நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

வரலாற்றுப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி


பேராசிரியர் இராசசேகர தங்கமணி

தமிழகத்து நகரங்களுள் கரூருக்குத் தனிச்சிறப்பு உண்டு.பல்வேறு ஏற்றுமதி வணிகங்கள் இன்று இந்த ஊரில் நடைபெறுவது போன்று பண்டைக்காலத்திலும் இந்த ஊரில் பல்வேறு வணிகங்கள் நடைபெற்றிருக்க வேண்டும்.இந்த ஊரை ஒட்டி ஓடி வளம் பரப்பும் அமராவதி ஆற்றங்கரையில் உலகின் பல அரசர்கள் காலத்திய நாணயங்கள் இன்றும் கிடைத்தபடி உள்ளதை நோக்கும்பொழுது இந்த ஊரின் வரலாற்று முதன்மை நமக்கு ஒருவாறு விளங்கும்.
கரூர் பகுதியின் அத்தனை வரலாற்று உண்மைகளையும் மனத்தில் தேக்கியபடி அறிஞர் ஒருவர் உள்ளார். அவர்தாம் பேராசிரியர் இராசசேகர தங்கமணி.

தமிழக அரசு கலைக்கல்லூரிகளில் 28 ஆண்டுகளாக வரலாற்றுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.70 அகவையைக் கடக்கும் இவர் இன்னும் முப்பது ஆண்டுகள் உயிருடன் இருப்பேன் என்கிறார்.அந்த அளவு என் உடல் வலிமை வாய்ந்தது என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.அடிப்படையில் தாம் ஒரு மற்போர் வீரர்(பயில்வான்) என மார்தட்டிக்கொள்ளும் பேராசிரியர் இளம் அகவை முதல் வேட்டைக்குச் செல்வதில் நாட்டம் உடையவர்.இன்றும் ஓட்டமும் நடையுமாக இருக்கும் இவரிடம் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது சுறுசுறுப்பு என்னும் அருங்குணத்தையாகும்.

இலங்கை, அமெரிக்கா எனப் பல நாடுகளுக்கும் காசுமீர் தவிர்த்த இந்தியப் பகுதிகளுக்கும் சென்றுவந்த இந்தப் பேராசிரியர் ஓய்வுபெற்ற பிறகு சோம்பி அமர்ந்திருக்கும் இயல்புடையவர் அல்லர்.தமிழ் நூல்களைப் பதிப்பிப்பதில் தம் நேரத்தைச் செலவிடுகிறார். இவரைச் சந்தித்ததிலிருந்து...

உங்கள் இளமைப்பருவம் பற்றி...

என் பிறந்த ஊர் வரலாற்றுச் சிறப்பு மிக்க திருமழபாடிக்கு அருகில் உள்ள புதுக்கோட்டை என்னும் சிற்றூர்.என் தந்தையார் புலவர் மருதமுத்து.தமிழாசிரியராகவும்,ஓவிய ஆசிரியராகவும் விளங்கியவர்.நான் 10.10.1939 இல் பிறந்தேன்.என் தந்தையார் பேராசிரியர் சதாசிவப்பண்டாரத்தார் நூல்களை எப்பொழுதும் படிப்பவர்.அவர் வழியாகப்பண்டாரத்தாரையும் அவர்தம் நூல்களையும் அறிந்தேன்.

எங்கள் ஊரைச் சுற்றி வரலாற்று முதன்மை வாய்ந்த பல ஊர்கள்,கோயில்கள்,ஏரிகள் உள்ளன.இந்தப் பின்புலம் எனக்கு வரலாற்றுத் துறையில் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.எங்கள் ஊருக்கு அருகில் திருமழபாடி, கீழைப்பழூர், கண்டாராதித்தம், திருவையாறு,தஞ்சாவூர், அரியலூர்,குலமாணிக்கம்,செம்பியக்குடி,ஆலம்பாக்கம்(மதுராந்தக சதுர்வேதிமங்கலம்), செம்பியன் மாதேவி ஏரி உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புக்குரிய ஊர்களும் பிற அடையாளங்களும் எங்கள் பகுதியின் பெருமையைத் தாங்கி நிற்கின்றன.இந்தச் சூழல் என்னை இளம் அகவையிலேயே வரலாற்றில் ஆர்வம் வரும்படி செய்தது.

உங்கள் கல்வி பற்றி...

திருமழபாடியில் பள்ளியிறுதி வகுப்பு வரை பயின்றேன். சமால் முகமது கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்புப் பயின்றேன்.தேசியக் கல்லூரியில் இளங்கலை வரலாறு படித்தேன். திருப்பராய்த்துறையில் பி.டி என்ற ஆசிரியர் பயிற்சி பெற்று, பள்ளி ஆசிரியராகப் பணியேற்றேன்.1966 இல் முதுகலை வரலாறு படித்துக் கல்லூரியில் பேராசிரியர் பணியேற்றேன்.

