத் தந்தை பெரியார் அவர்கள் வந்து அவர் கையால்தான் ஊருக்கு மின்சாரம் வழங்கப்பட்டது (1967). கலைஞர் எங்கள் ஊருக்கு வந்துள்ளார். நான் மாணவனாக இருந்தேன். இடைக்கட்டினை ஒட்டிய உள்கோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன்.

 திரு.சோமசுந்தரம் என்ற ஆசிரியர்தான் எனக்கு அகரம் பயிற்றுவித்த ஆசான். அவர் ஒரு நல்ல நாளில் நெல்லில் அகரம் எழுதித் தமிழ் நெடுங்கணக்கை அறிமுகம் செய்துவைத்தார். திரு.சம்பந்தம், திருமதி எமிலி டீச்சர், கிருட்டினன் ஆசிரியர், சுப்பிரமணியம் ஆசிரியர், இராமலிங்கம் ஆசிரியர், பழனியாண்டி ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர் பெருமக்கள் எனக்குத் தொடக்கப்பள்ளியில் பயிற்றுவித்தவர்கள். திரு.தனபால் ஆசிரியர் அவர்களும் வேறொரு இராமலிங்கம் ஆசிரியரும் எனக்கு ஆசிரியர்களாவர்.

 ஐந்தாம் வகுப்பு படித்து முடித்ததும் ஆறாம் வகுப்பில் நான் உள்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டேன். திரு.நமச்சிவாயம் என்பவர் தலைமையாசிரியராக இருந்து என்னைப் பள்ளியில் சேர்த்துக்கொண்டார் என்று எனக்கு நினைவு. அப்பொழுது திரு.நீதியப்பன் ஐயாவும் அங்குப் பணியில் இருந்தார்கள். இவர் கன்னியாகுமரி ஊரினர். எங்கள் பகுதி மக்களுக்கு இவர் தெய்வம் போன்றவர். இன்றுவரை அவரை நினைவுகூரும் மக்களும், அவர்களின் குடும்ப நிகழ்வுகளுக்குச் சென்றுவரும் அன்பர்களும் உண்டு. அவர் பெயரை உச்சரித்தால் என் மாமா பேராசிரியர் கு.அரசேந்திரன் கண்ணீர்விட்டுக் கலங்கிவிடுவார். அந்த அளவு எங்கள் பகுதி மக்களின் உள்ளத்தில் இடம்பிடித்தவர். அவரையடுத்துத் திருவாளர் சுந்தரராசன் என்பவர் தலைமையாசிரியர். கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர்.

 நான் ஆறாம் வகுப்பில் சேர்க்கப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகள் ஆனாலும் நான் பள்ளிக்குச் சென்று வந்தமை நன்கு நினைவில் உள்ளது. நான் விளையாட்டில் ஆர்வம் உடையவன். சிறு பொடியனாக இருந்தபொழுது அரக்கு நிறத்தில் கால் சட்டையும் அதே நிறத்தில் வைக்கிங் பனியனும் அணிந்து விளையாடுவது எனக்கு விருப்பம். ஒரு விளையாட்டுப் போட்டியின் பொழுது கபடி விளையாடியபொழுது, கீழே விழுந்து என் நாக்கில் என் பல்வெட்டி ஒரு கிழமை உண்ணமுடியாமல் போனதும் நினைவுக்கு வருகின்றது. திரு.சுந்தரராசன் தலைமையாசிரியர் வருவது தெரியாமல் பள்ளிக்கு எதிரில் இருந்த நீர்த்தேக்கத் தொட்டியின் இரும்புப் படிகளில் கடைசி படி வரை ஏறி அவரிடம் மாட்டி அடி வாங்கியதும் உண்டு. கைப்பந்து விளையாடும்பொழுது பந்து தூக்குவதற்கு ஓடித் தவறிப் பந்தில் விழுந்து மிக்கபெரிய விபத்தில் சிக்கி மீண்டதும் இன்று நினைத்தாலும் அச்சம் கொள்ளச் செய்கின்றது.

