நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 24 மார்ச், 2011

வியர்வையின் வெளிச்சம் - வெற்றிபெற்றவரின் வாழ்க்கை வரலாறு...


வியர்வையின் வெளிச்சம்- வி.ஜி.செல்வராஜ்

 அண்மைக்காலமாகப் பல்வேறு முயற்சிகளில் எனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களால் மனம் தொய்வடைந்து கிடந்தது. இந்த நேரத்தில் சென்னையிலிருந்து தமிழ்தாசன் ஐயா அவர்கள் அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாறு கூறும் "வியர்வையின் வெளிச்சம்" என்ற 596 பக்கம் கொண்ட அரிய நூலொன்றை எனக்கு அனுப்பியிருந்தார்கள்.

 அண்ணன் வி.ஜி. செல்வராஜ் அவர்களைச் சென்ற ஆண்டு திருக்குறள் கருத்தரங்கிற்கு அந்தமான் சென்றிருந்தபொழுது நன்கு அறியும் வாய்ப்பு கிடைத்தது. அண்ணாச்சி வி.ஜி. சந்தோஷம் அவர்கள்தான் என்னை வி.ஜி. செல்வராஜ் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

 நான்கு நாள் வி.ஜி.பி. குடும்பத்தினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்ததை எண்ணி எண்ணி மகிழ்கின்றேன். எவ்வளவு பெரிய செல்வந்தர்கள். ஆனால் அதற்கான சிறு அறிகுறிகூட அவர்களிடம் தெரியவில்லை. வி.ஜி.சந்தோஷம் அண்ணாச்சி அவர்கள் எங்கள் கையைப் பற்றிக்கொண்டு ஒருவேளை தம்முடன் அமர்ந்து உணவு உண்ணவேண்டும் என்று அன்பொழுக கெஞ்சுவார்கள். இதுகண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் அரங்க.பாரி அவர்களும் நானும் மலைத்துப்போனோம். துணைவேந்தர் அவ்வை நடராசன் ஐயாவும் அம்மா மருத்துவர் தாரா நடராசன் அவர்களும் எங்கள் உரையாடலில் கலந்துகொண்டு ஊக்கப்படுத்துவார்கள். வி.ஜி.பி. இராஜாதாஸ் அவர்கள் மிகச்சிறந்த செயல்திறமும் வினையாண்மையும்கொண்ட இளைஞர். எங்களுக்கு விருந்தோம்புவதில் முன்னிற்பவர்.

 யான் முன்பு அறிந்த பல பணக்காரக் குடும்பத்தினர் ஆளுக்கு ஆள் நாட்டாண்மை வேலை பார்ப்பார்கள். ஒருவருக்கு ஒருவர் கீழ்ப்படியாமல் இருப்பார்கள். மற்றவர்களை அடக்கி ஆளப்பார்ப்பார்கள். தம் கண்ணசைவுக்கும் கையசைவுக்கும் பணிசெய்ய வேண்டும் என்று ஏங்குவார்கள். குழுவாக இயங்குவார்கள். தலைமைப்பண்புக்கு அடம்பிடிப்பார்கள். இப்படிப் பார்த்திருந்த எனக்கு வி.ஜி.பி. குடும்பம் இந்த அளவு முன்னேறிய பிறகும் மூத்தோர் சொல் கேட்கும் பண்பு அறிந்து வியந்தேன். வி.ஜி.பி. குடும்பத்தினரின் எண்ணிக்கை நூற்றுக்குமேல் இருந்தாலும் எல்லோரும் ஒற்றுமையாக ஓரே இடத்தில் வாழ்வதாக அறிந்தபொழுது எனக்கு வியப்பு மேலும் பன்மடங்கானது. இன்னும் பாகப்பிரிவினைகள் நடக்கவில்லை என்று அறிந்ததும் அவர்கள்மேல்கொண்ட மதிப்புக்கு அளவே இல்லை.

 பெயரப் பிள்ளைகளுக்கும் திருமணமாகிவிட்டது என்றாலும் அண்ணன் தம்பியர் மூவரும் ஒருவர் கிழித்த கோட்டை மற்றவர்கள் தாண்டாமல் இருப்பது தமிழகத்தின் கூட்டுக் குடும்பத்திற்கு இவர்கள் குடும்பம் எடுத்துக்காட்டாக விளங்குவதைச் சுட்டலாம்.

 வி.ஜி.பி. என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் நிறுவுநர் பெரிய அண்ணாச்சி வி.ஜி. பன்னீர்தாஸ் அவர்கள் திட்டமிட்டு உழைத்த உழைப்பும், தம்பியர்களின் மேல் வைத்த நம்பிக்கையும் அதுபோல் தம்பியர்கள் இருவரும் அண்ணாச்சி மேல் வைத்த நம்பிக்கையும் பல மடங்காகத் தழைத்து இன்று உலக அளவில் புகழப்படும் வி.ஜி.பி. நிறுவனங்கள் பலகோடி மதிப்பில் செழித்துள்ளதன் வரலாற்றை அண்ணன் வி.ஜி. செல்வராஜ் அவர்களின் எழுத்தில் கற்று வியந்துபோனேன்.

 வி.ஜி. செல்வராஜ் அவர்கள் தங்கள் வாழ்க்கை வரலாற்றை எழுதும் முகத்தான் தமிழகத்தின் பழைமை வாய்ந்த ஒரு கூட்டுக் குடும்ப வரலாற்றை மிகத்தெளிந்த நடையில் எழுதியுள்ளார்.

 ஒரு நிறுவனத்தின் வளர்ச்சியை அழகிய தமிழில் பொருள் மயக்கமின்றி எழுதியுள்ளார். ஞான திரவியம் நாடார் என்னும் பெருமைக்குரிய ஐயாவுக்கு வாய்த்த இரண்டாம் மனைவி இரத்தினம் அம்மாளின் பிள்ளைதான் நம் அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ். மலேசியாவில் பிறந்த நம் அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் தந்தையாரால் தமிழகத்திற்கு அழைத்து வரப்பெற்று முதல் மனைவியின் பிள்ளைகளான வி.ஜி.பன்னீர்தாஸ், வி.ஜி.சந்தோஷம் என்னும் இரண்டு அண்ணன்களுடன் வளர்ந்துள்ள பாங்கை அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் எழுதிய பிறகே நமக்கு இவர்கள் ஒரு தந்தைக்கும் இரு தாயருக்கும் பிறந்த குழந்தைகள் என்ற செய்தி தெரிகிறது. ஆனால் ஒற்றுமையில், பாசத்தில், வளர்ச்சியில் ஒருவருக்கொருவர் எந்த வேறுபாடும் காட்டாமல் வாழ்ந்துள்ளதை இந்த வாழ்க்கை வரலாற்று நூல் நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

 வி.ஜி.பி.குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் யாவரும் பாசப்பிணைப்புடன் ஒன்றாக வளர்ந்துள்ளதைப் பார்க்கும்பொழுது இவ்வாறு வாழ இயலுமா என்ற ஏக்கமே மேலிட்டு நிற்கின்றது. அந்த அளவு இவர்களின் ஒற்றுமை உலகக் குடும்பங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.

 மிகச்சிறிய கடைகளைத் தொடங்கி நடத்தியும், பின்னர் வீட்டுமனைகள் விற்பனையில் ஏற்பட்ட முன்னேற்றம்கொண்டு பிற தொழில்களைப் பெருக்கியும் இன்று உலக அளவில் பல கிளைகளுடன் பல்கி நிற்பதை அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் மிகச்சிறப்பாக எழுதியுள்ளார். அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் வி.ஜி.பி. நிறுவன வளர்ச்சியில் எந்த அளவு பங்காற்றியுள்ளார் என்பதை இந்த நூலைப் படிக்கும்பொழுது தெள்ளத் தெளிவாக உணரலாம். ஒவ்வொரு வெற்றியையும் பன்னீர்தாஸ், சந்தோஷம் ஆகியோர எவ்வாறு கொண்டாடித் தம்பியைப் பாராட்டியுள்ளனர் என்பதை அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் குறிக்கத் தவறவில்லை. ஒவ்வொருவரும் தமக்கான பொறுப்புகளைத் திறம்படச் செய்தாலும் கூட்டுழைப்பின் மூலமே வெற்றி பெற முடிந்தது என்பதை வெளிப்படையாகக் குறித்துள்ளளார். இவர்களின் வளர்ச்சிக்குப் பக்கத்துணையாக இருந்தவர்களை இவர்கள் என்றும் நன்றியுடன் போற்றுவது உயர்பண்பாகத் தெரிகின்றது.

 திரு.இராமச்சந்திர உடையார் அவர்களின் ஈகைக்குணம் படித்தபொழுது திரு.உடையார் அவர்கள்மேல் நமக்கு உயர்ந்த மதிப்பு வருகின்றது.

 மும்பைக்குப் பயணமானபொழுது-ஓர் உயர்ந்த இலக்கு நோக்கிச் சென்றபொழுது- கருநாடாக மாநில எல்லையில் ஏற்பட்ட கலவரத்தால் பயணம் பாதியில் தடைப்படுகின்றது. தோல்வியின் விளிம்புக்குச் சென்று, திசைமாறிக் கோவா சென்றதும் அங்கிருந்து கப்பலில் மும்பை சென்று எதிர்பார்த்த வெற்றி இலக்கை அடைவதும் தன்னம்பிக்கைக்கு மிகப்பெரிய எடுத்துகாட்டுப் பகுதிகளாகும். அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்கள் உலகம் முழுவதும் தம் அறிவுத்திறமையால் வணிகத்தைப் பெருக்கியதைப் படிக்கும்பொழுது முன்னேறத்துடிக்கும் ஒவ்வொரு இளைஞனும் இந்த நூலைத் தலைமாட்டில் வைத்துப் படிக்கவேண்டும்.

 எந்த நிகழ்வையும் மறைக்காமல் எழுதியுள்ளது அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்களின் நேர்மையான உள்ளத்திற்குச் சான்றாகும். அனல்மின் திட்டப்பணிகளுக்காகத் தம் வடசென்னை சார்ந்த 2500 ஏக்கர் நிலத்தைத் தமிழக அரசு பெறுவதற்கு எடுத்த முயற்சிகளை ஒளிவுமறைவு இல்லாமல் எழுதியுள்ளார். மலேசியாவில் தம் வாடிக்கையாளர்கள் நடுவில் ஏற்பட்ட ஐயத்தைத் தம் அறிவுத்திறமையால் அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்களும் அவர்களின் துணைவியார் அவர்களும் மிகச்சிறப்பாகத் தீர்த்துள்ளனர்.

 வி.ஜி.பி. குடும்ப வரலாறு, நிறுவன வரலாறு, வெற்றித் தமிழரின் வாழ்க்கை வரலாறாக விரிந்து கிடப்பதைப் படித்தபொழுது தொய்வுற்ற நெஞ்சம் தெளிவு பெற்றது. ஒரு வெற்றி ஒளிக்கீற்று மனத்தில் தோன்றியது.

 முன்னேறத் துடிப்பவர்களுக்கு ஒரு கையேடு இந்த நூல். ஒரு தமிழ்க்குடும்ப முன்னேற்ற வரலாற்றை எழுதிய அண்ணாச்சி வி.ஜி. செல்வராஜ் அவர்களின் தமிழ்க் கைகளைக் கண்ணில் ஒற்றிக்கொள்கின்றேன்.


நூல் :வியர்வையின் வெளிச்சம்
ஆசிரியர் : வி.ஜி. செல்வராஜ்
முதல்பதிப்பு : சனவரி,2011
விலை :300 உருவா

கிடைக்குமிடம்:

சந்தனம்மாள் பதிப்பகம்
வி.ஜி.பி.தலைமை அலுவலகம்,
எண் 6, தருமராசா கோயில் தெரு,
சைதாப்பேட்டை,
சென்னை-600 015

பேசி: 044 - 6625 9999 / 2435 7333

1 கருத்து:

Swami சொன்னது…

அருமை...