நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

ஞாயிறு, 27 ஜனவரி, 2013

முனைவர் வையை கோ.வீரக்குமரன் அவர்களின் தமிழ்ப்பற்றுமுனைவர் கோ.வீரக்குமரன் அவர்கள்

என் வாழ்வில் பல்வேறு தமிழ்ப்பற்றாளர்களைச் சந்தித்துள்ளேன். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பெருமைக்குரியவர்கள். அவர்களை நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் இனி அறிமுகம் செய்வேன். அந்த வகையில் முனைவர் வையை கோ.வீரக்குமரன் அவர்களின் தமிழ் வாழ்க்கையையும் தமிழ் ஆர்வத்தையும் இங்குக் குறிப்பிட விரும்புகின்றேன்.

நான் திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்றுகொண்டிருந்தபொழுது அருகில் உள்ள குத்தாலம் என்ற ஊரில் ஒரு பிள்ளையார் கோயிலின் பட்டிமன்றத்திற்குச் சென்ற நினைவு வருகின்றது. அந்தக் கோயில் பட்டிமன்றத்தை ஒருங்கிணைத்தவர் எங்கள் பகுதியில் வாழ்ந்த புலவர் கலியபெருமாள் அவர்கள் ஆவார். புலவர் கலியபெருமாள் அவர்கள் சிலவாண்டுகளுக்கு முன்பு மாரடைப்பால் இயற்கை எய்தியதாக அறிந்தேன்.

குத்தாலம் பட்டிமன்றம் தமிழ்வழிக் கல்வி குறித்த பட்டிமன்றம் என்பதாக நினைவு. அங்கு ஒரு காவல்துறை அதிகாரிபோல் மிடுக்கான தோற்றத்துடன் ஒருவர் வந்திருந்தார்.அவர்தான் முனைவர் கோ.வீரக்குமரன். என்னுடைய தமிழார்வம் அறிந்து மகிழ்ந்து உரையாடினார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்வதாக உரைத்ததுடன் தூய தமிழில் உரையாடியமை எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவரின் முகவரி பெற்றுக்கொண்டேன். என் முகவரியும் கொடுத்தேன். இது நடந்தது சற்றொப்ப 1990 அளவில் இருக்கும்(சற்றொப்ப இருத்தியிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன). அதன்பிறகு மடல்வழித் தொடர்பு இருந்தது.

வையை கோ. வீரக்குமரன் அவர்களைச் சந்திக்கச் சிலவாண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று அவர் தங்கியிருந்த வீட்டுக்கும் போனேன். முனைவர் கோ.வீரக்குமரன் அவர்களுக்குத் திருமணம் நடந்திருந்த சூழல். அன்புடன் விருந்தோம்பினார். என்னை அவரின் உடன்பிறப்பு போல் நடத்தினார். அதிலிருந்து பேராசிரியர் கோ. வீரக்குமரன் அவர்களுடன் நல்ல மடல்வழித் தொடர்பில் இருந்தேன்.

திருச்சிராப்பள்ளியில் நான் முனைவர் பட்ட ஆய்வு செய்தபொழுது அவரின் உறவினர் திரு.மாயாண்டி அவர்கள் நடத்திய அச்சகம் ஒன்றில் அண்ணன் அவர்களைச் சந்தித்தேன். கோ.வீரக்குமரன் அவர்கள் அப்பொழுது கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இருந்தார். பலவாண்டுகளுக்குப் பிறகு எத்தியோப்பியா நாட்டில் பணியில் இருப்பதாகவும் திருச்சிராப்பள்ளிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்து ஒரு மடல் எழுதியிருந்தார். நான் அப்பொழுது கலவையில் பணியாற்றிக்கொண்டிருந்தேன்.

முனைவர் கோ.வீரக்குமரனைச் சந்திக்கத் திருச்சிராப்பள்ளிக்குச் சென்றேன். அவரும் அவர் நண்பர்களுமாகக் காவிரியின் கல்லணைக்கு ஓர் உலா சென்றோம். மீண்டும் இரவு அவர் இல்லம் சென்று உண்டு முடித்து வேலூர் போனதாக நினைவு.

நானும் பல ஊர்களில் படிப்பது, பணிபுரிவது என்று சுற்றிச் சுழன்றாலும் அண்ணனுடன் நல்ல தொடர்பில் இருந்தேன். காரணம் அவரிடம் இருந்த தமிழ்ப்பற்றும், மொழியாளுமையுமே காரணம். அவரை எப்படியாவது தமிழகப் பல்கலைக்கழகம் ஒன்றில் பணியாற்ற வைத்தால் தமிழ்நாட்டு மாணவர்களுக்குப் பெரும் பயன் கிடைக்கும் என்று ஒருமுறை திருச்சிராப்பள்ளியில் வெளிவந்த ஒரு விளம்பரத்தை அண்ணன் அவர்களின் பார்வைக்கு வைத்தேன். அவருக்கு உரிய விண்ணப்பத்தை அவர் சார்பில் நான் அனுப்பிவைத்தேன்.

நம் பல்கலைக்கழகங்கள் விண்ணப்பதாரரின் கல்விப் பின்புலம் பார்த்துப் பணிக்குத் தேர்ந்தெடுப்பது என்பது பல ஆண்டுகளுக்கு முன்பே நின்றுவிட்டதால் அந்தப் பணி வாய்ப்பு முனைவர் கோ. வீரக்குமரன் அவர்களுக்கு அமையாமல் போனது. அண்ணன் அவர்கள் எத்தியோப்பியாவில் தொடர்ந்து பணியாற்றி வந்தார்கள். தமிழகப் பணி அவருக்குக் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனதில் அவருக்கு எந்த இழப்பும் இல்லை. எத்தியோப்பியாவில் பணியாற்றினாலும் அவர்கள் பணியில் இருந்தது கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்தான். அங்கிருந்து விடுப்பில் சென்றுதான் எத்தியோப்பியாவில் பணியாற்றினார். அண்மைக் காலமாகத் தாய்நாட்டிற்குத் திரும்பிக் கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் கூட்டுறவு மற்றும் வங்கி மேலாண்மைக் கல்லூரியில் இணைப்பேராசிரியராகத் தொடர்ந்து பணிபுரிகின்றார்.

முனைவர் கோ.வீரக்குமரன் அவர்கள் மாணவர்களிடத்தும் உடன் பணியாற்றும் நண்பர்களிடத்தும் அன்புடன் பழகும் இயல்புடையவர். ஆசிரியர்களுக்கு எல்லாம் முன்மாதிரியான பேராசிரியர் ஆவார். வணிகவியல், வங்கியியல் குறித்த பேரறிவு பெற்றவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் நல்ல புலமையுடையவர். கேரளாவில் பணி என்பதால் மலையாளமும் அறிந்தவர். எந்தச் சூழலிலும் பிறசொல் கலவாமல் இயன்றவரை தூய தமிழில் உரையாடும் இயல்பினர்.

உலகின் எந்தப் பகுதியில் நடைபெறும் பன்னாட்டுக் கருத்தரங்கு, ஆய்வரங்கு எதுவாக இருந்தாலும் திருக்குறள், சங்க இலக்கியங்களிலிருந்து வங்கி, வணிகம் சார்ந்து மேற்கோள் காட்டிவிட்டுத்தான் தம் ஆய்வுரையைப் பேராசிரியர் அவர்கள் தொடங்குவார்கள். என் ஆய்வுப் பணிகளையும், கல்விப்பணிகளையும் தொடர்ந்து ஆர்வமுடன் கேட்டு வழிகாட்டும் பேராசிரியர் கோ.வீரக்குமரன் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைப்பேன்:

முனைவர் கோ. வீரக்குமரன் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம் மணற்பாறை அருகில் உள்ள வையம்பட்டி என்ற ஊரில் திருவாளர் கோவிந்தராசு, பாஞ்சாலி அம்மாள் ஆகியோரின் மகனாக 15. 05. 1963 இல் பிறந்தவர்.

கோ.வீரக்குமரன் அவர்கள் வையம்பட்டி  அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் தொடக்கக் கல்வியை முடித்தவர். காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை வகுப்புகளில் பயின்றவர். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.முனைவர் கோ.வீரக்குமரன் அவர்கள்(அலுவலகத்தில்)

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கரூர், உடையார்பாளையம், செயங்கொண்டம் பகுதிகளில் இயங்கிய ஆவின் பால் நிறுவனங்களில் பணிபுரிந்தவர். பின்னர் கலவை ஆதிபராசக்தி அறிவியல் கல்லூரியின் கணினித்துறையில் பேராசிரியராகச் சிலகாலம் பணியாற்றியவர். அதன்பிறகு கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 1994 இல் வங்கி, கூட்டுறவு மேலாண்மைத்துறையில் பேராசிரியர் பணியில் இணைந்தவர். அயல்பணி அடிப்படையில் எத்தியோப்பியா நாட்டில் 2002 முதல் 2008 வரை பேராசிரியராகப் பணியாற்றினார். தற்பொழுது கேரள வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணைப்பேராசிரியராகப் பணியாற்றி வருகின்றார். நினைக்கும்பொழுதெல்லாம் தமிழ்வடிவாக நினைவுக்கு வரும் பேராசிரியரின் தமிழ்ப்பற்றைப் போற்றி மதிக்கின்றேன்.

கருத்துகள் இல்லை: