சனி, 13 மார்ச், 2010
மயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் பயிலரங்கம்-படங்கள்
முனைவர் மா.சற்குணம்(கல்லூரி முதல்வர்)
மயிலம் முருகன் திருக்கோயில் உலகப் புகழ்பெற்ற திருக்கோயிலாகும்.பாவேந்தர் மயிலம் சுப்பிரமணிய துதியமுது,சண்முகன் வண்ணப்பாட்டு முதலிய நூல்களை எழுதியுள்ளமையை இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.இவ்வூரில் உள்ள திருமடத்தின் சார்பில் தமிழ்க்கல்லூரி நடைபெற்றது.இன்று இக்கல்லூரி சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரி என்று பெயர் தாங்கித் தமிழுடன் கலை,அறிவியல் பாடங்களையும் படிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.
முன்பே ஒருமுறை இக்கல்லூரியில் சிறப்புரையாற்றியுள்ளேன்.தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புறச்சாயல்கள் என்ற தலைப்பில் என் உரை ஒன்றரை மணி நேரம் அளவில் இருந்ததாக நினைவு.அப்பொழுதே நான் தமிழ் இணையம் பற்றி உரையாற்ற வேண்டும் என்று அந்நாள் கல்லூரி முதல்வர் வேண்டுகோள் வைத்தார்.நானும் இசைந்தேன்.பணிச்சூழலால் இயலாமல் இருந்தது.அண்மையில் நடந்த விழா ஒன்றில் இந்நாள் கல்லூரி முதல்வரும், கல்லூரிச் செயலாளரும் வந்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டினர். பேராசிரியர் எழில் வசந்தன்,பேராசிரியர் இலட்சாராமன் ஆகியோரும் வரும்படி விருப்பம் தெரிவித்தனர். விடுமுறையைப் பயன்படுத்தி இன்று காலையில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.சற்றொப்ப நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக என் உரை இருந்தது.சிறு அறிமுகமும் மாணவர்களின் கருத்து கூறலும் இந்த நேரத்தில் அடங்கி இருந்தது.
கல்லூரியின் கணினி அரங்கில் பயிலரங்கம்.மாணவர்கள் 150 பேருக்கு மேல் இருந்தனர். பேராசிரியர்கள்,சிறப்பு விருந்தினர் என அரங்கம் நிறைந்தது.இட நெருக்கடி காரணமாக அனைவரும் கீழே அமர வேண்டிய நிலை.எனினும் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்ததால் தங்களின் இருக்கை பற்றி கவனம் செலுத்தாமல் சுவடிகளில் குறிப்பெடுத்துக் கொண்டனர்.நானும் தமிழிணைய வரலாற்றை எளிமையாக எடுத்துரைத்து,இன்று கணினியில் தமிழின் அனைத்துப் பயன்பாடுகளையும் விளக்கினேன்.
முதல் இரண்டு மணி நேரம் இணைய இணைப்பு சரியாக இருந்தது.பின்னர் இணைய இணைப்பு தடைப்பட்டது.இது போன்ற நேரத்தில் பயன்படுத்த என் இயங்குமோடம் உதவி செய்யும்.இன்றும் உதவியது,காட்சி விளக்கமும் உதவியது.தமிழ்த்தட்டச்சுக்கு உதவும், எ.கலப்பை,என்.எச்.எம்.எழுதி,முரசு அஞ்சல் பற்றி எடுத்துரைத்தேன்.தமிழ் 99 விசைப் பலகையின் பயன்பட்டை விளக்கினேன்.மற்ற அனைத்துப் பயன்பாடுகளையும் விளக்கினேன். மின்னஞ்சல் அனுப்ப,உரையாடப் பயிற்றுவித்தேன்.
தமிழில் எடுத்துரைத்ததால் தமிழ்க்கல்லூரி மாணவர்கள் நன்கு விளங்கிக்கொண்டனர். தொல்காப்பியம் உள்ளிட்டவற்றை இனி கேட்க முடியும் என்று செம்மொழி நிறுவனம் வெளியிட்ட சில பாடல்களை அறிமுகம் செய்தேன்.வலைப்பூ உருவாக்கப் பழக்கினேன்.தமிழ் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டினேன்.விக்கிப்பீடியாவில் கட்டுரை வரைய வேண்டினேன். குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 99 வகை மலர்களைக் காட்டியதும் அனைவரும் வியந்தனர்.
விக்கியை அறிமுகப் படுத்தினேன்.புகழ்பெற்ற தளங்கள் எல்லாம் என்னால் அறிமுகம் செய்யப்பெற்றன.பல மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருந்ததும் கணினி அறிமுகம் இருந்ததும் மகிழ்ச்சி தந்தது.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுச்சேரிக்குப் புறப்பட்டேன்.
கல்லூரி நிருவாகத்தினர்,பேராசிரியர்கள்
பங்கேற்ற மாணவியர்
பங்கேற்ற மாணவர்கள்
பங்கேற்ற மாணவியர்
மு.இ
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
குறிஞ்சிப்பாட்டின் 99 மலர்களின் சுட்டி கொடுத்தால் நாங்களும் பயனடைவோம்.இளையோருக்குத் தமிழ் இணையம் குறித்த பயிலரங்கத்தின் வாயிலாக வருங்காலத்தில் தமிழ் வளர்ச்சி சிறப்புரும். நன்றி!
கருத்துரையிடுக