நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 15 செப்டம்பர், 2012

கணினிமொழியியல் வல்லுநர் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்


முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள்

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பெருமைக்குரிய பேராசிரியர்களுள் ஒருவராக விளங்கியவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் ஆவார். தமிழையும் மொழியியலையும் நன்கு கற்றவர். மொழியியல் கொள்கைகளை நன்கு கற்றதுடன், இலக்கணத்தில் அழுத்தமான புலமையுடையவர். தற்கால இலக்கியத்திலும் ஈடுபாடுகொண்டவர்கள். கடுமையான உழைப்பும், நேர்மையான வினையாண்மையும் கொண்டவர். எதனையும் திருத்தமுறச் செய்யும் இயல்பினர்.

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் தொழில்நுட்பத்துக்குத் தகத் தமிழ்ப் பயன்பாட்டை அடுத்த நிலைக்கு உயர்த்தியவர். இவர்தம் துறைசார் ஈடுபாடு எனக்கு என்றும் வியப்பைத் தரும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ அவர்கள் துணைவேந்தராக விளங்கிய காலத்தில் கணினிமொழியியலைத் தனித்துறையாக நிறுவிப் பயிற்றுவித்தவர். பல மாணவர்கள் இத்துறையில் புலமைபெற்றனர். ஆராய்ச்சியாளர்களாக மேம்பட்டு நின்றனர். தமிழகத்தில் முன்னோடித் துறையாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கணினி மொழியியல் துறை விளங்கியது. அடுத்து வந்த துணைவேந்தர்களின் ஒத்துழைப்பு இன்மையால் கணினிமொழியியல் துறை சென்னைப் பல்கலைக்கழகத்தில் இல்லாமல் போனது.

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் ஐயா அவர்களை நான் பலவாண்டுகளாக அறிவேன். சென்னைப் பல்கலைக்கழகத்தில் அவர்கள் தமிழ்க்கணினிக்கு ஏற்பாடு செய்த மாநாட்டில் கட்டுரைபடிக்கும் வாய்ப்பையும் பேராசிரியர் அவர்கள் எனக்குத் தந்தார்கள். கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டிலும் பேராசிரியர் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அமைந்தது. பேராசிரியர் அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்துவைக்கின்றேன்.


முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். பெற்றோர் சிவ.நயினார், நா.பாப்பு அம்மாள். பிறந்த நாள் 01.06.1950. நெல்லை ம.தி.தா இந்துக் கல்லூரியில் இயற்பியல் இளங்கலைப் பட்டம் ( 1971) படித்தவர். பாளையங்கோட்டை தூயசவேரியர் கல்லூரியில் தமிழ் முதுகலைப் பட்டம் (1971-73) படித்தவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியல் முதுகலைப் பட்டம் ( 1973-75)படித்தவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பொன். கோதண்டராமன் ( பொற்கோ ) அவர்களின் வழிகாட்டுதலில் "தமிழில் இரட்டை வழக்கு" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டு 1980 – இல் முனைவர் பட்டம் பெற்றவர்.

1981-82 ஆம் ஆண்டுகளில் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை ஆய்வாளராகப் பணியாற்றியவர். . 1983-85 ஆம் ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கியத் துறையில் பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் முதுநிலை ஆய்வாளராக விளங்கியவர். 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2010 சூன் மாதம் இறுதிவரை விரிவுரையாளர், இணைப்பேராசிரியர், பேராசிரியர் , துறைத்தலைவர் ஆகிய பதவிகளில் ஆசிரியப் பணியாற்றினார். மொழியியல் ஆய்வுப் பிரிவின் இயக்குநராகவும் பணிபுரிந்தார்.

ஒலிநாடா வழி அயல்நாட்டினர்க்குத் தமிழ் என்ற திட்டத்தை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்காக ( 1981-82) மேற்கொண்டார். தமிழரல்லாதவர்க்குத் தமிழ்மொழிக்கல்வி என்ற கணினிவழி பாடத்தைச் ( 2002-2004) சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக்கல்வி நிறுவனத்திற்காகத் தயாரித்து அளித்துள்ளார்.

இன்றைய தமிழ் , Tamil Diglossia ( தமிழ் இரட்டைவழக்கு) என்ற இரண்டு ஆய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். சமூகமொழியியல், மருத்துவமொழியியல், கருத்தாடல் ஆய்வு, மாற்றிலக்கண மொழியியல் , கணினிமொழியியல் போன்ற துறைகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளார்.

தற்போது கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பத்துறைகளில் தமிழ்மொழிக்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழித்துறையில் கணினிமொழியியலுக்காக ஒரு முதுகலைப் பட்டப்படிப்பைத் தொடங்கி, பணியிலிருந்து ஓய்வுபெறும்வரை நடத்தினார். இவரது வழிகாட்டலில் பல மாணவர்கள் இத்துறையில் எம்.பில்,. முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் பேரவையின் பொதுச்செயலாளராகப் பணியாற்றியுள்ளார். மார்க்சியத் தத்துவத்தில் ஆழ்ந்த ஈடுபாடு உடையவர்.
இவரது "தமிழ்ச்சொல் 2000" என்ற தமிழ்ச்சொல்லாளரை 2002 ஆம் ஆண்டு புதுதில்லியில் குடியரசுத்தலைவர் மாளிகையில் மேனாள் குடியரசுத் தலைவர் மேதகு கே.ஆர். நாராயணன் வெளியிட்டார்.

"மென்தமிழ்" என்ற மற்றொரு தமிழ்ச்சொல்லாளர் 2011 ஆம் ஆண்டு சிங்கப்பூரிலும் மலேயாவிலும் வெளியிடப்பட்டது. தற்போது மென்தமிழின் மூன்றாவது பதிப்பு வெளிவந்துள்ளது.

பேராசிரியரின் புதல்வர் நயினார் பாபு ( மென்பொருள் பொறிஞர், அட்லாண்டா, அமெரிக்கா ) இவரது தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்கு மிகவும் துணைபுரிந்துவருகிறார்.
டென்மார்க் , சிங்கப்பூர், மலாயாப் பல்கலைக்கழகங்களில் கணினிமொழியியல் தொடர்பான பல பணிமனைகளை நடத்தியுள்ளார்.

தற்போது NDS Lingsoft Solutions Pvt Ltd என்ற ஒரு நிறுவனத்தைத் தமிழ்மென்பொருள் உருவாக்கத்திற்காக நிறுவியுள்ளார். SRM பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராயத்தில் கணினித்தமிழ் ஆய்வுக்கான மதிப்புறு பேராசிரியராகவும் இருந்துவருகிறார். தமிழகத்தின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு ஈடுபாட்டுடன் கணினிமொழியியலைப் பயிற்றுவிப்பதில் ஈடுபாட்டுடன் உழைத்து வருகின்றார். பேராசிரியரின் கணினிமொழியியல் அறிவையும் ஆராய்ச்சியையும் உயராய்வு நிறுவனங்கள் பயன்படுத்திக்கொண்டால் தமிழுக்கு அது ஆக்கமாக இருக்கும்.


2 கருத்துகள்:

T.S.Kandaswami சொன்னது…

தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை.பேரறிஞர் திரு .தெய்வசுந்தரம் ஐயா அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ்ந்து தமிழ்ப் பணியாற்றுவார்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...