நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 24 நவம்பர், 2013

சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை (02.03.1896 - 25.4.1961)

         

சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள்


சொல்லின் செல்வர் இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியமை நினைந்து அறிஞர் பெருமக்களும், அவர்தம் மாணவர்களும் இணைந்து வெள்ளிவிழா நிகழ்வொன்றை நடத்தியுள்ளனர். அதன் நினைவாக வெள்ளிவிழா மலர் ஒன்றும் வெளியிட்டுள்ளனர்(1961). அந்த மலரில் அரசியல் தலைவர்கள், கல்வியாளர்களின் வாழ்த்துரைகள், கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ்ப்பணிகளை நினைவூட்டும் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த வெள்ளி விழா மலரில் ஏ. எல். முதலியார் (ஆ. இலட்சுமணசாமி) அவர்களின் வாழ்த்தும், செயலாளர் மாரப்ப பட்டு அவர்களின் முன்னுரையும், மா. இராசமாணிக்கனாரின் பதிப்புரையும், சி.இராசகோபாலச்சாரியாரின் வாழ்த்தும், துணைக் குடியரசுத்தலைவர் இராதாகிருட்டிணன் வாழ்த்து, சி.பி.இராமசாமி ஐயரின் வாழ்த்து, நடுவண் அமைச்சர் டாக்டர் பி.சுப்பராயன் வாழ்த்து, தமிழக முதலமைச்சர் கு.காமராசு அவர்களின் வாழ்த்து, கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வாழ்த்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எம். பக்தவச்சலம் வாழ்த்து, நீதித்துறை சார்ந்தவர்களின் வாழ்த்துரைகளும் நூலுக்குப் பெருமை சேர்க்கின்றன. மேலும் இரா.பி. சேதுப்பிள்ளை அவர்களிடம் பழகியவர்களும் படித்தவர்களும் எழுதியுள்ள நினைவுரைகள் அக்கால இலக்கியச் சூழலை நமக்கு எடுத்துரைக்கின்றன.

இந்த நூலில் 9 நினைவுரைகள், ஒரு வாழ்க்கைக்குறிப்பு, 25 ஆங்கில ஆய்வுக்கட்டுரைகள், 25 தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாக்க வேண்டிய அரிய அறிவுக்கருவூலமாக இந்த வெள்ளிவிழா மலர் உள்ளது.

இந்த நூலில் சேவியர் தனிநாயகம் அடிகளார், பேரா. சீனிவாசராகவன், டாக்டர் சங்கர் ராஜு நாயுடு, பேரா. சிறீகந்தையா, பேரா.சத்தியநாத ஐயர், திரு.சுர்நாதகுஞ்சன் பிள்ளை, பேரா .பி. எஸ். நாயுடு, டாக்டர் தேவசேனாபதி, திரு.வெங்கட்ராவு, பேரா. கமில் சுவலபில், எம்.ஆண்டரநோவு,  பேரா. அர்னோ லெக்மான், பேரா.திருஞானசம்பந்தம், யூசுப் கோகன், வ.ஐ.சுப்பிரமணியம், டாக்டர் எம். கத்ரே, எஸ்.கே.நாயர், டாக்டர் குஞ்சுண்ணி ராஜா,  மாரியப்ப பட்டு, மகாதேவ சாஸ்திரி, பேராசிரியர் மகாதேவன், திரு. சௌந்தரராஜன், பேரா.டி.வி.மகாலிங்கம், பேரா. யு.ஆர். பரோன் வேன் உள்ளிட்டோர் எழுதியுள்ள பல்துறைசார்ந்த ஆங்கில ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவை யாவும் தமிழாய்வு உலகில் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டுரைகள் ஆகும்.

தமிழில் தெ.பொ.மீ. (சங்கப் பாடலும் சிலப்பதிகாரமும்), கணபதி பிள்ளை, மு.வ, மயிலை சீனி. வேங்கடசாமியார் ( மதுரைக் காஞ்சியின் காலம்), மா,இராசமாணிக்கனார்(நன்னனது மலைநாடு), குடந்தை ப.சுந்தரேசனார் (பரிபாடற் பண்கள்) பேரா. இராமானுசாச்சாரியார், அ.சிதம்பரதாதன், துரை. அரங்கசாமி, பேராசிரியர் ஔவை. துரைசாமி பிள்ளை ( தமிழரசு நீதி வழங்கிய திறம்), புருஷோத்தம நாயுடு, முனைவர் மு.ஆரோக்கியசாமி, சி.எம். இராமச்சந்திரன் செட்டியார், டாக்டர் ந.சுப்பிரமணியன்,  பேராசிரியர் கோ.சுப்பிரமணிய பிள்ளை, பேராசிரியர் ஆறுமுக முதலியார், வேங்கடராஜலு ரெட்டியார் (ஏவல் வினையமைபு), மகாவித்துவான் மே.வீ. வேணுகோபாலப் பிள்ளை, ஞா. தேவநேயன்( ககர சகரப் பரிமாற்றம்), மா.இளையபெருமாள், வ.சுப,மாணிக்கம், வானொலி சொற்பொழிவு அமைப்பாளர் சோமு ஆகியோரின் தமிழாய்வுக்கட்டுரைகள்  குறிப்பிடத்தக்க முன்னோடிக் கட்டுரைகளாக உள்ளன. பேராசிரியர் திருமதி ஏசுதாசன் அவர்களின்  படைப்பாக நெடுநல்வாடை NEDU –NAL- VADAI or THE DREARY – AND – GOOD- NORTHWIND என்ற தலைப்பில் ஆங்கில மொழிபெயர்ப்பும்  இடம் பெற்றுள்ளன.

பேரா. இரா. பி. சேதுப்பிள்ளை அவர்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் உரையாற்றுவதில் வல்லவர்களாக விளங்கி மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்களின் உள்ளத்தில் இடம்பெற்ற பெருமைக்குரியவராக விளங்கியவர். திருநெல்வேலியில் சைவப்பற்றுடைய பெருமக்களிடையே தோன்றிக் கம்பனின் பெருங்காப்பியத்தில் பெரும் புலமைபெற்று விளங்கியவர். அறிஞர் அண்ணாவுடன் கம்பராமாயணத்தின் காப்பியச் சிறப்புகளை எடுத்துரைத்து உரையாற்றியவர். விபுலானந்த அடிகளார், பண்டிதமணியார், நாவலர் சோமசுந்தரபாரதியார் உள்ளிட்ட பெருமக்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவர். இவர் சிலப்பதிகாரத்திலும் நல்ல புலமைபெற்றவர். தமிழ்ப்பேராசிரியர்களுள் தனித்துச் சுட்டத்தக்கவராக விளங்கிய இவரின் தமிழ் வாழ்க்கை தமிழர்களால் நினைவுகூரப்படவேண்டிய ஒன்றாகும்.

இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் வாழ்க்கைக்குறிப்பு

இராசவல்லிபுரம் பிறவிப்பெருமாள் பிள்ளை - சொர்ணத்தம்மாள்  ஆகியோரின் மகனாக  1896 ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 2 ஆம் நாள் சேதுப்பிள்ளை அவர்கள் பிறந்தவர். நெல்லைத் தூய சேவியர் பள்ளி, திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் பயின்றவர். பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய பெருமைக்குரியவர். பணிபுரிந்தபடியே சென்னையில் சட்டம் பயின்றவர். நெல்லையில் நகரமன்றத் தலைவராக விளங்கியவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர். மாணவர்களுக்கு இவர்தம் வகுப்பு இனிமைசேர்ப்பதாக இருக்கும். 1930 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை அவர்களின் பணி ஓய்வுக்குப் பிறகு இரா.பி.சேதுப் பிள்ளை அவர்கள் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபடியே பல தொடர்ப்பொழிவுகளை நிகழ்த்தியவர். இவர் பேச்சுகள் நூல்வடிவில் வந்த சிறப்பிற்குரியன.

தொடர்ப்பொழிவுகளுள் சில:

·சென்னை ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் மூன்றாண்டுகள் கம்பராமாயணச் சொற்பொழிவு.
· சென்னையிலுள்ள கோகலே மன்றத்தில் மூன்றாண்டுகள் சிலப்பதிகார வகுப்பு.
·தங்கச்சாலை தமிழ்மன்றத்தில் ஐந்தாண்டுகள் (வாரம் ஒருநாள்) திருக்குறள் விளக்கம்
· கந்தகோட்டத்து மண்டபத்தில் ஐந்தாண்டுகள் கந்தபுராண விரிவுரை

இவர்தம் பேச்சாற்றலைப் போற்றும்வகையில் 1950 ஆம் ஆண்டு தருமை ஆதீனம் "சொல்லின் செல்வர்" என்ற பட்டம் வழங்கி சிறப்பித்தது. 

இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் தமிழ்க் கொடை:

·         தமிழ்நாட்டு நவமணிகள்(1926)
·         திருவள்ளுவர் நூல்நயம்(1926)
·         சிலப்பதிகார விளக்கம்(1926)
·         வீரமாநகர்(1932)
·         கால்டுவெல் ஐயர் சரிதம்(1936)
·         கந்தபுராணத் திரட்டு(1944)
·         வேலும் வில்லும்(1944)
·         தமிழ் விருந்து(1945)
·         கிறிஸ்துவத் தமிழ்த்தொண்டர்(1946)
·         தமிழகம் ஊரும் பேரும்( 1946)
·         திருக்காவலூர்க் கோயில்(1947)
·         தமிழ்வீரம்(1947)
·         தமிழின்பம்(1948)
·         கடற்கரையிலே(1950)
·         வழிவழி வள்ளுவர்(1953)
·         Words and their Significance(1953)
·         வேலின்வெற்றி(1954)
·         Thirukkural – Ellis Commentary(1955)
·         பாரதியார் இன்கவித்திரட்டு(1957) பதிப்புநூல்
·         செஞ்சொற் கவிக்கோவை(1957) பதிப்புநூல்
·         Dravidian Comparative Vocabulary, Vol 1, (1959)
·         தமிழகம் அலையும் கலையும்(1958)
·         தமிழ்க்கவிதைக் களஞ்சியம்(1960) பதிப்பு நூல்
·         ஆற்றங்கரையினிலே(1961)
·         Common Dravidian Proverbs(1961)

பேராசிரியர் இரா.பி.சேதுப்பிள்ளை 25.4.1961ல் தம் 65 ஆம் அகவையில் இயற்கை எய்தினார்.

3 கருத்துகள்:

ஹ ர ணி சொன்னது…

அன்புள்ள இளங்கோவன்

வணக்கம். சொல்லின் செல்வர் பற்றிய மலர் குறித்த பதிவை வாசிததுவிட்டேன். இம்மலர் விலைக்குக் கிடைக்குமா எனில் அதுபற்றிய தகவலைத் தரவும். நான் வாங்கிக்கொள்கிறேன்.

தொடர்ந்து தாங்கள் இயங்கிவருவது தமிழுக்குப் பெருமையானது. உங்களின் தரமிகு இயக்கம் குறித்து அடிக்கடி என்னுடைய மாணவர்களுக்கும் இளைய ஆசிரியர்களுக்கும் எடுத்துக்காட்டாகக் கூறுவேன்.

எனது நேரமின்மையே பதிவுலகிற்கு அடிக்கடி வரவியலாமல் போகிறதே தவிர நான் விரும்பிப் பார்க்கும் வலைப்பக்கங்களுள் உங்களுடையதும் ஒன்று.

சந்திபோம்.

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

பேராசிரியர் அவர்களுக்கு வணக்கம். இந்த மலர் விலைக்குக் கிடைக்க வாய்ப்பில்லை. 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்துள்ளது. நூலகங்கள், பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கலாம். அதனால் இதனை மின்வருடிப் பாதுகாக்க நினைத்தேன். அதற்கு முன்பு இதனை அறிமுகம் செய்ய நினைத்தேன். விரிவாக எழுத நேரம் இல்லையாதலால் சுருக்கமாக உலகுக்குத் தெரிவித்தேன். விரித்து எழுதாமைக்குப் பொறுத்தாற்றுங்கள்.

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

தமிழுக்கு மாபெரும் தொண்டாற்றிய பேராசிரியர் இரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நினைவினைப் போற்றுவோம்