நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 11 ஏப்ரல், 2009

என் பேராசிரியர் மா.இராமலிங்கம்(எழில்முதல்வன்)


முத்தமிழறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்களிடம் நான் கவிதைப்போட்டிக்கு உரிய முதல்பரிசு பெறுதல்(1992). பின்பகுதியில் பேரா.மா.இராமலிங்கம், பேரா.அரு.மருததுரை

 புதுவைப் பல்கலைக்கழகத்தில் இளம்முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தேன் (1992-93). அப்பொழுது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு செய்ய நிதியுதவி நல்கும் ஒரு விளம்பரம் வந்தது. விண்ணப்பம் செய்தேன். நேர்காணல் வந்தது.பாரதியார் அறக்கட்டளை சார்பில் அந்த நிதியுதவி வழங்கப்படுவதாகவும் குறிப்பு இருந்ததாக நினைவு.

 நேர்காணலில் ஆங்கிலப் பேராசிரியர் கா.செல்லப்பன் ஐயாவும் என் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்களும் இருந்தார்கள் 50 பேருக்கு மேல் நேர்காணலுக்கு வந்திருந்தனர். என் சான்றிதழ்கள், மதிப்பெண், கல்வி ஈடுபாடு கண்டு நல்ல வினாக்கள் கேட்டனர். நானும் இயன்ற விடை தந்தேன். நேர்காணலுக்கு முன்பாக ஓர் எழுத்துத் தேர்வும் நடந்தது.

 பேராசிரியர் முனைவர் அரு.மருததுரை, முனைவர் பட்ட ஆய்வாளர் மோ.தமிழ்மாறன் (இப்பொழுது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்) எனக்கு அப்பொழுது அறிமுகமானார்கள். (சில ஆண்டுகளுக்கு முன் பாவேந்தர் நூற்றாண்டு விழாவைப் பல்கலைக் கழகம் கொண்டாடியபொழுது பல்கலைக்கழக அளவில் நடைபெற்ற கவிதைப் போட்டியில் யான் முதல் பரிசுபெற்றவன். இந்த விவரம் கூறி, அப்பொழுது பேராசிரியர் அரு.மருததுரை உள்ளிட்டவர்களைப் பரிசுபெற வந்தபொழுது கண்டுள்ளேன் எனவும் கூறி, அறிமுகம் ஆனேன். முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.விசுவநாதன் அவர்கள் திருக் கையால் 500 உரூவா முதல் பரிசைப் பல்கலைக்கழகம் வழங்கியது.)

 சில மாதத்தில் எனக்குப் பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு ஆணை வந்தது. உடன் திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சென்று நண்பர் நாராயணநம்பி அவர்களின் உதவியுடன் பல்கலைக்கழகத்தில் சேர உரிய படிவங்கள் வாங்கினேன். அப்பொழுது கோடை விடுமுறை. அந்தப் பருவத்தில் (சூன்,சூலை) சேர்ந்தால் நல்லது. இல்லையேல் சில மாதம் காத்திருக்கவேண்டும் என்றனர். உடனடியாகப் பல்கலைக்கழகத்தில் இணைய விரும்பினேன்.

  என் பேராசிரியர் மா.இரா. அவர்கள் அப்பொழுது திருச்சிராப்பள்ளி உறையூரில் தங்கியிருந்தார். தமிழ்த்துறையிலிருந்து தொலைபேசியில் பேசி அவரைச் சந்திக்க இசைவு பெற்றேன். அவரை இல்லம் சென்று கண்டு வணங்கினேன். உரிய படிவங்களில் கையொப்பம் இட்டு, நான் அவர் மேற்பார்வையில் ஆய்வு செய்வதற்கு இசைவு வழங்கினார். எனக்கு அளவுக்கு அதிமான மகிழ்ச்சி. தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர் ஒருவரின் மாணவனாக முறைப்படி இணைந்துள்ளமையே என் மகிழ்ச்சிக்கு அடிப்படைக் காரணம். ஆய்வுக்கு என்ன தலைப்பு எடுக்கலாம் எனப் பேராசிரியர் கேட்டார்கள். எனக்குக் கவிதைத் துறையில் ஈடுபாடு. எனவே கவிதை குறித்துத் தலைப்பு அமையலாம் என்றேன். அவர்களும் "இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க்கவிதை: பாரதிதாசன் பரம்பரை விளக்கம்,வரலாறு மதிப்பீடு"என்று தலைப்பை உறுதி செய்தார்கள்.


ஆய்வு மாணவனாக நான்(1995)

  ஒரு நல்ல நாளில் பல்கலைக்கழகத்துக்கு ஆய்வுமாணவனாக அறிமுகம் ஆனேன். ஆய்வுத் துறைகளை முன்பே புதுவைப் பல்கலைக்கழகத்தில் கற்றவன் ஆதலின் என் பேராசிரியர் ஆய்வுத் தொடர்பாகச் சொல்லும் செய்திகளை உடனுக்குடன் புரிந்துகொண்டு செய்யும் அளவிற்கு யான் அணியமாக இருந்ததால் எனக்கு முழு விடுதலை தந்தார்கள்.உரிய அறிஞர்களைச் சந்தித்துவர அனுமதி தந்தார்கள்.அவர்கள் வழியாக உவமைப் பாவலர் சுரதா உள்பட தமிழகத்தின் பல கவிஞர்கள் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.எழில்முதல்வன் அனுப்பினார் என்றால் எனக்கு ஒரு சிறப்பு இருப்பதைப் போகும் இடங்களில் எல்லாம் உணர்ந்தேன்.ஆய்வுத் தொடர்பாகப் பேராசிரியர் எனக்கு முழு விடுதலை வழங்கி என் போக்கில் ஆய்வு செய்ய வழிவிட்டமைக்கு அவர்களுக்கு யான் என்றும் நன்றிக்கடன் பட்டவனாவேன்.

  மூன்றாண்டுகள் அவரிடம் ஆய்வு செய்யும் பேறு எனக்குக் கிடைத்தது.நல்ல பட்டறிவுகள் எனக்குக் கிடைத்தன.மிகப்பெரிய செய்தி என்பதையெல்லாம் தம் அறிவுத்திறமையால் மிக எளிதாக விளக்குவார்.அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டுவிட்டமையை இப்பொழுது நினைத்தும் நான் வருந்துவதுண்டு.எழில்முதல்வன் அவர்களுக்கு ஈடுபாடான துறை திறனாய்வு,புதின இலக்கியம்,சிறுகதை,கவிதை என அறிஞர் உலகம் அறியும்.ஆனால் அவருக்குச் சிலப்பதிகாரத்தில் இருந்த ஈடுபாடு பலருக்குத் தெரியாது.அவரின் சிலப்பதிகாரப் புலமைக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்பேன்.அந்த அளவு சிலம்பைக் கற்றவர்கள். பொழிவாற்றியவர்கள்.நல்ல கட்டுரைகள் பலவற்றை எழுதியவர்.ஆய்வு என்னும் ஒற்றைக் கொம்பை யான் பற்றிக்கொண்டதால் அவரின் பிற துறை ஆளுமைகளை அறியாமல் இருந்துவிட்டேன்.இப்பொது எண்ணி எண்ணி ஏங்கி என்ன பயன்?.

  பேராசிரியர் ஒவ்வொரு கிழமையும் நடக்கும் துறைசார் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் படிக்கும் கட்டுரைகள் குறித்து கருத்துகளைச் சொல்லும்பொழுது அரங்கம் அமைதியாகக் கிடக்கும். தமிழகத்தின் புகழ்பெற்ற அறிஞர்களை அழைத்துப் பல்வேறு கருத்தரங்குகள் நடத்தியவர். பல சொற்பொழிவுகளுக்கு வழி வகுத்தவர். அவ்வகையில் தொல்காப்பியக் கருத்தரங்கு பொள்ளாச்சி அருட்செல்வர் நா.மகாலிங்கம் அவர்களின் உதவியால் நடத்தியது, எழுத்துச் சீர்திருத்தம் குறித்த கருத்தரங்கு, சாகித்திய அகாதெமியுடன் இணைந்து நடத்திய ஒரு கருத்தரங்கு இவையெல்லாம் குறிப்பிடத்தக்கன (இந்தக் கருத்தரங்கில் கோமல் சுவாமிநாதன், இளைய பாரதி, நஞ்சுண்டன் உள்ளிட்டவர்களுடன் உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது).

  ஆய்வு மாணவனாக இருக்கும் பொழுது, என் பலவாண்டு முயற்சிக்குப் பிறகு "விடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்" நூல் வெளியீட்டுக்கு அழகிய அணிந்துரை ஒன்று வழங்கியமையும் நான் திருநெல்வேலித் தனித்தமிழ் இலக்கியக் கழகத்தில் பாவலர் முடியரசனார் பற்றி ஆய்வுக்கட்டுரை எழுதித் தங்கப்பதக்கம் பெற்றபொழுது என் படத்தைத் தமிழ்த்துறையில் வைக்கவேண்டும் அது எதிர்கால மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக அமையும் என்று வற்புறுத்தியதற்கும் என்றும் அவர்களுக்கு நன்றி பாராட்டக் கடமைப் பட்டுள்ளேன்.

  மா.இராமலிங்கம் என்னும் இயற்பெயருடைய என் பேராசிரியர் திறனாய்வுலகில் எழில்முதல்வன் என்ற பெயரில் நன்கு அறிமுகமானவர்கள். பாவேந்தரின் குயில் இதழில் எழுதிய பெருமைக்கு உரியவர். சுரதா, அகிலன் உள்ளிட்ட எழுத்தாளர்களிடம் நன்கு பழகியவர். சாகித்திய அகாதெமியின் பரிசில் பெற்றவர். இவர்தம் புதிய உரைநடை நூல் இவரின் புதிய சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். நோக்குநிலை என்னும் நூலும் குறிப்பிடத்தக்க நூலாகும். வேள்வி என்ற இதழையும் இவர் நடத்தியவர். ஓங்குதமிழ் என்ற இதழைத் தமிழகப்புலவர் குழுவுக்காக நடத்தியவர். படைப்பும் ஆய்வும் இரண்டு கண்ணெனப் போற்றியவர். எதனையும் புதுமையாகச் சிந்திக்கவும் சொல்லவும் வல்லமை பெற்றவர். இவரின் மாணவர்கள் பலரும் உயர்நிலையில் பல இடங்களில் உள்ளனர்.