 ஆறாம் வகுப்பில் எங்களுக்குத் தமிழ் பயிற்றுவித்தவர்கள் திரு. குஞ்சிதபாதம் ஐயாவும் திரு.சிவகுருநாதன் ஐயாவும் ஆவார்கள்.இருவரும் பொறுப்புடன் தமிழ் பயிற்றுவிப்பார்கள். குஞ்சிதபாதம் அவர்கள் கட்டுரை எழுதப் பழக்குவார். திருத்துவார். நன்கு பாடுவார். ஆண்டு விழாக்களில் அவர்தான் பெண்களுக்கு இசைப்பாடல்களைப் பயிற்றுவித்து மேடையில் தோன்றச் செய்வார். புலவர் சிவகுருநாதன் அவர்கள் பாடம் நடத்துவார்கள். தமிழில் நான் நன்கு படிப்பேன். என்னைத்தான் வகுப்புத் தலைவனாக அமர்த்தினார்கள். நான்தான் மாணவர்களின் மனப்பாடத்திறனைச் சோதிப்பவன். எனவே எனக்கு மாணவர்கள் கட்டுப்பட்டு இருப்பர். ஆறாம் வகுப்பு முதல் தனிப்பயிற்சிக்கு அம்மா அனுப்பிவிட்டார்கள்.

 பள்ளி முடிந்து மாலை நாலரை மணிக்கு வீடு வருவேன். மீண்டும் ஆறு மணிக்கு ஆசிரியர் இல்லம் சென்றுவிடுவேன். ஆசிரியர் வீட்டில் படித்துவிட்டு, அங்கேயே கொண்டு போகும் உணவை உண்டு இரவு உறங்குவேன். காலையில் எழுந்து படித்துவிட்டு அதன் பிறகு வீட்டுக்கு வந்து, மீண்டும் பள்ளிக்கு ஆயத்தம் ஆவோம்.

 அவ்வாறு எங்களுக்கு இரவு வகுப்பில் பயிற்றுவித்தவர் திரு.இராமன் ஆசிரியர் அவர்கள் ஆவார். அவர் கறுப்புத் துண்டு அணிந்து பள்ளிக்கு வருவார். இன்றும் அதுதான் வழக்கம். அதன் பொருள் எனக்குப் பின்னாளில்தான் தெரிந்தது. ஆம் அவர் தந்தை பெரியார் கொள்கைகளில் ஆழமான ஈடுபாடு உடையவர். அவர் மகன் ஒருவன் பாரதிதாசன். இன்னொருவன் எழில் என்று நினைக்கிறேன். மகள் தேன்மொழி. என்னுடன் பயின்ற வகுப்புத்தோழி. ஆசிரியர் திரு.இராமன் ஐயாவின் துணைவியார் எங்களை அவர்களின் குழந்தைகள் போல் நடத்துவார்கள். நாங்கள் அம்மா என்றுதான் அழைப்போம். பல ஆண்டுகள் அவர்களின் தனிப்பயிற்சியில் வளர்ந்தவன். இன்று ஊருக்குச் சென்றாலும் நலம் வினவுவதில் முன்னிற்பவர். சென்னையில் மகனுடன் ஐயா வாழ்ந்து வந்தாலும் செல்பேசியில் அழைத்து இன்றும் பேசும் இயல்புடையவர். அண்மையில் நடந்த செம்மொழி மாநாட்டில் நான் கலந்துகொள்வேன் என்று அறிந்து வாழ்த்தி வழியனுப்பிய தூய நெஞ்சத்தார்.

 எங்களுக்கு வரலாறு & புவியில் நடத்தியவர் திரு.நாகரத்தினம் ஐயா அவர்கள் ஆவார். அவர் நடத்திய செங்கீசுகான் வரலாறு,அசோகர் வரலாறு இன்றும் எனக்கு மனப்பாடம்.இன்றும் காணும்தோறும் வினவுவார்.நெசவு ஆசிரியராக திரு.செகநாதன் என்பவர் பயிற்றுவித்தார். கதை சொல்வதில் மன்னன்.அவர் மாணவர்களை அமைதிப் படுத்திக் கதை சொல்வதை நினைத்தால் எங்களுக்கு இன்றும் பேய்க்கதைகள் நினைத்து அச்சம் வரும். அந்த அளவு எங்களுக்குக் காட்சிகளை விளக்கிப் புரியவைப்பார்.

