நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 14 ஜூன், 2014

தஞ்சைச் செலவுநயப்பு…


மு.இளங்கோவன், பேராசிரியர் மா.இராமலிங்கம் (எழில்முதல்வன்) 

தஞ்சாவூர் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்தில் இருக்கும் பழைய தமிழ்ப்பொழில் ஏடுகளைப் பார்க்க வேண்டிய தேவை ஏற்பட்டது. பலவாண்டுகளுக்கு முன்பே கரந்தைத் தமிழ்ச்சங்கம் சென்றிருந்தாலும் இப்பொழுது செல்வதில் சிறப்பு இருந்தது. நண்பர் கரந்தை செயகுமார் அவர்கள் அங்குப் பணியில் இருப்பதால் அவரைச் சந்திக்கலாம் என்பதே சிறப்பிற்குக் காரணம். அவர் வழியாக நூலகத்தில் தேவைப்படும் உதவிகளை எளிதில் பெறலாம் என்று அவருக்குப் பேசி, என் வருகையை உறுதி செய்தேன்.

அறிவன் (புதன் 11. 06. 2014) கிழமை இரவு தொடர்வண்டியில் சென்று தஞ்சையில் இறங்கிய என்னை அழைத்துச் செல்வதற்கு மேலைப்பெருமழை திரு. சிவபுண்ணியம் அவர்கள் காத்திருந்தார். அவர்களின் இல்லம் சென்று நடுஇரவு வரை உரையாடினோம். சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலையில் எழுந்து, கடன் முடித்தேன்.

 முதற்பணியாகப் பழைய நண்பர் தஞ்சை திரு. கபாலீசுவரன் ஐயா அவர்களின் இல்லத்திற்கு முகவரி தேடிச் சென்று சேர்ந்தோம். முன்பே திட்டமிட்டபடி பூண்டிக் கல்லூரிப் பேராசிரியர் தமிழ் பாலாவும் எங்களுடன் வந்து இணைந்துகொண்டார். திரு. சிவபுண்ணியம் அவர்களுக்கு அப்பொழுது விடைகொடுத்தோம், அண்ணன் சிவபுண்ணியம் அவர்கள் தம் சேலம் செலவை எனக்காகச் சற்றுத் திருத்திக்கொண்டு காலத்தாழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார். இவர் மேலைப் பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனாருக்கு நூற்றாண்டு விழா நடத்தியவர்களுள் குறிப்பிடத்தக்கவர். மேலைப்பெருமழையில் நட்பாகக் கிடைத்த பெரியவர்களுள் அண்ணன் சிவப்புணியம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். கடும் உழைப்பாளி. எளிய நிலையிலிருந்து இன்று உயர்நிலைக்கு வந்துள்ளவர். கட்டடம் கட்டி, அதனை நேர்மையான விலையில் மக்களுக்கு வழங்கும் அறநெறித்தொண்டைச் செய்துவருபவர்.

திரு. கபாலீசுவரன் அவர்களின் இல்லத்தில் நுழைந்தபொழுது அவர்களின் துணைவியார் வரவேற்றார். திரு. கபாலீசுவரன் அவர்களின் தாயார் வாயிலில் அமைதியாக அமர்ந்திருந்தார். என்னை இருபதாண்டுகளுக்கு முன்னர் வரவழைத்துப் பார்த்து, அன்பு பாராட்டிய அந்தப் பாட்டி இப்பொழுது தொண்ணூறு அகவையில் என்னை அடையாளம் தெரியாமல் அமைதியாக இருந்தார்கள். ஓய்வில் ஒயர்கூடை பின்னுவது உள்ளிட்ட பொழுதுபோக்கு வேலைகளைச் செய்துவருவதாகத் திரு. கபாலீசுவரன்  துணைவியார் அவர்கள் சொன்னார்கள்.

என்னை இருபதாண்டுகளுக்குப் பிறகு திரு.கபாலீசுவரன் அவர்களின் துணைவியார் பார்ப்பதால் என்னை நினைவிருக்கின்றதா என்று கேட்டேன். என்னை நினைவுக்குக் கொண்டுவரத் தயங்கினார்கள். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் படித்த வரலாற்றைச் சொன்னதும் அம்மாவுக்குப் பழைய நினைவுகள் வந்தன. ஐயா எங்கே? என்று கேட்டேன். சுவரில் கண்ணாடியிட்டு மாட்டப்பெற்றிருந்த திரு. கபாலீசுவரன் அவர்களின் படத்தைக் காட்டி, கண்ணீர் விட்டார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக      திரு. கபாலீசுவரன் அவர்கள் நோய்வாய்ப்பட்டு, இயற்கை எய்திய செய்தியைச் சொல்லி அழுதார்கள். அவர்களுக்கு ஆறுதல் மொழிகளைப் பகர்ந்து நான் இனித் தஞ்சை வரும்பொழுது அனைவரையும் வந்து பார்ப்பதாகவும், ஆறுதல் பெறுங்கள் என்றும் சொல்லி சிறிது நேரம் உரையாடி, குடும்பநலம் வினவி விடைபெற்றுக்கொண்டோம் ( திரு.கபாலீசுவரன் அவர்கள் காவல்துறையில் ஆய்வாளராக இருந்தவர். நேர்மைக்குப் பெயர்பெற்றவர். அமைதி வழியினர். அறவழியினர். பல்வேறு காவல்துறை முற்றுகைகளில் பங்கேற்று முதலமைச்சரின் பாராட்டுகள். சிறப்புகளைப் பெற்றவர். நான் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் படித்தபொழுது அவர் என்னைச் சந்திக்க நேர்ந்த தனிக்கதையைப் பிறகு சொல்வேன்).

