நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 16 ஜூன், 2014

இசையறிஞர் கலைமாமணி சு. கோபகுமார்



கலைமாமணி சு. கோபகுமார் (தண்ணுமைக் கலைஞர்)

புதுவை மாநில அரசு அறுமுகனம் என்ற இசைக்கருவியைத் தம் மாநிலத்தின் அடையாளமாக அறிவித்துள்ளது. அந்தக் கருவியை உருவாக்கியவர் கலைமாமணி சு. கோபகுமார். புதுவை அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் தண்ணுமை(மிருதங்க வித்துவான்) ஆசிரியராகப் பணியாற்றுகின்றார்.

கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள் திருவனந்தபுரம் குளநட சிவராமகிருட்டின சுப்பிரமணிய ஐயர் - இராம் ஆகியோரின் மகனாக 01.04.1965 இல் பிறந்தவர். தொடக்கக் கல்வியைத் திருவனந்தபுரத்தில் உள்ள கரமன அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். இவரின் பெற்றோர்களுக்கு நான்கு குழந்தைகள். இவர்களுள் மூன்றாவது குழந்தையாகப் பிறந்தவர் சு. கோபகுமார்.

சு. கோபகுமாரின் தாய்வழிப் பாட்டனார் மிகச்சிறந்த வயலின் வித்துவான். அவர் பெயர் மணிக்குட்டி பாகவதர். மணிக்குட்டி பாகவதரின் மூத்த மகன் பிச்சாண்டி ஐயர் மிருதங்க வித்துவான். இவர் திருவிதாங்கூர் அரண்மனையில் அரண்மனை வித்துவனாக இருந்து இசைப்பணி செய்தவர். இவரின் மகள்தான் இராம்(சு. கோபகுமார் அவர்களின் தாய்). இராம் அவர்கள் அரசு பள்ளியில் இசையாசிரியராக இருந்தவர். மரபு வழியாக இசையாசிரியர் குடும்பத்தில் வந்ததால் சு. கோபகுமார் அவர்களுக்கும் இயல்பிலேயே இசைத்திறன் மிகுதியாக இருந்தது

சு. கோபகுமார் அவர்கள் வாய்ப்பாட்டைத் தாயாரிடம் கற்றவர். மிருதங்கம் வாசிப்பதிற்கு வெங்கட்ராமன், சிசீ இராப்பா ஆகியோரிடம் தொடக்க காலத்தில் பயின்றவர். பின்னர்  கடனாடு வி. கே. கோபி, பாலக்காடு சிசு. கிருட்டினமூர்த்தி, பாரசாலா இரவி ஆகியோரிடம் சுவாதி திருநாள் இசைக்கல்லூரியில் முறையாக மிருதங்கம் பயின்றவர்.

சு. கோபகுமார்  அவர்கள் கானபூனம், கானப்பிரவீனா ஆகிய பட்டய வகுப்புகளில் ஏழு ஆண்டுகள் மிருதங்கம் பயின்றவர். இந்திய அரசின் உதவித்தொகையுடன் டாக்டர் டி. கே. மூர்த்தியிடம் இரண்டாண்டு குருகுலவாச முறையில் மிருதங்கம் பயின்றவர். அதன் பின்னர் திலக் மகாராட்டிரா பல்கலைக்கழகத்தில் முதுகலை மிருதங்கம் பயின்றவர். தமிழகத்தில் இருக்கும் தாள, இலய அறிஞர்களில் சு. கோபகுமார் குறிப்பிடத்தக்கவர். இவரின் தாள அறிவும், மிருதங்கம் எனப்படும் தண்ணுமையை வாசிக்கும் திறனும் கேட்போரை வியப்படையச் செய்யும். ஒருதுறையைத் தேர்ந்தெடுத்துக் கற்று, அதில் ஆராய்ச்சி செய்து, புதியனவற்றை உருவாக்கி, புதிய நுட்பங்களைக் கண்டுணர்ந்து வெளிப்படுத்தும் இசைவல்லுநர்கள்தான் உலகில் நிலைபெறமுடியும். அத்தகு முறையார்ந்த வழியில் வளர்ந்துள்ள சு.கோபகுமார் அவர்கள் தமிழகத்தின் தலைசிறந்த தண்ணுமைக்கலைஞர்களில் குறிப்பிடத்தக்கவர்.

சு. கோபகுமார் அவர்கள் புதுச்சேரி அரசின் பாரதியார் பல்கலைக்கூடத்தில் 30.09.1988 இல் மிருதங்க விரிவுரையாளராகப் பணியேற்றார். தற்பொழுது துணைப்பேராசிரியராகப் பணியாற்றிவரும் சு. கோபகுமார் அவர்கள் மிருதங்கம் சார்ந்த பல்வேறு ஆய்வுகளிலும், புதிய கண்டுபிடிப்புகளிலுமாக ஈடுபட்டு வருகின்றார்.

அறுமுகனம் இசைக்கருவியுடன் சு. கோபகுமார்(பழைய படம்)

இதுவரை ஐந்துமுக வாத்தியங்கள்தான் தமிழகத்தில் அறிமுகமாகி இருந்தது. இவர் ஐந்தரை ஆண்டுகள் ஆய்வு செய்து அறுமுகனம் என்ற கருவியை வடிவமைத்தார். இக்கருவி தண்ணுமை, மத்தளம் போன்றவற்றில் வேறுபட்டு, அதுபோன்ற தன்மையைக் கொண்ட தாள இசைக்கருவியாகும். கைகளால் தட்டி ஒலி எழுப்பும்படியாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது .இக்கருவி உயர வேறுபாடுகளாலும், இழுத்துக் கட்டப்பட்ட வார் அளவுகளாலும் வேறுபட்ட ஒலிகளை எழுப்பும் தன்மைகொண்டது. இதனை நாம் முழக்கும்பொழுது கூடுதல் ஆற்றல் செலவாகும். கையை உயர்த்தி இக்கருவியை இசைக்க வேண்டியிருக்கும்.

இந்தக் கருவி 2001 டிசம்பர் 28 இல் புதுவை முதலமைச்சர் மாண்புமிகு ந. அரங்கசாமி அவர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.  அன்றைய தினமே புதுவை அரசின் இசைக்கருவியாக இது அறிமுகம் செய்யப்பட்டது. புதுவையில் இதனை வாசிப்பதற்குப் பல மாணவர்களைச் சு. கோபகுமார் உருவாக்கியுள்ளார். அரசு விழாக்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும், அயல்நாட்டிலும் இக்கருவி வாசிக்கப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

சு. கோபகுமார்  அவர்கள் கண்பார்வையற்றவர்களும், வாய்பேசாதவர்களும், மன வளர்ச்சி குன்றியவர்களும் இதனை வாசிக்கும்படியாகப் பயிற்சியளித்துள்ளார். இசை என்பது மேட்டுக்குடி மக்களுக்கு மட்டும் என்று இருந்த நிலையை மாற்றி அனைத்துத் தரப்பு மக்களும் கற்க வேண்டும் என்ற உயரிய சிந்தனையுடன் பயிற்சியளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளார்.

இவரின் இசைப்பணியைப் பாராட்டிப் புதுவை அரசு 2004 இல் கலைமாமணி விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. தமிழகத்தின் புகழ்பெற்ற இசைக்கலைஞர்களுடன் இவர் இணைந்து வாசித்துள்ளார்.

ஹாங்காங்கு(1990), பிரான்சு(1990), மொரீசியசு, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், செர்மனி, இலண்டன், நியூகாலடேனியா(நிம்மியா) உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று இசையரங்குகளில் இசை முழக்கி வந்துள்ளார்.

சு. கோபகுமார்  அவர்கள் திருக்குறளில் ஐம்பது அதிகாரங்களுக்குத் தம் இசைப்புலமை வெளிப்பட இசையமைத்துள்ளார்.

மேடைகளில் குறிப்பிட்ட இசைக்கருவிகள் வாசிக்கப்படுவதே மரபாக உள்ளது. இதனை மாற்றி அனைத்துக் கருவியாளர்களையும் ஒன்றாக வைத்து இசையமைத்த பெருமைக்குரியவர்கீர்த்தனம்,  தில்லானா, புஷ்பாஞ்சலி, மல்லாரி, அலாரிப்பு,  ஆகியவற்றைத் தாமே எழுதியுள்ளார். பரதநாட்டியத்திற்கு உரிய வர்ணத்திற்கு உரிய தியை வடிவமைத்துத் தந்துள்ளார். புதிய தாளங்களையும் இவர் வடிவமைத்துள்ளார். நவமிருதங்கம்(மிருதங்கத் தரங்கம்) வாசித்துள்ளார்.

இவர் பரதநாட்டியத்துக்கு ஜதி சொல்லியபடியே மிருதங்கம் வாசிப்பதைத் தொடங்கிவைத்தவர். நகரா(தென்னக இசைக்கருவி) என்று சொல்லக்கூடிய இசைக்கருவியைத் திரு. முருகையன் அவர்களுக்குச் சொல்லித்தந்து, இன்று அக்கருவியின் இசை மேம்படுத்தப்பட்டுள்ளது.

மின்னணு இசைக்கருவிகளை விடுத்து, மனித உறுப்புகளால் வாசிக்கப்படும் கருவிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்கின்றார். மண்ணுக்கு ஏற்ற இசைக்கருவிகளுக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று சு. கோபகுமார்  அவர்கள் விரும்புகின்றார்.

புள்ளி, கோடு, தொடுஉணர்வு முறையில் பல்வேறு இசைக்கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார்அடையாளக் குறியீடுகளை (எளிய முறையில் தாள இசைக்கருவி கற்க) உருவாக்கியுள்ளார். மேலும் வரைபடத்தின் வழியாக இசைநுட்பங்களை மாணவர்களுக்குக் கற்பிக்கும் முறையையும் இவர் உருவாக்கியுள்ளார்.

   தமிழகம், புதுவை மாணவர்களேயன்றிப் பிரான்சு, செர்மனி, பெல்சியம் நாடுகளிலிருந்து மாணவர்கள் வந்து இவரிடம் இசைபயின்றுள்ளனர்.

பொதிகைதொலைக்காட்சியில் இவர்தம் இசைப்பணி குறித்த நான்கு மணிநேர (தொடர்)ஒளிபரப்பு நடைபெற்றுள்ளது. இவரை ஆதரிப்பது தமிழிசையை ஆதரிப்பதற்குச் சமம்.


குடந்தை ப.சுந்தரேசனார் பாடல்களுக்கு இசை அமைப்பது குறித்த கலந்துரையாடலில் சு. கோபகுமார், மு.இளங்கோவன்

முகவரி:
கலைமாமணி சு. கோபகுமார் அவர்கள்
எண் 98, ஆறாம் குறுக்கு,
தந்தை பெரியார் நகர்,
புதுச்சேரி- 605 005, இந்தியா

செல்பேசி: 0091 94433 76671

கலைமாமணி சுகோபகுமார் அவர்களின் இணையதளம் செல்ல இங்குச் சொடுக்குக.

குறிப்பு:
கலைக்களஞ்சியம் உருவாக்குவோர். நூல் எழுதுவோர், கட்டுரை வரைவோர் இக்கட்டுரைக்குறிப்புகளையும், படங்களையும் எடுத்தாள நேர்ந்தால் எடுத்த இடம் சுட்ட மகிழ்வேன்.

2 கருத்துகள்:

ko.punniavan சொன்னது…

நான் புதுச்சேரிக்கு 2005ல் ம.த.எழுத்தாளர் சங்கத்துடன் வந்தபோது அறுமுகனன் இசையைக் கேட்கும் அரிய வாய்ப்பைப் பெற்றேன். அவரே கண்டுபிடித்த இசைக்கருவி இது. ஆறு கைகள் வாசிக்க வேண்டியதை இருகைகளால் வாசித்துக்காட்டி அசத்தினார்.
கோ.புண்ணியவான். மலேசியா.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University சொன்னது…

மற்றுமொரு அறிஞரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. குடவாயில் பாலசுப்பிரமணியன் அவர்களுடைய குடமுழா நூலில் இதுபோன்ற வாத்தியங்களைப் பற்றிப் படித்த நினைவு. நன்றி.