நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 3 மே, 2013

தோழர் க. முகிலன்
 க.முகிலன் அவர்கள்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுமாணவனாக நான் இருந்தபொழுது(1993 - 97) சிந்தனையாளன் ஏட்டைத் திரு. கருணாகரன் அவர்கள் எனக்கு மாதந்தோறும் வழங்குவார். அதில் இடம்பெறும் ஆழ்ந்த அறிவுடன் வரையப்படும் கட்டுரையை வரைந்தவர் யார் என்று பார்த்தால் க. முகிலன் என்று குறிக்கப்பட்டிருக்கும். நேரம் ஒதுக்கி அக்கட்டுரைகளை யான் படிப்பது உண்டு. காலங்கள் உருண்டோடின...

கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியில் யான் பணியாற்றியபொழுது(1999-2005) வகுப்பறையில் வருகைப் பதிவு எடுக்கும்பொழுது ஒவ்வொரு மாணவரின் பெயரையும் குறிப்பிட்டு, தமிழ்ப்பெயராக இருப்பின் பாராட்டுவேன். பிறமொழிப்பெயர் எனில் அதற்குத் தமிழ்ப் பொருள் கேட்பது என் வழக்கம்.

அவ்வகையில் என்னிடம் பயின்ற மாணவி ஒருவரின் பெயர் அனிச்சம் என்று இருந்தது. அவரின் பெயரைக் குறிப்பிட்டுப் பாராட்டினேன். தங்களுக்கு இந்தப் பெயர் சூட்டியவர் யார் என்றேன். உடனே அந்த மாணவி தம் தந்தையார்தான் இந்தப் பெயரைச் சூட்டினார்கள் எனவும், தம் தந்தையார் பெருஞ்சித்திரனார் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர் என்றும் குறிப்பிட்டார். ஒவ்வொரு வாரமும் தம் மகளை அழைத்துச் செல்ல அந்தத் தந்தையார் எம் கல்லூரிக்கு வருவதையும் அறிந்தேன். அடுத்த முறை வரும்பொழுது தங்கள் தந்தையாரை யான் பார்க்க விரும்புகின்றேன் என்று அந்த மாணவியிடம் சொன்னேன்.

அந்தக் கிழமை அனிச்சம் அவர்களின் தந்தையார் என்னைக் கண்டு உரையாடினார். அவர் பெயர் திருவாளர் கணேசன். பாலாபுரம் ஊரினர். இவ்வூர் சோழலிங்கபுரம் என்று முன்பு அழைக்கப்பெற்று இன்று சோளிங்கர் என்று திரிந்து வழங்கப்பெறும் ஊரை அடுத்து உள்ளது. அதன் பிறகு அனிச்சம் அவர்களின் தந்தையார் கல்லூரிக்கு வரும்பொழுதெல்லாம் என்னைக் கண்டு உரையாடுவார். ஒருமுறை அவரின் மூத்த மகளுக்குத் திருமணம் என்றும் நான் வந்து வாழ்த்துரை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நானும் சென்று அந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டதாக நினைவு. அதனை அடுத்தும் திரு.கணேசனார் அவர்களின் குடும்ப நிகழ்வுகளுக்குச் சென்று கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.

திரு. கணேசனார் அவர்கள் தனித்தமிழ் அன்பர். பாவாணர், பெருஞ்சித்திரனார் கொள்கைகளில் நிரம்பப் பற்றுக்கொண்டவர். தம் பிள்ளைகளுக்குத் தூய தமிழில் பெயர்சூட்டியப் பெருமகனார். அப்பிள்ளைகளின் பெயர்கள் வருமாறு:  அமுதுவல்லி, அனிச்சம், நெய்தலி, முத்துநகை, அதியமான். இப்பெயர்களே இவர் யார் என்பதை நமக்கு அடையாளம் காட்டும். நம் கணேசனார் அவர்கள் அந்தப் பகுதியில் தமிழ்ப்பணிகளில் முன்னிற்பவர். பள்ளியில் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர். அவர்தான் எனக்குத் திரு.க.முகிலன் ஐயாவை அறிமுகம் செய்தார். பிறகு தமிழேந்தி ஐயா அவர்கள் வழியாகவும் முகிலன் ஐயாவைப் பற்றி அறிந்தேன்.

ஆர்க்காட்டில் வாழ்ந்த திரு.மு. நடேசன் அவர்கள் வழியாக டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு குறித்த தனஞ்செய்கீர் அவர்களின் நூலினைக் க. முகிலன் அவர்கள் மொழிபெயர்த்ததை அறிந்து அந்த நூலினை வாங்கிக் கற்றேன். அம்பேத்கரின் வாழ்க்கையையும் அவர் ஆர்வமுடன் கல்வி கற்ற வரலாற்றையும் கற்று மகிழ்ந்தேன். நான் மாணவர்களுக்குக் கல்வி ஆர்வம்கொண்ட அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை உரிய நேரங்களில் நினைவுகூர்ந்து சொல்வதுண்டு.

அம்பேத்கரின் வாழ்கை வரலாற்றை மிகச்சிறப்பாக உள்வாங்கிக்கொண்டு இந்த நூல் க.முகிலனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தனஞ்செய்கீர் அவர்கள் காந்தி உள்ளிட்ட தேசத் தலைவர்களின் வரலாற்றை மிகச்சிறப்பாக எழுதிய பெருமகனார் ஆவார். அவர் எழுத்துவழி அம்பேத்கர் வாழ்க்கை நம் உள்ளத்தில் என்றும் நிலைபெறும் வகையில் க.முகிலன் அவர்கள் இந்த நூலைத் தந்துள்ளார்.

க.முகிலன் அவர்கள் பலவாண்டுகளாக வரைந்துள்ள கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பெற்றுத் தனித்தனி நூல்தொகுப்புகளாக வெளிவரவேண்டும் என்பது நம் விருப்பம். தோழர் க. முகிலன் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிந்து வைக்கின்றேன்.

க.முகிலன்

க.முகிலன் அவர்களின் இயற்பெயர்  அ.கிருட்டிணன் என்பதாகும். பெற்றோர் பெயர் திருவாளர்கள் பெரிய கண்ணப்பன் - இராமாஞ்சி ஆகும். இவர்தம் குடும்பப்பெயர் “அகத்தி” என்பதன் அடிப்படையில் அ.கிருட்டிணன் என்று அழைக்கப்பெற்றார். 19.08.1943 இல் பிறந்தவர். பிறந்த ஊர் சோளிங்கபுரம். இவ்வூரில்தான் இவர்தம் தொடக்க, உயர்நிலைக்கல்வி அமைந்தது. புகுமுக வகுப்பு வேலூர் ஊரிசு கல்லூரியில் அமைந்தது.  

முகிலன் அவர்கள் கோவை வேளாண்மைக் கல்லூரியில்1965 முதல் 1969 வரை இளம் அறிவியல் - வேளாண்மை பயின்று பட்டம் பெற்றவர். படித்து முடித்த உடன் 1969 இல் அரக்கோணத்தில் வேளாண்மை அலுவலராகப் பணியில் இணைந்தவர். 
முகிலன் அவர்கள் படிக்கும் காலத்திலேயே தமிழ்ப்பற்றுடையவராக விளங்கினார். இவரின் வகுப்புத்தோழர் பேராசிரியர் சோதிவாணன் ஆவார். பேரா. சோதிவாணன் அவர்களின் உடன்பிறப்புகள் இரா. கணேசன்  அவர்களும் "உதவும் உள்ளங்கள்" சந்திரசேகரனும் ஆவர். இரா. கணேசன் அவர்கள் கிண்டிப் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர். இவரும் மிகச்சிறந்த தமிழ்ப்பற்றாளர். இவர்களுடன் அமைந்த நட்பு தமிழின் பக்கம் க. முகிலன் அவர்களை இழுத்தது.

க.முகிலன் அவர்கள் மொழிஞாயிறு பாவாணர் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர் (1968). தனித்தமிழ் இயக்க ஈடுபாடும், உவமைக்கவிஞர் சுரதாவின் தொடர்பும் முகிலன் அவர்களுக்கு வாய்த்தது.

1973 இல் தந்தை பெரியார் அவர்கள் சென்னையில் ஒரு மாநாடு நடத்தினார். அதில் அறிஞர் வே. ஆனைமுத்து அவர்களின் உரையைக் கேட்டு மகிழ்ந்து, அறிஞர் வே. ஆனைமுத்துவின் தொடர்பு கிடைத்தது. வே. ஆனைமுத்து அவர்கள் 1974 இல் சிந்தனையாளன் ஏட்டைத் தொடங்கியபொழுது தொடர்பு வலிமையானது. 1988 முதல் சிந்தனையாளன் ஏட்டில் தொடர்ந்து நாட்டு நடப்புகளை மையமிட்ட கட்டுரைகளை முகிலன் வரைந்துவருகின்றார்.

1978 இல் வே. ஆனைமுத்து அவர்கள் அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டினைக் கூட்டினார். அப்பொழுது ஆனைமுத்து அவர்களுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்புகள் அமைந்தன.

தனஞ்செய் கீர் அவர்களால் 1954 இல் எழுதி வெளியிடப்பட்ட அம்பேத்காரின் வாழ்க்கை வரலாற்றை முகிலன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பை மூன்று மாதம் வே. ஆனைமுத்து அவர்களுடன் இணைந்து ஒப்பிட்டு மொழிநடை செப்பம் செய்யப்பட்டது. 1992 சூன் மாதம் அம்பேத்கர் நூல் வெளிவந்துள்ளது.

முகிலன் அவர்கள் தொடர்ந்து அறிவார்ந்த கட்டுரைகளைச் சிந்தனையாளன் ஏட்டில் எழுதிவருகின்றார். மார்க்சிய நோக்கிலும் பெரியாரிய நோக்கிலும் சிந்திக்கும் இப்பெருமகனார் தமிழியக்க மேடைகளில் தம் கருத்துகளைத் துணிந்து எடுத்துரைக்கும் சிந்தனையாளர். தமிழும் ஆங்கிலமும் அறிந்த இப்பெருமகனார் தொடர்ந்து தமிழர் மேம்பாட்டுப்பணிகளில் ஈடுபடவேண்டும் என்பது நம் எதிர்பார்ப்பாகும்.

1 கருத்து:

ppurush சொன்னது…

முனைவர் இளங்கோ அவர்களுக்கு நன்றி. ஒளிந்திருக்கும் பெரியோர்களை உலகுக்கு அறிமுகப் படுத்துகிறீர்கள்.
நன்றி.