நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 2 ஜனவரி, 2013

கேப்டன் நியூசு தொலைக்காட்சியில்... பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார் நினைவுகள்... நேரலையில்... நிகழ்ச்சி நாள்: 03.01.2013 நேரம்: பகல் 1மணி முதல் 1.30 வரை



பெருமழைப் புலவர் பொ.வே.சோமசுந்தரனார்

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டம் மேலைப் பெருமழையில் வாழ்ந்து வந்தவர் “பெருமழைப் புலவர்” பொ.வே. சோமசுந்தரனார் (05.09.1909 - 03.01.1972). இவர் 1909, செப்டம்பர் 5 இல் பொ.வேலுத்தேவர், சிவகாமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றவர்.  பண்டிதமணி கதிரேசன் செட்டியார் அவர்களின் அன்பிற்குரிய மாணவராக விளங்கி, அவரிடம் உரை வரையும் பேராற்றலைப் பெற்றார்.

குறுந்தொகை, பரிபாடல், நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, கலித்தொகை, பத்துப்பாட்டு நூல்கள், ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, கல்லாடம், திருக்கோவையார், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, உதயணகுமார காவியம், சூளாமணி(இராமசாமிப் புலவருடன் இணைந்து) பெருங்கதை, சீவக சிந்தாமணி, பட்டினத்தார் பாடல்கள், வளையாபதி, குண்டலகேசி, புறப்பொருள் வெண்பாமாலை உள்ளிட்ட 21 நூல்களுக்குப் பெருமழைப் புலவர் உரை வரைந்துள்ளார்.

பண்டிதமணி, பெருங்கதை மகளிர், மானனீகை(நாடகம்), செங்கோல்(நாடகம்), முதலிய படைப்பு நூல்களையும் எழுதியவர். 1952 இல் புயல் பற்றியும், 1966 இல் வறட்சி பற்றியும் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

தொடர்ந்து எழுத்துப்பணியில் ஈடுபட்டதால் வலக்கை எழுத மறுத்தது. மூச்சுத்திணறல் நோய் தாக்கியது. பின்னர் பக்க வாதம் கண்டு 1971 இல் புதுவை சிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, 14 நாட்களுக்குப் பிறகு 1972 சனவரி 3 ஆம் நாள் இயற்கை எய்தினார்.

பலவாண்டுகளாகப் புலவரின் உரையைத் துய்த்த தமிழகம் அவரை மறந்திருந்தது. 2009 இல் என் முயற்சியால் புலவர் புகழ் மீண்டும் தமிழுலகின் பார்வைக்கு நினைவுகூரப்பட்டது.

வறுமையில் வாடிய புலவரின் குடும்பத்திற்குத் தமிழ்நாட்டு அரசு பரிவுத்தொகையாகப் பத்து இலட்சம் வழங்கி ஆதரித்தது. ஊர் மக்களால் புலவர் ஊரில் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அமெரிக்காவில் பெட்னா விழாவில் புலவருக்கு நூற்றாண்டுவிழா கொண்டாடப்பட்டது. அமெரிக்க விழாவில் நினைவுக்கட்டுரை தாங்கிய மலரும் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் சென்னையிலிருந்து ஒளிபரப்பாகும் கேப்டன் நியூசு தொலைக்காட்சியில் புலவரின் நினைவுநாளான 2013 சனவரி 03 ஆம் நாள்- வியாழக்கிழமை பகல் 1 மணிமுதல் 1.30 மணி வரை புலவரின் புகழை நினைவுகூரும் சிந்தனைக் களம் நிகழ்ச்சி ஒளிபர்ராபக உள்ளது. இந்த நிகழ்ச்சி இரவு 10.30 முதல் 11 மணிவரை மறுஒளிபரப்பாகும். உலகெங்கும் இருந்து இணையதளத்திலும் நேரலையாகக் காணலாம்.

இணையதள முகவரி:  http://captainnews.net/

 நேரலை நிகழ்ச்சிக்கு அழைக்கப்பெற்றுள்ளேன். நண்பர்கள், தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியைப் பார்த்து, தங்கள் கருத்துகளைத் தெரிவித்து என் முயற்சியை ஊக்கப்படுத்தலாம்.

வாழ்க பெருமழைப்புலவரின்  புகழ்!

புலவர் பற்றி மேலும் அறிய...

கருத்துகள் இல்லை: