
முனைவர் கு.கல்யாணசுந்தரம் உரை
தமிழ் இலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மின்வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவசமாகப் பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம் (Project madurai) என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் தம் மதுரைத் திட்டப் பணிகள் குறித்துப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்புரையாற்றினார்.
28.03.2011 மாலை 6.30 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சிக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து அவர்கள் தலைமை தாங்கினார்.
புதுவைப் பாரதிதாசன் அரசு மகளிர்கல்லூரித் தமிழ்த்துறையின் துணைப் பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் மதுரைத்திட்டத்தின் நிறுவுநர் முனைவர் கு.கல்யாணந்தரம் அவர்களின் தமிழ்ப்பணியினை அறிமுகம் செய்து வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினர்களுக்குப் புதுவையைச் சார்ந்த பொ.தி.ப. அறக்கட்டளையின் நிறுவுநர் தி.ப.சாந்தசீலனார் அவர்களின் மகள் செல்வி சா.நர்மதா அவர்கள் பொன்னாடை அணிவித்து, நூல்களைப் பரிசாக வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்ச்சியில் செர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் உல்ரிக் நிக்கலசு கலந்துகொண்டு பேராசிரியர் கு.கல்யாணசுந்தரம் அவர்களின் தமிழ்ப்பணியை வாழ்த்திப் பேசினார்.
சுவிசர்லாந்திலிருந்து வருகை தந்த மதுரைத்திட்டம் நிறுவுநர் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் தம் மதுரைத் திட்டம் மின்பதிப்புப் பணிகள் பற்றியும் இது தொடங்கப்பட்டதன் நோக்கம், இதனைப் பயன்படுத்துவது எவ்வாறு என்று விளக்கமாக எடுத்துரைத்தார். மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம்" இது உலகத் தமிழர்கள் இணையம்வழி ஒன்றுகூடித் தமிழ் இலக்கியங்களின் மின்பதிப்புக்களை உருவாக்கி அவற்றை இணையம்வழி உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக பெற வசதிசெய்யும் திட்டம் ஆகும்.
மதுரைத் திட்டம் அரசு (அ) தனியார் நிறுவன உதவியின்றி, வணிக நோக்கமுமின்றி நடைபெறுகின்ற ஒரு தன்னார்வ (voluntary) முயற்சி. 1998-ஆம் ஆண்டு தமிழர் திருநாளில் (பொங்கல்) தொடங்கப்பட்டது. இத்திட்டம் தொடர்ந்து நடந்து வருகின்றது. உலக அளவில் முந்நூற்றுக்கு மேற்பட்ட தமிழர்களும் தமிழார்வலர்களும் ஒன்றுகூடி இத்திட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழர்கள் அவரவர் தங்களது வீடுகளில் இருந்தபடி, தமிழ் இலக்கியங்களைக் கணினியில் உள்ளிட்டு (அ) பிழை திருத்தி மின்பதிப்புகளாகத் தயாரிக்கும் ஒரு கூட்டு முயற்சி. மதுரைத் திட்டத்தின் மின்பதிப்புகள் தொடக்கக் காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துருக்கள் (fonts) கொண்டு உருவாக்கப்பட்டன.
ஆனால் 1999-ஆம் ஆண்டிலிருந்து இணையம் வழித் தமிழ்த் தகவல் தொழில் நுட்பப் பரிமாற்றத்திற்கானது என இணையம்வழி நிர்மானிக்கப்பட்ட தமிழ் தகுதர (TSCII - Tamil Script Code for Information Interchange) வடிவம் கொண்டு உருவாக்கி மின்பதிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. மின்பதிப்புகள் இணையத்தில் இணைய பக்கங்களாகவும் (web pages in html format), PDF வடிவத்திலும் தரப்பட்டுள்ளது. 2003-ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கு குறியீடு (Unicode) முறையில் மின்பதிப்புகளையும் வெளியிட்டு வருகின்றனர்
.
சங்க கால நூல்கள் முதல் தற்காலத் தமிழ்நூல்கள் வரை அனைத்தும் வெளியிடப்படுகின்றன. இணைய முகவரி: http://www.projectmadurai.org/. மதுரைத் திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள நூல்களை உலக அளவில் தமிழர்களும் பிற நாட்டு ஆய்வாளர்களும் இலவசமாகத் தரவிறக்கிக் கணினியில் பயன்படுத்தலாம்.
உலங்கெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இதில் பங்களித்துள்ளனர். ஒருவர் தட்டச்சிட்டு வழங்குவார். அதனை வேறொருவர் மெய்ப்புப் பார்ப்பார். வேறொருவர் இணையத்தில் பதிக்கும் பணியில் ஈடுபடுவார். எனவே அவரவர்களுக்கு வாய்ப்பான பணிகளில் பங்கேற்கலாம் என்று மதுரைத் திட்டப்பணிக்கு அனைவரும் பங்காற்றும்படி கல்யாணசுந்தரம் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார். இன்னும் மரபுரிமைச் சிக்கல் இல்லாத தமிழ் நூல்களை இணையத்தில் வெளியிடுவதற்குத் தாம் ஆயத்தமாக இருப்பதைக் குறிப்பிட்டார். இணையத்தில் உள்ளிடப் பெற்ற நூல்கள் படிமக் கோப்புகளாகவும், ஒருங்குகுறியிலும் இருக்கின்றன. ஒருங்குகுறியில் உள்ள நூல்களை இலக்கண ஆய்வுகளுக்கும், கணினிமொழியியல் ஆய்வுகளுக்கும் பயன்படுத்தலாம் என்று கு.கல்யாணசுந்தரம் பேசினார்.
தாகூர் கல்லூரித் தமிழ்த்துறையின் துணைப் பேராசிரியர் முனைவர் ஆ.மணி அவர்கள் நன்றியுரையாற்றினார்.
கோவை கொங்குநாடு கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் முருகேசன், புதுவை மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன இயக்குநர் முனைவர் பக்தவச்சல பாரதி ஆகியோர் கலந்துகொண்டனர்.
புதுவையைச் சேர்ந்த பல்கலைக்கழக, கல்லூரி, ஆசிரியர் பயிற்சி நிறுவன, பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்களை முனைவர் வி.முத்து அவர்கள் சிறப்பித்தல்
முனைவர் உல்ரிக் அவர்களைச் செல்வி சா.நர்மதா அவர்கள் சிறப்பித்தல்

