நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 20 நவம்பர், 2015

கால் நூற்றாண்டைக் கடந்தபொழுதும்…
தவத்திரு அடிகளார் அவர்களுக்கு மலர்மாலை அணிவிக்கும் காட்சி


திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் பயின்ற நினைவுகள் எனக்கு அவ்வப்பொழுது தோன்றி மறையும்!. 1990 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 30 ஆம் நாள் பிற்பகல் நடைபெற்ற என் மாணவராற்றுப்படை நூல் வெளியீடு குறித்து அவ்வப்பொழுது நினைத்துப் பார்ப்பேன். மாணவப்பருவத்தில் நூல் எழுதுவதிலும் வெளியிடுவதிலும் இருந்த ஆர்வம் இப்பொழுது இல்லாமல் போனது. இல்லத்தில் தேங்கிக் கிடக்கும் அச்சிட்ட நூல் குவியல்களே ஆர்வம் குறைந்தமைக்குக் காரணம். இணையத்தில் எழுதுவதால் அனைவரின் பார்வைக்கும் செய்திகள் சென்றுவிடுகின்றன. அதன்பிறகு எதற்கு நூல்? என்று நினைத்துக்கொள்வேன்.

அண்மையில் பழையப் பெட்டிகளைத் தூய்மை செய்தபொழுது கால் நூற்றாண்டுக்கு முந்தைய படங்கள் சில கிடைத்தன. தவத்திரு முனைவர் குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் மாணவராற்றுப்படை நூல்வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட படங்களும் அதில் இருந்தன. தவத்திரு அடிகளார் அவர்கள் முன்பு திருப்பனந்தாள் காசித் திருமடத்தில் இருந்து சமயப்பணியும், தமிழ்ப்பணியும் செய்துவந்தார்கள். இப்பொழுது தருமபுர ஆதீனத்தின் நிர்வாகங்கள் பலவற்றைக் கவனிக்கும் நிலையிலும், பல்வேறு திருக்கோயில்களுக்குத் தலச்செலவு செய்து இறைவழிபாடு நிகழ்த்தும் நிலையிலும் ஓய்வில்லாமல் உழைக்கின்றார்கள்.

தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள், என் மாணவப்பருவத்தின் தமிழார்வம் அறிந்து, என்னை உயர்வாகப் போற்றி மதித்தார்கள். ஆசிரியராகவும், குருவாகவும் இருந்து நன்னெறி காட்டினார்கள். அப்பெருமைக்குரிய அவர்கள் இப்பொழுது இணையத்தில் தம் திருச்செலவுகளைப் பதிவிட்டு வருவது மகிழ்ச்சியாக உள்ளது. தவத்திரு அடிகளார் அவர்களைக் கண்டு பலவாண்டுகள் ஆயின. எனினும் அவர்களின் நினைவு தொடர்ந்து இருந்தவண்ணம் உள்ளது.

மாணவராற்றுப்படை நூல்வெளியீட்டு விழாவில் தவத்திரு குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்கள் தலைமை தாங்கி, அரியதொரு இலக்கிய உரையாற்றினார்கள். சற்றொப்ப அரைமணி நேரம் அந்த உரை அமைந்துள்ளது.

பேரன்பன் அல்லன் பிழைசெய்யான் தானல்லன்
ஓரன்பும் இல்லா உலுத்தனேன் - பேரன்பு
காட்டிஎனைக் காட்டியுனைக் காட்டிஇன்பத் தொட்டிலிலே
ஆட்டிவளர் சொக்கநா தா

எனத் தொடங்கும் அந்த உரையை நல்வாய்ப்பாகப் பதிவுசெய்து காத்துவருகின்றேன். இளம் அகவையில் அடிகளார் அவர்களின் உரை பட்டறிவு சார்ந்த சிறந்த செய்திகளையும், மெய்யறிவுகளையும் தாங்கியுள்ளன(பின்னர் அவ்வுரை ஒலிவடிவில் வெளியிடப்படும்).

என் பேராசிரியரும் கல்லூரி முதல்வருமான புலவர் ம. வே. பசுபதி அவர்கள் மாணவராற்றுப்படை நூலை வெளியிட்டார்கள். பொறியாளரும், கல்லூரியின் செயலருமான திரு. பாலகிருட்டினன் அவர்கள் முதற்படியைப் பெற்றுக்கொண்டார்கள். குடந்தைக் கதிர்.தமிழ்வாணன் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் நூலாசிரியனாகிய என் முயற்சியை வாழ்த்தி ஊக்கப்படுத்தினார்கள். குமரகுருபரர் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு. இரத்தின. சுவாமிநாதன் அவர்கள் முன்னின்று நூல் வெளியீட்டு விழாவை நடத்தினார்.

நூல் வெளியீட்டு விழாவில் தவத்திரு. குமாரசாமித் தம்பிரான் அடிகளார் அவர்களுக்கு மலர்மாலையை விழாக்குழு சார்பில் அணிவித்தார்கள். தாம் அணிந்த அந்த மலர் மாலையைத் தவத்திரு அடிகளார் அவர்கள் கழற்றி, என்னை மேடைக்கு அழைத்துச் சூட்டி அழகுபார்த்தார்கள். தவத்திரு அடிகளார் அவர்கள் பேச்சின் ஊடே, “என்னை விடவும் இவன் இன்று உயர்ந்தவன் – நூலாசிரியன்” என்று தாயுள்ளத்துடன் அரவணைத்து, வாழ்த்தி, ஊக்கப்படுத்தினார்கள். அந்த ஈர நன்மொழிகளே என்னை இன்னும் எழுத வைக்கின்றன…

பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்கள் உரை


பேராசிரியர் ம.வே. பசுபதி அவர்கள் நூலை வெளியிட, கல்லூரியின் செயலர் பெற்றுக்கொள்ளும் காட்சி


 தவத்திரு குமராசாமித் தம்பிரான் அவர்களின் அருளுரை
குடந்தைக் கதிர். தமிழ்வாணன் வாழ்த்துரை


தவத்திரு. அடிகளார் அவர்கள் மாணவப் பருவத்து நூலாசிரியனைச் சிறப்பிக்கும் காட்சி


தவத்திரு. அடிகளாரால் போற்றப்பட்ட மு.இளங்கோவன்(1990)

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட  அன்பர்கள் 

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

இவை போன்ற நினைவுகள் என்றும் மகிழ்வினைத் தரும். வாழ்த்துக்கள்.