கோடை வெப்பம் மக்களைப் பெருந்துன்பத்துக்கு ஆளாக்கியுள்ள நிலையில் தமிழகத்தில் பரவலாகப் பெய்துவரும் மழையால் மக்கள் ஓரளவு வெப்பம் தணிந்து, குளிர்ச்சிபெற்று வருகின்றனர். மழை குறித்த செய்தியைத் தொலைக்காட்சிகளும் அச்சு ஊடகங்களும் உடனுக்குடன் சிறப்பாகத் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கணமழை என்று எழுதுவதற்குப் பதிலாகப் பெரும்பாலான ஊடகங்கள் கனமழை என்று பிழையான வடிவத்தைப் பயன்படுத்துவதைக் காண நேர்ந்தது. பிழை வடிவம் மக்கள் பார்வையில் படும்பொழுது இவ்வாறுதான் எழுதவேண்டும் போலும் என்ற எண்ணம் தோன்றுவது இயற்கையாகும். எனவே தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்தார் கணமழை என்ற சரியான வடிவத்தைப் பயன்படுத்துமாறு அன்புடன் வேண்டுகின்றேன்.
கணமழை என்றால் மேகங்கள் திரண்டு, பெய்யும் மழை என்று பொருள். கணம் என்ற சொல்லுக்குப் பல பொருள் உண்டு. திரட்சி, கூட்டம் என அகரமுதலிகள் பொருள் தரும். கனம் என்ற சொல்லுக்குப் பாரம், எடை என்று பொருள்கள் உண்டு.
காலத்தால் பழைமையான நம் சங்க இலக்கியங்களுள் கணமழை என்று பல இடங்களில் ஆளப்பட்டுள்ளது. எ.கா.
“கண
மழை பொழிந்த கான் படி இரவில்” (அகம்.392 : 12)
“கண
மழை துறந்த கான் மயங்கு அழுவம்” (அகம். 397: 5)
“அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇ” (பதிற்றுப்பத்து, 17 : 11)
எனவே,
ஊடகத்துறையினர் “கணமழை” என்று பயன்படுத்தித் தமிழ்நலம் காப்பார்களாக!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக