நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வியாழன், 30 செப்டம்பர், 2010

தஞ்சாவூர் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்-படங்கள்


பார்வையாளர்கள்

தஞ்சாவூரை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவோம் என்று செம்மொழி மாநாட்டுக்கு வந்திருந்த பெரியார் வலைக்காட்சியின் பொறுப்பாளர் திரு.பிரின்சு ஒரு விருப்பம் தெரிவித்தார். இதுகுறித்து இருவரும் சென்னையில் மீண்டும் ஒருமுறை சந்தித்து நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தோம். இந்த மாதம்(செப்டம்பர்) 27 ஆம் நாள் நடத்துவோம் என்று 23.ஆம் நாள் குறிப்பிட்டார். நானும் இசைவு தெரிவிதேன். உடனடியாக அழைப்பிதழ் ஆயத்தம் ஆனது.

இணையத்தில் என் பக்கத்திலும் விடுதலை நாளேட்டிலும் செய்தி வெளியானது முதல் தமிழ் இணையப் பயிலரங்கு நடத்துவதில் உண்மையான ஆர்வம்கொண்ட அன்பர்கள் சிலர் மின்னஞ்சலிலும் தொலைபேசியிலும் வாழ்த்து கூறியதுடன் நில்லாமல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு என் முயற்சியைப் பெருந்தன்மையுடன் குறிப்பிட்டு அனைத்து வகையிலும் உதவ வேண்டினர். அவ்வகையில் மருத்துவர் சோம.இளங்கோவன்,முனைவர் நா.கணேசன்,திருவாளர் ஆல்பர்ட்டு பெர்னான்டோ உள்ளிட்டவர்களின் தமிழன்பை இங்குக் குறிப்பிட வேண்டும்.

26.09.2010 மாலை 3 மணிக்குப் புதுச்சேரியில் பேருந்தில் ஏறி அமர்ந்தேன். ஒருமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு பேருந்து புறப்பட்டது. கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, குடந்தை, தஞ்சாவூர் சென்று சேரும்பொழுது இரவு 10.30 மணி.வழியில் என் நண்பர் பேராசிரியர் இரா.சந்திரசேகரன் அவர்கள் தம் அன்பான வாழ்த்துகூறி தொலைபேசியில் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தஞ்சையில் இராசராசன் விழா நிறைவுநாள் என்பதால் மக்கள் திரள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பெயர்ந்து சென்றது.காவலர்கள் எங்கும் நிறைந்திருந்தனர். புதிய பேருந்து நிலையத்தில் நண்பர் பிரின்சு அவர்கள் எனக்காக ஒரு மூடுந்துவண்டியில் வந்து நின்றார். இரவு உணவை அங்கு முடித்துகொண்டு நேரே பல்கலைக்கழக வளாகத்துக்குச் சென்றோம். புத்தாயிரம் ஆண்டு குடிலில் எனக்கு உயர்தர அறை ஒதுக்கியிருந்தனர். இயற்கையான அமைப்பில் கட்டப்பட்ட குடில் என்று நண்பர் பிரின்சு அந்த அறையின் சிறப்பைக் கூறினார். இயற்கை எழில்சூழ்ந்த அந்த அறையில் தங்குவது ஒரு மகிழ்வாக இருந்தது. நெடுநாழிகை யானும் பிரின்சும் உலக நடப்புகளையும் தமிழக, உலக அரசியில் நடப்புகளையும் உரையாடிப் பகிர்ந்துகொண்டோம். காலையில் விரைந்து எழ வேண்டும் என்ற ஒப்பந்தப்படி இருவரும் இரவு 12 மணிக்கு மேல் படுக்கைக்குச் சென்றோம்.

காலையில் வைகறையில் எழுந்து என் காலைக் கடன்களை முடித்துக்கொண்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குப் போகும் வழியில் பழகுமுகாம் குழந்தைகளுடன் அமர்ந்து ஒன்றாக உணவு உண்டமை மகிழ்ச்சிக்குரிய நிகழ்வாகும். தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து குழந்தைகளை அழைத்து வந்து அவர்களை அன்புடன் பழகவும் அறிவுசார்ந்த செய்திகளை அறியவும் நற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் இந்தப் பயிற்சிமுகாம் ஏற்பாடாகி இருந்தது. ஆண்,பெண் சிறுவர்கள் இந்தப் பயிலரங்கில் பெற்றோர் நினைவு மறந்து மகிழ்ச்சியாக இருந்ததை நேரில் கண்டு வியந்தேன்.

சீருடையில் சிறுவர்கள் பெரியார் பிஞ்சுகளாக உண்மையில் தெரிந்தனர்.நான் 9.30 மணியளவில் தொடக்க விழா நடைபெறும் அரங்கத்திற்குப் புறப்பட அணியமானேன். தொடக்கவிழா ஒரு வகுப்பறையில் நடந்தது.மாணவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

பொறியியல் பயிலும் மாணவர்களும், முதுநிலைக் கணிப்பொறிப் பயன்பாட்டியல் மாணவர்களும் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர். பல்கலைக்கழகப் புலமுதன்மையர் திரு.இரா.கந்தசாமி அவர்கள் கலந்துகொண்டு தொடக்க உரையாற்றினார்.தமிழ் வழி இணையத்தை அறிவதன் சிறப்பை விளக்கினார்.பேராசிரியர் அருணாசலம் அவர்கள் என்னை அரங்கிற்கு அறிமுகம் செய்து பெருந்தன்மையுடன் பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

பேராசிரியர் அருணாசலம் அவர்கள் திருப்பனந்தாள் கல்லூரியில் நான் இளங்கலை நிறைவாண்டு பயின்றபொழுது அவர் இளம் முனைவர்பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்பொழுதே மூத்த மாணவர்களின் அன்புக்கு உரியவனாக நான் விளங்கிய பழைய நிகழ்வுகளை எடுத்துக்காட்டி அவர் ஒரு பெரும் பண்பாளர் என்று உறுதிப்படுத்தினார். ஏனெனில் இன்றைய கல்வி உலகத்தினர் பிறரைத் தாழ்த்துவதன் வழியாகத் தம்மை உயர்த்திப் பார்ப்பர்.ஆனால் பேராசிரியர் அருணாசலம் அவர்கள் மற்றவர்களை உயர்த்திப் பார்க்கும் பண்பால் தாமும் உயர்ந்து நின்றார்.

நான் இன்று நடைபெறும் பயிலரங்கில் பேசப்படும் செய்திகளையும் பயிலரங்கு நடப்பதன் நோக்கத்தையும் அரங்கத்திற்கு எடுத்துக்காட்டினேன். அனைவரும் மகிழ்ச்சியுடன் என் உரையைச் செவி மடுத்தனர். செல்வி இளங்கவின் வரவேற்புரையாற்றவும், செல்வி ஈழவேங்கை அவர்கள் நன்றியுரையாற்றவும் தொடக்க விழா இனிதே நிறைவுற்றது.
தொடக்க விழாவுக்குப் பிறகு சிறிது தேநீர் அருந்தி, கணிப்பொறி ஆய்வுக்கூடத்தில் கூடினோம். அங்கு என் மடிக்கணினியைப் பொருத்திப் பேராசிரியர் அறிவுச்செல்வன் அவர்கள் காட்சி விளக்கதுடன் என் உரை அமைய உதவினார். காலை 11 மணியளிவில் தொடங்கிய என் உரை 1 மணி வரை நீண்டது. தமிழ் இணைய வரலாற்றை நினைவுப்படுத்தி,தமிழ் இணையத்திற்கு உழைத்தவர்களை நன்றியுடன் நினைவுகூர்ந்தேன்.புகழ்பெற்ற பல தளங்களை அறிமுகம் செய்தேன். தமிழ்த்தட்டச்சு, எழுத்துரு சிக்கல், திரட்டிகள், வலைப்பூக்கள், மின்னிதழ்கள் பற்றி தேவையான இடங்களில் சுருக்கியும் உரிய இடங்களில் பெருக்கியும் என் உரையை அமைத்துக்கொண்டேன்.

பகலுணவுக்கு மீண்டும் உணவுக்கூடம் சென்றோம். அங்கு மழலைகள் பழகுமுகாம் முடித்துக்கொண்டு உணவுக்கு வந்திருந்தனர்.வந்த இளம் பிஞ்சுகளை ஆசிரியர் கி.வீரமணி ஐயா அவர்கள் அன்புடன் ஒவ்வொருவராக வினவி ஊக்கப்படுத்தினார்கள். பிள்ளைகளுடன் பழகுவதில் ஆசிரியர் பெரிய ஈடுபாடு காட்டினார். என் நிகழ்ச்சிப்போக்கு பற்றி நண்பர்கள் ஆசிரியர் கி.வீரமணி ஐயாவிடம் அறிமுகப்படுத்தினர். பிற்பகல் நிகழ்வுக்கு வருவாதக உரைத்து ஊக்கப்படுத்தினார்கள். அனைவரும் உணவு உண்டோம்.

மீண்டும் பயிலரங்கம் இரண்டு மணிக்குத் தொடங்கியது. வலைப்பூ உருவாக்கம் பயிற்சியாக நடந்தது. முதல் இரண்டு படி நிலைகளைச் செய்தபொழுது வலைப்பூ உருவாக்கத்தில் சிக்கல் நேர்ந்தது. பல்கலைக்கழகத்தில் சில பயன்பாடுகளுக்கு இணையதளத்தில் கட்டுப்பாடு இருந்ததால் புதிய வலைப்பூ உருவாக்கமுடியவில்லை என்று நினைத்தேன். பிறகு என் கணக்கைத் திறந்து செய்தி உள்ளிடல், தவறு களைதல், படம் இணைத்தல், ஒலி,ஒளி இணைத்தல், இணைப்பு இணைத்தல் பற்றி செய்முறையாக விளக்கினேன். கலந்துகொண்ட அனைவரும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பதால் என்னை விட அவர்கள் வேகமாகப் புரிந்துகொள்வார்கள் என்று நம்பினேன். பின்னர் விக்கிப்பீடியா, விக்சனரி பற்றியும் அதன் தேவை பற்றியும் செய்தி உள்ளிடல் பற்றியும் விளக்கினேன். மின்னிதழ்களின் பயன்பாடுகளை விளக்கிச் சுரதா தளத்தின் சிறப்பைப் பயிற்சிபெற்றவர்களுக்கு எடுத்துரைத்தேன்.

5 மணி வரை இது நீண்டது.இந்த நேரத்தில் தமிழர்தலைவர் கி.வீரமணி ஐயா அவர்கள் அரங்கத்திற்கு வந்தார்கள்.அவர்களுடன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர், புலமுதன்மையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வந்திருந்தனர். மேலும் கவிஞர் கலி.பூங்குன்றன் ஐயா உள்ளிட்ட அன்பர்களும் வந்திருந்தனர். காலைமுதல் நடந்த பயிலரங்க நிகழ்வுகளின் சுருக்கத்தை ஆசிரியர் கி.வீரமணி ஐயா உள்ளிட்டவர்களுக்கு நினைவூட்டினேன். அனைவரும் மகிழ்ந்தனர். ஆசிரியர் அவர்கள் சுருக்கமாக வாழ்த்துரை வழங்கினார்கள். அப்பொழுது எடுக்கப்பெற்ற ஒளிப்படத்தை அவர்கள் முன்பாக வலைப்பூவில் ஏற்றிக்காட்டினேன். அரங்கத்தினர் மகிழ்ந்து கைதட்டி ஆரவாரித்தனர். அதன் பிறகு தம் கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் இத்தகு பயிலரங்குகளை நடத்தி அறிவுப்புரட்சி நடத்த வேண்டும் என்று அன்புக்கட்டளை இட்டார்கள். அனைவரும் அதனை வழிமொழிந்தனர்.நிகழ்ச்சி நிறைவுற்றது. மீண்டும் அனைவரிடமும் விடைபெற்றுக்கொண்டு தஞ்சையில் 7 மணியளவில் பேருந்தேறி, நள்ளிரவு 1.30 மணிக்குப் புதுச்சேரி வந்துசேர்ந்தேன்.


