நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 26 டிசம்பர், 2012

குவைத் உலா… 1




 குவைத் நாட்டுக் கடற்கரையில் மு.இளங்கோவன்

குவைத் நாட்டுக்கு வந்து தமிழுரை வழங்கும்படி நண்பர் தமிழ்நாடன் அவர்கள் சில ஆண்டுகளுக்கு முன்பே விருப்பம் தெரிவித்திருந்தார். நண்பர் தமிழ்நாடன் அவர்கள் குவைத்தில் வாழும் பொறியாளர். குணவாசல் ஊரினர். மற்றவர்களுக்கு உதவும் இயல்பும், தமிழ்ப்பற்றும், கடும் உழைப்பும் கொண்டவர். மற்றவர்களை இணைத்துத் தமிழ்ப் பணியாற்றுவதில் அனைவராலும் போற்றப்படுபவர். இணையம் வழியாகவே எங்கள் தொடர்பு அமைந்தது.

எங்களுக்குள் நட்பு கனிந்து, ஓரிரு சந்திப்பும் தமிழகத்தில் அமைந்தது. என் நூல் எழுதும் முயற்சியைப் பலவகையில் ஊக்கப்படுத்தியவர். ஒருமுறை திருக்குறள் நூல் வழங்கும் நிகழ்வைக் கடலூரில் நிகழ்த்தி முடித்தோம். அந்த நிகழ்வுக்காகப் பொறியாளர் சேதுமாதவன் அவர்கள் குவைத்திலிருந்து வந்திருந்தார். அப்பொழுது இணைந்து பணிபுரிந்தோம். அதன் தொடர்ச்சியாகத் தமிழர் பண்பாட்டு விழா குவைத்தில் நடைபெறுவதாகவும் தமிழக நாட்டுப்புறப் பாடல்கள் குறித்து உரையாற்ற வரும்படியும் பொங்குதமிழ் மன்றம், தமிழ்நாடு பொறியாளர் குழுமம் சார்பில் அழைப்பு விடுத்திருந்தனர்.

குவைத் நாடு பற்றி நண்பர்கள் வழியாக முன்பு அறிந்திருந்தேன். பாலைநிலம் எனவும், கன்னெய்(பெட்ரோல்) வளம் கொண்டதாகவும், தமிழர்கள் பல நிலைகளில் பணிபுரிவதாகவும் அறிந்திருந்தேன். தமிழமைப்புகள் பல உள்ளன எனவும் அவரவர்களும் தங்களுக்கு வாய்ப்பான நிலைகளில் தமிழ்ப்பணிகளைச் செய்கின்றனர் எனவும் அறிந்திருந்தேன். குவைத் செலவு(பயணம்) உறுதியானதும், வானூர்தி புறப்பாடு பற்றியும், அந்நாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிந்துகொண்டு புறப்பட்டேன். திட்டமிட்டபடி என் செலவு சிறப்பாக இருந்தது. இரண்டுநாள் தமிழர் பண்பாட்டுக் கண்காட்சியும் சிறப்பாக இருந்தது. இவை பற்றி முன்பும் பதிந்துள்ளேன். இரு நாள் நிகழ்வுகளும் முடிந்த பிறகு இரண்டுநாள் எனக்கு வானூர்திக்குக் காத்திருக்க வேண்டியநிலை இருந்தது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் குவைத் நகரத்தைச் சுற்றிப்பார்க்க நண்பர்கள் ஏற்பாடு செய்தனர்.

17.12.2012 காலை பொறியாளர் திரு.இராமன் அவர்களின் ஏற்பாட்டில் ஒரு மகிழ்வுந்து நான் தங்கியிருந்த இல்லத்திற்கு வந்தது. ஓட்டுநர் பெயர் திரு. ரெட்டி. சற்று நேரத்தில் தம்பி பிலவேந்திரன் அவர்களும் வழித்துணைக்கு வந்தார். வீட்டிலிருந்து புறப்பட்டு, காலையுணவுக்குச் சரவணபவன் உணவகம் சென்றோம். சிற்றுண்டியை முடித்துக்கொண்டு காலை 10 மணியளவில் மகிழ்வுந்து புறப்பட்டு, குவைத் நகரத்தின் தூய சாலையில் விரைந்து சென்றது. சாலையின் வனப்பையும், நெடுமையையும் கண்டு வியந்தேன். போக்கு வரவு விதிமுறைகளை அனைவரும் கடைப்பிடித்து வண்டியை இயக்குகின்றனர். எங்கும் மகிழ்வுந்துகள்தான் சீறிச்செல்கின்றன. நம்மூர் போல இருசக்கர சாகசக்காரர்களைக் காணமுடியவில்லை(ஓரிரு குவைத்திய இளைஞர்கள் கப்பல் போன்ற இரு சக்கர வாகனங்களை அலற விட்டு ஓட்டுவதை நகரப் பகுதிகளில் பார்த்தேன். அவர்கள் அந்நாட்டு மண்ணின் மைந்தர்கள் என்ற மமதையில் செல்வதைக் கூர்ந்து உணர்ந்தேன்). அதுபோல் மிதிவண்டிகளும் அங்குக் கண்ணில் தென்படவில்லை.

குவைத் நகரத்திற்கு முன்பாக உள்ள சால்மியா கடற்கரையை நாங்கள் சுற்றிப் பார்க்க வண்டியை நிறுத்தினோம். அங்கு இருந்த பழைய கப்பல் காட்சியைக் கண்டு வியந்தேன். அதனைப் பார்த்தபொழுது கடலாய்வாளர் ஒரிசா பாலுதான் நினைவுக்கு வந்தார். கடற்கரையில் எங்களைப் போல் சுற்றுலாக்காரர்கள் மிகுதியாக வந்திருந்தனர். தம்பி பிலவேந்திரன் பல கோணங்களில் படம் எடுத்தார். ஓட்டுநர் ரெட்டி அவர்களும் சில படங்களை எடுத்து உதவினார். அடுத்துக் குவைத் அறிவியல் நடுவத்திற்குள்(The Scientific Center, Kuwait) சென்று அங்கிருந்த வானியல் காட்சிப்பொருள்களைக் கண்டோம். பிறகு குவைத் மீன்காட்சியகத்தையும் கண்டோம்(Kuwait Aquarium).

மீன் காட்சியகம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சார்ள்சுடன் மீன் காட்சியகம், சிங்கப்பூர் மீன் காட்சியகம் முன்பே கண்டவன் ஆதலின் அவ்விரு காட்சியகங்களிலிருந்து இது வேறுபட்டு இருந்தது. அழகிய மீன் இனங்கள் பலவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. மீன்நிறைந்த நீர்நிலைகளை உரிய உடையணிந்து தூய்மை செய்யும் பணியாளர்களின் செயல் பாராட்டிற்குரிய ஒன்றாகும். பாலைவன உயிரிகளும் இடையில் சிறப்பாகக் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. சுறா மீன்கள், திமிங்கிலம், எல்லாம் அழகுக்கு அழகு சேர்த்தன. குவைத்தியர்கள் மீன்படி தொழிலில் முன்பு சிறந்து விளங்கியவர்கள் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். சிறுவர்கள், மாணவர்களுடன் பலர் காட்சியகத்தைப் பார்வையிட வந்திருந்தனர். பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டு மகிழ்ந்ததைக் கண்டேன். சற்றொப்ப இரண்டு மணி நேரம் இனிமையான அந்தக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்தேன்.

அடுத்த நாங்கள் அங்குள்ள மெரினா கடற்கரைக்குச் சென்றோம். கப்பல் வடிவில் இருந்த உணவகத்தில் பலர் உண்டு திரும்பினர். கடற்கரை எழிலுடன் காட்சி தருகின்றது. எங்கும் தூய்மைதான். நம் திருச்செந்தூர் கடற்கரைபோல் அங்குக் கழிவுகளைக் காணமுடியவில்லை. அனைவரும் பொறுப்புடன் நடந்துகொள்கின்றனர். அங்கிருந்து பார்க்கும்பொழுது குவைத் நகரக் கட்டடங்கள் வனப்போடு காட்சி தருகின்றன. கடற்கரையில் காலார நடந்தோம். சற்று அமர்ந்து பேசினோம்.

எங்கள் நண்பர் திரு.கருணாகரன்(புதுச்சேரி ஊரினர்) அவர்கள் பகலுணவுக்கு அழைத்திருந்தார். அவர் எங்களுக்காகக் காத்திருப்பதை அறிந்தோம். எனவே எங்கள் வண்டி குவைத் நகரத்தின் புகழ்பெற்ற உணவகமான மொகல் மகால்(Mughal Mahal) நோக்கிப் பறந்தது.



கப்பல் ( மாதிரிகள்)


வண்ண விளக்குகளில் ஒளிரும் மீன்கள்


மீன்காட்சியகம்(குவைத்)


குவைத் நகரத்தின் தூரக் காட்சி


கப்பல் வடிவ உணவகம்(குவைத்)


குவைத் மீன்காட்சியகம்


மீன்காட்சியகத்தில் மு.இ.


காட்சிக்குரிய கப்பல் அருகில் மு.இ.


2 கருத்துகள்:

duriarasanblogpsot.com சொன்னது…

குவைத் உலா கண்ட நண்பர் இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்

துரையரசன்

Unknown சொன்னது…

Your reports areinteresting and informative. congrats.
Samarasam