நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 28 நவம்பர், 2009

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம்,திருநெல்வேலி

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் நாற்பத்தொன்றாம் கருத்தரங்கம் 2010, மேத் திங்கள் 15,16(காரி, ஞாயிறு) கிழமைகளில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. பேராசிரியர் சபாபதி மோகன் அவர்கள் (துணைவேந்தர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) புரவலராக இருந்து இந்தக் கருத்தரங்கை நடத்த உள்ளார்.

பல்கலைக்கழகம், கல்லூரிகள், நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மட்டும் பேராளர்களாகக் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரை படிக்கலாம்.

பதிவுக்கட்டணம்

பேராளர் பதிவுக்கட்டணம் உருவா 500-00
உடன் வரும் விருந்தினர் கட்டணம் உருவா 150-00

கட்டணங்களை ALL INDIA UNIVERSITY TAMIL TEACHERS ASSOCIATION,MADURAI-625 020என்னும் முகவரியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலையாக அனுப்ப வேண்டும்.

கட்டுரை 5 பக்க அளவில் இருத்தல் வேண்டும்.

இலக்கியவியல், இலக்கணவியல், சமயவியல், பண்பாட்டியல் / வரலாற்றியல் இக்கால இலக்கியம், பல்துறை இயல் என்ற பிரிவுகளில் அமைத்தல் நலம்.

கட்டுரை,கட்டணம் இரண்டையும் சேர்த்து விடுத்து வைக்க நிறைவுநாள் 31.12.2009

பேராளர்களுள் நூலாசிரியர்கள் இருப்பின் அவர்கள் 2009 சனவரி-திசம்பர் காலத்தில் நூல் எழுதியிருப்பின் நூலாசிரியர் வாழ்க்கைக்குறிப்பு, நூற்படி 2,பதிவுக்கட்டணம் 25 ஆகியவற்றைச் செயலர் முகவரிக்கு 31.01.2010 நாளுக்குள் அனுப்பவேண்டும். நூலாசிரியர்கள் விழா அரங்கில் சிறப்புச் செய்யப்பெறுவர்.

தொடர்பு முகவரி:
முனைவர் மு.மணிவேல்
செயலர்,இ.ப.த.மன்றம்,தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,
மதுரை-625 020
செல்பேசி: 98655 34622

வெள்ளி, 27 நவம்பர், 2009

பாவலர் மாநி(மார்கிரேட் நிக்கோலசு)


பாவலர் மாநி

புதுவையில் வாழும் பாவலர்களுள் பாவலர் மாநி அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்.மரபுப்பாடல் எழுதும் பெண்பாவலர்களுள் குறிப்பிடத்தக்கவர்.முனைவர் இரா.திருமுருகன்,பாட்டறிஞர் புலவர் இலக்கியன்,புலவர் நாகி உள்ளிட்டவர்களின் நெறிப்படுத்தலில் மிகச்சிறப்பாக எழுதி வருபவர். இதுவரை துளியாய், தூறலாய்,புயலாய்,பூவாய்,பூங்காற்றாய்,புனலாய்,சுருக்குப்பை(துளிப்பா),பாவம் அவள்(சிறுகதை)உதிரிப்பூக்கள்(சிறுகதை),மரபுச்சாரல்,மழைச்சாரல் உள்ளிட்ட நூல்களை வழங்கியுள்ளார்.குறளாயிரம்,வண்ணத்துப்பூச்சிகள்(சிறுவர் பாடல்கள்) விரைவில் வெளிவர உள்ளன.

பாவலர் மாநி அவர்கள் சேலத்தில் 26.12.1948 இல் பிறந்தவர்.இளம் அறிவியல் படிப்பைக் கோவை நிர்மலா கல்லூரியில் படித்தவர்.கல்வியியல் படிப்பை அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நிறைவு செய்தவர்.கிறித்தவப் பெண்கள் அமைப்புகளில் பலநிலைகளில் பணிபுரிந்தவர்.திராவிட இயக்கக்கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.இவர் கணவர் திரு.நிக்கோலசு அவர்கள் புதுச்சேரியில் சிறைத்துறை அதிகாரியாக இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர்.மரபுப்பாடல் எழுதுபவர்கள் குறைந்து வரும் இந்த வேளையில் அம்மா மாநி அவர்களின் பாட்டுப்பயணம் தொடர வாழ்த்துவோம்.

பாவலர் மாநி அவர்களின் முகவரி:
பாவலர் மாநி
141,இலப்போர்த் தெரு,
புதுச்சேரி- 605 001
செல்பேசி: 9787095578