 நெல்லித்தோப்பு என்ற ஊரிலிருந்து வந்த திரு.ஆறுமுகம் ஐயா அவர்கள் கணக்கு நடத்துவார். அடி உதைக்கு அஞ்சாதவர். அப்படி அடித்தும் அவர் கணக்கு எங்களைப் பொறுத்தவரை பிழையாகப் போகும். அவர் பெயர் ஒலித்தால் வயிற்றில் இருக்கும் குழந்தைகூட அஞ்சி ஒடுங்கும். கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர். பின்னாளில் மீன்சுருட்டிக்குப் படிக்கச் செல்லும்பொழுது அவரை வழியில் பார்த்தால் மிதிவண்டியிலிருந்து இறங்கி வணங்குவோம். அவர்தான் இன்றைக்கும் எங்களுக்குப் பெரும் மதிப்பிற்கு உரியவராக விளங்குகின்றார். சண்முகம் ஆசிரியர் அவர்கள் மீன்சுருட்டியிலிருந்து வருவார்கள். கணக்குப் பாடம் சில காலம் அவர் நடத்தினார். சாரணர் இயகத்தின் பொறுப்பாளர். நான் சாரண இயக்க மாணவனாக இருந்து பயிற்சி பெற்றேன். அவர் பயிற்றுவித்த படிமுடிச்சு உள்ளிட்ட முடிச்சுகள் குழந்தைகளுக்கு ஏனை கட்டும்பொழுது இன்றும் பயன்படுகிறது.

 எனக்கு திருவாளர்கள் இராமலிங்கம், திருவாளர் கணேசமூர்த்தி, திருவாளர்கள் காசிநாதன் உள்ளிட்டவர்கள் ஒன்பது, பத்தாம் வகுப்புகளில் தமிழாசிரியர்களாக இருந்து தமிழ் பயிற்றுவித்தவர்கள். புலவர் இராமலிங்கம் ஐயா அவர்கள் தந்தை பெரியார் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர். கறுப்புச்சட்டை அணிந்துதான் பள்ளிக்கு வருவார்கள்.எங்களைக் கண்டிப்புடன் நடத்திப் பயிற்றுவிப்பார். இளங்கோவன் என்று ஒரு ஆசிரியர் பின்னாளில் வரலாறு நடத்தினார். அதுபோல் இரத்தினம் என்று ஒரு ஆசிரியர். குளத்தூர் என்னும் ஊரிலிருந்து வருவார். ஆங்கில இலக்கணம் நடத்துவதில் வல்லவர். அவர் நடத்தியும் எங்களால் ஆங்கிலத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் போனது. பின்னாளில அவர் தூரத்து உறவினர் ஆனார்.

 சார்ச்சு என்று ஓர் ஆசிரியர் இருந்தார். அவர் வெற்றிலைப் பாக்குடன் தோழமை கொண்டவர். நான் எழுதிய சிறுகதையைப் படித்துப் பாராட்டி ஊக்கப்படுத்தியவர். சிதம்பரநாதன் என்று ஒரு ஆசிரியர் அறிவியல் ஆசிரியராகப் புதியதாகப் பணிக்கு வந்தார். அவர் வந்த பிறகு மாணவர்களாகிய நாங்கள் அவர் வகுப்புக்குக் காத்திருப்போம். அந்த அளவு மாணவர்கள் உளம்கொள்ளப் பாடம் நடத்துவார். அமீபா பற்றி படம் வரைந்து பகுதிகளைக் குறித்த அந்தக் காட்சி இன்றும் நினைவில் உள்ளது.

 உலோ. வரதராசன் என்று ஓர் ஆசிரியர் அறிவியல் பாடம் நடத்துவதில் வல்லவர். உள்ளூர்க்காரர். எங்கள் பெற்றோர் அவர் வழியாகத்தான் எங்கள் கல்விநிலை அறிந்து கொள்வர். அதனால் அவர் விடுதலையாக எங்களுக்குத் தண்டனை வழங்க ஊர் அனுமதி பெற்றிருந்தார். சி.சுந்தரேசன் ஐயா எங்களுக்குப் பத்தாம் வகுப்பில் கணக்கு எடுத்தவர். அடி உதைக்கு அஞ்சாதவர். எங்கள் குடும்ப நண்பர்.என்பதால் அவர் அடித்துத் திருத்துவதில் உரிமை அதிகம் இருந்தது.

 திரு.நிர்மல்குமார் சாலமன் என்ற ஆசிரியர் எங்களுக்கு ஆங்கிலம் நடத்தினார். அவர் நடத்திய ஆங்கிலப் பாடல் ஒன்றை ஓர் எழுத்தும் மாறாமல், ஒரு குறியீடும் மாறாமல் எழுதினால் ஒரு கரிக்கோல் (apsara pencil) தருவதாக உரைத்தார். மறுநாள் அவர் கையால் கரிக்கோல் வாங்கும் ஆவலில் மாணவர்கள் அனைவரும் அந்தப் போட்டியில் கலந்துகொண்டோம்.பலரும் பலவகையில் முயற்சி செய்தனர். நான்தான் அந்தப் பாடலைப் பிழையின்றி எழுதி ஆசிரியர் கையால் முதன்முதல் கரிக்கோல் வாங்கினேன். கரிக்கோல் விலை குறைவாக இருந்தாலும் அந்த ஆசிரியர் கையால் பரிசில் வாங்க வேண்டும் என்பது அன்றைய மாணவர்களின் பெரு விருப்பாக இருந்தது.அவர் நன்கு புல்புல்தாரா, மவுத் ஆர்கன் இசைப்பார். அதனால் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பு மாணவர்களிடத்தில் உண்டு. பத்தாம் வகுப்புத் தேர்வெழுதப் பாத்திமா பள்ளிக்குச் (செயங்கொண்டம்) சென்றபொழுது மறவாமல் அவர் வீட்டுக்குச் சென்று அவர் இசைக்கருவியால் சில பாடல்களைப் பாடச்செய்து கேட்டுத் திரும்புனோம்.

 பள்ளி ஆண்டுவிழாக்களில் பாடல், கட்டுரை,விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு நான் பரிசு பெற்றுள்ளேன். ஆறாம் வகுப்பில் நான் வாங்கியப் பரிசில் "சருமரோக நிவாரண மருந்துகள்" என்ற புத்தகம் இன்றும் என்னிடம் உள்ளது. திரு.தியாகராசன் என்னும் பள்ளித்தூய்மை செய்யும் அண்ணன் ஆண்டு விழாக்களில் பெண் வேடம் அணிந்து அனைவரையும் மயக்கும் அழகுடன் விளங்குவார். அவரின் பதிவுத்தட்டு நடனத்துக்கு அக்கம் பக்கத்து ஊர்க்காரர்களும் வந்துவிடுவர். கப்பலோட்டியத் தமிழனாகவும், சாக்ரடிசாகவும், வீரபாண்டிய கட்டபொம்மனாகவும் வீரமுழக்கம் செய்த பல மூத்த மாணவர்கள் இன்று வயல்வெளிகளில் உழுதொழிலில் ஈடுபட்டும், தறி நெய்தும் வாழ்க்கையை நடத்துகின்றனர்.

 என் நண்பன் ஒருவனை அண்மையில் கண்டேன். தலை வெளுத்து அணில் கூடுபோல் இருந்தது. பூண்டு வணிகம் செய்வதாகச் சொன்னான். அவன் அழகிய இளமையை வறுமை தின்று தீர்த்துள்ளது. அவன் பிள்ளைகள் கல்லூரிகளில் படிப்பதாகச் சொன்னான். ஒரு நண்பன் எயிட்சு நோய்க்கு இலக்காகி இறந்துபோனார். இன்னொரு நண்பர் தலையாரியாக ஊரில் இருந்தார். ஒரு நேர்ச்சியில் இறந்துபோனார். என்னுடன் பயின்றவர்கள் பலர் தனியாகத் தொழில் நடத்தி நல்ல நிலையில் உள்ளனர். பலர் அரசு வேலைக்குச்சென்று நல்ல நிலையில் இருகின்றனர். பன்னீர்ச்செல்வம் என்ற நண்பர் ஊருக்குப் போகும்பொது கண்ணில் தென்பட்டால் இயன்றதை அவருக்குக் கொடுத்து உதவுவேன். உடல்நிலை ஒத்து வராததால் அவரால் வெளியூர் செல்லமுடியிவல்லை. பிள்ளைகள் படிப்பதாகச் சொல்வார். இப்பொழுது நாங்கள் படித்த பள்ளியில் எழுத்தராகப் பகுதி நேரப் பணியில் இருக்கின்றார். இப்படி என் பள்ளிப்படிப்பு வரவும் செலவுமாக நினைவில் உள்ளது.

 என்னுடன் பயின்ற எல்லா மாணவர்களையும் இன்னும் நன்கு நினைவில் கொண்டுள்ளேன். காலச்சூழலால் அவர்களைக் காண முடியாமல் போனாலும் என் நினைவில் இருகின்றார்கள். அதுபோல் அகரம் பயிற்றுவித்துத் தமிழ்ச் சிகரத்தில் ஏற்றிப் பார்த்த அனைத்து ஆசிரியர் பெருமக்களையும் இந்தக் கட்டுரை வழியாக மீண்டும் வணங்கி மகிழ்கின்றேன்.