வரலாற்றுத் துறைக்கு உங்களின் பங்களிப்பு...

தமிழ்நாட்டு அரசின் பாட நூல் நிறுவனத்துக்கு முதலாம் இராசேந்திரசோழன் பற்றிய நூல் எழுதி வழங்கியுள்ளேன்(1973).இதற்கு முன் இதுபோல் தனி அரசனைப் பற்றி விரிந்த நூல் வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும்.பின்னர்ப் பாண்டியர் வரலாறும் எழுதி வழங்கினேன்.அதனை அடுத்து இரசிய நாட்டு வரலாறும் எழுதி வழங்கினேன்,இவ்வாறு அரசு நிறுவனத்துக்கு மூன்று வரலாற்று நூல்கள் எழுதி வழங்கியது குறிப்பிடத்தகுந்தது.

தொல்பொருள்,அகழாய்வு,கல்வெட்டு,நாணயங்கள் பற்றி பல நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளேன்.பல ஆய்வாளர்களுக்கு உதவியாக இருந்து பல ஆய்வுகள் சிறப்பாக நடைபெற உதவியுள்ளேன்.என் வரலாற்றுத் துறைப் பங்களிப்பைக் கண்டு பல நிறுவனங்கள் சிறப்புச் செய்துள்ளன.அவற்றுள் வரலாற்று வித்தகர்,வரலாற்றுச்செம்மல்,தமிழக வரலாற்று மேதை என்னும் பட்டங்களைச் சிறப்பிற்குரியனவாகக் கருதுகிறேன்.


பேராசிரியர் இராசசேகர தங்கமணி

உங்கள் இலக்கியத்துறைப்பங்களிப்பு பற்றி...

தஞ்சாவூர்த் தமிழ்ப் பல்கலைக்கழகம் வெளியிட்ட வாழ்வியற் களஞ்சியம் என்ற பேரகராதிக்கு 200 மேற்பட்ட கட்டுரைகள் நான் எழுதி வழங்கியுள்ளேன். என் தந்தையார் உடன் பிறப்புகள் மூவரின் கட்டுரையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.என் நூல்களை வெளியிட்டுள்ள துடன் தமிழறிஞர் பே.க.வேலாயுதம் அவர்கள் தொகுத்த சங்க நூற் சொல்லடியம் என்ற நூலின் இரண்டு தொகுதிகளை வெளியிட்டுள்ளேன்.அறிஞர் கோடப்பிள்ளை எழுதிய பண்டிதமணியார் நூலையும் வெளியிட்டுள்ளேன். தமிழகத்து அறிஞர்கள் எழுதிய பல்வேறு நூல்களை என்னுடைய கொங்கு ஆய்வு மையத்தின் சார்பில் வெளியிட்டு வருகிறேன்.

உங்கள் அயல்நாட்டுப் பயணம் பற்றி...

இலங்கை,அமெரிக்காவுக்குக் கல்விப் பயணமாகச் சென்று வந்துள்ளேன்.என் மகன்கள் இருவர் அமெரிக்காவில் பணிபுரிகின்றனர்.அங்குப் பல்வேறு இலக்கிய அரங்குகளில் தமிழ் வரலாறு பற்றி உரையாற்றியுள்ளேன்.அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ்ப்பாடம் நடத்திய பட்டறிவும் எனக்கு உண்டு.அங்குள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க காட்சியகங்கள், நூலகங்களைப் பயன்படுத்திய பட்டறிவும் உண்டு.

உங்கள் நூல்களில் குறிப்பிடத்தகுந்த நூல்களைப் பட்டியலிட முடியுமா?

தமிழக வரலாற்றில் புதிய ஒளி,சுற்றுலாவியல்,தொல்பொருள் ஆய்வும் பண்பாடும்,வேட்டுவர் வரலாறு,முத்தரையர் வரலாறு,இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்,கொங்குச் சமுதாயம், கருவூரார்வரலாறு,வெஞ்சமன் வரலாறு,கரூர் பசுபதீசுவரர் கோயில் தலவரலாறு, தொல்லியல், தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய கண்டுபிடிப்புகள்,கருவூரும் கன்னித்தமிழும், தமிழ்நாடும் தொல்லியலும் உள்ளிட்ட நூல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம் பழங்காசு இதழின் சிறப்பாசிரியராகவும்,பல்வேறு வரலாற்று ஆய்வு அமைப்புகளில் உறுப்பினராகவும் உள்ள பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்கள் நடமாடும் வரலாற்று நூலகம் எனில் மிகையன்று.

பேராசிரியரின் முகவரி:
ம.இராசசேகர தங்கமணி
488/9, பாண்டியர் நகர்,
கரூர்-639 001
செல்பேசி: 94430 88144

நனி நன்றி:
தமிழ் ஓசை,களஞ்சியம் 12.04.2009,சென்னை

1 கருத்து:

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல பகிர்வு நன்றி...