நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

பெரியநற்குணம் நினைவுகள்...

சேத்தியாத்தோப்புக்கு மேற்கே வெள்ளாற்றங்கரையை ஒட்டிய ஊர் பெரியநற்குணம்.என் அம்மா பிறந்த ஊர்.என் தந்தையாருடன் பிறந்த அத்தையை அந்த ஊரில் கொடுத்திருந்தனர்.என் மாமா பெயர் திரு.வை.சாமியப்பா. நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணியில் இருந்தவர்.மேலதிகாரிக்குக் கீழ்ப்படியாத காரணத்தால் பணி இழந்தவர்.அந்த நாளின் செல்வச் செழிப்பில் வேலை இழப்பைப் பொருட்படுத்தாமல் இருந்தார்.

நெய்வேலி நிலகரி எடுப்பால் அப்பகுதியில் நிலத்தடி நீர் வற்றியதால் தானாகப் பீறிட்டு வந்த ஆர்ட்டீசியன் ஊற்றுகள் நின்றன.நிலத்தடி நீர் கீழே சென்றது.வேளாண்மை பொய்த்தது. குடும்ப நிலை பின்னாளில் இறங்குமுகமானது.அந்தப் பணியில் நீடித்திருந்தால் மிக உயர்நிலைக்கு வந்திருக்கலாமே என நாற்பதாண்டுகளாக ஊராரும் உறவினரும் அவரைக் கீழாகப் புறம் பேசி வருகின்றனர். அவற்றையெல்லாம் அவர் அடிக்கடி ஏற்றுக்கொண்டு விடைசொல்வார்.

அவர் தங்கையைத்தான் என் அப்பாவுக்குக் கொடுத்தனர்.சுருங்கச்சொன்னால் பெண்கொடுத்துப் பெண் கட்டிக்கொண்டனர்.எங்கள் வீடும் நல்ல வளமான செல்வவளம் கொண்டிருந்தது.என் தந்தையார் தங்கையர்களை மணம் முடித்தபிறகு தனித்து இருந்தார்.அவர் செல்வம் வீணாவதைக் கண்ட என் தாய்வழிப்பாட்டனார் திரு.வையாபுரி அவர்கள் குடும்ப ஒற்றுமை கருதி பெண்கொடுத்தார்.கடைசிக் காலம் வரை எங்கள் தாத்தா ஆடாகவும் மாடாகவும், கருவாடாகவும், வீராணத்து ஏரி கெண்டை மீனாகவும் கொடுத்தும் எங்கள் குடும்பம் முன்னேற்றம் காணவில்லை. உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட நில வழக்குக் காரணமாக மிகத்தாழ்ந்த நிலைக்குச் சென்றது.எங்கள் தாத்தா ஒவ்வொரு புதன் கிழமையும் சேத்தியாத்தோப்பு சந்தையில் வேண்டிய பொருள்களை வாங்கிக்கொண்டு எங்கள் வீடு வந்துவிடுவார்.அந்த அளவு மகள்மீது பாசம்.


முதல் குழந்தை தாய்வீட்டில் பிறப்பது வழக்கம் என்ற அடிப்படையில் பெரியநற்குணத்தில் பிறந்த என் அம்மாவுக்கு அவர்களின் பாசம் நிறைந்த பெற்றோர் சேத்தியாத்தோப்பில் இருந்த மருத்துவர் பழனி அவர்களின் மருத்துவமனையில் மகப்பேற்றுக்காகச் சேர்த்தனர்.நான் 11.02.1967 இல் சனிக்கிழமை காலை பிறந்தேன்.மிகவும் சிறப்பாக என்னை வளர்த்தனர்.

திருமணம் ஆகிப் பல ஆண்டுகள் என் தாயாருக்கு மகப்பேறு இல்லையாம்.ஒரு சித்தர் வழங்கிய தழை, செடி, கொடிகளை,மருந்துகளை உண்டதால் நான் பிறந்ததாகச் சொல்வார்கள்.இவ்வாறு பிறந்த நான் எங்கள் தாத்தா பாட்டியால் சிறப்பாக வளர்க்கப் பெற்றேன். ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் இளம் அகவையில் பெரியநற்குணம் செல்வது வழக்கம்.எங்கள் தாத்தா வீட்டில் கரும்பும்,நெல்லும் மிகுதி. திருச்சிராப்பள்ளிக்குச் சருக்கரை,வெல்லம் விற்கச் செல்லும் எங்கள் சிறிய மாமா திரு.வை.மணிவேல் ஒரு சாக்கில் பணத்தைக் கட்டிக்கொண்டு வருவாராம்.எனக்கு முதலில் சட்டை எடுப்பதுதான் முதல் செலவாம்.

