நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 20 மே, 2026

முனைவர் இரா. கலியபெருமாள்

 

முனைவர் இரா. கலியபெருமாள் 

[முனைவர் இரா. கலியபெருமாள் அவர்கள் தஞ்சையை அடுத்த இராவுசாப்பட்டி என்னும் ஊரினர். தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். தற்பொழுது அக் கல்லூரியின் செயலராகத் தொண்டாற்றி வருபவர். தமிழ் இலக்கண- இலக்கியங்களை மனப்பாடமாகச் சொல்லும் பேராற்றல் பெற்றவர். கம்பராமாயணம், சிலப்பதிகாரம், புறநானூறு முதலிய நூல்களைப் பொது அரங்குகளில் வகுப்புகளாக நடத்தி, தமிழ் இலக்கியப் பரவலுக்கு வழிசெய்தவர். தமிழ்நாட்டரசின் இலக்கிய மாமணி விருது பெற்றவர்] 

பேராசிரியர் இரா. கலியபெருமாள் அவர்கள் தஞ்சையை அடுத்துள்ள இராவுசாப்பட்டி என்னும் ஊரில் வாழ்ந்த  க. இராசு - துளசியம்மாள் ஆகியோரின் மகனாக 05.12.1936 இல் பிறந்தவர் (தாது வருடம், கார்த்திகை மாதம், சனிக்கிழமை, பூரம் விண்மீன்). (சான்றிதழில் உள்ள பதிவு 01.07.1938). தொடக்கக் கல்வியைத் தம் பிறந்த ஊரான இராவுசாப்பட்டி தொடக்கப்பள்ளியில் படித்தவர். இவர்தம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் அண்ணாமலை ஆவார்.  ஆறாம் வகுப்பு  முதல் பதினொன்றாம் வகுப்பு வரை தம் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள வல்லம் என்னும் ஊரில் உள்ள பள்ளியில் படித்தவர்.

இரா. கலியபெருமாள் அவர்கள் கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்று வித்துவான் பட்டம் பெற்றவர். இவர் பயிலுங்காலத்தில் இவர்தம் ஆசிரியர் பெருமக்களாக விளங்கியவர்கள் ந. இராமநாதன், ச. பாலசுந்தரம், சி. கோவிந்தராசனார்,  தி. அடிகளாசிரியர், கு. சிவமணி, மு. சடகோப ராமானுசம் பிள்ளை முதலானவர்கள் குறிப்பிடத்தக்க சான்றோர் பெருமக்கள் ஆவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து, தமிழாசிரியர் பயிற்சி பெற்றவர். தொலைதூரக் கல்வி வாயிலாக இளங்கலை (பி. லிட், கல்வியியல் இளையர் (பி. எட்), முதுகலை (எம். ஏ.), கல்வியியல் முதுவர் (எம்.எட்.) பட்டங்களைப் பெற்றவர். 

'தொல்காப்பிய உவமையியல் - ஓர் ஆய்வு' என்ற தலைப்பில் ஆய்வு செய்து இளம் முனைவர் (எம். பில்.)  பட்டம் பெற்றவர். 'தொல்காப்பியப் பொருளதிகார உரைவேறுபாடு - அகத்திணையியல், புறத்திணையியல்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வாயிலாக முனைவர் பட்டம் பெற்றவர். 

இரா. கலியபெருமாள் அவர்கள் வடுவூர் தனியார் பள்ளியில் 14.11.1959 ல் ஆசிரியராகப் பணியில் இணைந்தவர். அதன் பிறகு மேல உழூர், வல்லம், ஈச்சங்கோட்டை, நாச்சியார்கோவில், வாண்டையார்இருப்பு முதலான ஊர்களில் அமைந்துள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 22.03.1963 முதல் 30.05.1997 வரை தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  பணி ஓய்விற்குப் பின் தஞ்சை ந. மு. வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் பணியாற்றி, இப்பொழுது அக்கல்லூரியின் செயலராகத் தொண்டாற்றி வருபவர். 

இரா. கலியபெருமாள் அவர்கள் க. இராசேசுவரி அம்மையார் அவர்களை 16.04.1964 இல் திருமணம் செய்துகொண்டவர்.

இரா. கலியபெருமாள் அவர்கள் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வெளிவரும் தமிழ்ப் பொழில் இதழில் பல கட்டுரைகளை எழுதியவர். தஞ்சாவூர் கம்பன் கழகத்தில் நிகழ்ந்த பல பட்டிமன்றங்களில், சொற்பொழிவுகளில் கலந்துகொண்டு உரையாற்றிய பெருமைக்குரியவர். தஞ்சாவூர் கம்பன் கழகம் சார்பில் கம்பராமாயண வகுப்புகளைப் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தியவர். பெரியபுராணம், கலித்தொகை வகுப்புகளையும் தஞ்சையில் நடத்தி, இலக்கியப் பணியாற்றியவர். தஞ்சை உலகத் திருக்குறள் பேரவை சார்பில், புறநானூற்று வகுப்புகளை நடத்திச் சங்க இலக்கியப் பரவலுக்கு வழி சமைத்தவர். 

