நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 2 மார்ச், 2009

குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இயற்கை எய்தினார்



உலகத் தமிழ்க்கழகத்தின் பொதுச்செயலாளரும் குடந்தைப் பகுதியில் தங்கித் தமிழாசிரியர் பணியும் தமிழ்ப்பணியும் புரிந்தவரும் பாவாணர் கொள்கைகளில் ஆழமான பிடிப்பு கொண்டவருமான குடந்தைக் கதிர். தமிழ்வாணன் அவர்கள் இன்று 02.03.2009 காலை 6.35 மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

கதிர்.தமிழ்வாணனார், இரண்டு சிறுநீரகங்களும் பாதிப்புற்று அண்மையில் புதுச்சேரி மகாத்துமா காந்தி மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வந்தார்.சிறிது முன்னேற்றம் கண்ட அளவில் குடந்தையில் உள்ள அவர்தம் இல்லத்தில்(54 பாவாணர் இல்லம், சான் செல்வராசு நகர், குடந்தை(புதிய பேருந்து நிலையம் கீழ்ப்புறம்) ஓய்வெடுத்து வந்தார்.அவர்களை இரண்டு முறை நேரில் சென்று கண்டு நலம் வினவி வந்தேன்.

இன்று காலை நான் வகுப்பறையில் இருக்கும்பொழுது செல்பேசி வழியாகப் பேராசிரியர் குணசேகரன் அவர்கள் இத் தகவலைத் தெரிவித்தார்.உடன் கதிர் ஐயா அவர்களின் துணைவியாரிடம் பேசி என் வருத்தத்தைப் பகிர்ந்துகொண்டேன்.

கதிர் ஐயா அவர்கள் காலை 6.35 மணியளவில் மாநிலச் செய்திகேட்டுக்கொண்டிருந்ததாகவும் நல்ல நிலையிலேயே அவர் உயிர் பிரிந்ததாகவும் கூறினார்கள்.கண் கொடை வழங்க முன்பே உறுதிமொழி செய்திருந்தார்.அதன் பிறகு உடற்கொடை செய்யவும் ஆவணம் தயாரித்து வைத்திருந்தார்.அதன்படி பகல் ஒரு மணியளவில் இல்லத்திலிருந்து உடல் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பெற்று கண் கொடை வழங்கி, இங்கிருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் ஐயாவின் உடலை நேரில் கண்டு அக வணக்கம் செய்யலாம்.
இவர் பற்றி முன்பே என் பதிவில் செய்திகள் உள்ளன.

மேலும் விவரங்களுக்கு

பேராசிரியர் அ.குணசேகரன் அவர்களைத் தொடர்புகொள்ளலாம்
அவர் செல்பேசி எண் : 9487031795

5 கருத்துகள்:

சீமாச்சு.. சொன்னது…

மிகவும் வருத்தமுற வைத்த செய்தி. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் !!

கண்கொடை மற்றும் உடற்கொடை பற்றி முன்னமே முடிவு செய்து அதை ச்செயல் படுத்திய அவரையும் அவர் குடும்பத்தாரையும் இரு கரங்கூப்பி நெஞ்சார வணங்குகிறேன் !!


சீமாச்சு..

Unknown சொன்னது…

குவைத் தமிழர் சமூகநீதி பேரவையின் சார்பில் எங்களது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Yuvaraj சொன்னது…

வள்ளுவர் வழியிலும் வள்ளலார் வழியிலும் தனித்தமிழ் பற்றாளராய் வாழ்ந்த அய்யா கதிர் தமிழ்வாணனார் அவர் உடல் கொடையால் நம்மோடு உயிரோடவே வாழ்கிறார்.

அய்யாவின் தமிழ் பணியை நாம் கொண்டு செல்வோமாக........

அபி அப்பா சொன்னது…

அய்யா மறைந்தாலும் அவரின் அந்த கொடைத்தன்மை எனக்கு எல்லாம் நல்ல ஒரு சிந்தனையை தூண்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும்!

அவர் ஆசையை செய்து வைக்க இசைந்த அவர் குடும்பத்தினருக்கு என் வணக்கமும் நன்றியும்!

கோவி.மதிவரன் சொன்னது…

ஐய அவர்களின் ஆதன் அமைதி பெற இறைவனை இறைஞ்சுவோம்