நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 19 ஏப்ரல், 2010

முனைவர் தமிழகனின் வழக்குச்சொல் அகராதி


முனைவர் பி.தமிழகன்

  திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் இரா.இளவரசு அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. இளவரசு ஐயா அவர்கள் சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி வந்தால் புலவர் பி.தமிழகன் அவர்களின் இல்லில் தங்குவது வழக்கம். இருவரும் உறவினர்கள்.புலவர் தமிழகன் அவர்கள் பள்ளியில் தமிழாசிரியராக அந்நாளில் பணிபுரிந்து வந்தார்கள்.என்னைப் பற்றிப் பேராசிரியர் உயர்மொழிகள் நவின்று அறிமுகப்படுத்தி வைப்பார்கள்.

  அந்நாளில் புலவர் அவர்கள் வழக்குச்சொல் அகராதி ஒன்று அணியப்படுத்தி வருவதாகச் சொன்னார்கள்.எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி.ஏனெனில் அந்நாளில் உழவியல் வழக்குச்சொல் என்னும் ஒரு சொல் தொகுப்பை நான் கரட்டுப்படியாக உருவாக்கி வைத்திருந்தேன்.

  நான் உழவர் குடியில் பிறந்தவன் ஆதலாலும் மூன்றாண்டுகள் உழவுத்தொழிலில் ஈடுபட்டு அதன் பிறகே கல்லூரிக்குப் படிக்க வந்தவனாதலாலும் எனக்கு உழவியல் சார்ந்த சொற்களையறிதலும் அதற்கு விளக்கம் வரைதலும் உவப்பானதாக இருந்தன.பின்னாளில் பேராசிரியர் பெருமாள்முருகன்,கண்மணி குணசேகரன் உள்ளிட்டவர்கள் அகராதிகள் வெளியிட்டபொழுது நாம் வெளியிட்டிருந்தால் நம் நூல் முதலில் வந்திருக்கும் என்று எண்ணியதுண்டு.இந்த நாள் வரை அந்த நூல் முற்றுப்பெறாமல் உள்ளது.இது நிற்க.

 புலவர் தமிழகன் ஐயாவைச் சந்திக்கும்பொழுதெல்லாம் வழக்குச் சொல்லகராதி எப்பொழுது வரும் என்று வினவுவது எங்கள் வேலையாகிவிட்டது. செப்பமாக வெளியிட விரும்பியதால் புலவரால் நாங்கள் விரும்பிய காலத்தில் வெளியிடமுடியவில்லை.

  எதிர்பாராத வகையில் சென்ற கிழமை புலவரின் வழக்குச்சொல் அகராதி நூல் கையினுக்கு வந்தது. புலவரைவிடவும் அவர் மேல் அன்புகொண்டிருந்த எங்களுக்கே மகிழ்ச்சி அதிகமாக இருந்திருக்கும். புலவர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்து பல வட்டாரத்தில் தமிழாசிரியர் பணிபுரிந்தவர். ஆதலால் மிகநுட்பமாகப் பல சொற்களைப் பதிவுசெய்துள்ளார்கள்.

  புலவர் தமிழகன் அவர்களின் வழக்குச்சொல் அகராதி பற்றி சில சொற்கள் எழுதுகின்றேன்.பின்னர் விரிவாக இந்த நூல் பற்றி ஆய்வுரை ஒன்று வரைவேன்.


வழக்குச்சொல் அகராதி

 புலவர் தமிழகன் அவர்களின் வழக்குச்சொல் அகராதி 2009 இல் முதற்பதிப்பாக வெளிவந்துள்ளது.22+142= 164 பக்கத்தில் இந்நூல் இயன்றுள்ளது. உருவா எண்பது விலையுள்ள நூல்.நோக்குநூல் என்ற தலைப்பில் புலவர் இரா.இளங்குமரனார் அணிந்துரை தந்துள்ளார்.கொங்கு தேர்ந்துண்ணும் தும்பி போலும் வழக்குச்சொற்களைத் தேடித்திரட்டிய புலவர் தமிழகனின் உழைப்பை அணிந்துரையாசிரியர் அகம் குளிர்ந்து பாராட்டியுள்ளார்.

