நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 3 ஏப்ரல், 2009

நாமக்கல்-கடலூர் இணையப் பயிலரங்குகள்


கடலூர் மாவட்ட மைய நூலகம்

கடந்த மார்ச்சு மாதம் 16.03.2009 வைகறை நான்கு மணியிருக்கும்.கரூர் வள்ளுவர் விடுதியல் நல்ல தூக்கத்திலிருந்தேன்.செல்பேசி மணி அடித்தது.மறுமுனையில் இன்னும் விழிக்கவில்லையா?நான் பேராசிரியர் இராசசேகர தங்கமணி பேசுகிறேன்.என்று பேராசிரியர் பேசினார்.நான் நள்ளிரவு இரண்டு மணிக்குதான் படுத்தேன்.இன்னும் ஒருமணி நேரத்தில் விழிக்கிறேன் என்று சொல்லி சிறிது நேரம் அயர்ந்து கிடந்தேன்.

ஐந்து மணிக்கு எழுந்து காலைக்கடன்களை முடித்து வரவேற்பறைக்கு வரும்பொழுது ஆறு மணி.எனக்காகப் பேராசிரியர் இராசசேகர தங்கமணி உந்து வண்டியில் காத்திருந்தார்.
அவர் வீட்டுக்குச் சென்று அவர்தம் வளமார்ந்த வீடு கண்டு மகிழ்ந்தேன்.கரூவூரில் மனை வாங்கிப் புதியதாக வீடு கட்டித் தம் பணி சிறக்க வாழ்ந்து வருகிறார்.இவர் தம் மக்கள் இருவர் அமெரிக்காவில் உள்ளனர்.

பேராசிரியர் இராசசேகர தங்கமணி எழுதிய,பதிப்பித்த நூல்களை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார்.அவர் பெற்ற விருது,பட்டங்கள்,பரிசில்களை எடுத்துக்காட்டி மகிழ்ந்தார். முற்றாக அனைத்தையும் பார்வையிட ஒருநாள் ஆகும்.ஒரு மணி நேரத்தில் அவற்றை இயன்றவரை பார்த்தேன்.அதற்குள் அவர் கணிப்பொறியைத் தமிழ் மென்பொருள் இறக்கித் தமிழில் தட்டச்சிடும்படி செய்தேன்.

அதற்குள் வழக்குரைஞர் இராம.இராசேந்திரன் அவர்கள் வள்ளுவர் விடுதியில் காத்திருப்பதைத் தொரிவித்தார்.எனவே பேராசிரியர் இராசசேகர தங்கமணி என்னை வள்ளுவர் விடுதிக்கு உடன் அழைத்து வந்தார்.வழக்கறிஞரிடம் பேசிய பொழுது அவரின் தமிழார்வம் கண்டு வியந்தேன்.பல்வேறு தமிழ்நலம் சார்ந்த பணிகளில் அவர் ஈடுபட்டு வருவது அறிந்து மகிழ்ந்தேன்.அவரிடம் என் நாமக்கல் செலவு பற்றித் தெரிவித்தபொழுது நாமக்கல்லில் உள்ள தமிழார்வலர்கள் சிலருக்குத் தொலைபேசியிட்டுப் பேசி என் வருகை பற்றி உரைத்தார்.அவரிடமும் விரைந்து விடைபெற நேரந்தது.

அதற்குள் முன்பே திட்டமிட்டபடி கரூர் நூலக அலுவலர் திருவாளர் செகதீசன் ஐயா அவர்கள் என் அறைக்கு வந்தார்கள்.அனைவரும் சிற்றுண்டி உண்டோம்.காலை 8.30 மணியளில் பேராசிரியர் இராசசேகர தங்கமணி அவர்களிடமும் நூலக அலுவலர் திரு.செகதீசன் அவர்களிடமும் விடைபெற்று 9.45 மணியளவில் நாமக்கல் சென்று சேர்ந்தேன்.