 பள்ளியிறுதி வகுப்புப் படிக்கும்பொழுது மாணவத் தலைவனாகவும் இருந்துள்ளேன். காலையில் இறைவணக்கத்துக்கு ஒன்றுகூடும் பள்ளி மாணவர்களுக்குக் கட்டளையிட்டு நடத்தும் பொறுப்பு எனக்கு இருந்தது. திரு. பாலகிருட்டினன் ( C. B. K ) அவர்கள் தலைமையாசிரியராக இருந்தகாலத்தில் நாங்கள் பள்ளியிறுதி வகுப்புத் தேர்வெழுதி அவர் கையால் சான்றிதழ் பெற்றோம். கொல்லாபுரம் ஊரினர்.அவர் கண்டிப்புக்குப் பெயர் பெற்றவர். பெரும் பொருள்வளம் உடையவர். ஆங்கிலத்தில் நல்ல பயிற்சியுடையவர். இவர் முன்பும் இந்தப் பள்ளியில் தலைமையாசிரியராக இருந்து பணியாற்றியவர்.

 இவருக்கு முன்பு பணி செய்த தலைமையாசிரியர் பொறுப்பற்று இருந்ததால் பெரும் போராட்டம் நடத்தி மக்களும் மாணவர்களும் விரும்பி திரு.பாலகிருட்டினன் அவர்களை வேண்டி அழைத்து வந்தனர். அவர் பணிச்சிறப்பு அறிந்த ஊர் மக்கள் பல ஆண்டுகள் கழித்தும் பள்ளியின் முன்னேற்றம் நோக்கிக் கொண்டு வந்தனர். இன்று உள்கோட்டைப் பள்ளி மேல்நிலைப்பள்ளியாக உயர்ந்து நிற்கின்றது. நாங்கள் ஓடி விளையாடிய ஆடரங்குகள் இல்லாமல் கட்டடங்களாகக் காட்சி தரும் இந்தப் பள்ளியில் இப்பொழுது நுழையும்பொழுது கோடை விடுமுறையில் உறவினர் வீட்டுக்குச் செல்லும்பொழுது ஏற்படும் கூச்சம் இருந்துகொண்டுதான் உள்ளது.

5 கருத்துகள்:

இன்னம்பூரான் சொன்னது…

பசுமையான நினைவலைகள், இளங்கோவன். சுவை பட எழுதியிருக்கிறீர்கள். அக்காலத்து வரலாறு தெரிகிறது. மின் தமிழில், அவரவர் நினைவலைகளை, 'சென்னையோ! சென்னை!', 'எப்படி ஓடினரோ!' என்ற இழைகளில் பதிவு செய்து வருகிறோம். 'பள்ளி நினைவுகள்' என்று நீங்கள் இதையே வைத்து ஒரு இழை தொடங்கினால், மடை திறந்தது போல. நான் கேட்டுக்கொண்டபடி என்று கூட எழுதுவதில் எனக்கு ஆட்சேபணை இல்லை.
நன்றி, வணக்கம்.
இன்னம்பூரான்

முனைவர் அண்ணாகண்ணன் சொன்னது…

உங்கள் நினைவாற்றலை எண்ணி வியக்கிறேன். நல்ல ஆசிரியர்களைப் பெற்றுள்ளீர்கள். அக்கால நினைவுகள், அழியாத கோலங்கள்.

chockalingam சொன்னது…

I APPRICIATE YOUR KNOWLEDGE IN TAMIL AND COMPUTER. ALSO YOU ARE REMEMBERING YOUNG STAGE EVENTS.
THANKS.
CHOCKALINGAM MA:MED,
ALAVAI,ARIYALUR DT,
NOW I AM INSRIPURANTHAN ARANKOTTAI.
MR GANESAMURTHY YOUR TEACHER IS MY RELATIVE.
NANRI.
REST IN NEXT

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

தங்களின் பள்ளி வாழ்க்கைக்குறிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்தது நன்றி.

சோழன் சொன்னது…

தலைவரே படத்தை பார்த்தால் ,மாப்பிள்ளை பெஞ்சில் இருக்கிறீர்கள்
அப்பவே உங்கள் பள்ளியில் உங்களுக்கு உயர்ந்த இடம் கிடை(கொடு)த்திருக்கிறது !!!
நன்றி
சோழன்
வாரி(லி)யங்காவல்