  ”முனைவர் தமிழகனார் கேட்டல், தொகுத்தல், அடைவுறுதல், விளக்கம் புரிதல், அச்சிடல் என்னும் ஐந்து சால்பூன்றிய மாளிகையாய்த் தமிழன்னைக்கு எடுத்த மாளிகை இஃது” என்று இளங்குமரனார் போற்றியுள்ளார்.இடால்-வலை; குட்டாலி-பாம்புப்புற்று என்னும் சொற்கள் அகராதிகளில் ஏற்றப்பட வேண்டிய சொற்களாகும் என்பது இரா.இளங்குமரனாரின் வேண்டுகை.

 புலவர் தமிழகனார் 1973 இல் பஞ்சப்பட்டி அரசுப்பள்ளியில் பணியாற்றிய காலம் முதல் அரிய சொல் வழக்குகளைக் கேட்டு வியந்து தொகுக்கத் தொடங்கிப் பல ஆண்டுகளின் தொகுப்பில் பல்லாயிரம் சொற்களாக நமக்குக் கிடைத்துள்ளன. பஞ்சப்பட்டி என்ற ஊரின் பள்ளி மாணவன் மூட்டுக்குட்டி என்று பெண் ஆட்டுக்குட்டியைக் குறிப்பிட்டது கண்டு, கேட்க, அம்மாணவன் பெண்குட்டியை “மூடு” என்போம் என்றான். தொல்காப்பியத்தில் மரபியலில் உரையாசிரியர் பேராசிரியர் “இவை இக்காலத்து வழக்கினுள் அரிய” (தொல்.மர.64) என்று குறிப்பிடுவது இன்றும் மக்கள் வழக்கில் இருந்தது கண்டு புலவர் மகிழ்ந்து சொல் தொகுப்பை வேகப்படுத்தியுள்ளார்.

  1982 இல் சோமரசன் பேட்டை என்ற ஊரில் பணிபுரிந்தபொழுதும் சொல் தொகுப்பு நடந்துள்ளது.இன்னும் அவர் சொல்தொகுப்புப் பணி நின்றபாடில்லை. வழக்குச்சொல்லகராதி நூலில் 2599 வழக்குச்சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளன.நூல் அச்சான இந்த நான்கு மாதத்தில் இன்னும் 60 சொற்களை நம் புலவர் அவர்கள் தொகுத்து வைத்துள்ளார்.அடுத்த பதிப்பில்தான் இதனை இணைக்க வேண்டும் என்று ஆர்வம் ததும்ப பேசுகின்றார். இந்த நூலில் முதன்மையான சொற்கள் சிலவற்றுக்குப் படம் வரைந்து இணைக்கப்பட்டுள்ளன.

வழக்குச்சொல்லகராதியில் சொற்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன.

 வழக்குச்சொல்,அதற்குரிய பொருள்,அது தொடரில் இடம்பெறும் தன்மை, எந்தப் பகுதியில் வழங்குகிறது என்பதைக்குறிக்கும் குறிப்பு என்ற அமைப்பில் நூல் உள்ளது.

(எ.கா) அக்கச்சி-மூத்த உடன் பிறந்தாள். ’உன் அக்கச்சியைக் கூப்பிடு’ (பஞ்)

அங்காளி-நெருக்கமில்லாத,அங்கொன்றும் இங்கொன்றும்

அதம்புதல்-இடிபோல முழங்குதல்

அந்தோளி-அவ்விடம்

அருநாட்டியம்-தூய்மை உடைமை

அலர்-காளைகளின் கழுத்தில்மொட்டு(மலர்) வடிவில் கட்டப்படும் பெருஞ்சலங்கை

ஆண்டுமாறி-எதையும் விற்பவன்

உடையடி(த்தல்)-இளங்காளை,கிடாய்களின் விதையை நசுக்குதல்

உக்கழுத்து-முன் கழுத்து

ஊட்டுக்குட்டி- சின்னஞ்சிறு ஆட்டுக்குட்டி

ஓலவாய்-புரியாத பேச்சு பேசுபவன்

கச்சு-உப்பு மிகுதி

கடவு-வேலியில் உள்ள சிறுவழி

கண்டறை- வைக்கோல் போரில் வைத்துப் பிடுங்குதல்

சாக்கு-காரணம்

சிக்கம்- பை போலிருக்கும் வலை(தொரட்டியிலே சிக்கம் கட்டி மாங்காய் அறுப்போம்)

