நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 29 நவம்பர், 2013

சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நிறுவியுள்ள தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை மூலம் வழங்கப்படும் கரிகாலன் விருதுகள் அறிவிப்பு



தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிங்கப்பூர் தமிழ்வள்ளல் முஸ்தபா அவர்கள் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையை நிறுவிப் பல்வேறு தமிழ்ப்பணிகளைச் செய்து வருகின்றார். சிங்கப்பூர், மலேசியத் தமிழ் எழுத்தாளர்களைத் தமிழுலகிற்கு அறிமுகம் செய்யும் நோக்கில்  அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழவேள் கோ. சாரங்கபாணி ஆய்விருக்கை மூலம் கரிகாலன் விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றது. 

இந்த ஆண்டுக்கான கரிகாலன் விருது வழங்கும் விழா 2013 திசம்பர் 14 இல் தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளர் ச. சுந்தராம்பாள் எழுதிய பொன்கூண்டு(சிறுகதைத் தொகுப்பு) நூலுக்கும், சிங்கப்பூர் எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் எழுதிய திரிந்தலையும் திணைகள்(புதினம்) நூலுக்கும் இந்த ஆண்டுக்கான கரிகாலன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில்  நடைபெறும் விழாவில் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நூலாசிரியர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.


விருது வழங்கும் விழாவில் சிங்கப்பூர், மலேசியாவிலிருந்து பேராளர்கள் பத்துப்பேர் கலந்துகொண்டு சிறப்புரை வழங்க உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும், சிங்கப்பூர் முஸ்தபா அறக்கட்டளையும் செய்துள்ளன.
எழுத்தாளர் ச.சுந்தராம்பாள்

எழுத்தாளர் ச.சுந்தராம்பாள் அவர்கள் மலேசியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். 02.02.1953 இல் பிறந்த இவரின் புனைபெயர் சுதா ஆகும். து, 14ம் அகவையில்  மாணவர்களுக்கான கதை, கட்டுரை, கவிதை என எழுதத் தொடங்கிய இவர், இதழ்களுக்கும், வானொலி நிகழ்ச்சிகளுக்கும் தொடர்ந்து எழுதிவருகிறார்.  தது 16-ஆவது அகவையில் சிரிப்பு ஒன்றே போதும்என்ற இவரது சிறுகதை தமிழ் நேசன்இதழில் வெளிவந்தது.  இவரின் தந்தை மா. சதாசிவம்,  இதழாளர் முருகு சுப்பிரமணியம், அப்துல் முத்தாலிப்,  எஸ்.எஸ்.சர்மா இவர்களின் ஊக்குவிப்பும், இலக்கிய வானில் ஒரு துருவ விண்மீனான இவரின் கணவர் எம். ஏ. இளஞ்செல்வன் அவர்களின் ஒத்துழைப்பும் அமைய எழுத்துத்துறையில் சுடர்விடத் தொடங்கினார்.

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இவருக்கு முருகு சுப்பிரமணியம்இலக்கிய விருது, தங்கப் பதக்கம் அளித்து சிறப்பித்தது.  35 ஆண்டுகளாக மலேசியாவின் தமிழ் இதழ் முகவராக இருந்தவர்.

இப்பொழுது தினக்குரல்நாளிதழின் இயக்குநர்களில் ஒருவராகவும், துணையாசிரியராகவும், ஞாயிறு, மங்கையர் குரல், மாணவர் குரல், பக்தி குரல், தொகுப்பாசிரியராகவும் விளங்குகின்றார்.

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர்

எழுத்தாளர் ஜெயந்தி சங்கர் அவர்கள் சிங்கப்பூரில் 1990 முதல் வாழ்ந்துவருகின்றார். சிங்கப்பூர்ப் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர். 1995 ஆம் ஆண்டிலிருந்து எழுதுகிறார். சிறுகதைகள், கட்டுரைகள், நெடுங்கதைகள், புதினங்கள், மொழிபெயர்ப்பு ஆகியதுறைகளில் அனைவரின் கவனத்தையும் பெற்றவர். இணைய இதழ்களில் எழுதி உலகத் தமிழ் மக்களிடம் நன்கு அறிமுகம் ஆனவர். பல்வேறு சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகின்றார். இவரைப் பற்றி மேலும் அறிய இங்குச் செல்க.

படங்கள் உதவி: மலேசிய எழுத்துலகம், விக்கிப்பீடியா

திருக்குறள் திலீபனின் கவனகக் கலை நிகழ்வு



திருக்குறள் திலீபன் மிகச் சிறந்த தமிழ்ப்பற்றுடைய குடும்பத்தில் பிறந்துவளர்ந்து, தமிழர்களிடம் இருந்த கவனகக் கலையைக் கற்று அதனை மற்றவர்களுக்கும் கற்பிக்கும் பெரு விருப்பம்கொண்ட தம்பி. அவரைப் பற்றி முன்பே என் பக்கத்தில் அறிமுகப்படுத்தி எழுதியுள்ளேன். தம்பியின் கவனகக் கலையின் நூறாம் நிகழ்வு சிவகங்கை மாவட்டக் கவனகக் கலை மன்றத்தாரால் 08.12.2013 ஞாயிறு காலை 9 மணி அளவில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடத்தப்பட உள்ளது.

உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்கள் திருக்குறள் திலீபனை ஏற்றுப் போற்றுவது தமிழுக்குச் செய்யும் உண்மைத்தொண்டாக இருக்கும். திரைப்படத்துறையினர், சின்னத்திரைக் கலைஞர்களை அழைத்து மகிழும் அயலகத் தமிழர்கள் அறிவார்வம்கொண்ட, திருக்குறள் திலீபன் போன்ற தமிழ்ப்பற்றாளர்களை அழைத்துத் தங்கள் குழந்தைகளுக்குக் கவனகக் கலையின் மேன்மையை அறிமுகம் செய்யலாம். தங்கள் குழந்தைகளையும் இக்கலையைப் பயில வாய்ப்பு உருவாக்கலாம்.

