நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

திங்கள், 20 செப்டம்பர், 2010

தனித்தமிழ் காக்கும் முனைவர் பா.வளன்அரசு...


முனைவர் பா.வளன்அரசு

இருபதாண்டுகளுக்கு முன்பு(1987-92) நான் கல்லூரி மாணவனாக இருந்தபொழுது அறிமுகமான பெயர்கள் முனைவர் மு.தமிழ்க்குடிமகன்,முனைவர் இரா.இளவரசு,முனைவர் பா.வளன்அரசு.

பாவாணர் கொள்கைகளிலும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழிலும் ஈடுபட்டிருந்த எனக்கு, இவர்களின் வழியில் தனித்தமிழ்ப் பணிபுரிந்த மூன்று பேராசிரியர்களும் முன்னோடிகளாக விளங்கினர். இத்தகு கொள்கை உரஞ்சான்ற பேராசிரியர்களை இன்று காண்டல் அரிது. கல்லூரிகளுக்கு அப்பாலும் தனித்தமிழ் பரப்பிய இம்மூவருடனும் தமிழ்த்தொடர்பு கொண்டிருந்தேன். பின்னவரான முனைவர் பா.வளன் அரசு அவர்களின் தனித்தமிழ் இலக்கியக் கழகம் நடத்திய தனித்தமிழ்க் கட்டுரைப்போட்டியில் இரண்டுமுறை கலந்துகொண்டு இரண்டு முறையும் தங்கப்பதக்கமும் அரிராம்சேட்டு நினைவு வெள்ளிச் சுழற்கோப்பையும் பெற்றுள்ளேன்.


விழா ஒன்றில் பா.வளன்அரசு அவர்களுக்கு ஆடைபோர்த்தும் மு.இளங்கோவன்

1992 இல் பரிசு பெற முதன்முதல் நெல்லை சென்ற நாள்தொட்டுப் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் மேல் விடுதலறிய விருப்பினன் ஆனேன். இதனிடையே தமிழகத்திலும் பிற நாடுகளிலும் நடைபெற்ற பல கருத்தரங்குகளில் வளன் ஐயாவுடன் கலந்துகொண்டு கட்டுரை படிக்கவும், கலந்துரையடவும் எனக்கு வாய்ப்புகள் கிடைத்தன.அவர் தம் மாணவர்களுள் ஒருவனாகவும்,அவர் குடும்பத்தில் ஒருவனாகவும் அவர் கொள்கைவழிப் பட்டவர்களுள் ஒருவனாகவும் பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் என்னைப் போற்றி வருகின்றார்கள்.அண்மையில் பாளையங்கோட்டைத் தூய சேவியர் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் இணையப் பயிலரங்கில் கலந்துகொண்டார். புதிய துறையை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் நாள்முழுவதும் அவர்கள் இருந்த பாங்கு அறிந்து மகிழ்ந்தேன்.நெகிழ்ந்தேன்.

பேராசிரியர் பா.வளன்அரசு அவர்களின் தமிழ் வாழ்க்கையை இங்குப் பதிந்து வைக்கிறேன்.

முனைவர் பா.வளன் அரசு அவர்கள் 15.05.1940 இல் பாளையங்கோட்டையில் பால்பூபாலராயர்-மரியம்மாள் ஆகியோரின் மைந்தனாகப் பிறந்தவர்.பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரியிலும், காரைக்குடி அழகப்பர் கல்லூரியிலும் பயின்று தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் முதுவர் பட்டம் பெற்றவர். அமெரிக்க அனைத்து நாடுகளின் பல்கலைக்கழகத்தில் மூதறிஞர் பட்டம் பெற்றவர்.

தூய வளனார் கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி, சதக்கத்துல்லா அப்பா கல்லூரி ஆகிய நிறுவனங்களில் நாற்பத்து மூன்றாண்டுகள் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார்.பயிலும்பொழுதே தூய சவேரியார் கல்லூரி வீரமாமுனிவர் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும், அழகப்பர் கல்லூரியின் மாணவர் தலைவராகவும் விளங்கியவர்.மூதறிஞர் வ.சுப.மாணிக்கனாரின் பாராட்டுதலைப் பெற்ற வண்டமிழ்த்தொண்டர் இவர்.

பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் தனித்தமிழ் இலக்கியக்கழகம்,மாநிலத் தமிழ்ச்சங்கம், உலகத் தமிழ்க்கழகம், குறளாயம், உலகத் திருக்குறள் மையம், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம், குறள் அரசுக்கழகம், திருவருட்பேரவை, கம்பன் கழகம் என்னும் பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்துள்ளார்.

பேராசிரியர் பா.வளன்அரசு அவர்கள் திருநெல்வேலித் திருமண்டில ஆசிரியர் வீட்டமைப்புச்சங்கம் வாயிலாக மீட்பர் நகர் உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.மாவட்ட ஆட்சியர் கி.தனவேல் இ.ஆ.ப. அவர்களிடம் 55 செண்டு நிலம் பெற்றுத் தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு மையம் நிறுவியவர். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உருவாகிடத் தேவையான அடிப்படைப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் என்று இவரைக் குறிப்பிடலாம்.

தனித்தமிழ் இலக்கியக்கழகம் வாயிலாக இருநூற்று ஐம்பது புலவர் பெருமக்களையும் ஐம்பது ஆய்வறிஞர்களையும் ஆயிரக்கணக்கான மாணவப் பேச்சாளர்களையும் உருவாக்கிய பெருமைக்கு உரியவர்.

மாநிலத் தமிழ்ச்சங்கம் வாயிலாக முத்தமிழ் விழா, ஐந்தமிழ் விழா, எழுதமிழ் விழா, பன்முகத் தமிழ் விழாக்களை நடத்தியுள்ளார். மாதந்தோறும் மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் இருபது சொற்பொழிவுகளைத் தொடர்ந்து நிகழச்செய்கின்றார்.

உலகத் திருக்குறள் மையம் வாயிலாகப் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மணிகளைத் திருக்குறள் பயில வைத்தும் எழுபத்திரண்டு அறிஞர் பெருமக்களைப் பாராட்டியும் சான்றிதழ் வழங்கிய பெருமைக்கு உரியவர்.

உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் மதுரை மாநகரில் திருக்குறள் ஆய்வரங்கம் ஏற்பாடு செய்து திருக்குறள் நூல்கள் பல தந்துள்ளார்.

கதிரவன் பதிப்பகம் வாயிலாக நூல்கள் பல தந்துள்ளார்.பேராசிரியர் வி.மரிய அந்தோனி எழுதிய விவிலிய வாழ்வியல் காப்பியமான அருளவதாரம் வெளிவரவும் ஒளிதரவும் உறுதுணைபுரிந்துள்ளார்.

குறள் அரசுக் கழகம் உருவாக்கித் தமிழகத்தின் முப்பத்திரண்டு மாவட்டங்களிலும் பொறுப்பாளரை உருவாக்கித் திருக்குறளை வாழ்வியல் ஆக்கிட ஊக்கத்துடன் அயராது செய்லபட்டு வருகின்றார்.


கட்டுரைக் களஞ்சியம், நாடும் ஏடும், தேம்பாவணித்திறன், தமிழ்நெஞ்சங்கள், தமிழகப் புலவர் குழு அணியும் பணியும்,வண்டமிழ்த்தொண்டர் பெருமக்கள்,விவிலியக் கருத்தரங்கம், திருக்குறள் விளக்கவுரை ஆகிய பல நூல்களை எழுதியுள்ளார். அந்தமான், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர்,இசுரேல்,உரோமாபுரி ஆகிய பல இடங்களுக்கும் பறந்து சென்று பைந்தமிழ்ப்பணிபுரிந்துள்ளார்.

அருண்மொழிச்செல்வர் முதலான முப்பத்தாறு விருதுகள் பெற்றவர். பா.வளன்அரசு அவர்கள் பேச்சாலும் எழுத்தாலும் செயலாலும் சிந்தனையாலும் தமிழ் வளர்ச்சிக்காகவும் எழுச்சிக்காகவும் மறுமலர்ச்சிக்காகவும் தொடர்ந்து தொண்டாற்றி வருபவர்.மாநிலத் தமிழ்ச் சங்கத்தின் இணைச்செயலாளராகவும், தமிழகப் புலவர் குழுவின் துணைத்தலைவராகவும், குறள் அரசுக்கழகத்தின் தலைவராகவும் திகழ்கின்றார்.

ஆற்றொழுக்காகத் தனித்தமிழ் பேசுவதைக் கேட்க வேண்டுமா?அருவிபோல வரும் அருந்தமிழ் இன்பம் பெற வேண்டுமா?
பேராசிரியரை அழைக்கலாம்.

தொடர்புக்கு:
முனைவர் பா.வளன்அரசு அவர்கள்,
பதுவை இல்லம்,
3,நெல்லை நயினார் தெரு,
பாளையங்கோட்டை-627002
திருநெல்வேலி மாவட்டம்,தமிழ்நாடு

செல்பேசி : + 91 9442573900

7 கருத்துகள்:

தருமி சொன்னது…

எனக்கும் ஆசிரியரோ என்று நினைக்கிறேன் (1960 -61)
ஒரு புகைப்படம் இட்டிருந்தால் நலமாயிருக்குமே .

பெயரில்லா சொன்னது…

நல்ல கட்டுரை.

பேராசிரியர் பிறந்த ஊர் பாளையங்கோட்டை என்றிருக்கிறது. அது மணப்பாடு என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன். ஏனெனில் அவரின் நெருங்கிய உறவினரை எங்களுக்கு மணப்பாட்டில் தெரியும் அதனால்தான்.

alagan சொன்னது…

மூதறிஞர் செம்மல் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க்குருகுலத்தில் பண்பட்ட
முனைவர் பா.வளன் அரசு அய்யா அவர்களை சென்னையில் மாநகர் தமிழ் சங்கம்
நிகழ்வுகளில் சந்தித்து அவருடைய உரைகளை கேட்டிருக்கிறேன்.மீண்டும் அவரை நேரில் சந்தித்த உணர்வு ஏற்படுகிறது.
கட்டுரை அருமை.வளன் அரசு அய்யாவின் தமிழ்ப் பணிக்கு நாமும்,நாடும் துணை நிற்க வேண்டும்....
அழகப்பன்

நண்பர்கள் உலகம் சொன்னது…

தங்களது வலைத்தளத்தைப் பார்வையிட இன்றுதான் வாய்ப்புக் கிடைத்தது.
மிக அருமையான சேவை.தொடரட்டும்!

நண்பர்கள் உலகம் சொன்னது…

That's Tamil-தட்சு தமிழ் -என்பதை
'இதுவே தமிழ்/இதுவன்றோ தமிழ்/இதுதான் தமிழ்-என்று எழுதலாமே?

பெயரில்லா சொன்னது…

பேராசிரியர் பா.வளன் அரசின் தமிழ்ப்பணியின் ஒரு சிறப்பு என்னவென்றால் அவரின் தனித்தமிழ் ஆர்வமும் செயலும். இதிலென்ன வியப்பு என்று கேட்டீர்களென்றால் -

தனித்தமிழ் அன்றும் இன்றும் எள்ளி நகையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது மறைமலையடிகளாரின் காலம் தொடங்கி.

நம்பேராசியரின் நற்பணி தொடங்கப்பட்ட காலத்தில் மிகவும் நகையாடப்பட்டது. இன்றும் வலைதளங்களில் நகையாடுவோர் நிறைந்து காணப்படுகின்றனர்.

’தமிழ் தனித்து நிற்காது. வடமொழி கலப்பில்லாமல் தமிழே இல்லை’ என்று பரிகாசம் பேசியவர்களுக்கு, ‘ஏன் முடியாது?’ எனக்கேட்டவர்களுள் நம் பேராசிரியரும் ஒருவர்.

ஒரு மொழி தனித்து - அஃதாவது பிறமொழி கலப்பில்லாமல் - நிற்கவியலுமானால் ஒழிய அது செம்மொழியாகா.

தமிழுக்கு அப்பெருமையுண்டு. அதை வெளிக்காட்டி நம்மைப் பேருவகையடையச் செய்தோரில் நம்பேராசிரியரும் ஒருவர்.

என் தாய்மொழி தமிழ் இல்லையென்றாலும், தமிழின் பெருமையில் எனக்கு மகிழ்ச்சியே. முன்னோடிகள் கால்டுவெல்லுக்கும், போப்புக்கும் இல்லையா?

முனைவர் மு.இளங்கோவனின் பதிவு பாராட்டுக்குரியது.

தமிழ் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகொடி நூறாயிரம்...!

பகுத்தறிவு சொன்னது…

நீங்கள் எழுதியிருக்கும் அத்தனை கருத்துகளும் உண்மை! பேராசிரியர் பா. வளன் அரசு அவர்கள் பாளையங்கோட்டை மாநிலத் தமிழ்ச்சங்கத்தில் நடத்தும் கூட்டங்களுக்குச் சென்றிருக்கிறேன். சரியான நேரத்திற்குக் கூட்டத்தைத் தொடங்குவது, உரிய பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுப்பது, சரியான நேரத்தில் கூட்டத்தை முடிப்பது என மிகச் செம்மையாகச் செய்வார். எனக்குத் தெரிய இரண்டாயிரமாவது ஆண்டில் இருந்து இன்றுவரை மாதம் மாநிலத்தமிழ்ச்சங்கத்தில் மட்டும் ஆயிரம் கூட்டங்களுக்கு மேல் நடத்தியிருப்பார். இக்கூட்டங்கள் தவிர மகாராச நகர் திருக்குறள் கூட்டம், தமிழ்வளர்ச்சி பண்பாட்டு மையக் கூட்டம் என இன்னும் ஓர் ஐந்நூறு கூட்டங்களைச் சேர்க்கலாம். செந்தமிழ் அந்தணர் இரா. இளங்குமரன், தமிழர் ஆன்மவியல் இயக்கத்தின் நிறுவனர் முனைவர் மு. தெய்வநாயகம், தோழர் தியாகு, அறிஞர் ம.சோ.விக்டர் ஆகியோரை எல்லாம் பாளைக்கு அழைத்து வந்து பேசச் செய்த பெருமை அவருக்கு உண்டு. தமிழ் உணர்வையும் தமிழின உணர்வையும் தழைக்கச் செய்ய அயராது பாடுபட்டு வரும் ஒரு தமிழ்த்தேனி அவர்!