அறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வலப்பக்கமாக அறிஞர் வ.ஐ.சு.
வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள்(பழையத் தோற்றம்)
உலக அளவில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான முனைவர் வ.ஐ.சுப்பிரமணியன அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை (29.06.2009) எட்டுமணிக்குத் திருவனந்தபுரத்தில் அவர் உயிர் பிரிந்தது.இன்று மாலை 4 மணிக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்துலகத் திராவிடமொழியியல் பள்ளி வளாகத்தில் அவர் உடல் எரியூட்டப்பட உள்ளது. தமிழகத்து அறிஞர்களும் பிற மாநிலத்து அறிஞர்களும் திருவனந்தபுரத்தில் கூடி இறுதி வணக்கம் செலுத்த உள்ளனர். செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர் முனைவர் க.இராமசாமி, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்ள சென்றுள்ளனர்.
18.02.1926 இல் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிறந்தவர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார். வடசேரியில் தொடக்கக்கல்வி பயின்ற வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் நெல்லை இந்துக் கல்லூரியில் பயின்றவர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் சில காலம் புதுதில்லி அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார். பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மாணவர். வையாபுரியார் கலாத்துக்குப் பிறகு கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.
புதுச்சேரியில் மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப் பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர்.ஆந்திராவில் உள்ள குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அப் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக விளங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் தனிநாயகம் அடிகளார் நடத்த பக்க பலமாக இருந்தவர்.
புறநானூற்றுச் சொல்லடைவுகள் என்ற இவர் ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது. பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர். அண்மையில் வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள் 2 தொகுதிகளாக வந்துள்ளன.முறையே மொழியும் பண்பாடும், இலக்கணமும் ஆளுமைகளும் என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன. இவர் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன. திராவிட மொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர்.ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.
தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், தெலுங்கு மொழிகளில் முனைவர் பட்டம் செய்த ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்குரியவர். இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இவர் மாணவர்கள் உலகம் முழுவதும் உயர்பொறுப்புகளில் உள்ளனர் கண்டிப்பானவர். நேரத்தைப் பின்பற்றுவதில் இணைசொல்லமுடியாதவர். திட்டமிட்டுச் செயல்படுவதில் வல்லவர். உழைக்கக் கூடியவர்களை ஊக்கப்படுத்தக் கூடியவர். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வெளிவந்துள்ள நூல்கள் யாவும் இவரின் அறிவாற்றலுக்கும் திட்டமிடலுக்கும் சான்றாகும்.
மிகச்சிறந்த மொழியியல் அறிஞரை இழந்து தமிழுலகம் வாடுகிறது. உலகத் தமிழர்கள் ஆழ்ந்த துயரில் உள்ளனர்.
3 கருத்துகள்:
அறிஞர் சுப்பிரமணியம் அவர்களுக்கு எமது அஞ்சலி.
தமிழறிஞர் சுப்பிரமணியம் அவர்களுக்கு எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது போன்ற தன்னலமற்ற மொழியறிஞர்களை, அவர்கள் இறந்த பின் முதன்முதலாக தெரிந்து கொள்ள நேர்வது
மிகவும் வேதனையளிப்பது.
கருத்துரையிடுக