தொடர்புக்கு:

திருக்குறள் த. திலீபன்

அலைப்பேசி : 0091 75022 72075,     0091 94865 62716
மின்னஞ்சல்: thirukkuraldhileeban@gmail.com

வலைப்பதிவு : www.thirukkuraldhileeban.in

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை (02.03.1896 - 25.4.1961)

         

சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்


சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியமை நினைந்து அறிஞர் பெருமக்களும், அவர்தம் மாணவர்களும் இணைந்து வெள்ளிவிழா நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர். அதன் நினைவாக வெள்ளிவிழா மலர் ஒன்றும் வெளியிட்டுள்ளனர்(1961). அந்த மலரில் அரசியல் தலைவர்கள், கல்வியாளர்களின் வாழ்த்துரைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணிகளை நினைவூட்டும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த வெள்ளி விழா மலரில் ஏ. எல். முதலியார் (ஆ. இலட்சுமணசாமி) அவர்களின் வாழ்த்தும், செயலாளர் மாரப்ப பட்டு அவர்களின் முன்னுரையும், மா. இராசமாணிக்கனாரின் பதிப்புரையும், சி.இராசகோபாலச்சாரியாரின் வாழ்த்தும், துணைக் குடியரசுத்தலைவர் இராதாகிருட்டிணன் வாழ்த்து, சி.பி.இராமசாமி ஐயரின் வாழ்த்து, நடுவண் அமைச்சர் டாக்டர் பி.சுப்பராயன் வாழ்த்து, தமிழக முதலமைச்சர் கு.காமராசு அவர்களின் வாழ்த்து, கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வாழ்த்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எம். பக்தவச்சலம் வாழ்த்து, நீதித்துறை சார்ந்தவர்களின் வாழ்த்துரைகளும் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன. மேலும் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களிடம் பழகியவர்களும் படித்தவர்களும் எழுதியுள்ள நினைவுரைகள் அக்கால இலக்கியச் சூழலை நமக்கு எடுத்துரைக்கின்றன.

இந்த நூலில் 9 நினைவுரைகள், ஒரு வாழ்க்கைக்குறிப்பு, 25 ஆங்கில ஆய்வுக்கட்டுரைகள், 25 தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாக்க வேண்டிய அரிய அறிவுக்கருவூலமாக இந்த வெள்ளிவிழா மலர் உள்ளது.

இந்த நூலில் சேவியர் தனிநாயகம் அடிகளார், பேரா. சீனிவாசராகவன், டாக்டர் சங்கர் ராஜு நாயுடு, பேரா. சிறீகந்தையா, பேரா.சத்தியநாத ஐயர், திரு.சுர்நாதகுஞ்சன் பிள்ளை, பேரா .பி. எஸ். நாயுடு, டாக்டர் தேவசேனாபதி, திரு.வெங்கட்ராவு, பேரா. கமில் சுவலபில், எம்.ஆண்டரநோவு,  பேரா. அர்னோ லெக்மான், பேரா.திருஞானசம்பந்தம், யூசுப் கோகன், வ.ஐ.சுப்பிரமணியம், டாக்டர் எம். கத்ரே, எஸ்.கே.நாயர், டாக்டர் குஞ்சுண்ணி ராஜா,  மாரியப்ப பட்டு, மகாதேவ சாஸ்திரி, பேராசிரியர் மகாதேவன், திரு. சௌந்தரராஜன், பேரா.டி.வி.மகாலிங்கம், பேரா. யு.ஆர். பரோன் வேன் உள்ளிட்டோர் எழுதியுள்ள பல்துறைசார்ந்த ஆங்கில ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் தமிழாய்வு உலகில் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் ஆகும்.

தமிழில் தெ.பொ.மீ. (சங்கப் பாடலும் சிலப்பதிகாரமும்), கணபதி பிள்ளை, மு.வ, மயிலை சீனி. வேங்கடசாமியார் ( மதுரைக் காஞ்சியின் காலம்), மா,இராசமாணிக்கனார்(நன்னனது மலைநாடு), குடந்தை ப.சுந்தரேசனார் (பரிபாடற் பண்கள்) பேரா. இராமானுசாச்சாரியார், அ.சிதம்பரதாதன், துரை. அரங்கசாமி, பேராசிரியர் ஔவை. துரைசாமி பிள்ளை ( தமிழரசு நீதி வழங்கிய திறம்), புருஷோத்தம நாயுடு, முனைவர் மு.ஆரோக்கியசாமி, சி.எம். இராமச்சந்திரன் செட்டியார், டாக்டர் ந.சுப்பிரமணியன்,  பேராசிரியர் கோ.சுப்பிரமணிய பிள்ளை, பேராசிரியர் ஆறுமுக முதலியார், வேங்கடராஜலு ரெட்டியார் (ஏவல் வினையமைபு), மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, ஞா. தேவநேயன்( ககர சகரப் பரிமாற்றம்), மா.இளையபெருமாள், வ.சுப,மாணிக்கம், வானொலி சொற்பொழிவு அமைப்பாளர் சோமு ஆகியோரின் தமிழாய்வுக்கட்டுரைகள்  குறிப்பிடத்தக்க முன்னோடிக் கட்டுரைகளாக உள்ளன. பேராசிரியர் திருமதி ஏசுதாசன் அவர்களின்  படைப்பாக நெடுநல்வாடை NEDU –NAL- VADAI or THE DREARY – AND – GOOD- NORTHWIND என்ற தலைப்பில் ஆங்கில மொழிபெயர்ப்பும்  இடம் பெற்றுள்ளன.

பேரா. இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றுவதில் வல்லவர்களாக விளங்கி மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற பெருமைக்குரியவராக விளங்கியவர். திருநெல்வேலியில் சைவப்பற்றுடைய பெருமக்களிடையே தோன்றிக் கம்பனின் பெருங்காப்பியத்தில் பெரும் புலமைபெற்று விளங்கியவர். அறிஞர் அண்ணாவுடன் கம்பராமாயணத்தின் காப்பியச் சிறப்புகளை எடுத்துரைத்து உரையாற்றியவர். விபுலானந்த அடிகளார், பண்டிதமணியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் உள்ளிட்ட பெருமக்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர். இவர் சிலப்பதிகாரத்திலும் நல்ல புலமைபெற்றவர். தமிழ்ப்பேராசிரியர்களுள் தனித்துச் சுட்டத்தக்கவராக விளங்கிய இவரின் தமிழ் வாழ்க்கை தமிழர்களால் நினைவுகூரப்படவேண்டிய ஒன்றாகும்.

இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

இராசவல்லிபுரம் பிறவிப்பெருமாள் பிள்ளை - சொர்ணத்தம்மாள்  ஆகியோரின் மகனாக  1896 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2 ஆம் நாள் சேதுப்பிள்ளை அவர்கள் பிறந்தவர். நெல்லைத் தூய சேவியர் பள்ளி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பயின்றவர். பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பெருமைக்குரியவர். பணிபுரிந்தபடியே சென்னையில் சட்டம் பயின்றவர். நெல்லையில் நகரமன்றத் தலைவராக விளங்கியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மாணவர்களுக்கு இவர்தம் வகுப்பு இனிமைசேர்ப்பதாக இருக்கும். 1930 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு இரா.பி.சேதுப் பிள்ளை அவர்கள் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபடியே பல தொடர்ப்பொழிவுகளை நிகழ்த்தியவர். இவர் பேச்சுகள் நூல்வடிவில் வந்த சிறப்பிற்குரியன.

தொடர்ப்பொழிவுகளுள் சில:

·சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் மூன்றாண்டுகள் கம்பராமாயணச் சொற்பொழிவு.
· சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் மூன்றாண்டுகள் சிலப்பதிகார வகுப்பு.
·தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்கம்
· கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை

இவர்தம் பேச்சாற்றலைப் போற்றும்வகையில் 1950 ஆம் ஆண்டு தருமை ஆதீனம் "சொல்லின் செல்வர்" என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தது. 

இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ்க் கொடை:

·         தமிழ்நாட்டு நவமணிகள்(1926)
·         திருவள்ளுவர் நூல்நயம்(1926)
·         சிலப்பதிகார விளக்கம்(1926)
·         வீரமாநகர்(1932)
·         கால்டுவெல் ஐயர் சரிதம்(1936)
·         கந்தபுராணத் திரட்டு(1944)
·         வேலும் வில்லும்(1944)
·         தமிழ் விருந்து(1945)
·         கிறிஸ்துவத் தமிழ்த்தொண்டர்(1946)
·         தமிழகம் ஊரும் பேரும்( 1946)
·         திருக்காவலூர்க் கோயில்(1947)
·         தமிழ்வீரம்(1947)
·         தமிழின்பம்(1948)
·         கடற்கரையிலே(1950)
·         வழிவழி வள்ளுவர்(1953)
·         Words and their Significance(1953)
·         வேலின்வெற்றி(1954)
·         Thirukkural – Ellis Commentary(1955)
·         பாரதியார் இன்கவித்திரட்டு(1957) பதிப்புநூல்
·         செஞ்சொற் கவிக்கோவை(1957) பதிப்புநூல்
·         Dravidian Comparative Vocabulary, Vol 1, (1959)
·         தமிழகம் அலையும் கலையும்(1958)
·         தமிழ்க்கவிதைக் களஞ்சியம்(1960) பதிப்பு நூல்
·         ஆற்றங்கரையினிலே(1961)
·         Common Dravidian Proverbs(1961)

பேராசிரியர் இரா.பி.சேதுப்பிள்ளை 25.4.1961ல் தம் 65 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

சனி, 9 நவம்பர், 2013

வானம்பாடிக் கவிஞர் சேலம் தமிழ்நாடன் மறைவு


எழுத்தாளர் சேலம் தமிழ்நாடன்

சேலம் தமிழ்நாடன் அவர்கள் இன்று (09.11.2013) பிற்பகல் இரண்டு மணியளவில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

1941 ஆம் ஆண்டு சூலைத்திங்கள் ஒன்றாம் நாள் இருசாயி(எ) கமலபூபதி அம்மையாருக்கும் ஆறுமுகம் அவர்களுக்கும் மகனாகப் பிறந்தவர் சேலம் தமிழ்நாடன். இவரின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்பதாகும். தொடக்க,உயர்நிலைப் பள்ளி வகுப்புக் கல்வியைச் சேலத்தில் படித்தவர். 1959 இல் சேலம் கல்லூரியில் படித்தவர். 1962 இல் ஆசிரியர் பயிற்சி முடித்தவர்.17.09. 1964 இல் ஆசிரியர் பணியில் இணைந்தார். இக்காலகட்டங்களில் கவிதை எழுதத் தொடங்கியவர். இதே காலகட்டத்தில் தமிழர் தந்தை ஆதித்தனார் தொடர்பு ஏற்பட்டது. 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்ட மாணவர் தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. 1966 இல் எழுத்து சி.சு. செல்லப்பா அவர்களின் தொடர்பு ஏற்பட்டது.

1968 இல் கலைவாணி அவர்களை இல்வாழ்க்கைத் துணைவியாக ஏற்றவர். ஒரு மகனும்(மறைவு), ஒரு மகளும் மக்கட் செல்வங்களாக வாய்த்தனர்.

1972 இல் புதுக்கவிதைக்கான வானம்பாடிக் கவிஞராக அறிமுகம் ஆனார். 1985 இல் சேலத்துச் செம்மல் விருது பெற்றவர். 1995 இல் திருப்பூர்த் தமிழ்ச்சங்க விருது பெற்றவர். சாகித்திய அகாடமி விருது இவரின் ஒரிய கவிதை நூல் மொழி பெயர்ப்பிற்காகப் பெற்றவர். 

30.06.1999 இல் ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்.

தமிழ்நாடன் அவர்கள்  பெரியார் பல்கலைக்கழகத்தின் தமிழ் மொழி ஆய்வுப் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவர் ஓர் அறிஞர் – கலைஞர் – ஓவியர் – சிற்பக் கலைஞர் – தோல் சிற்பக் கலைஞர் – நாட்டார் சொல் கவிதை வழக்கு கலை இலக்கிய கர்த்தா – தமிழர் பண்பாட்டு நாகரிகத் தொன்மை விளக்கப் படைப்புகளை ஏராளமாக படைத்திருக்கிறார் - அல்லும் பகலும் ஆய்வுகளிலேயே நேரத்தை செலவிடுபவர் – சேலத்தின் தொன்மை சிறப்பை – அருங்காட்சியகத்தைவிட அதிகமான செய்திகளை நினைவில் நிறுத்தி பகிரக்கூடியவர்.

எழுபத்தியிரண்டாம் அகவையில் இயற்கை எய்திய சேலம் தமிழ்நாடன் அவர்கள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி எழுத்தாளராக, ஓவியராக, கவிஞராகப் பன்முகத் தன்மையுடன் தமிழுலகில் அறியப்பட்டவர்.

  • தொல்லியல் களப்பணியாளர், பன்னாட்டார் பட்டயம் எனும் செப்பேடு கண்டறிந்து பதிப்பித்தவர்.


  • கர்னல் ரீடு அறிக்கையை (கி.பி. 1800) முதன் முதலாக முழுவடிவத்தில் வெளியிட்டவர்.


  • -பாவேந்தரின்  குமரகுருபரர் (1944) நாடகத்தைக் கண்டுபிடித்து முதன் முறையாக அச்சேற்றியவர் (2000).


  • சேலத்தில் பரிதியார் உரையோடு திருக்குறள் சுவடி கண்டறிந்தவர்.


  • தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகத்தை முழுதாக மறு அச்சு செய்தவர். (1995). தஞ்சையில் நடைபெற்ற உலகத் தமிழ்மாநாட்டின் சிறப்பு வெளியீடாக வந்து தமிழ்மக்களின் மதிப்பினைப் பெற்ற நூல்.


  • கொங்கு மண்டலத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்திய கொங்கு ஆய்வகத்தின் பொதுச் செயலர் (1980).


  • கொங்கு ஆய்வகம் கல்லூரி மாணவர்க்கு நடத்திய முகாம்களில் பங்களித்த துறை வல்லுநர்.அதன் வெளியீடுகளின் தொகுப்பாளர், பதிப்பாளர். கொங்கு களஞ்சியம் பதிப்பாசிரியர் குழுவினர்.


-தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் விவேகானந்தா அறக் கட்டளைச் செயற்குழுவினர், அதன் பல்வேறு கருத்தரங்குகளின் முன்னவர்.

  • கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று மைய ஆய்வர்.
  • பழங்குடி மக்கள் ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர்
  • புலவர் இராசு ஆவர்களுடன் இணைந்து பல அகழ்வாய்வுகளில் ஈடுபட்டுவர்.
  • கொடுமணல் அகழ்வாய்வுப் பணியில் புலவர். செ.இராசுவுடன் இணைந்து பணியாற்றியவர்.
  • சேலத்துச் செம்மல் தமிழ்நாடன் நடுவண் அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.
  • தமிழ்நாடு அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றவர்
  • கவிஞர் சிற்பி அறக்கட்டளை இலக்கிய விருது பெற்றவர்


சேலம் தமிழ்நாடன் எழுதிய வரலாற்று நூல்கள்:

  • தமிழ்மொழியின் முதல் அச்சுப் புத்தகம் (1995, 97, 2010)
  • வள்ளல் கந்தசாமிக் கவுண்டர் *பரமத்தி வேலூர்) (1995)
  • பரமத்தி அப்பாவு (1800 இல் வெள்ளையரை எதிர்த்த வீரைன் வரலாறு)
  • சேலம் : கலையும் இலக்கியமும் (1995)
  • சேலம் திருமணி முத்தாறு (2006, 2010)
  • கொங்கு நாட்டில் கும்பினி ஆட்சி, புதுமலர், ஈரோடு (2009)
  • 2000 yeas of Salem (1976)
  • The Story of India Indra 1975
  • அன்புள்ளம் அருணாசலம் 2005
  • சேலம் மையப்புள்ளி 2010


தொகுத்த நூல்கள்

  • South Indian Studies (1981)
  • சேலம் மாவட்டம்: சில ஆய்வுகள், காவ்யா(1988)
  • தருமபுரி மாவட்டம்:புதிய ஆய்வுகள், விவேகானந்தா (1996)
  • தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள் (1996)
  • தாரமங்கலம் கெட்டி முதலி அரசர்கள் (1996)
  • கொங்குக் களஞ்சியம், மெய்யப்பன் ( 2008)

அண்மையப் படைப்பு – ”அல்குல்” – காவ்யா வெளியீடு கரிசல் கதைசொல்லி கி.ராவின் முன்னுரையோடு அமைந்த நூல். அருமையான வெளிப்பாடு இதன் பதிவுக்குச் சங்க இலக்கியம் மேலை நாட்டு மொழி அறிஞர்களின் மனப்பதிவுகள் - எடுத்துக்காட்டுகள் - இடுகுறிகள் என ஒரு சங்க இலக்கிய திறனாய்வுக் கண்ணோட்ட்த்துடன் எழுதி இருக்கிறார். 

வெள்ளி, 8 நவம்பர், 2013

பேராசிரியர் மருதமுத்து அவர்களின் திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் அறிமுகம்


பேராசிரியர் மருதமுத்து அவர்கள்

புதுச்சேரியில் அறிமுகமான அறிஞர்களுள் பேராசிரியர் மருதமுத்து அவர்கள் குறிப்பிடத்தக்க பெருமகனார் ஆவார். சந்திப்பின் முதல்நாள் என்பது பலவாண்டுகளுக்கு முன்னதாக இருந்தாலும் நாளும் அவர்களின் நினைவு எனக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். அறிவார்ந்த பேச்சு. பன்னூல் புலமை. மார்க்சியப் பேரறிவு. உலக வரலாறுகளையும் தத்துவங்களையும் ஊன்றிக் கற்ற அறிவுப் பின்புலம். அனைவரையும் அன்பொழுக வரவேற்று விருந்தோம்பும் பண்பு. எளிமை. சொல், செயல் இரண்டையும் ஒன்றாகக் கொண்ட வாழ்க்கை. இவை அனைத்தையும் ஐயா மருதமுத்து அவர்களிடம் கண்டு வியந்துள்ளேன். நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஓரிரு இலக்கிய நிகழ்வுகளுக்கு ஐயாவும் அம்மாவும் வந்த நினைவுகள் நெஞ்சில் தோன்றி மறைகின்றன.

துணைவியார் போர்க்கொடி அம்மா அவர்களுடன் பேராசிரியர் மருதமுத்து

பல மாத இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் செல்பேசியில் ஐயா அவர்கள் அழைத்துத் தம் வருகையைத் தெரிவித்தார்கள். காரைக்காலிலிருந்து சென்னை செல்லும் மகிழ்வுந்தில் வந்துகொண்டிருப்பதாகவும் இல்லம் வந்து காண விரும்புவதாகவும் குறிப்பிட்டார்கள். ஐயாவின் வருகைக்குக் காத்திருந்தேன். அம்மாவுடன் ஐயா அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேர்ந்தார்கள். கையில் திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் என்ற தம் நூலின் கூடுதல் படிகளை வைத்திருந்தார்கள். கூடுதல் படிகளை வழங்கி என்னைப் படித்துவிட்டுக் கருத்துரைக்கும்படி சொல்லிச் சில மணிப்பொழுதில் புறப்பட்டார்கள். இவை நடந்து ஆறு மாதம் இருக்கும்.

எனக்கு இருந்த அடுக்கடுக்கான பணி நெருக்கடிகளில் திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூலைப் படிக்க சரியான நேரம் அமையாமல் காலம் கடத்தினேன். கடந்த இரு கிழமைகளாக நேரம் ஒதுக்கித் திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் என்ற அரும்பெரும் நூலைப் படித்து முடித்தேன். இது கதைநூல் போன்றோ, மற்ற திருக்குறள் பொழிப்புரை நூல்களைப் போன்றோ இருந்திருந்தால் ஓரிரவில் படித்து முடித்திருப்பேன். அறிவாராய்ச்சி நூல் என்பதால் ஒவ்வொரு பக்கமாகக்  கவனமாகப் படிக்க வேண்டியிருந்தது.

திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் 172 பக்கங்களைக் கொண்ட நூல். பேராசிரியர் அவர்களின் வேறொரு நூலுக்குப் பழ.நெடுமாறன் அவர்கள் வழங்கிய அணிந்துரைப் பகுதி இந்த நூலின் அணிந்துரையாக அமைந்து அழகு சேர்க்கின்றது. பேராசிரியரின் மனைவி வாலண்டைன் என்ற போர்க்கொடிக்கு இந்த நூல் படையல் செய்யப்பட்டுள்ளது.

திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் முன்னுரை, அரசும் மானுட சமூகமும். மூத்த முதல் நாகரிகங்களின் அணியில் தமிழகம், முதற்பெரும் தமிழரசின் தன்மையும் தேக்கமும், வர்ண தத்துவத்தின் அறைகூவல், உலக வரலாற்றின் திருப்புமுனைக் காலம், ஆதிபகவனா, கீதையின் பகவனா?, திருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த்தேச அரசு, நிறைவுரை என்ற தலைப்புகளில் நூலின் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

திருக்குறள் நூலுக்கு விளக்கம் சொல்ல இதுபோன்று ஆழமான சிந்தனையில் ஒரு நூல்வெளிவரவில்லை என்று கூறும் அளவுக்கு நூலில் பல நிலைப்பட்ட செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. நூலின் முகப்பில் நமக்கு அறிமுகம் ஆன பலசொற்களுக்குச் சிறந்த பொருள்விளக்கம் தரப்பட்டுள்ளது. சமூகம், அரசு,  அரசு இயல், தேசம், இறையாண்மை என்ற சொற்களையும் அது உணர்த்தும் பொருள்களையும் பேராசிரியர் உலகியல் அறிவுநுட்பங்களுடன் எடுத்துக்காட்டிச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

புத்தர்பெருமானின் தலைசிறந்த போதனைகள் என்று உலக அறிஞர்கள் எடுத்துரைக்கும் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் ஆகியவற்றைத் திருவள்ளுவர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளதை நினைவூட்டிப் புத்தரின் அறவுரைகளைத் திருவள்ளுவர் சிறப்பாக உள்வாங்கித் திருக்குறளை உருவாக்கியுள்ளார் என்பதைச் சான்றுகளுடன் இந்த நூலில் நிறுவ முன்வந்துள்ளமை புலனாகின்றது. இதே நோக்கில் அயோத்திதாச பண்டிதர் அவர்கள் பலவாண்டுகளுக்கு முன்பே உள்ளுணர்வால் உணர்ந்து திருக்குறளுக்கு விளக்கம் தந்துள்ளதை நன்றியுடன் பேராசிரியர் நூலில் பதிவு செய்துள்ளார்.

உலக வரலாற்றில் அரசின் தோற்றம் குறித்து முதலில் உரைக்கும் பேராசிரியர் மருதமுத்து அவர்கள், உலகின் முதல் நாகரிகங்களான சுமேரியா உள்ளிட்ட மெசபடோமிய நாகரிகம், எகிப்து நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம் இவை யாவும் ஆற்றங்கரைகளில் அமைந்த நாகரிகங்கள் என்று விரிவாக விளக்கும் பேராசிரியர் அவர்கள் அந்த நாகரிகங்கள் ஒளிபெற்று விளங்கியபொழுது தமிழகத்தின் நிலை எவ்வாறு இருந்தது என்று வினாவை எழுப்பிக்கொண்டு தரும் விளக்கங்கள் யாவும் தமிழாய்வை மேம்படுத்தும் பகுதிகளாக விளங்குகின்றன.

உலகில் முதல் நாகரிகங்கள் தோன்றியபொழுது தமிழகத்தின் புவியியல் அமைப்பு, கடல்செலவு, கிரேக்க உரோமைத் தொடர்பு, சேர, சோழ, பாண்டிய நாட்டின் நிலை யாவும் தக்க சான்றுகளுடன் சிறப்புடன் நினைவுகூரப்பட்டுள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்கு வணிகப் பொருளாக இருந்ததன் தேவை, காரணங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பேராசிரியர் மருதமுத்து அவர்கள் தம் கருத்துகளை அரணிட்டு நிறுத்த இலக்கிய, இலக்கணத்திலிருந்து சான்றுகள் காட்டுவதுடன், புராண, இதிகாச செய்திகளையும் நினைவுப்படுத்துகின்றார். உலக இலக்கியங்களிலிருந்தும் கலைக்களஞ்சியங்களிலிருந்தும், செய்தி ஏடுகளிலிருந்தும் நடப்பியல் உண்மைச்சான்றுகளை எடுத்துரைக்கின்றார்.

உலக நாகரிங்களுடன் ஒப்பவைத்து எண்ணத்தக்க பெருமைகொண்டிருந்த தமிழர்களின் பின்னடைவைக் கண்டறியும் முகமாக முதற்பெரும் தமிழரசின் தன்மையும் தேக்கமும் என்ற தலைப்பில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

“தமிழ்நாட்டின் முதற்பெரும் நாகரிக அரசை ஆண்ட பாண்டியர், மொழிசார்ந்த, ஒன்றுபட்ட தமிழகத்தை உருவாக்கி ஒற்றை அரசை நிறுவி வளர்த்தெடுக்கத் தவறினர்” என்று தமிழர்களின் பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டு உரைக்கின்றார்( பக்கம் 51). வர்ண தத்துவ அரசியல் அறைகூவல் காரணமாகத் தமிழகத்தில் அரசர்கள், மக்கள் ஆகியோருக்கு இடையில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டன. சமூகப் பிரிவுகள், சாதிய அடுக்குகளாக மாறி இறுகத் தொடங்கின என்பதை நடுநிலையில் நின்று பேராசிரியர் எடுத்துரைக்கின்றார் (பக்கம் 71).

முதல் நாகரிக அரசுகள் வீழ்ச்சியுற்ற பிறகு, மீண்டும் புதிய அரசுகள் தோற்றம் பெற்றன. இக்காலகட்டத்தை வரலாற்று முக்கியத்துவம் கருதி திருப்புமுனைக் காலம்( Axis Age) என்று அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. இக்கால கட்டத்தில்தான் மானுட நாகரிக வரலாற்றின் சாரத்தை வடிவமைத்த கருத்தியல் படைப்பாளிகளான புத்தர், சாக்ரடீசு, கன்பூசியசு  முதலானவர்கள் தோன்றி உலகியல் வாழ்வுக்கு வழிகாட்டும் அரசியல் தத்துவங்களை வடித்துத் தந்தனர். அவர்களைப் போலவே பிளேட்டோ, திருவள்ளுவர் போன்றோர் தோன்றி மக்களின் நல்வாழ்வுக்கும் அரசாட்சிக்குமான நெறிமுறைகளை வகுத்துத்தந்தனர். பகவத் கீதையின் வர்ண அறைகூவலை ஏற்று அதனுடன் கருத்துக் கடும்போர் நடத்திய ஒரே நூல் தமிழ்வள்ளுவரின் திருக்குறள் ஒன்று மட்டுமே என்று பேராசிரியர் மருதமுத்து அவர்கள் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்(பக்கம். 81)

திருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த்தேச அரசு என்ற தலைப்பில் அமையும் கட்டுரை திருக்குறளின் உண்மைப்பொருள் காண விழையும் மிகப்பெரிய ஆய்வு எனில் மிகையன்று. திருக்குறளில் இயல் அமைப்பு, அதிகார அமைப்பு, குறள் உணர்த்தும் உண்மைப்பொருள் யாவும் இந்த இயலில் பேராசிரியரால் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. புத்தரின் கொள்கைகளும், சமணத்தின் கொள்கைகளும் எடுத்துக்காட்டப்பட்டு, புத்தரின் கொள்கைகளை உள்வாங்கிக்கொண்டு திருவள்ளுவர் திருக்குறளைப் படைத்துள்ளார் என்று பேராசிரியர் அவர்கள் சான்றுகளுடன் நிறுவுகின்றார்.

புத்த சங்கம் இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்க்கப்படுவது மரபாக உள்ளது. 1.மகாசங்கிக அமைப்பு(பெரும்பான்மையினர்), 2. ஈனயானிகள்(சிறிய மார்க்கம்). மகாசங்கிகக் கொள்கையைத்தான் அரசுக்கும், இல்லற வாழ்வுக்கும், குடிகளுக்கும் ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகத்துக்கும் அவசியமானது என்று கருதி, அதனையே திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலும், நீத்தார் பெருமையிலும் போதித்துள்ளார் ( பக்கம் 95) என்று பேராசிரியர் மருதமுத்து அவர்கள் முடிபு கூறுகின்றார்.

கடவுள் வாழ்த்தை அடுத்து வான்சிறப்பை வள்ளுவர் வைத்ததன் நுட்பத்தையும் நமக்குப் புத்த தத்துவப் பின்னணியில் விளக்குகின்றார். அரசு, நாடு, வணிகம், உழவு இவற்றின் முதன்மை உணர்ந்து திருவள்ளுவர் தம் திருக்குறளை இயற்றியுள்ளதை ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

பேராசிரியர் மருதமுத்து அவர்கள் பல்வேறு இலக்கியங்கள், கலைக்களஞ்சியங்கள், நூல்கள், மார்க்சிய நூல்கள், மெய்யியல் நூல்கள், பெரியாரிய, அம்பேத்காரிய நூல்கள், உலக வரலாற்று நூல்களின் துணைகொண்டு திருக்குறளுக்கு உண்மைவெளிச்சம் பாய்ச்சியுள்ளார். பேராசிரியர் மருதமுத்து அவர்களின் திருக்குறள் புலமை நூலின் பக்கங்கள்தோறும் மின்னி மிளிர்கின்றன. அறிவார்வம்கொண்டவர்கள் இந்த நூல் செய்திகளைத் துணையாகக் கொண்டு மேலாய்வு நிகழ்த்தலாம்.