பல்வேறு கல்லூரிகளிலும், சென்னைப் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் முதலான நிறுவனங்கள் நடத்திய இலக்கிய நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றியவர். தமிழகப் புலவர் கழகத்தின் உறுப்பினராகவும் தமிழ்த்தொண்டாற்றி வருபவர். 

தமது தொல்காப்பியம் பற்றிய ஆய்வு நூலைத் 'தொட்டனைத்தூறும் தொல்காப்பியம்' என்ற தலைப்பில் நூலாக வெளியிட்டவர். கோவையில் நடைபெற்ற செம்மொழித் தமிழ் மாநாட்டில் 'தொல்காப்பியர் உவமைகள்' என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை வழங்கியவர். 

தஞ்சாவூர் கம்பன் கழகத்தின் வழியாகச் செய்த தமிழ்ப்பணிகள்: 

1991 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரை கம்பராமாயணம் முழுமயையும் பாடமாக நடத்தியுள்ளார் (369 வகுப்புகள்)

கலித்தொகை முழுவதும் பாடம் சொன்னது.

பெரியபுராணம் முழுவதும் பாடம் சொன்னது. 

உலகத் திருக்குறள் கழகத்தின் வழியாகச் செய்த தமிழ்ப்பணிகள்:

புறநானூறு முழுமையும் 222 வகுப்புகளில் பாடமாகச் சொன்னது.

சிலப்பதிகாரம் முழுமையும் பாடம் சொல்லத் தொடங்கி, அரங்கேற்று காதை வரை நடத்தி வருவது.

தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாகத் திங்கள்தோறும் திருக்குறள் வகுப்பு நடத்துவது.

திருச்சிராப்பள்ளி வானொலியில் எண்ணற்ற வானொலி உரைகள் வழங்கியுள்ளார்.

    சங்க இலக்கியம், சிலப்பதிகாரம், இராமாயணம், திருக்குறள், தனிப்பாடல்கள், இலக்கண நூல்கள் அவற்றின் உரைகளை முழுவதும் மனப்பாடமாக ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர். தனிப்பாடல்களை நயம்படப் பொருள் உரைக்கும் புலமையர். கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் பராசக்தி, மனோகரா, ராஜா ராணி முதலான பத்துத் திரைப்படங்களின் வசனங்களை முதல் காட்சித் தொடங்கி, முடிவுக் காட்சி வரை ஒப்புவிக்கும் ஆற்றல் பெற்றவர். 

    பாவேந்தர் பாரதிதாசன், கவியரசு கண்ணதாசன் கவிதைகளை மனப்பாடமாகச் சொல்லும் பேராற்றல் பெற்றவர். 

    பழநி சாது சுவாமிகள் திருமடத்தில் நடைபெறும் சிலப்பதிகாரக் கருத்தரங்கில் கடந்த பத்து ஆண்டுகளாகச் சொற்பொழிவு ஆற்றி, சிலப்பதிகாரத்துச் சீர்த்தியைப் பேசி வருபவர். 

இரா. கலியபெருமாள் அவர்கள் பெற்றுள்ள சிறப்புகளுள் சில: ·         தமிழ்நாட்டு அரசு வழங்கிய இலக்கிய மாமணி விருது (2021)

·         தஞ்சைச் சுழற்சங்கம் வழங்கிய தமிழ்ப் பேராசான் விருது

·         திருவையாறு ஔவைக் கோட்டம் வழங்கிய ஔவை விருது

·         வாண்டையார் விருது

·         தஞ்சை சதய விழாக் குழுவினர் வழங்கிய மாமன்னன் இராசராசன் விருது

·         தஞ்சை உலகத் திருக்குறள் பேரவை வழங்கிய குறள் நெறிச் செம்மல் விருது

·         தஞ்சாவூர் திருவருள் பேரவை அளித்த 'கம்பர் சீர் பரவுவார்' பட்டம்

·         வெற்றித் தமிழர் பேரவை வழங்கிய கவிஞர் திருநாள் விருது, 2008

·         தி.மு.க. இலக்கிய அணி அளித்த 'தமிழவேள் கலைஞர் இலக்கியப் பொற்கிழி விருது' 2011

·         தமிழகப் புலவர் குழுவின் தொல்காப்பியர் விருது

·         இரகுநாத இராசாளியார் விருது

·         தஞ்சை சுழற்சங்கத்தின் மண்ணின் சிறந்த தமிழறிஞர் விருது

·         வாழ்நாள் சாதனையாளர் விருது

·         ஐந்தாம் ஜார்ஜ் நினைவுப் பரிசு – வித்துவான் தேர்வு முதல் மதிப்பெண், 1958

·         சித்பவானந்தா கழகப் பரிசு, 1958

·         திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகப் பரிசு, 1957

·         ந.மு.வேங்கடசாமி நாட்டார் நினைவுத் தங்கப் பதக்கம், 1958

·         தொல்காப்பியச் செம்மல், உலகத் தொல்காப்பிய மன்றம், 2025

(குறிப்பு: முனைவர் இரா. கலியபெருமாள் அவர்களின் தொண்ணூறாம் அகவை விழாவினை அவர்தம் மாணவர்களும், நண்பர்களும் தஞ்சையில் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்துவருகின்றனர்).



முனைவர் இரா. கலியபெருமாள் அவர்களின் செவ்வி - காணொளி

கருத்துகள் இல்லை: