20.06.2009 வைகறையில் சில்லென்ற காற்று தொடர்வண்டியில் அரிதுயில்கொண்ட என்னை மெதுவாக எழுப்பியது.ஆரல்வாய்மொழி என்ற இடத்தில் தொடர்வண்டி மாற்றுப்பாதைக்காகத் தேங்கி நின்றது.காற்றாலைகள் எங்கும் கண்ணில் தென்பட்டன.ஒரிசா பாலு நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று வினவினார்.அடுத்து செல்வதரன் அவர்களும் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று கேட்டார்.செல்வதரன் நாகர்கோயில் தொடர்வண்டி நிலையத்தில் எனக்காகக் காத்திருந்தார்.அரைமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு தொடர்வண்டி உரிய இடத்தில் சோம்பல்முறித்து நின்றது.
செல்வதரன் உந்துவண்டியில் ஏறி விடுதிக்குச் சென்றேன்.ஒரிசா பாலு என் வருகைக்காகக் காத்திருந்தார்.அருகில் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களும் காத்திருந்தார்.தம்பி செல்வமுரளியும் சேலத்திலிருந்து வந்தார்.பெங்களூரிலிருந்து நண்பர் விசயலட்சுமணன் அவர்களும் வந்திருந்தார்.குளித்து முடித்து அனைவரும் சிற்றுண்டி உண்டோம்.இடையில் எழுத்தாளர் செயமோகன் அவர்களிடம் பேசி வாய்ப்புக்கு ஏற்ப சந்திப்பதாகச் சொன்னேன்.
பங்கேற்பாளர்கள்
அனைவரும் இணையப்பயிலரங்கம் நடக்கும் இடத்தைச் சரியாக 9.30 மணிக்கு அடைந்தோம். பதிவுக்குப் பிறகு அரங்கில் நுழைந்தோம்.மானிங் ஸ்டார் கல்லூரியில் உள்ள கணிப்பொறி அரங்கு நிகழ்ச்சிக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணிப்பொறிகள் இணைய இணைப்புடன் இருந்தன. காற்று வளிப்பாட்டு அறை. அனைவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்தனர்.பலதுறை சார்ந்த 60 பேர் பயிற்சி பெற வந்திருந்தனர். திருநெல்வேலியிலிருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஆர்வமுடன் கலந்துகொண்டார். கரூரிலிருந்து இரண்டு அன்பர்கள் வந்திருந்தனர்.அதில் ஒருவர் தட்சு தமிழ் இதழின் செய்தியாளர். நாகர்கோயில் சார்ந்த இதழியல்துறை நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். வங்கியில் பணிபுரியும் நண்பர்கள் நீதிமன்றத்தில் பணிபுரிபவர்கள் என ஆணும் பெண்ணுமாகப் பலர் வந்திருந்தனர்.
அருட்தந்தை விக்டர் அவர்கள்(தாளாளர்)குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். செந்தீ நடராசன் அவர்களும் நானும் குத்துவிளக்கேற்றினோம். விக்டர் அவர்களும் செந்தீ அவர்களும் மிகச்சுருக்கமாகவே உரையாற்றினர். அரங்கினைச் செல்வதரன் அவர்கள் சரியாக 10.10 மணியளவில் என்னிடம் கொடுத்தார். தமிழ் இணையம் ,கணிப்பொறி பற்றியும் தமிழ்த்தட்டச்சு பற்றியும் அடிப்படையான செய்திகளை எடுத்தரைத்தேன். தமிழ்மணம், மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை பற்றியும் மின்னிதழ்கள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். நண்பர் செல்வமுரளியும்,விசயலட்சுமணன் அவர்களும் பின்புலத்தில் இருந்து தொழில் நுட்பச்சிக்கல் இல்லாமலும் தொய்வில்லாமலும் பார்த்துக்கொண்டனர். நானும் மாணவர்களை ஆளுவதில் பயிற்சி பெற்றவன் என்பதால் மகிழ்ச்சியாகவே நான்குமணிநேரம் வகுப்பெடுத்தேன்.இரண்டு மணிக்கு மேல் மின்சாரம் நிற்கும் என்றார்கள்.அதனால் இரண்டு மணிவரை வகுப்பெடுத்தோம்.உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மூன்று மணிக்குச் சரியக ஒன்றுகூடினோம்.அதன் பிறகு சிறிது நேரத்தில் அறிமுகம் செய்துகொண்டோம்.
ஒரிசா பாலு அவர்கள் விக்கிபீடியா, விக்கி மேப்பியா என்ற பகுதியை விளக்கி உலகத்தை எங்களுக்குக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.கடலியல் ஆய்விலும் வரலாற்று ஆய்விலும் வல்லவர் பாலு என்பதால் அனைவரையும் தூங்கவிடாமல் தம் பணியை மிகச்சிறப்பாகச் செய்தார்.