நூல் விளக்கம்:
நூல்: திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல்
ஆசிரியர்: பேராசிரியர் மருதமுத்து அவர்கள்

முகவரி: 
போர்க்கொடி பதிப்பம்,
4 / 15, நம்மாழ்வார் தெரு,
N H1, மறைமலைநகர், காஞ்சிபுரம் மாவட்டம் - 603 209,
தமிழ்நாடு, இந்தியா

செல்பேசி: 0091 - 9489146270






சனி, 2 நவம்பர், 2013

பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவர்கள் (18.01.1924 – 01.08.2007)




பேராசிரியர் பாவலரேறு ச. பாலசுந்தரம் அவர்கள் (18.01.1924 – 01.08.2007)

திருப்பனந்தள் செந்தமிழ்க் கல்லூரியில் இளங்கலை மாணவனாகப் பயின்றபொழுது (1987-90) கரந்தைக்கோவை என்னும் பனுவலைப் பாடமாகப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. இந்த நூலை இயற்றியவர் பாவலரேறு ச. பாலசுந்தரம் ஐயா அவர்கள். அந்த நூலின் வழியாகக் கரந்தை (தஞ்சையைச் சார்ந்த ஊர்) என்னும் ஊரின் பெயரும் அங்கு வாழ்ந்த தமிழ்ச்சான்றோர்களின் தமிழ்ப்பணிகளும், கரந்தைக் கல்லூரியின் பெருமையும் அறியலுற்றேன்.

கரந்தைக்க்கோவை போலும் ஒரு கோவை அமைப்பிலான நூல் எழுத வேண்டும் என்ற எண்ணத்தை என் பிஞ்சு உள்ளத்தில் அந்த நூல் ஏற்படுத்தியது. யானோ பனசைக்குயில் கூவுகிறது என்ற தலைப்பில் சிறுநூல் ஒன்றை விடுமுறையில் எழுதிப்பார்த்தேன். கட்டளைக் கலித்துறையில்லமல் வேறுபல மரபுவடிவங்களில் எழுதிப் பார்த்தேன். அந்த நூலும் அச்சானது(1991). ஆனால் என் நூலில் இருக்கும் பிழைகளும், தவறுகளும் இப்பொழுது படிக்கும்பொழுது “எனக்கே நகைதருமாறு” உள்ளதை உணர்கின்றேன். இருப்பினும் மாணவப்பருவப் படைப்பாயிற்றே!. அந்த வழியில் நடந்திருந்தால் காப்பிய ஆசிரியனாக வளர்ந்திருப்பேன்.

பின்னாளில் கரந்தைக்கோவை ஆசிரியர் ச.பாலசுந்தரம் ஐயா அவர்களைப் பல்வேறு கருத்தரங்குகளில் சந்திக்கும் வாய்ப்பு என் வாழ்க்கையில் அமைந்தது. தொல்காப்பியப் பதிப்பு அருட்செல்வர் அவர்களின் முயற்சியால் வெளிவந்தபொழுது, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் பாவலரேறு ச.பாலசுந்தரம் ஐயா அவர்களை நானும் என் நெறியாளர் பேராசிரியர் முனைவர் க.இளமதி சானகிராமன்(புதுவைப் பல்கலை) அவர்களும் கண்டு உரையாடிப் பணிவிடை செய்தமை நினைவுக்கு வருகின்றது. முனைவர் இளமதி அவர்களின் தந்தையார் புலவர் கண்ணையன் ஐயா அவர்களும் பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்களும் ஒன்றாகப் படித்தவர்கள் என்று நினைக்கின்றேன். பேராசிரியர் இளமதி அவர்கள் அப்பா என்று பாலசுந்தரனாரை அன்புரிமையால் அழைத்தமை இன்றும் என் நினைவில் ஒலிக்கின்றது. ஐயா அவர்களும் தம் மகளிடம் பேசுவதுபோல்தான் உரிமையுடன் பேசினார்கள்(1995 அளவில்).

அதுபோல் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் நான் பணிபுரிந்தபொழுதும் சில கருத்தரங்குகளில் ஐயாவுக்குப் பணிவிடை செய்து அவர்களின் தமிழன்பைப் பெறும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்த்து.

இலக்கண இலக்கியங்களில் பேரீடுபாடுகொண்ட பாவலரேறு ச. பாலசுந்தரம் ஐயா அவர்கள் இருபதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த தமிழ் இலக்கண நூலாசிரியர். உரையாசிரியர், பதிப்பாசிரியர். மாணவர்களின் உளங்கொள்ளும் வகையில் பாடம் பயிற்றுவிக்கும் பேராசான். கற்சிலைகளை வடித்தெடுக்கும் மிகச்சிறந்த சிற்பி. கரந்தைக் கல்லூரியின் வரலாற்றில் ஐயாவின் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தகுந்த பெருமைக்குரியதாகும்.

ஐயாவின் வாழ்க்கை வரலாறான “நினைவலைகள்” நூலைப் பலவாண்டுகளுக்கு முன்பே கற்றேன் எனினும் என்னுடைய பல்வேறு பணிகளுக்கு இடையே அதனை இணையத்தில் பதிந்துவைக்கும் முயற்சி கைகூடாமல் இருந்தது. ஐயாவின் திருமகனார் பேராசிரியர் பா.மதிவாணன் அவர்களை அண்மையில் மாதக் கணக்கில் கண்டு உரையாடும் வாய்ப்பு அமைந்தது. அந்த நினைவு அடிப்படையில் ஐயாவின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.

பாவலரேறு ச. பாலசுந்தரம் ஐயா அவர்கள்18.01.1924 இல் பிறந்தவர். பெற்றோர் மு.சந்திரசேகரன் - விசயாம்பாள். சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகத் தமிழ் வித்துவான் (புலவர்) பட்டம் பெற்றவர்கள்.1950 முதல் 1982 வரை கரந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகவும், துணை முதல்வராகவும் பணியாற்றியவர். இயல், இசை, நாடகத் துறையிலும், இலக்கியம் படைத்தலிலும், கவிதை இயற்றல், சிற்பம் வடித்தலிலும் ஈடுபாடுகொண்டவர். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கணிப்பொறிவழி சங்க இலக்கிய அகராதி – சங்க இலக்கியச் சொல்லடைவுத் தொகுப்புப் பணியில் சிறப்பு உதவியாளராகப் பணியாற்றியவர்( 1987-91). சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர், பாரதியார் பல்கலைக்கழகங்களில் தேர்வாளராகவும் வினாத்தொகுப்பாளராகவும் பணியாற்றியவர்.

பேராசிரியர் ச.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பிய நூலின் மூன்று அதிகாரங்களுக்கும் அறிவியல் அடிப்படையில் ஆராய்ச்சிக் காண்டிகையுரை வரைந்த பெருமைக்குரியவர். இவர்தம் தொல்காப்பிய உரையினை அண்மையில் பெரியார் பல்கலைக்கழகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது.


பேராசிரியர் ச.பாலசுந்தரம் ஐயா அவர்களின் தமிழ்ப்பணியைப் பாராட்டி, பாவலரேறு (பனசை- பாவலர் மன்றம், திருப்பனந்தாள்), கவிஞர்கோ, தொல்காப்பியப் பேரறிஞர் (கரந்தைத் தமிழ்ச்சங்கம்), தொல்காப்பியப் பேரொளி, தொல்காப்பியச் சுடர், தொல்காப்பியச் செம்மல் (உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்), இலக்கணப் பேரொளி, செந்தமிழ்ச் செம்மல், குறள்நெறிச் செம்மல், தமிழ்ப்பேரவைச் செம்மல் (மதுரை காமராசர் பல்கலைக்கழகம்), பாரதிதாசன் விருது (தமிழக அரசு) செஞ்சொற் கவிவளவன், தொல்காப்பியர் விருது, மாமன்னர் இராசராசன் விருது, இலங்கைப் பேராசிரியர் செல்வநாயகம் நினைவு விருது உள்ளிட்ட பல விருதுகள் பல்வேறு நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளன.

பாவலரேறு ச. பாலசுந்தரம் ஐயா அவர்களின் தமிழ்க்கொடை:

1.   கரந்தைக் கோவை
2.   புலவருள்ளம்
3.   புரவலருள்ளம்
4.   ஆதிமந்தி
5.   மழலைத்தேன் - மூன்று பகுதிகள்
6.   யான் கண்ட அண்ணா
7.   கலைஞர் வாழ்க
8.   புதிய ராகங்கள்
9.   சிவமும் செந்தமிழும்
10. வேள் எவ்வி
11.  சங்க இலக்கியத் தனிச்சொல் தொகுப்பு நிரல்
12. செய்யுள் இலக்கணம்
13. தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகையுரை - ஐந்து பாகங்கள்
14. தென்னூல் – எழுத்து சொல் படலங்கள்
15. தென்னூல் - இலக்கியப் படலம்
16. எழுத்திலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி
17. சொல்லிலக்கணக் கலைச்சொற்பொருள் விளக்க அகராதி
18. யாப்பிலக்கணக் கலைச்சொற் பொருள் விளக்க அகராதி
19. அகப்பொருளிலக்கணக் கலைச்சொற் பொருள் அகராதி
20.  புறப்பொருளிலக்கணக் கலைச்சொற்பொருள்துறை அகராதி
21. மடைமாறிய தமிழ் இலக்கண நூல்கள்
22. மொழியாக்க நெறி மரபிலக்கணம்
23. மொட்டும் மலரும் மூன்று தொகுதிகள்
24. மொழி இலக்கண வரலாற்றுச் சிந்தனை
25. இரு பெருங்கவிஞர்கள்
26. அருட்புலவோரும் அரும்பெறல் கவிஞரும்
27. புகழ்பெற்ற தலைவர்கள்
28. தமிழிலக்கண நுண்மைகள்
29. நன்னூல் திறனாய்வுரை
30. செய்யுள் இலக்கணம்
31. இருபதாம் நூற்றாண்டிற்கான தமிழ் இலக்கணம்
32. திருக்குறள் தெளிவுரை





தஞ்சை சரசுவதி மகால் நூலகத்திற்கான சுவடிகளை ஆராய்ந்து பின்வரும் நூல்களைப் பதிப்பித்துள்ளார்.
1.    தனிப்பாடல் திரட்டு - இரண்டு பகுதிகள்
2.    திருப்பெருந்துறைப் புராணம்
3.   திருநல்லூர்ப் புராணம்
4.   நீதித்திரட்டு
5.   சீர்காழி அருணாசலக் கவிராயர் இராமநாடகக் கீர்த்தனை கம்பராமாயண ஒப்புப் பகுதிகளுடன் கூடிய ஆராய்ச்சிப் பதிப்பு

தமிழகத்தின் இலக்கிய ஏடுகளான தமிழ்ப்பொழில், செந்தமிழ், செந்தமிழ்ச்செல்வி, தெளிதமிழ் முதலியவற்றில் தரமான கட்டுரைகளை வழங்கியவர். பல்வேறு இலக்கிய அமைப்புகளில் சொற்பொழிவு, கவியரங்கம், பட்டிமன்றம் உள்ளிட்டவைகளில் கலந்துகொண்டு சொற்பெருக்காற்றிய பெருமைக்குரியவர்.

தமிழக அரசின் புதிய தமிழ் இலக்கணநூல் ஆக்கக் குழுவில் உறுப்பினராக விளங்கியவர்.

தமிழ் வாழ்வு வாழ்ந்த பேராசிரியர் பாவலரேறு ச.பாலசுந்தரம் அவர்கள் 01.08.2007 இல் தம் தமிழ்ப்பணியை நிறைவுசெய்தவராய், இயற்கை எய்தினார்.

குறிப்பு: இக்கட்டுரையை நறுக்கியும், வெட்டியும், ஒட்டியும் வேறு முன்னணித்(!) தளங்களில் கட்டுரையாகப் பதிய விரும்புவோர் எடுத்த இடத்தைச் சுட்டின் நன்று.