நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 3 ஜூன், 2009

புதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் உடல் மருத்துவமனைக்குக் கொடை


மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் வணக்கம் செலுத்துதல்


முனைவர் இரா.திருமுருகனார் உடல்


முனைவர் இரா.திருமுருகனார் உடல்

புதுவையில் வாழ்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியல் ஒரு மணிக்கு மாரடைப்பால் இயற்கை எய்தினார்.இந்தச் செய்தி உடனுக்குடன் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்டது.அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளம் அமைப்பினர் இந்தச்செய்தி அறிந்து தங்கள் தளத்தின் முகப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டு அன்னாருக்குச் சிறப்புச் சேர்த்தனர்.

அதுபோல் உலகின் பல இணையத்தளங்களும் மறைந்த தமிழறிஞரின் வாழ்க்கைக்குறிப்பைப் படத்துடன் வெளியிட்டன.துபாய்.மலேசியா,குவைத்,இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்ந நண்பர்கள் மின்னஞ்சல் வழியாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.அதுபோல் தமிழறிஞர்கள் தமிழண்ணல்,பொற்கோ,இரா.இளவரசு,முனைவர் மு.இளமுருகன்,புலவர் தமிழகன் திரைப்பா ஆசிரியர் அறிவுமதி,அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன்,ஓவியர் வீரசந்தனம், எழுத்தாளர் செயபாசுகரன் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர்.மக்கள் தொலைக்காட்சியில் இந்தச்செய்தி ஒளிகபரப்பப்பட்டது.உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் இந்தச்செய்தி அறிவிக்கப்பட்டது.

தமிழகம்,புதுவை,காரைக்கால் சார்ந்த பல ஆசிரியர்கள் மாணவர்கள் முனைவர் இரா.திருமுருகனார் உடல் வைக்கப்பட்டுள்ள புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள பாவலர் பண்ணை இல்லத்திற்கு வந்து அக வணக்கம் செலுத்திவருகின்றனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தமிழறிஞரின் இல்லத்திற்கு வந்து வணக்கம் செலுத்தி முனைவர் இரா.திருமுருகனாரின் துணைவியார் மற்றும் குடும்பத்தினர் நண்பர்களுக்கு ஆறுதல் மொழிகளைத் தெரிவித்தார்கள்.அம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் மருத்துவர் ஐயா


மருத்துவர் ச.இராமதாசு வணக்கம் செலுத்துதல்

பொ.தி.ப.அறக்கட்டளையின் நிறுவனர் தி.ப.சாந்தசீலனார் அவர்கள் புலவரின் இலத்திற்கு வந்து வணக்கம் செலுத்தியதுடன் புலவரின் துணைவியாருக்கு ஆறுதல் சொன்னார்கள்.

புலவர் இரா.திருமுருகனார் அவர்கள் தமிழ் இலக்கணத்திலும் இலக்கியத்திலும்.இசையிலும் மிகப்பெரிய புலமை பெற்றவர்.இவர் சிந்துப்பாக்களின் யாப்பிலக்கணம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.சிந்துப்பாவியல் என்னும் இலக்கண நூல் படைத்தவர்.

புல்லாங்குழல் இசைப்பதில் வல்லவர்.தமிழ் வளர்ச்சிக்குத் தெளிதமிழ் என்ற இலக்கிய இதழையும் தமிழ்க்காவல் என்ற மின்னிதழையும் நடத்தி வருவபவர்.தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்து வந்தவர்.தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி நண்பர்களுடன் தமிழ் வளர்ச்சிப்பணிகளில் ஈடுப்பட்டவர்.பல்வேறு நாடுகளுக்குச்சென்று தமிழிசை பற்றி உரையாற்றி மீண்டவர்.அடுத்த மாதம் அமெரிக்கவில் பெட்னா விழாவில் கலந்துகொண்டு தமிழிசை பற்றி உரையாற்றத் திட்டமிட்டிருந்தார்.

இரண்டு மூன்று நாட்களாக மார்பு வலி ஏற்பட்டு மருத்துவம் பார்த்துவந்த புலவர் அவர்கள் நடு இரவில் மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார்.அன்னாரின் உடல் எந்த வகையான சடங்குகளும் இன்றி மருத்துவ ஆய்வுக்குக்கொடையாக வழங்கப்பட உள்ளது.இதற்குரிய ஏற்பாட்டை ஐயா திருமுருகனார் முன்னரே செய்திருந்தார்.அதன் அடிப்படையில் மருத்துவர்கள் குழு முதலில் கண்களை எடுத்துச்சென்றது.மாலை நான்கு மணிக்கு முழு உடலும் புதுவை சிப்மர்(JIPMER) மருத்துவமனைக்கு அளிக்கப்பட உள்ளது.பிற்பகல் மூன்று மணியளவில் இரங்கல் கூட்டம் நடத்த தமழறிஞர்கள் முடிவுசெய்துள்ளனர்.

முனைவர் இரா.திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக


தி.ப.சாந்தசீலனார் வணக்கம் செலுத்துதல்அம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் தி.ப.சாந்தசீலனார்

1 கருத்து:

தமிழ்நாடன் சொன்னது…

பள்ளிப் பருவத்தில் நூலகங்களுச் செல்லும்போது தெளிதமிழ் நூலைக்கண்டு ஆசையோடு புரட்டிப் பார்த்துவிட்டு, புரிந்தவற்றை மட்டும் படிப்பதுண்டு. ஆழ்ந்த இலக்கண நடையில் உள்ள இதழும், அதன் ஆசிரியரும் எனக்கு மிகுந்த வியப்பினைத் தந்தவை.

தனித்தமிழில் நாளேட்டைத் தொடங்க வேண்டுமென்ற அவரின் தீராத ஆவலை தமிழுலகம் செயல்படுத்த வேண்டும்.

தமிழிற்கு இனியொரு திருமகனார் கிடைப்பது அரிது, இழந்தது மிகப்பெரிது.

வாழ்க அன்னாரின் புகழ், வளர்க அவர்தம் தமிழ்த்தொண்டு.