நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

சனி, 26 மார்ச், 2011

மோர்சிங் = நாமுழவு
இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் ஐயா அவர்களிடம் அண்மையில் உரையாடிக்கொண்டிருந்தபொழுது எங்கள் பேச்சு இசைக்கருவிகள் பற்றி
திரும்பியது. மோர்சிங் என்ற அழைக்கப்பெறும் கருவிக்குரிய தமிழ்ப்பெயர் என்ன என்று உரையாட்டில் ஒரு வினா எழுந்தது.

மோர்சிங் என்ற இக்கருவிக்குரிய தமிழ்ப்பெயரை அறிஞர்கள் பலவாறு குறிக்கின்றனர். சிலர் முகர்சங்கு என்கின்றனர். சிலர் மோர்சங்கு என்கின்றனர். இந்தச்சொல்லுகுரிய வேர்மூலம் அறிய இயலவில்லை. இசைக்கலைஞன் ஒருவன் இக்கருவியை வாசிப்பதை
கி.மு 3 ஆம் நூற்றாண்டு சீன ஓவியத்தில் காணலாம் என்று இணையவெளியில் தகவல்கள் கிடைக்கின்றன. யூதர்களுடன் இணைத்து இக்கருவியைக் கூறுவதும் உண்டு.

ஆனால் இந்தக் கருவி எந்தப் பகுதி மக்களிடமிருந்து இசை உலகுக்குக் கிடைத்தது என்று துல்லியமாக அறியமுடியவில்லை.

இந்தி மொழி இலக்கியங்களில் "முகர்சங்க்" என்று குறிப்பிட்டுள்ளனர். அகோபிலர் எழுதிய "சங்கீத பாரிசாதம்" என்ற வடமொழி நூலிலும் இது "முகசங்க்" என்றே பெயரிடப்பட்டுள்ளது
என இசையாய்வாளர்கள் குறிப்பது உண்டு.

இக்கருவி இரும்பாலான கருவி. இது பழங்குடி மக்களிடமிருந்து இசையுலகுக்கு அறிமுகமாகியிருக்கலாம்.

தமிழக மேடைகளில் அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும்
இனிய இசை தரும் மோர்சிங் என்ற கருவிக்குரிய தமிழ்ச்சொல் தேவைப்பட்டது. அரிமளம் ஐயாவிடம் தாங்களே ஒரு சொல்லை உருவாக்குங்கள் என்றேன்.

முனைவர் அரிமளம் பத்மநாபன்

இக்கருவியின் அமைப்பு, இசைமுழக்கும் முறை, பயன்பாட்டுப் பொருட்கள், பயன்படுத்துவோர் பற்றி முழுமையாக எண்ணிப்பார்த்துப் பின்வருமாறு குறிப்பிட்டார்கள்.

மோர்சிங் என்பது வாயினால் கௌவிக்கொண்டு நாவால் முழக்கும்கருவி.இதற்கான தாளச்சொற்கட்டு நாவால் அளிக்கப்படுகின்றது. இசை,நாட்டிய நிகழ்ச்சிகளில் இது பெரும்பாலும் இசைக்கப்படுகின்றது. தனி இசைப்பில்(ஆவர்த்தனங்களில்) அனைவராலும் விரும்பிக் கேட்கப்படும். முன்னணிக் கலைஞர்கள் தங்கள் இசைநிகழ்வில் இக்கருவியிசை இடம்பெறும்படி பார்த்துக்கொள்வர்.

தொல்காப்பியர் தாளமுழக்குக் கருவிகளுக்குப் பறை (தெய்வம் உணாவே மாமரம் புள் பறை)என்ற பொதுப்பெயரைப் பயன்படுத்துகின்றார். சங்க இலக்கியத்தில் முழவு என்ற சொல்
பயன்படுத்தப்படுகின்றது. முழக்கப்படுவதால் முழவு என்று வீ.ப.கா.சுந்தரம் குறிப்பிடுகின்றார்.

மோர்சிங் என்ற கருவியில் முழக்கப்படும் கம்பிக்குப் பெயர் நாக்கு என்பதாகும்.மோர்சிங் என்பது நாவால்(வாசிப்பவரின்), நாவை(கம்பியை) முழக்குவதால் நாமுழவு என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும் என்றார்.

மோர்சிங் இரும்புக்கருவி; முழவுக்கருவிகள் தோலில் இருக்க வேண்டும் என்று சிலர் கருத்துரைக்கலாம். சங்கு என்பது தாளக்கருவி அன்று. அது காற்றுக்கருவியாம்.
அவ்வாறு என்றால் மோர்சிங் என்பதன் அடிப்படையில் வரும் முகர்சங்கு என்பது அது காற்றுக்கருவியைக் குறிக்கும்.

எனவே மோர்சிங் என்பதை முகர்சங்கு, மோர்சங்கு என்பது பொருத்தமாகத் தெரியவில்லை.

ஆதலால் மோர்சிங் என்பதைத் தமிழில் நாமுழவு என்று குறிப்பிடலாம் என அரிமளம் பத்மநாபன் குறிப்பிட்டார்.

நன்றி: நித்யவாணி

3 கருத்துகள்:

pudugai manimandram சொன்னது…

மதிப்பிற்குரிய முனைவர் மு.இளங்கோவன் அவர்களுக்கு, வணக்கம். 26.03.2011 தங்கள் வலைப்பூ பதிவில் மோர்சிங் என்ற பண்டைத்தமிழ் இசைக்கருவி பற்றி இசைவித்தகர் அரிமளம் பத்மநாபன் அவர்களின் கருத்தினைக் கண்ணுற்றேன். கருவியின் ஒலிப்பு மற்றும் இசைப்படுத்தும் நாவின் முயற்சி காரணம் கருதி அதற்கு அழகாக “நா முழவு” எனப் பெயரிட்டது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி. கணினி மயமான மேலைநாட்டு இசைக்கருவிகளின் ஆதிக்கம் பெருகி வரும் காலகட்டத்தில் இசைநிகழ்வுகளில் அருகி வரும் மோர்சிங் பற்றிய அரிய ஆய்வு, என் போன்ற தமிழிசை விரும்பிகளுக்கு மிகவும் பயனள்ளதாக இருக்கிறது.இத்தகு அறிஞர்களுடனான தங்களின் ஆய்வுகளும் தமிழ்த் தொண்டும் தொடர எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள். அன்புடன் பாவலர் பொன்.கருப்பையா புதுக்கோட்டை.