நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 8 நவம்பர், 2013

பேராசிரியர் மருதமுத்து அவர்களின் திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் அறிமுகம்


பேராசிரியர் மருதமுத்து அவர்கள்

புதுச்சேரியில் அறிமுகமான அறிஞர்களுள் பேராசிரியர் மருதமுத்து அவர்கள் குறிப்பிடத்தக்க பெருமகனார் ஆவார். சந்திப்பின் முதல்நாள் என்பது பலவாண்டுகளுக்கு முன்னதாக இருந்தாலும் நாளும் அவர்களின் நினைவு எனக்கு இருந்துகொண்டுதான் இருக்கும். அறிவார்ந்த பேச்சு. பன்னூல் புலமை. மார்க்சியப் பேரறிவு. உலக வரலாறுகளையும் தத்துவங்களையும் ஊன்றிக் கற்ற அறிவுப் பின்புலம். அனைவரையும் அன்பொழுக வரவேற்று விருந்தோம்பும் பண்பு. எளிமை. சொல், செயல் இரண்டையும் ஒன்றாகக் கொண்ட வாழ்க்கை. இவை அனைத்தையும் ஐயா மருதமுத்து அவர்களிடம் கண்டு வியந்துள்ளேன். நாங்கள் ஏற்பாடு செய்திருந்த ஓரிரு இலக்கிய நிகழ்வுகளுக்கு ஐயாவும் அம்மாவும் வந்த நினைவுகள் நெஞ்சில் தோன்றி மறைகின்றன.

துணைவியார் போர்க்கொடி அம்மா அவர்களுடன் பேராசிரியர் மருதமுத்து

பல மாத இடைவெளிக்குப் பிறகு ஒருநாள் செல்பேசியில் ஐயா அவர்கள் அழைத்துத் தம் வருகையைத் தெரிவித்தார்கள். காரைக்காலிலிருந்து சென்னை செல்லும் மகிழ்வுந்தில் வந்துகொண்டிருப்பதாகவும் இல்லம் வந்து காண விரும்புவதாகவும் குறிப்பிட்டார்கள். ஐயாவின் வருகைக்குக் காத்திருந்தேன். அம்மாவுடன் ஐயா அவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் வந்துசேர்ந்தார்கள். கையில் திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் என்ற தம் நூலின் கூடுதல் படிகளை வைத்திருந்தார்கள். கூடுதல் படிகளை வழங்கி என்னைப் படித்துவிட்டுக் கருத்துரைக்கும்படி சொல்லிச் சில மணிப்பொழுதில் புறப்பட்டார்கள். இவை நடந்து ஆறு மாதம் இருக்கும்.

எனக்கு இருந்த அடுக்கடுக்கான பணி நெருக்கடிகளில் திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூலைப் படிக்க சரியான நேரம் அமையாமல் காலம் கடத்தினேன். கடந்த இரு கிழமைகளாக நேரம் ஒதுக்கித் திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் என்ற அரும்பெரும் நூலைப் படித்து முடித்தேன். இது கதைநூல் போன்றோ, மற்ற திருக்குறள் பொழிப்புரை நூல்களைப் போன்றோ இருந்திருந்தால் ஓரிரவில் படித்து முடித்திருப்பேன். அறிவாராய்ச்சி நூல் என்பதால் ஒவ்வொரு பக்கமாகக்  கவனமாகப் படிக்க வேண்டியிருந்தது.

திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் 172 பக்கங்களைக் கொண்ட நூல். பேராசிரியர் அவர்களின் வேறொரு நூலுக்குப் பழ.நெடுமாறன் அவர்கள் வழங்கிய அணிந்துரைப் பகுதி இந்த நூலின் அணிந்துரையாக அமைந்து அழகு சேர்க்கின்றது. பேராசிரியரின் மனைவி வாலண்டைன் என்ற போர்க்கொடிக்கு இந்த நூல் படையல் செய்யப்பட்டுள்ளது.

திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல் முன்னுரை, அரசும் மானுட சமூகமும். மூத்த முதல் நாகரிகங்களின் அணியில் தமிழகம், முதற்பெரும் தமிழரசின் தன்மையும் தேக்கமும், வர்ண தத்துவத்தின் அறைகூவல், உலக வரலாற்றின் திருப்புமுனைக் காலம், ஆதிபகவனா, கீதையின் பகவனா?, திருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த்தேச அரசு, நிறைவுரை என்ற தலைப்புகளில் நூலின் செய்திகள் இடம்பெற்றுள்ளன.

திருக்குறள் நூலுக்கு விளக்கம் சொல்ல இதுபோன்று ஆழமான சிந்தனையில் ஒரு நூல்வெளிவரவில்லை என்று கூறும் அளவுக்கு நூலில் பல நிலைப்பட்ட செய்திகள் எடுத்துரைக்கப்பட்டு ஆராயப்பட்டுள்ளன. நூலின் முகப்பில் நமக்கு அறிமுகம் ஆன பலசொற்களுக்குச் சிறந்த பொருள்விளக்கம் தரப்பட்டுள்ளது. சமூகம், அரசு,  அரசு இயல், தேசம், இறையாண்மை என்ற சொற்களையும் அது உணர்த்தும் பொருள்களையும் பேராசிரியர் உலகியல் அறிவுநுட்பங்களுடன் எடுத்துக்காட்டிச் சிறப்பாக விளக்கியுள்ளார்.

புத்தர்பெருமானின் தலைசிறந்த போதனைகள் என்று உலக அறிஞர்கள் எடுத்துரைக்கும் நிலையாமை, துறவு, மெய்யுணர்தல், அவா அறுத்தல் ஆகியவற்றைத் திருவள்ளுவர் சிறப்பாக எடுத்துரைத்துள்ளதை நினைவூட்டிப் புத்தரின் அறவுரைகளைத் திருவள்ளுவர் சிறப்பாக உள்வாங்கித் திருக்குறளை உருவாக்கியுள்ளார் என்பதைச் சான்றுகளுடன் இந்த நூலில் நிறுவ முன்வந்துள்ளமை புலனாகின்றது. இதே நோக்கில் அயோத்திதாச பண்டிதர் அவர்கள் பலவாண்டுகளுக்கு முன்பே உள்ளுணர்வால் உணர்ந்து திருக்குறளுக்கு விளக்கம் தந்துள்ளதை நன்றியுடன் பேராசிரியர் நூலில் பதிவு செய்துள்ளார்.

உலக வரலாற்றில் அரசின் தோற்றம் குறித்து முதலில் உரைக்கும் பேராசிரியர் மருதமுத்து அவர்கள், உலகின் முதல் நாகரிகங்களான சுமேரியா உள்ளிட்ட மெசபடோமிய நாகரிகம், எகிப்து நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், சீன நாகரிகம் இவை யாவும் ஆற்றங்கரைகளில் அமைந்த நாகரிகங்கள் என்று விரிவாக விளக்கும் பேராசிரியர் அவர்கள் அந்த நாகரிகங்கள் ஒளிபெற்று விளங்கியபொழுது தமிழகத்தின் நிலை எவ்வாறு இருந்தது என்று வினாவை எழுப்பிக்கொண்டு தரும் விளக்கங்கள் யாவும் தமிழாய்வை மேம்படுத்தும் பகுதிகளாக விளங்குகின்றன.

உலகில் முதல் நாகரிகங்கள் தோன்றியபொழுது தமிழகத்தின் புவியியல் அமைப்பு, கடல்செலவு, கிரேக்க உரோமைத் தொடர்பு, சேர, சோழ, பாண்டிய நாட்டின் நிலை யாவும் தக்க சான்றுகளுடன் சிறப்புடன் நினைவுகூரப்பட்டுள்ளன.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சங்கு வணிகப் பொருளாக இருந்ததன் தேவை, காரணங்கள் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. பேராசிரியர் மருதமுத்து அவர்கள் தம் கருத்துகளை அரணிட்டு நிறுத்த இலக்கிய, இலக்கணத்திலிருந்து சான்றுகள் காட்டுவதுடன், புராண, இதிகாச செய்திகளையும் நினைவுப்படுத்துகின்றார். உலக இலக்கியங்களிலிருந்தும் கலைக்களஞ்சியங்களிலிருந்தும், செய்தி ஏடுகளிலிருந்தும் நடப்பியல் உண்மைச்சான்றுகளை எடுத்துரைக்கின்றார்.

உலக நாகரிங்களுடன் ஒப்பவைத்து எண்ணத்தக்க பெருமைகொண்டிருந்த தமிழர்களின் பின்னடைவைக் கண்டறியும் முகமாக முதற்பெரும் தமிழரசின் தன்மையும் தேக்கமும் என்ற தலைப்பில் விரிவாக ஆராய்ந்துள்ளார்.

“தமிழ்நாட்டின் முதற்பெரும் நாகரிக அரசை ஆண்ட பாண்டியர், மொழிசார்ந்த, ஒன்றுபட்ட தமிழகத்தை உருவாக்கி ஒற்றை அரசை நிறுவி வளர்த்தெடுக்கத் தவறினர்” என்று தமிழர்களின் பின்னடைவுக்கான காரணத்தைக் கண்டு உரைக்கின்றார்( பக்கம் 51). வர்ண தத்துவ அரசியல் அறைகூவல் காரணமாகத் தமிழகத்தில் அரசர்கள், மக்கள் ஆகியோருக்கு இடையில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டன. சமூகப் பிரிவுகள், சாதிய அடுக்குகளாக மாறி இறுகத் தொடங்கின என்பதை நடுநிலையில் நின்று பேராசிரியர் எடுத்துரைக்கின்றார் (பக்கம் 71).

முதல் நாகரிக அரசுகள் வீழ்ச்சியுற்ற பிறகு, மீண்டும் புதிய அரசுகள் தோற்றம் பெற்றன. இக்காலகட்டத்தை வரலாற்று முக்கியத்துவம் கருதி திருப்புமுனைக் காலம்( Axis Age) என்று அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. இக்கால கட்டத்தில்தான் மானுட நாகரிக வரலாற்றின் சாரத்தை வடிவமைத்த கருத்தியல் படைப்பாளிகளான புத்தர், சாக்ரடீசு, கன்பூசியசு  முதலானவர்கள் தோன்றி உலகியல் வாழ்வுக்கு வழிகாட்டும் அரசியல் தத்துவங்களை வடித்துத் தந்தனர். அவர்களைப் போலவே பிளேட்டோ, திருவள்ளுவர் போன்றோர் தோன்றி மக்களின் நல்வாழ்வுக்கும் அரசாட்சிக்குமான நெறிமுறைகளை வகுத்துத்தந்தனர். பகவத் கீதையின் வர்ண அறைகூவலை ஏற்று அதனுடன் கருத்துக் கடும்போர் நடத்திய ஒரே நூல் தமிழ்வள்ளுவரின் திருக்குறள் ஒன்று மட்டுமே என்று பேராசிரியர் மருதமுத்து அவர்கள் தம் நூலில் குறிப்பிட்டுள்ளார்(பக்கம். 81)

திருக்குறள் கட்டமைக்கும் தமிழ்த்தேச அரசு என்ற தலைப்பில் அமையும் கட்டுரை திருக்குறளின் உண்மைப்பொருள் காண விழையும் மிகப்பெரிய ஆய்வு எனில் மிகையன்று. திருக்குறளில் இயல் அமைப்பு, அதிகார அமைப்பு, குறள் உணர்த்தும் உண்மைப்பொருள் யாவும் இந்த இயலில் பேராசிரியரால் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளன. புத்தரின் கொள்கைகளும், சமணத்தின் கொள்கைகளும் எடுத்துக்காட்டப்பட்டு, புத்தரின் கொள்கைகளை உள்வாங்கிக்கொண்டு திருவள்ளுவர் திருக்குறளைப் படைத்துள்ளார் என்று பேராசிரியர் அவர்கள் சான்றுகளுடன் நிறுவுகின்றார்.

புத்த சங்கம் இரண்டு பிரிவாகப் பிரித்துப் பார்க்கப்படுவது மரபாக உள்ளது. 1.மகாசங்கிக அமைப்பு(பெரும்பான்மையினர்), 2. ஈனயானிகள்(சிறிய மார்க்கம்). மகாசங்கிகக் கொள்கையைத்தான் அரசுக்கும், இல்லற வாழ்வுக்கும், குடிகளுக்கும் ஒட்டுமொத்தத் தமிழ்ச்சமூகத்துக்கும் அவசியமானது என்று கருதி, அதனையே திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரத்திலும், நீத்தார் பெருமையிலும் போதித்துள்ளார் ( பக்கம் 95) என்று பேராசிரியர் மருதமுத்து அவர்கள் முடிபு கூறுகின்றார்.

கடவுள் வாழ்த்தை அடுத்து வான்சிறப்பை வள்ளுவர் வைத்ததன் நுட்பத்தையும் நமக்குப் புத்த தத்துவப் பின்னணியில் விளக்குகின்றார். அரசு, நாடு, வணிகம், உழவு இவற்றின் முதன்மை உணர்ந்து திருவள்ளுவர் தம் திருக்குறளை இயற்றியுள்ளதை ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

பேராசிரியர் மருதமுத்து அவர்கள் பல்வேறு இலக்கியங்கள், கலைக்களஞ்சியங்கள், நூல்கள், மார்க்சிய நூல்கள், மெய்யியல் நூல்கள், பெரியாரிய, அம்பேத்காரிய நூல்கள், உலக வரலாற்று நூல்களின் துணைகொண்டு திருக்குறளுக்கு உண்மைவெளிச்சம் பாய்ச்சியுள்ளார். பேராசிரியர் மருதமுத்து அவர்களின் திருக்குறள் புலமை நூலின் பக்கங்கள்தோறும் மின்னி மிளிர்கின்றன. அறிவார்வம்கொண்டவர்கள் இந்த நூல் செய்திகளைத் துணையாகக் கொண்டு மேலாய்வு நிகழ்த்தலாம்.


நூல் விளக்கம்:
நூல்: திருக்குறள் தமிழ்த்தேசிய அரசியல் நூல்
ஆசிரியர்: பேராசிரியர் மருதமுத்து அவர்கள்

முகவரி: 
போர்க்கொடி பதிப்பம்,
4 / 15, நம்மாழ்வார் தெரு,
N H1, மறைமலைநகர், காஞ்சிபுரம் மாவட்டம் - 603 209,
தமிழ்நாடு, இந்தியா

செல்பேசி: 0091 - 9489146270






1 கருத்து:

அ.பாண்டியன் சொன்னது…

நண்பருக்கு வணக்கம்.
நல்லதொரு புத்தகத்தைத் தரணிக்கு அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. புத்தகத்தின் அட்டைப்படம் சிறப்பாக உள்ளது. பேராசிரியர் மருதமுத்து அய்யா அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும் சென்றடையட்டும். பகிர்வுக்கு நன்றி.