நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

புதன், 19 செப்டம்பர், 2012

வஞ்சிக்கப்படும் மக்களின் போர்வாள்: தகவல் அறியும் உரிமைச்சட்டம்இந்திய அரசு 2005 இல் தன் நாட்டு மக்களுக்குத் தந்த உயரிய சட்டம் “தகவல் அறியும் உரிமைச்சட்டம் 2005” என்பதாகும். இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு இந்தியக் குடிமக்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களைப் பத்து உருவா பணம்கட்டி பெற்றுக்கொள்ள முடிகின்றது.

அரசு அலுவலகங்களில் ஒவ்வொரு செயல்பாட்டிலும் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் செயலாற்றுபவர்களிடம் பொறுப்புடைமையை மேம்படுத்துவது; அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களின் செயலாற்றல் குறித்த தகவல்களைப் பெற விரும்பும் குடிமக்களுக்கு அதனை அளிக்க வகை செய்வதுடன் ஊழலை ஒழிப்பது; அரசு மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களைப் பொறுப்புடையதாக ஆக்குவதுடன் உள்ளார்ந்த தகவல்களின் இரகசியத்தைக் கட்டிக்காத்தல் என்பது இந்தச் சட்டத்தின் நோக்கங்களாகும்.

தங்களுக்கு உரிய பணிகள் சரியாக நடைபெறவில்லை என்று நினைத்தால் அல்லது தங்களுக்குரிய சேவையில் குறைபாடு இருப்பதாக உணர்ந்தால் அரசு அலுவலகங்களில் ஒரு விண்ணப்பம் போட்டு முப்பது நாளுக்குள் உரிய தகவலைப் பெற்றுக்கொள்ளமுடியும். ஒருவரின் சுதந்திரம், உயிர், உடைமைக்காப்பு பற்றிய தகவல்களை 48 மணி நேரத்தில் தரவேண்டும்.

மக்களாட்சியின் மாண்பினை உணர்த்துவதாக இந்தச் சட்டம் உள்ளது. நமக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள், பதவி உயர்வு இவற்றுக்குத் தடை உண்டானால் இந்தச் சட்டம் நமக்குப் பாதுகாப்பாக இருக்கின்றது. இந்தச் சடத்தின் சிறப்பினை இந்தியா முழுவதும் உள்ள மக்களுக்கு உணர்த்திவிட்டால் தவறு செய்பவர்கள் அஞ்சுவார்கள். கையூட்டு நாட்டில் இல்லாமல் ஒழியும். இந்திய நாடு முன்னேற்றத்தை நோக்கி நடைபோடும்.

இந்தச் சட்டத்தின் சிறப்புகளையும், மேன்மைகளையும், சட்டத்தின் பல்வேறு நடைமுறைகளையும் தன்னார்வலர்கள் பலர் ஒவ்வொரு மொழியிலும் விளக்கி நூல்களை எழுதியுள்ளனர். கையேடுகள், துண்டறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். இவ்வாறு இருந்தாலும் பலருக்கு உதவி தேவைப்படும்பொழுது யாரைத் தொடர்புகொள்வது என்று தெரியாமல் தவிப்பதைப் பார்க்கின்றோம்.

தகவல் அறியும் உரிமைச்சட்டம் பற்றிய புரிதலுக்கு எனக்கு ஒரு முறை உதவி தேவைப்பட்டபொழுது சரியான நெறிகாட்டல் எனக்குக் கிடைக்கவில்லை. பலரைத் தொடர்புகொண்டபொழுதும் அவரவர்களுக்குத் தெரிந்த விளக்கங்களை மட்டும் சொன்னார்கள்.

இந்த நிலையில் அண்மையில் “இதுதான் தகவல் அறியும் உரிமைச்சட்டம்” என்ற நூலினைப் படிக்கும் வாய்ப்பு அமைந்தது.

ஆசிரியர் வேலூர் எம்.சிவராஜ் அவர்கள். பலவாண்டுகளாக அரசுப்பணியில் இருந்து பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு அதிகாரி இவர். அரசின் அனைத்துச் சட்டக்கூறுகள், நடைமுறைகளை நன்கு அறிந்தவர். இவரால் உருவாக்கப்பட்ட இந்த நூல் எளிய நடையில் அனைவருக்கும் புரியும்படியாக எழுதப்பட்டுள்ளது.

இந்தியன்குரல் என்ற அமைப்பின் வெளியீடாக இந்த நூல் வெளிவந்துள்ளது. 304 உருவா விலையுள்ள இந்த நூல் 292 பக்கங்களில் செய்திகளை உள்ளடக்கியுள்ளது.

ஊழல் என்ற நடைமுறையை இந்தியாவிலிருந்து விரட்ட இந்தச் சட்டம் பெரிதும் துணைபுரியும். அதனால்தான் குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள், தவறிழைப்பவர்கள், ஊழல் பேர்வழிகள் தகவல் அறியும் உரிமைச்சட்டம் அல்லது ஆங்கிலத்தில் RTI என்று இந்தச் சட்டத்தின் பெயரைச் சொன்னாலே அஞ்சி நடுங்குகின்றனர்.

தகவல் அறியும் உரிமைச்bசட்டத்தின்படி விவரம் கேட்டு எவ்வாறு மடல் எழுதவேண்டும் என்று தொடங்கி, மேல்முறையீடு, இரண்டாம் மேல்முறையீடு பற்றியெல்லாம் விரிவாக இந்த நூலில் தகவல்கள் உள்ளன. நம்மைப் பாதுகாத்துக்கொள்ள ஒவ்வொருவருக்கும் பயன்படும் தகவல்கள் இந்த நூலில் இருப்பதால் ஒவ்வொருவர் இல்லத்திலும் இருக்க வேண்டிய பயனுடைய நூல் இது.

நூல் கிடைக்குமிடம்:

இந்தியன் குரல்,(VOICE OF INDIAN)
267, திரு.வி.க. குடியிருப்பு,
திரு.வி.க.நகர், செம்பியம்,
பெரம்பூர், சென்னை- 600 082
விலை 304 - 00
தொலைபேசி: 044 43576948

நூலாசிரியர் முகவரி:
எம்.சிவராஜ்
12, ஆறுமுகம் தெரு, வசந்தபுரம்,
வேலூர்- 632 001
அலைபேசி: 94434 89976

புதுச்சேரியில்: திரு இரவிச்சந்திரன் 9443601439

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான தகவலுக்கு மிக்க நன்றி... பலருக்கும் உதவும்...