நாமக்கல் மாவட்ட நூலகம் முகப்பு


நாமக்கல் மாவட்ட நூலகர்கள்

அங்கு நூலக அலுவலர் அவர்களும் நூலகர் அவர்களும் பொது உந்தில் வந்து என்னை அழைத்துச் சென்றனர்.நாமக்கல் மாவட்டம் சார்ந்த நூலகர்கள் பலருக்குக் கணிப்பொறி, இணையம் சார்ந்த பயிற்சிகளை வழங்கினேன்.அனைவரும் கற்றுத் தெரிந்துகொண்டனர். மிகச்சிறப்பாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


மாவட்ட நூலக அலுவலர் நூலகர்

மாலை நான்கு மணியளவில் புறப்பட்டுப் புதுவை வரத்திட்டமிட்டிருந்தேன்.அதற்கிடையில் திருவாளர் நா.ப.இராமசாமி ஐயாவுடன் மாரண்ணன் அவர்களும் வந்திருந்தார்.நாமக்கல் இராமசாமி ஐயா தாம் முப்பதாயிரம் நூல்களை பாதுகாத்து வருவதைச் சொன்னார்கள். அதைக் காணாமல் வந்தால் என்னால் இரவு தூங்கமுடியாது எனக் கருதி அவர் நூலகம் சென்று அனைத்து நூல்களையும் மேலோட்டமாகப் பார்வையிட்டு மீண்டும் ஒருநாள் அமைதியாக வந்து பார்வையிடுவேன்,பயன்கொள்வேன் என்று உரைத்து ஐயாவிடம் விடைபெற்று மீண்டேன்.நூலகர் திரு.வேலு அவர்கள் என் உடன் வந்து உதவினார்.5.15 மணியளவில் பேருந்து ஏறிச் சேலம்,விழுப்புரம் வழியாக நடு இரவு புதுவை வந்து சேர்ந்தேன்.

காலையில் என் கல்லூரிப்பணி முடிந்தேன்.மாலை நான்கு மணிக்கு முன்பே திட்டமிட்டபடி கடலூர் மாவட்ட மைய நூலகத்தில் கடலூர் மாவட்டம் சார்ந்த பல நூலகர்களுக்கு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சிக்கு அழைத்திருந்தனர்.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து பேராசிரியர் கல்பனா சேக்கிழார் அவர்களும் கலந்துகொண்டமை இங்கு குறிப்பிடத்தகுந்தது.


கடலூர் மாவட்ட நூலக அலுவலர்,நூலகர்


கடலூர் மாவட்ட மைய நூலகத்தில்...

நூலக அலுவலர் அவர்களும் நூலகரும் விழாவிற்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாகச் செய்திருந்தனர்.6 மணி வரை என் உரை அமைந்தது.இணையமும் மின்சாரமும் வாய்ப்பாக இருந்தன.ஆறு நாட்களாகப் பல்வேறு பயிற்சிபெற்ற அவர்களுக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்டி மகிழ்ச்சியூட்டினேன்.

அனைவரிடமும் விடைபெற்று இரவு வீடு வந்து சேர்ந்தேன்.இரண்டு நாளும் கடுமையான பணி.கடுமையான உழைப்பு.ஆனால் பலருக்கு இணையம் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியதில் அனைத்துத் துன்பங்களும் பறந்தன.

3 கருத்துகள்:

எண்ணத்துப்பூச்சி [முகுந்தன்] சொன்னது…

முனைவரே,

கலக்குகிறீர்கள்.....
தங்களின் தமிழ்ப்பணி மேலும்
விரிவடைய வாழ்த்துகள்.

அன்புடன், முகு

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

வணக்கம் ஐயா
உங்கள் தமிழ்பணி நாளும் ஓயாது நடைபெறுவது எண்ணி மிக்க மகிழ்ச்சி.உமது பணிசிறக்க வாழ்த்துக்கள்.
அன்புடன்
கல்பனாசேக்கிழார்

ttpian சொன்னது…

உண்மை சுடும்...
தமிழ்நாட்டு அரசியல்வாதிகல்,தேர்தல் திருவிழாவுக்கு போஇவிட்டார்கள்
எங்கலைபோல சிலர் புலம்புகிறோம்