நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 8 மார்ச், 2010

நாமக்கல் செல்வம் கல்வி நிறுவனங்களில் தமிழ் இணையம் அறிமுகம்


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்

நாமக்கல் மாவட்டம் தமிழகத்தில் கல்வித்துறையில் சிறந்த மாவட்டமாக விளங்குகிறது.அம்மாவட்ட ஆட்சியராக விளங்கும் திரு.சகாயம் இ.ஆ.ப.அவர்களின் தன்னம்பிக்கை,தமிழ்ப்பற்று,தூய்மையான ஆளுகை ஆகியவற்றை நண்பர்கள் வழியாகவும்,செய்தி ஏடுகள் வழியாகவும் அறிந்திருந்தேன்.அவர்களை வாய்ப்பு நேரும்பொழுது கண்டு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அதனிடையே காவல்துறையில் கூடுதல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ்ப்பற்றாளர் திரு.கருப்பண்ணன் அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது.அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று அங்கு(நாமக்கல்)ச் செல்ல பலநாள் நினைத்தும் 05.03.2010 அன்றுதான் கைகூடியது.நானும் திருவாளர் கருப்பண்ணன் அவர்களும் முன் பார்த்தறியாதவர்கள்.உணர்வொத்தவர்கள்.

புதுச்சேரியில் என் பணிமுடித்து,மாலை 6 மணியளவில் விழுப்புரத்தில் தொடர்வண்டி ஏறினேன்.இரவு 9.15மணியளவில் திருச்சிராப்பள்ளி சென்றடைந்தேன்.உணவுக்குப் பிறகு நாமக்கல் நோக்கிச் செலவு. இடைக்கிடையே நான் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறேன் என்று அன்பு வினவுதல் நம் கருப்பண்ணன் ஐயாவிடமிருந்து தொடர்ந்துகொண்டிருந்தன.நடு இரவு 12.15 மணிக்கு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். எனக்காகக் கருப்பண்ணன் அவர்கள் காத்திருந்தார்.என்னைக் கண்டதும் ஐயாவுக்குச் சிறிது மருட்சியாக இருந்தது.காரணம் நான் அகவை முதிர்ந்த ஆளாக இருப்பேன் என்று நினைத்து முதலில் ஏமாற்றம் அடைந்தார்கள்.ஒருவரை ஒருவர் அறிமுகம் ஆனோம்.

அந்த நடு இரவில் சில காட்சிகளைக் காட்டினார்.நகராட்சி இசைவு பெற்று மக்களுக்குப் பயன்படும் பொன்மொழிகளைப் பேருந்து நிலையச்சுவர்களில் அவர் ஓய்வுக் காலத்திற்குப் பிறகு தொடர்ந்து தம் கைப்பட எழுதி வருவது கண்டு மகிழ்ந்தேன்.கையூட்டுக்கு எதிராக ஒரு போராளியாகச் செயல்படும் இவர் தம் பணிக்காலத்தில் தூய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.மக்களின் வரிப்பணத்தில் தாம் வாழ்ந்து வருவதாகவும் அம்மக்களுக்கு உழைப்பதே தம் கடமை எனவும் கூறினார்.இவர் போன்ற அதிகாரிகளைப் பார்க்கும் பொழுதுதான் அரசு ஊழியர்களில் சிலராவது நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.

இரவு அவர் இல்லத்தில் தங்க வைத்து உரையாடினார்.நடு இரவு இருவரும் கண் அயர்ந்தோம்.காலையில் கண் விழித்ததும் என்னைக் காண நூல் தொகுப்பாளர் திரு. இராமசாமி ஐயா அவர்கள் வந்துவிட்டார். அவர்கள் கீழே விழுந்து கால் பாதிக்கப்பட்ட சூழலிலும் என்னைக் காண வந்தமை நெகிழ்ச்சியாக இருந்தது.அவர் அன்புக்கு யான் யாது கைம்மாறு ஆற்றுவேன்?.முன்பே அன்னாரைத் தமிழ் ஓசை நாளேட்டில் நேர்கண்டு எழுதி அவரின் தமிழ்ப்பணியை வெளியுலகுக்குக் கொண்டுவந்தேன்.(என் வலைப்பூவிலும் அவர் பற்றி செய்தி உள்ளது).சிறிது உரையாடி மீண்டும் சந்திப்பதாக உறுதியளித்து, செல்வம் கல்லூரிக்குக் காலை 9.30 மணிக்குச் சென்றோம்.

செல்வம் கல்வி நிறுவனம் நாமக்கல்லின் புகழ்பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி,ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரி எனப் பல நிறுவனங்கள் உள்ளன.ஆசிரியர்களும் மாணவர்களுமாக 150 பேருக்கு மேல் அரங்கில் ஒன்றுகூடினோம். தினமணி செய்தியாளர் திரு.முருகன் அவர்கள் வந்திருந்து செய்திகளைச் சேகரித்து மறுநாள் கோவைப் பதிப்பில் விரிவாக வெளியிட்டிருந்தார்.

தமிழ் இணைய வரலாற்றை நினைவூட்டித்,தமிழில் நாம் இணையத்தைப் பயன்படுத்த முடியும் ஆங்கில அறிவு அதிகம் தேவை என நினைக்காதீர்கள்,ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறி,தமிழ்த்தட்டச்சு தொடங்கி மின்னஞ்சல்,வலைப்பூ,நூலகங்கள்,மின்னிதழ்கள் பற்றி எடுத்துரைத்தேன்.அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.சொக்கலிங்கம் அவர்கள் வரவேற்றார். திரு.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.

கல்வியியல் கல்லூரி முதல்வர் திரு.செந்தில் அவர்கள் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுவைக்குப் புறப்பட்டேன்.திரு.இராமசாமி ஐயாவைச் சந்திக்க இயலாதவாறு என் பயணத்திட்டத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்தது.அவரிடம் மீண்டும் ஒருமுறை வந்து காண்பதாகச் சொல்லி விடைபெற்று வந்தேன்.


திரு.கருப்பண்ணன்,திரு.இராமசாமி


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள்


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்


ஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்


பேராசிரியர்கள்,மாணவர்கள்


நானும்,கல்லூரி முதல்வர் திரு.செந்தில்குமார் அவர்களும்


நான்,திரு.கருப்பண்ணன்(காவல்துறை-ஓய்வு),திரு.சொக்கலிங்கம்(முதல்வர்),பிற பேராசிரியர்கள்

3 கருத்துகள்:

Thamizhan சொன்னது…

தமிழ், தமிழ் என்று பேசுபவர்களைக் காட்டிலும் தமிழ்த் தொண்டாற்றிவரும் தங்களுக்கும், நாமக்கல் தமிழ்ப் பற்றாளர்கட்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
முக்கியமாக ஆசிரியப் பயிற்சியாளர்களிடம் சொல்லித் தருவது பல்லாடிரக் கணக்கானோர்க்குச் சென்றடையும்.
கணினி பற்றிய அச்சம் தவிர்த்து எளிதில் அனைவரும் கற்றுக் கொள்ளலாம் என்ற செய்தியைப் பட்டரைகளாகப் பரப்பிவரும் தங்கள் பணி தொடரட்டும்.
நாமக்கல் கல்வியில் சிறந்து பல நிறுவனங்களுடன் விளங்குவது மிகவும் பெருமைக்குறியது.

க.நா.சாந்தி லெட்சுமணன். சொன்னது…

தமிழை இணையம் வழியாக இளையோருக்குத் தரும் தங்களின் பணி சிறப்பு.தமிழ் வளர்க்கும் தங்கள் தொண்டு தொடரட்டும்

தகடூர் கோபி(Gopi) சொன்னது…

நாமக்கல் தமிழ் இணைய அறிமுக பயிற்சி வெற்றிக்கு வாழ்த்துக்கள். இந்நிகழ்வு இனிதே நிகழ்ந்து கண்டு மட்டற்ற மகிழ்ச்சி.

செய்திக்கு நன்றி.