மு.இளங்கோவன்,கி.வீரமணி,பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள்


அரங்கில் மு.இ,புலமுதன்மையர் இரா.கந்தசாமி,பேராசிரியர் அறிவுச்செல்வன்


பேராசிரியர் அருணாசலம் உரை


உரையை உற்றுக் கேட்கும் மாணவிகள்


ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ள மாணவிகள்


பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்


பயிற்சிபெறும் மாணவர்கள்


மு.இளங்கோவன் உரை


மாணவர்களுடன் நான்


அருட்தந்தையாருடன்...


நன்றியுரை வழங்கும் ஈழவேங்கை

8 கருத்துகள்:

Arasu சொன்னது…

விடுதலை இணையநாளிதழிலும் தமிழ் மணத்திலும் செய்தியறிந்து மிகவும் மகிழ்கிறேன். மனமார்ந்த பாராட்டுக்கள். உங்கள் தமிழ்ப்பணி தந்தை பெரியார் கல்வி நிறுவனங்களில் தொடர்வது குறித்து உலகளாவிய பெரியார் மாணவர்கள் பெரிதும் மகிழ்வார்கள். தந்தை பெரியார் மணியம்மையார் பல்கலைக்கழக தமிழ் இணையப் பயிலரங்கச் செய்தியும் படங்களும் விரிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

- அரசு செல்லைய்யா

முனைவர் மு.இளங்கோவன் சொன்னது…

அன்புள்ள அரசு ஐயா
தங்கள் அன்பான ஊக்குவிப்பிற்கு நன்றி.
மு.இளங்கோவன்

J.P Josephine baba சொன்னது…

வாழ்த்துக்கள் நண்பர் முனைவர் மு இளங்கோவன் அவர்களே. மேலும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துகின்றேன்.

sivapillai சொன்னது…

வணக்கம் இளங்கோ
நல்ல உங்கள்முயற்சிக்கு வாழ்த்துகள். அடுத்த தடவை நான் வரும் போது சேர்ந்து கொள்கிறேன். டிசம்பர் உவ்விடம் வருகிறேன்.

alagan சொன்னது…

தங்கள் தனித்தமிழ்க் கட்டுரைகளைப் படிக்கும் பொழுது தங்களுடன் நேரில் பயணித்து
நிகழ்விலும், முன் வரிசையில் இருந்து கலந்து கொண்ட அனுபவம் ஏற்படுகிறது.
பாராட்டுக்கள். தங்களின் தன்னிகரில்லாத 'தமிழ் இணையப் பயிலரங்க' சேவை
என்றென்றும் வாழ்க! வளர்க!
அழகப்பன்

இரா.கதிர்வேல் சொன்னது…

நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் B.E(Computer Science Engg) மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன்.உங்களுடைய வலைப்பூவைக் கண்டேன் நிறைய பயனுள்ள கட்டுரைகளை எழுதியுள்ளீர்கள்.உங்களுடைய வலைப்பூவை முழுவதும் படித்து தமிழ் தொடர்பாகவும் , தமிழ் இணையம் தொடர்பாகவும் தெரிந்து கொள்ள வேண்டும் என உறுதிக்கொண்டுள்ளேன்.நீங்கள் எங்கள் பல்கலைக்கழத்திற்கு வந்து இணைய பயிலரங்கம் நடத்தியது எனக்கு தெரியாது(ஒருவேளை எங்கள் வகுப்பிற்கு தெரியப்படுத்தாமல் இருந்திருக்கலாம் ).எதார்த்தாமாக என்னுடைய நண்பர் (வேறு வகுப்பைச்சேர்ந்தவர்) நீங்கள் நடத்திய பயிலரங்கத்தில் அளிக்கப்பட்ட சான்றிதழைக் காண்பித்தார் நான் மிக்க மகிழ்ச்சியோடு வாங்கிப் பார்த்தேன்.கணினியில் தமிழைப் பயன்படுத்துவதில் எனக்கு மிகவும் ஆர்வம் அதிகம்.நான் லினக்ஸ் இயங்குதளத்தைப் பற்றிய ஒரு வலைப்பூவை தமிழில் நடத்திக்கொண்டு வருகிறேன்.எனது வலைப்பூவின் நோக்கம் லினக்ஸ் தொழில்நுட்பத்தை தமிழில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான்.உங்களுக்கு நான் இந்த கருத்துரையினை தட்டச்சு செய்ததுகூட உபுண்டு 10.10 லினக்ஸில் தான் விண்டோஸ் இயங்குதளங்களைவிட தமிழுக்கு லினக்ஸி நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறது.தமிழ் வசதியினை கொண்டு வருவதும் மிக எளிதாக உள்ளது.எங்களுடைய பல்கலைக்கழகத்திற்கு வந்து எங்களுடைய மாணவர்கள் அனைவருக்கும் தமிழ் இணையத்தைப் பற்றி விழிப்புணர்வு மற்றும் கற்பித்தமைக்கு ஆயிரமாயிரம் நன்றிகள்.
இப்படிக்கு உங்கள் மாணவன்,வாசகன்
இரா.கதிர்வேல்
http://gnutamil.blogspot.com