பெரியநற்குணத்தில் நான் வளர்ந்ததற்குப் பல தடயங்கள் இன்றும் என் உடலில் உண்டு. நடக்கும் சிறுவனாக இருந்த பொழுது அங்கிருந்த நீர் அடிக்கும் குழாயில் வலக்கையை விட்டு ஆள்காட்டி விரல் நசுங்கிவிட்டது.அந்த விரல்கொண்டுதான் இன்றும் எழுதுகிறேன்.அதுபோல் எங்கள் பெரியப்பா ஒருவரின் வீடு வீராணம் ஏரிக்கரையில் உள்ளது.இந்த ஊர்ப்பெயர் கூளாப்பாடி என்பது.ஒரு கோடை விடுமுறையில் சென்றது 38 ஆண்டுகளைக் கடந்தாலும் நிழலாக நினைவில் உள்ளது.

கோடைக்கால விருந்து முடிந்து எங்கள் பெரியப்பா என்னை மிதிவண்டியில் பெரியநற்குணத்துக்குப் பகல் உணவுக்குப் பிறகு அழைத்து வந்தார்.மிகச்சிறிய சிறுவனான நான் வீராணம் ஏரியின் அழகை அன்று சுவைத்தபடியே பெரியப்பா பேசிய பேச்சுகளைக் கேட்டபடி வந்தேன்.கதை கடைசியில் தூக்கத்தில் கொண்டு போய்விட்டது.பிறகுதான் தெரிந்தது.

என் இடக்கால் மிதிவண்டியில் மாட்டிப் பாதத்தை ஒட்டிய முட்டிப் பகுதி உடைந்தது. பொங்கி வழிந்த குருதியை நிறுத்த என் பெரியப்பா வீராணத்து ஏரித் தண்ணீரைத் துண்டில் நனைத்துப் போட்டுக் கட்டி,சேத்தியாத்தோப்பு மருத்துவமனையில் மருத்துவரிடம் காட்டிப் பல தையல் போட்டு மாத இடைவெளிக்குப் பிறகு ஊருக்கு என்னைத் தூக்கி சென்றனர்.இதனால் என் தந்தையாருக்கும் என் பெரியப்பா குடும்பத்திற்கும் முப்பத்தைந்து ஆண்டுகளாகக் குடும்பப் பகை ஏற்பட்டது.சாகும் வரை என் அப்பா பெரியப்பாவிடம் பேசியதே இல்லை.அந்த அளவு மன உறுதிக்காரர்.இப்படி பல நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம்...

இப்படி என் வாழ்வுடன் கலந்த பெரியநற்குணம் ஊர் வெள்ளாற்றின் வட கரையில் உள்ளது,மழைக்காலத்தில் வெள்ளம் வந்து மக்களை மிகப்பெரிய துன்பத்தில் ஆழ்த்திவிடும். எங்கள் உறவினர் வீட்டுப் பிள்ளைகள் இருவர் மடுவில் வீழ்ந்து மாட்டிக்கொண்டனர். அவர்களைக் காக்க சென்ற தாயும் இறந்துவிட்டார்.

ஆற்றின் கரையை ஒட்டி முன்பு சாலை இருந்தது.சுடுகாடும் அங்குதான்.தனித்துச் செல்ல மக்கள் அஞ்சுவர்.இப்பொழுது சாலை நிலத்தைக்கையகப்படுத்தி நன்கு புதியதாகப் போடப்பட்டுள்ளது.மழைக்காலத்தில் முன்பு ஆற்றங்கரையில் செல்ல அச்சமாக இருக்கும். மணிலா,கரும்பு நன்கு விளையும்.சிலர் வெங்காயம்.கருணைக்கிழங்கு விளைய வைப்பதும் உண்டு.பயிறு,உளுந்து.நரிப்பயிறு விளையும்.நரிப்பயிறு எடுத்த பிறகு அதன் தழை, சருகுகளைத் தின்னும் ஆடு மாடுகள் கொழுத்து நிற்கும்.

அமைதியும் ஆற்றால் மட்டும் மழைக்காலத்தில் சலசலப்பும் கொண்ட அந்த ஊர் இன்று பல மாற்றங்களைக் கொண்டுள்ளது.இன்று வரை அந்த ஊரில் வடக்கு,தெற்கு என்னால் அடையாளம் காணமுடியாதபடி இருக்கும்.களிமண்.மழைபெய்தால் அந்தக் காலத்தில் மாட்டுவண்டிகளைத் தூக்காத குறையாகத் தள்ளிக்கொண்டு போகவேண்டும். மாடுகள் மிகப்பெரிய துன்பம் அடையும்.சேத்தியாத்தோப்பை அடைவதற்குள் பெரும்பாடாகும்.மாடுகள் உலையில் படுத்துக்கொள்ளும்.ஓரிடத்தில் கால் வைத்தால் வேறொரு இடத்திற்கு இழுத்துச் செல்லும்.வெள்ளைவேட்டி கட்டியவர் நிலை அதோகதிதான்.

மழைக்காலத்தில் காலைக்கடனுக்கு ஒதுங்க இடம் இருக்காது.அந்த ஊரின் நிலைக்கு அஞ்சி மழைக்காலத்தில் நாங்கள் அந்த ஊருக்குப் போவதைத் தவிர்ப்போம்.கோடைக்காலத்தில் கரும்பு ஆடும்பொழுது தேன்பாகு கலயங்களில் பிடித்து அனுப்பி வைப்பார்கள்.அதனை ஆறுமாத காலமாகப் பாதுகாத்து அம்மா வைத்திருப்பார்.மழைக்காலத்தில் அந்தப் பாகு கற்கண்டாக உறைந்திருக்க யாருக்கும் தெரியாமல் பரணில் இருப்பதை எடுத்துத்தின்று இன்று பல பற்கள் பூச்சிப்பற்களாக ஆகிவிட்டன.என் பல் சிதைவுகளுக்குத் தாத்தா வீட்டு வெல்லம், வெல்லப்பாகு,தேன்பாகு,சருக்கரைதான் காரணம்.

அந்த ஊரில் நடந்த என் அத்தைமகன் திருமணத்திற்கு ஞாயிற்றுக்கிழமை சென்றேன்
(19.04.2009).தாய்வழி மாமன் என்ற முறையில் எங்கள் குடும்பம் சடங்குகள் நிகழ்த்தியது.அதனை நிகழ்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் எனக்கு அமைந்தது.

அப்பொழுது அந்த ஊரில் இருபதாண்டுகளில் நடந்துள்ள மாற்றங்களை மெதுவாக கவனித்தேன்.குளத்தங்கரைதான் அந்த ஊரின் நுழைவு வாயில்.ஊர்ப்பொதுக்குளம் முன்பு கருமைநிறமான தூய நீரைக் கொண்டிருக்கும்.செந்தாமரை மிகுதியாக இருந்து அழகான மலர்களைக்கொண்டிருக்கும்.தாமரைக்காய் பறிக்க,பூ பறிக்க குளத்தில் நீந்துவோம். ஓரியடிப்போம்.உடல்முழுவதும் தாமரைக்கொடி கிழித்து எரிச்சல் எடுக்கும்.குளம் வற்றியபொழுது தாமரைக்கிழங்கு வெட்டிய பட்டறிவும் உண்டு.

காளிக்கோயில் ஒன்று இருந்தது.வெறும் சூலம் மட்டும் இருந்தது.இன்று புதியதாக கோயில் கட்டியுள்ளனர்.நல்லவை நடக்கும்பொழுது அந்தக்கோயிலை வழிபட்டுதான் நிகழ்வுகள் தொடங்குகின்றன.குளத்தின் அருகில் ஒரு கிணறு இருந்தது.அதில் இளைஞர்கள் முன்பு அமர்ந்து வெட்டிக்கதை பேசுவர்.விளையாடுவர்.இன்று கிணறு தூர்க்கப்பட்டு அதன் நடுவே ஒரு வேப்பமரம் இருகிறது.அருகில் நியாயவிலைக்கடை முளைத்துள்ளது.ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது.கூரை வீடுகள் சுவர் மட்டும் மாற்றம்.பெரிய வசதி என்று சொல்லமுடியாதபடி இருக்கிறது.

இளைஞர்கள் இப்பொழுது படிக்கத் தொடங்கியுள்ளனர்.சிலர் வெளிநாடு சென்று சம்பாதிக்கின்றனர்.முன்பு மொரீசியசுக்குச் சென்ற பலர் இந்த ஊரில் இருந்தனர்."மோர்சார்" என அவர்களை அழைப்பர்.வீரனார் கோயிலுக்குப் பக்க வேலி அமைக்க இரும்புமுள் கட்டிவைத்துள்ளனர்.அங்கிருந்த பள்ளிக்கூடத்தைத் தேடினேன்.சரியாகக் கண்ணில் தென்படவில்லை.பாட்டாளிமக்கள் கட்சி கொடிக்கம்பம் வன்னியர் சங்கக் கொடிக்கம்பம் முளைத்துள்ளன.

குளத்தங்கரையை ஒட்டிப் புதியதாக ஒரு கட்டடம் திறக்கப்படாமல் இருந்தது.அதன் பலகையைப் படித்துப் பார்த்தேன்.நூலகத்துக்கு எனத் தனிக்கட்டடம் எனத் தெரிந்தது.அடுத்த முறை செல்லும்பொழுது கட்டாயம் நூலகம் திறந்திருக்கும் என நினைக்கிறேன்.அப்பொழுது அந்த ஊர் பெற்றுத்தந்த என் அம்மாவின் நன்றி தெரிவிப்பாக அந்த நூலகத்துக்கு மறக்காமல் என் நூல்களை எடுத்துச்சென்று வழங்குவேன்...

2 கருத்துகள்:

சோழன் சொன்னது…

புலவரின் ஊர் உரைந்டை ஒரு சரளமான உணர்வோடையாக வடவாற்று குந்தவையின் காலை நேரக்குளியல் போல் நினைவலையாக மீண்டும் மீண்டும் ஊர் ஏரிக்கரைக்கே இழுக்கின்றது.

ஏக்கத்துடன் சோழ நாடன்

Shan Nalliah / GANDHIYIST சொன்னது…

Great! Greetings from Norway! Please continue your services!!