நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 3 நவம்பர், 2015

எல்லாப் பாதைகளும் உரோமாபுரியை நோக்கி…உரோமாபுரியை இரவு 9. 00 மணியளவில் நெருங்கினோம். வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. சாரல்போல் மழை பெய்யத் தொடங்கியது. வழியில் இருந்த ஓர் உணவகத்தில் வண்டியை நிறுத்தினோம். மிகப் பரந்த இடத்தில் வண்டிகளை நிறுத்தவும் உணவு உண்ணவுமாக நல்ல வசதிகளுடன் அந்த உணவகம் இருந்தது. உண்டு முடித்தவர்கள் வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு செல்லவும் வசதிகள் இருந்தன.

உணவகத்தின் உள்ளே நுழைந்து உண்ணும் தரத்தில் என்ன என்ன பொருள்கள்உள்ளன? என்று ஒரு பருந்துப்பார்வை பார்த்தோம். நாங்கள் பேசிய ஆங்கிலம் அங்கு எடுபடவில்லை. இத்தாலி மொழியில் கேட்டால் மட்டும் அவர்கள் விடை சொல்வார்கள் என்று தெரிந்தது. பல்வேறு உணவுகள் இருந்தன. பன்றிக்கறி உள்ளிட்ட பல்வேறு இறைச்சிகள் இருந்தன. ஒரு முட்டையடைக்கு (ஆம்லேட்) முயன்று பார்த்துத் தோற்றேன். இரண்டு மாவுப்பண்ணியம், ஒரு வாழைப்பழம் போதும் என்று வாங்கினேன்.

அண்ணனும், அண்ணியாரும், அருளும் அவரவர்களுக்குத் தேவையான உணவை வாங்கிக்கொண்டனர். உண்டு முடித்தபிறகு அங்கு அடுக்கிவைத்திருந்த நூல்களைப் புரட்டிப் பார்த்தேன். கைவினைப் பொருட்கள் சிலவற்றைப் பார்த்தேன். நம்மால் வாங்கும் தரத்தில் எந்தப் பொருளும் அங்கு இல்லை.

வெளியில் மழைச்சாரல் மனத்திற்கு இதமாக இருந்தது.  பத்து மணியளவில் உணவகத்திலிருந்து புறப்பட்டு, உரோமையின் நெஞ்சகப் பகுதிக்கு வந்தோம். அந்த இரவு நேரத்திலும் உரோமாபுரி எங்களின் வருகைக்குக் காத்திருந்தது போலும்! அழகிய மாளிகைகளும், நீண்ட சாலைகளும், பரந்துவிரிந்த கட்டடங்களும், நினைவிடங்களும் தேவாலயங்களும் எங்களுக்கு மகிழ்ச்சியையும் வியப்பையும் தந்தன. உரோமை நகரின் எல்லையில் தங்கலாம் என்று சொன்ன ஓட்டுநர் அருள் எங்களை நடுவிடத்திற்கே அழைத்துவந்துவிட்டார். அதோ பாருங்கள்! அதுதான் போப்பரசரின் வாடிகன் நகர், மாளிகை என்று சுட்டிக் காட்டினார். எங்களுக்குப் பெரும் வியப்பாக இருந்தது!

நாங்கள் வாடிகன் நகரைப் பார்க்க வேண்டும் என்று புதுவையில் சொன்ன உடனேயே சில நண்பர்கள் போகாத ஊருக்கு வழிசொன்னார்கள். போப்பரசர் மாளிகை பார்க்க வேண்டும் என்றால் தில்லியில் உள்ள தூதரகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அவர்கள் அனுமதியை நுழைவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்பொழுது இணைக்க வேண்டும் என்றும், தேவையற்ற அச்சத்தை உண்டாக்கியிருந்தனர். அவ்வாறு இல்லை என்றால் வாடிகனில் நுழையமுடியாது என்று எதிர்மறையான வழிகாட்டலைச் சொல்லியிருந்தனர். எனவே வாடிகனுள் நுழையமுடியவில்லை என்றாலும் எல்லையிலிருந்தாவது போப்பரசர் மாளிகையைப் பார்த்துவருவோம் என்றுதான் நாங்கள் வாடிகனைப் பற்றி நினைத்து வந்திருந்தோம்.