திரு. கபாலீசுவரன் ஐயா இல்லத்தில் நான் உரையாடிக் கொண்டிருந்தபொழுதே தம்பி பாலா என் பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்களிடம் உரையாடி, என் வருகையைச் சொல்லி சந்திக்க இசைவு பெற்றார். நீண்டநாள் இடைவெளிக்குப் பிறகு என் பேராசிரியரைச் சந்திக்கச் செல்ல உள்ளதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்தேன். கையுறையாகச் சில பழங்களை வாங்கிக்கொண்டு, பேராசிரியரின் தமிழ்க்குடிலுக்குச் சென்றோம். மாடியிலிருந்து இறங்கி வந்து, பேராசிரியர் அவர்கள் எங்களை எதிர்கொண்டு அழைத்துச் சென்றார்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர் பட்டம் படிக்கச் சென்றபொழுது விரும்பிச் சென்று இவரிடம் ஆய்வுமாணவனாக இணைந்துகொண்டேன்(1993). பாரதிதாசன் பரம்பரை என்ற தலைப்பில் ஆய்வுசெய்ய நெறிப்படுத்திய பெருமகனார் இவரே. விடுதலையாக ஆய்வு செய்ய எனக்கு வாய்ப்பு நல்கியவர். தமிழகத்தின் முன்னணிக்கவிஞர்களான உவமைக்கவிஞர் சுரதா, பாவலர் முடியரசன் உள்ளிட்டவர்களைச் சந்திக்கக் காரணமாக இருந்தவர். என் அறிவுலக வாழ்க்கை இவ்வாறு செழுநீரோட்டமாகச் செல்வதற்கு வழிகோலியவர் இவர்களே!

பேராசிரியர் மா. இராமலிங்கம் அவர்கள் எழில்முதல்வன் என்ற பெயரில் அனைவருக்கும் அறிமுகமானவர். தமிழ் நாவல் இலக்கியத்தில் குறிப்பிடத்தக்க ஆய்வுகள் செய்தவர். திறனாய்வு உலகில் கொடிகட்டிப் பறந்தவர்மொழிபெயர்ப்புப் பணிகளில் விருப்பமுடன் இப்பொழுதும் இயங்கி வருபவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து எம்போலும் மாணவர்களுக்கு ஆதரவு காட்டியவர் (இவர்களின் சிறப்புகளைத் தனித்து எழுதுவேன்).

பேராசிரியர் எழில்முதல்வன் அவர்கள் ஒரு தந்தையாரைப் போல் கனிவுடன் என் வாழ்க்கை குறித்தும், பணிகள் குறித்தும் வினவினார்கள். தம் துணைவியார் திருவாட்டி கமலா அவர்களிடம் என்னை அறிமுகம் செய்துவைத்தார்கள். அண்மைக்காலப் பணிகளை வினவினார்கள். இணையத்தில் ஈடுபாடு வந்தது எப்படி என்று ஆர்வமுடன் கேட்டார்கள். தம்மிடம் இருந்தபொழுது கணினி பற்றி உரையாடியதே இல்லையே என்று வியந்தார்கள். நானும் படிப்படியாக எனக்குக் கணினி அறிமுகம் ஆன வரலாற்றைக் கூறினேன்.

குடந்தை ப சுந்தரேசனார் ஆவணப்பட முயற்சி பற்றி சொன்னபொழுது மகிழ்ந்தார்கள் என்றாலும் ஒரு தந்தையாருக்கு உரிய கண்டிப்புடன் பணத்தால் நான் இடர்ப்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறினார்கள். நம் குடும்ப நிலைகள், குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி, எதிர்கால வாழ்க்கை இவற்றை நினைவூட்டிப் பரிவுடன் கூறிய சொற்களை மறைமொழிபோல் கவனமாகக் கேட்டுக்கொண்டேன். ஐயாவிடம் உரையாடி, நினைவுக்குச் சில படங்கள் எடுத்துக்கொள்ள இசைவு கேட்டேன். மகிழ்ச்சியுடன் இசைந்தார்கள். அவர்களிடம் விடைபெற்றோம்.

 இரு நகரப் பேருந்துகள் பிடித்துக் கரந்தைக்கு வந்து சேர்ந்தோம். எங்களுக்காக நல்லாசிரியர் கரந்தை செயகுமார் காத்திருந்தார். அன்பொழுக வரவேற்றார். பள்ளியாசிரியர்களிடம் எங்களை அறிமுகம் செய்தார்கள்.

கரந்தைத் தமிழ்ச்சங்கத்தின் நூலகத்திற்குச் சென்று முப்பதாண்டுகள் வெளியான தமிழ்ப்பொழில் ஏடுகளைக் கேட்டு அனைத்தையும் பார்த்துத் தேவையான குறிப்புகளைப் படமாக்கிக்கொண்டோம். இடையில் பகலுணவுக்கு நண்பர் செயகுமார் அழைத்தார். ஆசிரியர்கள் அறையில் அமர்ந்து ஆட்டுக் கறியில் அமைந்த புலவுச்சோற்றினை விரும்பி உண்டோம். குடற்கறி நன்றாக இருந்தது.

மீண்டும் படிப்பு. குறிப்பு எடுத்தல். பருந்துப் பார்வையாக நூலகத்தைப் பார்வையிட்டோம். அனைத்தும் நிறைநிலைக்கு வந்தது. அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டோம்.

 திருவையாறு அரசர் கல்லூரியில் குடந்தை ப. சுந்தரேசனார் அவர்கள் பணிசெய்துள்ளார் என்பதாலும் ஐயாறப்பர் கோயிலைப் .சு. அவர்கள் விரும்பி வழிபட்ட இடம் ஆதலாலும் அவ்வூருக்கு ஒரு நகர்(!) வண்டியில் புறப்பட்டோம். அங்குச் சென்று தேவையான படங்களை எடுத்துக்கொண்டோம். திருவையாற்றின் புகழ்பெற்ற அல்வாக் கடைக்குச் சென்று அங்கு அமர்ந்து அல்வா உண்டோம். பின்னர் அங்கிருந்து தஞ்சைக்குப் பேருந்தில் வந்துசேர்ந்தோம்.

பேராசிரியர் சண்முக செல்வகணபதி அவர்களின் இல்லத்திற்குப் பேராசிரியர் பாலா அழைத்துச் சென்றார். பேராசிரியர் அவர்கள் ஒரு சமயச் சொற்பொழிவுக்காக வெளியில் புறப்பட அணியமாக இருந்தார். எங்களுக்காக அரைமணிநேரம் ஒதுக்கினார். பேராசிரியர் செல்வகணபதி அவர்கள் குடந்தை ப. சுந்தரேசனார் பற்றிய நூல் எழுதியவர். இவர், தமிழிசை, நாட்டியம், கலை குறித்த பேரறிவு பெற்றவர். கலைக்குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் இயல்பாகக் கலைகுறித்துப் பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.

குடந்தை ப. சுந்தரேசனார் ஆசிரியர் பொறுப்பேற்று நடத்திய நித்திலம் இதழின் ஒரு படியை இவர் இல்லத்தில் பார்த்தேன். அதனைப் படமாக்கிக்கொண்டேன். ஐயாவிடம் விடைபெற்று, பேராசிரியர் மது. . விமலானந்தம் இல்லம் நோக்கித் தானியில் புறப்பட்டோம்.

பேராசிரியர் மது.. வி. அவர்களின் இடையர்தெரு இல்லம் தேடி அலைந்து, ஒருவழியாக இல்லத்தை அடையாளம் கண்டோம். பேராசிரியர் மது. வி. அவர்கள் உறவினர் இல்லம் சென்றிருப்பதாகத் தெரிந்துகொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினோம்.


தஞ்சைத் தொடர்வண்டி நிலையத்தில் என்னை விட்டுவிட்டு தம்பி பாலா பூண்டிக் கல்லூரி விடுதிக்குப் புறப்பட்டுச் சென்றார். நான் உழவன் தொடர்வண்டிக்குரிய சீட்டினைப் பெற்றுக்கொண்டு வண்டியில் அமர்ந்தேன். ஒர் உழவனைச் சுமந்துகொண்டு உழவன் விரைவாகச் சென்னையை நோக்கிப் புறப்பட்டான்

1 கருத்து:

Dr B Jambulingam சொன்னது…

தங்களது தஞ்சைப் பயணப் பதிவினைக் கண்டேன். அறிஞர்கள் மற்றும் நண்பர்களின் சந்திப்பின் பகிர்வு நிறைவாகஇருந்தது.இம்முறையும் தங்களைச் சந்திக்க முடியவில்லை. பிறிதொரு முறை சந்திப்போம்.