சிக்குப்பலகை- பெரிய புத்தகங்களை வைத்துப் படிக்க உதவும் பலகை

படுக்காளி-சோம்பேறி மாடு

பத்திரிப்பு- கட்டடங்களில் சிறிது ஒதுக்கி உள்ளே கட்டுதல்

பத்தை-சிறு தூறு

என்று வழக்கில் தொடர்ச்சியாகப் பயில்வனவும் அருகி வழங்குவனவுமான ஈராயிரத்து அறுநூறு சொற்களை அழியாமல் திரட்டித் தந்துள்ள முனைவர் பி.தமிழகனார் தமிழ் இலக்கிய வரலாற்றில் நினைவுகூரத்தக்கவரே!

முனைவர் பி.தமிழகனார் வாழ்க்கைக்குறிப்பு

 முனைவர் பி.தமிழகனின் இயற்பெயர் பி.இராசலிங்கம் என்பதாகும்.பெற்றோர் ப.பிச்சை-மீனாட்சியாகும்.இவர் பிறந்த ஆண்டு பள்ளிப் பதிவேடுகளின்படி 05.10.1946.உடன் பிறந்தோர் மூவர் ஆண்கள். இவர் பிறந்த ஊர் குமுளூர்-இலால்குடி வட்டம்,திருச்சிராப்பள்ளி மாவட்டம். தொடக்கக் கல்வியைக் குமுளூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். கல்லூரிக் கல்வியைக் கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்றவர்(1965-1969).1976 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் பி.லிட் பட்டத்தையும்,1980 இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் வழியாக முதுகலைப்பட்டத்தையும் பெற்றவர்.

  பின்னர் கல்வியியல் இளையர்(982),கல்வியியல் முதுவர்(1986) பட்டத்தையும் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாகத் தொடர்ந்து "மரபியல் சொற்களும் சங்க இலக்கியப் பயன்பாடும்" என்ற தலைப்பில் அகராதியியல் துறையின் வழியாகப் பெற்றவர்.

 பள்ளித் தமிழாசிரியராகப் பணிபுரிந்த புலவர் அவர்கள் தஞ்சாவூர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வு-புலவர் பாடநூல், வழக்குச்சொல்லகராதி என்பன இவர்தம் தமிழ்க்கொடையாகும்.

 தமிழறிஞர் இரா.இளங்குமரனாருடன் இணைந்து முதுமொழிக் களஞ்சியம் (ஐந்து தொகுதிகள்) (20,000 பழமொழிகளின் தொகுப்பு) ,சங்க இலக்கியங்கள்(15 தொகுதிகள்) ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார். சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரையுடன் பத்திப்பித்துள்ளார். இவை யாவும் தமிழ்மண் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன.

 தமிழ் நூல்களைச் சேர்த்தலும் பாதுகாத்தலும் எனப் பணிகள் புரிந்துவருகின்றார்.

 திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம், செண்பகத்தமிழ் அரங்கு, திருக்குறள் பேரவை, பாரதிதாசன் பல்கலைக்கழகம். திருச்சிராப்பள்ளி வானொலியில் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரியவர்.

புலவர் பி.தமிழகன் அவர்களின் முகவரி:

இளந்தமிழ்ப் பதிப்பகம்
2,பிச்சையம்மாள் நகர்,
காசாமலை,திருச்சிராப்பள்ளி-621 023
பேசி- 0413- 2457961

1 கருத்து:

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

நாங்கள் அறியாத பெருமக்களைக்குறித்த தங்களின் பதிவு அருமை. வழக்குச்சொல் அகராதியில் இடம்பெற்றுள்ள சொற்களில் பாதி எங்கள் ஊரிலும் வழக்கில் உள்ளது.