முனைவர் உல்ரிக் பேச்சு

முனைவர் ஆ.மணி அவர்கள் முனைவர் முத்து அவர்களுக்கு
ஆடை அணிவித்தல்
பார்வையாளர்கள்
பார்வையாளர்கள் (ஒருபகுதி)

பார்வையாளர்கள்
5 கருத்துகள்:
பணி சிறக்க, தொடர் வாழ்த்துகள்!
தமிழ்ப் பணி தொடர, சிறக்க வாழ்த்துகள்!
உயரிய மனிதருக்கு உலகமே உறவாய் இருப்பதில் வியப்பில்லை.
தொடரட்டும் உங்கள் தொண்டு!
முனைவர்.மு.இளங்கோவன் அய்யா அவர்களின் வலைப்பூவில் 27.03.2011 நாள் இடுகையான, “தமிழ்நூல்கள் உலகத் தமிழர்களுக்கு இலவசமாய்க் கிடைக்க” எனும் தலைப்பில், சுவிசு பேராசியர் கலியாணசுந்தரம் அவர்கள் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய உரைக் கருத்துகள் கண்டேன். மதுரை மின்பதிப்புத் திட்டம் மூலம் உலகத் தமிழ் இணையம் வழி ஒன்று கூடி , தமிழ் இலக்கிய மின் பதிப்புகளை உருவாக்கி, இணையம் வழி உலகத்தமிழ் உணர்வாரள்களுக்கெல்லாம் இலவசமாய் அவை கிடைக்கத் தக்க வகையில் வசதி செய்யும் அருமையான திட்டத்தினை வகுத்து, செயலாற்றிக் கொண்டிருப்பது அறிந்து பெருமகிழ்வு கொள்கிறேன். அன்னார் போன்றோரின் அருந்தமிழ்ப் பணியினை உலகறியச் செய்யும் உங்கள் சீரிய தொண்டு தொடர வாழ்த்துகள்.. பாவலர் பொன்.கருப்பையா , புதுக்கோட்டை.
தமிழில் நல்ல புஸ்தகங்களை வாங்குவார் குறைவு. ஓசியில் கிடைத்தால்
படிப்பார்கள் என்று தனித்தமிழர், கிரந்தத்தமிழர் யாரிடம் கேட்டாலும்
தெரிந்துகொள்ள இயலுகிறது.
எல்லா நூல்களையும் இணையத்தில் சும்மா வாரி வழங்க பல வலைத்தளங்கள் இருக்கின்றன. அதில் முயல் முயற்சி மதுரை திட்டம் ஆகும். ஏராளமான நிரைகள், எழுத்துப் பிழைக் குறைகள் இணைய தளங்களில் இருப்பதை நீங்கள் ஆராய்ச்சியின் போது காணலாம். இனிவரும் ஆண்டுகளில் தனியார்களைப் போலவே அரசு வரிப்பணத்தில் சில தளங்கள் கொடுக்க வேண்டும்; உ-ம்: நாட்டுடமையான நல்லறிஞர் ஆராய்ச்சிகள், கதைகள், ... ஜர்னல்ஸ், ... ஏதாவது நல்ல ஜர்னல் தமிழ் ஆராய்ச்சிக்கு தமிழ்நாட்டில் இருக்கிறதா? இருந்தால் வலையேறுங்கள்.
தமிழ் நூல்கள் இலவசமாக உலகத் தமிழர்களுக்குக் கிடைக்கவேண்டும்- முனைவர் கு.கல்யாணசுந்தரம்(சுவிசு) பேச்சு முனைவர் மு. இளங்கோவன் பதிவில் இன்றைய ஈடு இருக்கிறது.
பார்த்து நீங்கள் பின்னூடமிட்டால் மு. இளங்கோ போன்றோர் தமிழுக்கு மேலும் உழைக்க உற்சாகம் அளிப்பதாக அமையும்.
அன்புடன்.
நா. கணேசன்
PS: I wrote this in googlegroups.
கருத்துரையிடுக