  பாரதிதாசன் பல்கலைக்கழக வரலாற்றில் மா.இராமலிங்கம் என்ற திருப்பெயர் பெருமைக்குரிய பெயராக விளங்கும்.

  மா.இராமலிங்கம் அவர்கள் தஞ்சை மாவட்டம் தகட்டூரில் பிறந்தவர் (பெருமழைப் புலவர் பற்றி நன்கு அறிந்தவர், உறவினரும்கூட). சென்னை மாநிலக்கல்லூரியில் பயின்றவர். அக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியைத் தொடங்கினார். குடந்தை அரசு ஆடவர் கல்லூரியில் தமிழ்த்துறைத் தலைவராகவும், பின்னர் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராகவும் விளங்கியவர். மரபுக்கவிதைகள் வரைவதிலும், புதுக்கவிதை வரைவதிலும் வல்லவர்.

 மரபுக்கவிதை நூல்களாக இனிக்கும் நினைவுகள்(1966), எங்கெங்கு காணினும்(1982), யாதுமாகி நின்றாய்(1990), புதுக்கவிதை நூல்களாக இரண்டாவது வருகை(1985), பயணம் தொடரும் (1990) என்ற நூல்களைத் தந்தவர். மா.இராமலிங்கம் அவர்கள் எழுதியுள்ள கவிதை நூல்களைக் கற்கும்பொழுது புதிய சிந்தனைகளுக்கு வழிவகுப்பது போன்றே சங்க இலக்கியம், சமய இலக்கியம், பாரதி, பாரதிதாசன், சுரதா படைப்புகளின் செல்வாக்கினைக் காண முடிகிறது.

 மா.இராமலிங்கம் அவர்கள் 1960-71 காலத்தில் எழுதிய கவிதைகள் "எங்கெங்கு காணினும்" என்னும் பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. இந்நூலில் 75 மரபுக்கவிதைகள் இடம் பெற்றுள்ளன. பாவேந்தர் பாடல்களைப் போல இயற்கை, காதல், தமிழ் என்ற நிலைகளில் கவிதைகள் இடம்பெற்றுள்ளன.

புதுக்கவிதைகள் அடங்கிய நூலைக் கற்கும்பொழுது இவரின் புதுப்பார்வைகளும் கவிதை வீச்சுகளும் புலப்படும். சமுதாயக் கொடுமைகளை நினைவூட்டி அவற்றிற்குத் தீர்வுகாணும் நோக்கில் படைப்புகள் உள்ளன. இவை பற்றி என் முனைவர் பட்ட ஆய்வேட்டில் விரிவாக வரைந்துள்ளேன்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு தஞ்சாவூரில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக நண்பர்கள் வழியாக அறிந்தேன். கல்லூரிப்பணி, தமிழ் இணையம் பரப்பும் பணி, பிற ஆய்வுகள் என ஓய்வின்றி இயங்கும் நான், என் பேராசிரியர் அவர்களைக் கண்டு மகிழும் வேட்கையுடன் பத்தாண்டுகளாகக் காத்துக்கிடக்கிறேன்...

மீண்டும் அவர் நினைவுகளுடனும், படத்துடனும் வருவேன்...

2 கருத்துகள்:

V. Dhivakar சொன்னது…

முனைவர் இளங்கோவன்,

பேராசிரியர் எழில்முதல்வன் பற்றிய செய்திகள் பல சொல்லி எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தி விட்டீர்கள். அவருக்கு மிகப் பெரிய மனம். வள்ளுவன் பொறுமையை கடலினும் பெரிது என்பான். ஆனால் அந்தக் கடலை விட பெரிய உள்ளம் அவருக்கு. பேராசிரியருக்கும் அடியேனுக்கும் அதிக தொடர்பில்லாத சமயத்தில் நான் எழுதிய 'விசித்திரசித்தன்' நாவலுக்கு ஒரு மிகப் பெரிய அணிந்துரையை எழுதிப் பரிசளித்தார்கள். தெய்வத்தின் பரிசாகவே அது வந்தது. மிக்க நன்றி.

திவாகர்

பேராசிரியர் எழுதியதன் ஒரு பகுதியை வலையேற்றம் செய்துள்ளேன்.
http://vamsadhara.blogspot.com/2007_06_01_archive.html

முனைவர் இரத்தின.புகழேந்தி சொன்னது…

பேராசிரியர் படத்தை உடன் இடுக