மு.இ,செல்வமுரளி,விசயலட்சுமணன்
தம்பி செல்வமுரளியும் விசயலட்சுமணன் அவர்களும் கூகுள் நிறுவனத்தில் ஜிமெயில் கணக்குத் தொடக்கம் பற்றியும் கமுக்கக்குறியீடுகள் பற்றியும் காட்சி விளக்கம் நல்கினர்.பயிற்சி பெற வந்த ஒருவருக்கு புதிய கணக்கு தொடங்கி வழங்கினர். அதனை அடுத்து வலைப்பூ உருவாக்கம் பற்றி காட்சி விளக்கத்துடன் பயிற்சி வழங்கினர். பயிற்சிக்கு வந்தவர்களுக்கு NHM எழுதி சில படிகள் வழங்கினேன்.முன்னமே காலையில் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை ஒளியச்சு எடுத்து அனைவருக்கும் வழங்கினோம்.
நிகழ்ச்சி நிறைவில் அனைவரும் தங்கள் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டனர். எட்டு வலைப்பதிவர்கள் வந்து கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இணையத்திலும் எழுத்துத்துறையிலும் ஆர்வம்கொண்ட பலரைக்கொண்டு இந்தப் பயிலரங்கம் வடிவமைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகளில் தொடர்ந்து இத்தகு பயிலரங்குகள் நடத்த கிறித்தவ தந்தைமார்கள் பலர் விரும்பியுள்ளனர். வாய்ப்புக்கு ஏற்ப அடுத்த பயிலரங்குகளுக்கு வருவதாக அனைவரிடமும் விடைபெற்றேன்.
காலச்சுவடு அலுவலகம் சென்று பேராசிரியர் பெர்னாடு பேர்டு அவர்களின் பேச்சைக் கேட்க நினைத்திருந்தேன்.நாகர்கோயிலில் மழை என்பதால் வெளியே செல்லமுடியவில்லை.இரவு அறைக்கு அறிஞர் குமரிமைந்தன் அவர்கள் வந்து உரையாடினார்கள்.குமரிக்கண்ட ஆய்வுகள், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வரலாறு பற்றி உரையாடினோம்.நடு இரவு வரை எங்கள் உரையாடலும் இணைய வடிவமைப்புப் பணிகளும் தொடர்ந்தன…
10 கருத்துகள்:
அன்புள்ள இளங்கோவன், நீங்கள் தமிழகம் முழுவதும் சென்று செய்யும் இந்தச் சேவை மகத்தானது. தமிழகத்தில் கல்வியகங்களில் வேலை செய்வோரும் மாணவர்களும் கணினியைப் பயன்படுத்தி தமிழில் எழுதமுடியும் என்றே தெரியாமல் இருப்பதை நீக்க நினைத்து, அதைச் செயலிலும் காட்டுவது மகிழ்ச்சிக்குரியது.
உங்களைப் போன்று வேறு சில கல்வியாளர்களும் இதில் இறங்கினால், குறித்த இலக்கை வேகமாக அடையமுடியும்.
சென்னையிலிருந்து 2-3 மணி நேரப் பயணத்துக்குள் உள்ள இடங்களில் நீங்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். அது குறித்து முன்னதாக எனக்குத் தகவல் அளித்தால் மகிழ்வேன்.
நன்றி.
வாழ்த்துக்கள் இளங்கோவன்...நல்ல முயற்சி...நிறைவாக செய்கிறீர்கள், நன்றி.......
வாழ்த்துரைக்கும் நண்பர்களே வணக்கம்.
தங்கள் அன்புக்கு நன்றி
மு.இளங்கோவன்
தமிழ் வளரப் பாடுபடும் தங்களை
வாழ்த்துகிறேன்!!
எம்மண்ணில் நடந்த இந்த நிகழ்வுக்கு பாராட்டுகள் ..மகிழ்ச்சி!
அன்பின் இளங்கோவன் அவர்களுக்கு,
வழக்கம் போல் உங்களது நல்ல முயற்சிக்குப் பாராட்டுகளும், வாழ்த்துகளும்!
நன்றி - சொ.சங்கரபாண்டி
நாகர்கோவிலில் தங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். நான் அ.கா.பெருமாளின் தம்பி. அவர் சொல்லித்தான் நிகழ்ச்சி பற்றி அறிந்தேன். நன்றாக இருந்தது.
உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துகள்.
Regards
www.eKanyakumari.com
உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துகள்.
Regards
http://www.ekanyakumari.com
வாழ்த்துகள். இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் நானும் கலந்துகொள்ள விரும்புகிறேன். அது குறித்து முன்னதாக எனக்குத் தகவல் அளித்தால் மகிழ்வேன்.சு.சதாசிவம்
கருத்துரையிடுக