MANIKANDAN சொன்னது…

வணக்கம்

பா.மணிகண்டன் .....
நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில்(pmu) B.E(Computer Science Engg) மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் எங்கள் பல்கலைக்கழகத்துக்கு வந்து தமிழ் இணைய பயிலரங்கு நடத்தியது பற்றி இப்பொழுதுதான் எனக்கு தெரியும்.இது பற்றி கருத்துரையில் உங்களிடம் பகிர்ந்தது பற்றி என் நண்பன் கதிர்வேல் கூறினான்.நீங்கள் எழுதிய பதிவை படித்தவுடன் அந்த தமிழ் இணைய பயிலரங்கு கூட்டத்தில் நானும் ஒருவனாக இருந்தது போன்ற சுவையை கண்டேன். தமிழ் இணைய சார்ந்த சில பதிவுகளை படித்தேன்.அதில் நான் தேடிய பல தமிழ் சந்தேகத்தை தீர்த்துக் கொண்டேன் அது மிகவும் எங்களை போல வளரும் இளைஞர் சமுதாயத்துக்கு தேவையானவை.
நான் கணினி துறை சமந்தமாக "கணினியில் அறிவியில் மாணவர்களுக்காக " என்ற தலைப்பில் வலைப்பூ ஓன்று நடத்தி வருகிறேன்.எங்களை போன்றவர்கள் தமிழை வளர்ப்பதுக்கு என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்? கணினி துறையில் தமிழை வளர்ப்பதற்கு லினக்ஸ் இயங்குதளத்தான் சிறந்தது விளங்கிகிறது.உங்களுடைய சேவை எங்களுக்கு தேவை.

நன்றி !..
இப்படிக்கு,
மணிகண்டன்.பா
காரைக்குடி,
www.kaniniariviyal.blogspot.com

சரவணன்.D சொன்னது…

நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் B.E(CIVIL Engg) மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கிறேன்.உங்களுடைய வலைப்பூவைக் கண்டேன் நிறைய பயனுள்ள கட்டுரைகள் பல எழுதியுள்ளீர்கள்.நான் லினக்ஸ் இயங்குதளத்தைப் பற்றிய ஒரு வலைப்பூவை தமிழில் எழுதிக்கொண்டு வருகிறேன்.எனது வலைப்பூவின் நோக்கம் லினக்ஸ்-ஐ எளிய மக்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது.ஏனெனில் லினக்ஸ்-இல் மென்பொருள்கள் காசு கொடுத்து வாங்க தேவை இல்லை அனைத்தும் சுதந்திர மென்பொருள் விண்டோஸ் போன்று இல்லை லினக்ஸ். எனது பல்கலைக்கழகத்திற்கு தாங்கள் வந்து இணையம் பற்றி விழிப்புணர்ச்சி நடத்தியதற்கு PMU மாணவர்களின் மனமார்ந்த நன்றிகள்.
இப்படிக்கு உங்கள் ரசிகன்,
D.சரவணன்
http://gnometamil.blogspot.com/