எங்கள் ஓட்டுநர் அருள் வாடிகன் மாளிகை வாசலில் வண்டியை நிறுத்தினார். முன்பு ஒருமுறை வந்தபொழுது இங்குதான் அருளின் வண்டியைக் கள்வர்கள் உடைத்துக் கொள்ளையிட்டனராம்! “முன்பு வந்தபொழுது அனைத்துப் பொருள்களையும் இழந்தோம்! அதனால் இந்த முறை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்என்றார். எனவே தற்காப்புக்கு ஒரு கட்டையுடனும் சில இரும்புக் கம்பிகளுடனும் வந்திருந்தார். வண்டியைக் கள்வர்கள் குறிவைத்தால் அவர்களை இவர் குறிவைக்க ஆயத்தமாக இருந்தார்.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு நானும் அருளும் போப்பரசர் மாளிகை நோக்கி முன்னேறினோம். அருள் கிறித்தவ மதத்தைப் பின்பற்றுபவர். எனவே அவர் போப்பரசர் கோயிலைப் பார்த்து ஒரு வணக்கம் போட்டார். நானும் அவரைப் பார்த்து ஒரு வணக்கம் போட்டேன். அண்ணனும், அண்ணியாரும் வண்டிக்குக் காவலாக இருந்தார்கள். அங்கு நிலவிய குளிர், தாங்கும் அளவில் இருந்தது. எனினும் பல ஆடைகளைப் போர்த்தி என்னுடலைப் பாதுகாத்தேன். அந்த நள்ளிரவு நேரத்தில் போக்குவரவு குறைவாக இருந்தது. எங்களைப் போல் நேரந்தப்பி வந்தவர்களும் இளைஞர்களும், பெண்டிர்களும் அங்கும் இங்கும் குழு குழுவாகப் போவதும் வருவதுமாக இருந்தனர். சிலர் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
பேருந்து நிலையம்

போகமுடியாது என நினைத்த போப்பரசர் மாளிகையில் எங்கள் திருவடி(!) பட்டதில் எனக்கு மகிழ்ச்சி. அடுத்து எங்களுக்கு இருந்த முதல்பணி இரவில் தங்குவதற்கு உரிய அறையைத் தேடுவதுதான். கோயிலை ஒட்டியப் பகுதியில் அறைக்கு முயன்றோம். உரோமாபுரிக்கு முகப்பிலேயே தங்கினால் வாடகை குறைவாக இருக்கும் என்று பயணத்திட்டம் வகுத்த நாங்கள் போப்பரசர் மாளிகைக்கு அருகில் அறை தேடினால் குறைந்த விலையில் கிடைக்குமா?. கிடைக்கவில்லை. மரபு வழியில் அமைந்த சில மாளிகைகளுக்குச் சென்று அறை வேண்டினோம். அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி, எங்கள் நிலைக்கு அனைவரும் வருந்தினார்கள்.

போப்பரசர் கோயிலுக்கு எதிரே உள்ள பெருஞ்சாலையில் புறப்பட்டு, இரு மருங்கும் அறை கிடைக்குமா என்று போவோர் வருவோரைக் கேட்டுப் பார்த்தோம்.

சற்றுத் தொலைவில் மக்கள் கூடும் சந்தி ஒன்று தென்பட்டது. அந்த இடத்தில் அனைவரும் மது விருந்தில் ஆர்வமுடன் இருந்தனர். ஓட்டுநர் அருளை வண்டியில் அண்ணியாருக்குப் பாதுகாப்பாக விட்டுவிட்டு, அண்ணனும் நானும் அறை தேடத் தொடங்கினோம். Hotel என்று நாங்கள் கேட்டதை அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு சில Hotel களுக்கு அனுப்பினார்கள். அவர்கள் ஆற்றுப்படுத்திய Hotel என்பது ண்களும், பெண்களும் மதுவருந்தும் மது அங்காடிகள் என்பது பின்னர்தான் தெரிந்தது. இன்னொருவர் இன்னொரு Hotel - க்கு அனுப்பினார். அங்குத் திரையரங்கம்தான் இருந்தது. பின்னர்தான் எங்களுக்குப் புரிந்தது. தமிழகத்தைத் தவிர ஆங்கிலம் எங்கும் பயன்படாது என்று!


மீண்டும் வேறு தெருக்களில் நுழைந்து விடுதி குறித்து வினவினோம். அனைத்து இடங்களிலும் முன்பதிவு முடிந்துவிட்டது என்று கூறிக் கையை விரித்தனர். இப்பொழுது மழை நின்றிருந்தது. ஆற்றங்கரையை ஒட்டி ஒரு விடுதி உள்ளது; அங்குச் சென்று பாருங்கள் என்று சிலர் கூறினர். அங்கும் முனைந்து பார்த்தோம். அங்கும் அறை இல்லை என்றனர். அந்த நள்ளிரவுப் பொழுதில் ஆண்களும் பெண்களும் மகிழ்ச்சியாக உரோமாபுரியை வலம் வந்தவண்ணம் இருந்தனர். புகைத்தல், மதுவருந்தல் அந்த நாட்டின் தேசியப் பழக்கம் போலும்!.

இப்பொழுது ஒரு முடிவுக்கு வந்தோம். மீண்டும் உரோமாவின் எல்லைப் பக்கமே சென்று தங்குவோம் என்று பெருநகர வீதிகளைக் கடந்து நான்கைந்து கல் வந்தோம். உரோமாபுரியைப் பொருத்தவரை நகரம் சிற்றூர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அனைத்தும் பெரும் மாளிகைகளால் அமைந்த பட்டினப்பாக்கமே!


ஒரு தெருவின் மூலையில் ஒரு விடுதி பச்சை விளக்கில் மின்னியது. Hotel Felice என்று பெயர்ப்பலகை இருந்தது. இறங்கிச் சென்று நானும் அருளும் அறை வேண்டினோம். அகவை முதிர்ந்த ஒரு பெரியவர் வரவேற்றார். உரோமாபுரி போன்ற நாடுகளில் வாயில் கதவு எப்பொழுதும் மூடப்பட்டிருக்கும். அழைப்பு மணி அடித்தால் அவர்கள் விரும்பினால் கதவைத் திறப்பார்கள். இல்லையென்றால் ஒலிபெருக்கியில் பேசி நம் வேண்டுகோளைச் சொல்லலாம். அவர்களும் அதற்கு உள்ளிருந்தபடியே விடை தருவார்கள். வீணே திறப்பதும் மூடுவதும் வழியனுப்புவதுமான சடங்குகள் அங்கு இல்லை.

விடுதியின் வரவேற்பாளராகத் தெரிந்த பெரியவர் கதவைத் திறக்க வழிசெய்தார். உள்ளே சென்று வணக்கம் சொன்னோம். நால்வர் தங்க இரு அறைகள் வேண்டும் என்றோம். அந்தப் பெரியவர் விடுதியின் சிறப்புகளைப் பட்டியலிட்டார். 180 யூரோ குடிக்கூலியில் இரண்டு அறைகளில் தங்க அனுமதித்தார். முன்பதிவு செய்திருந்தால் பாதி விலையில் அறை கிடைத்திருக்கும். அலைச்சலும் இல்லை.

எங்கள் பெட்டிகளை வண்டியிலிருந்து இறக்கிக் கொண்டுவந்தோம். கடவுச்சீட்டு விவரங்களை வழங்கி, அவரிடம் திறவி பெற்று, விடுதியறையில் நுழைந்தோம். இணைய இணைப்புகளுடன் அந்த அறை எங்களை வரவேற்றது. படுக்கை விரிப்புகள், தலையணைகள், கழிவறைகள் பளிச்சிட்டன. தேவருலகமாக ந்த அறையை நினைத்தோம். உடைமாற்றி, அந்த அறையில் இருந்த மெத்தையில் படுத்தபொழுது விடியற்காலம் மூன்றுமணி இருக்கும்.


1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

உரோமாபுரிக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி. அருமையான பயணமாக இருந்தது. ஓட்டல் என்ற சொல்லுக்கான பொருளை அறிந்தபோது வித்தியாசமாக இருந்தது.