புதன், 23 செப்டம்பர், 2009
கவிஞர் பாலா இயற்கை எய்தினார்!
பேராசிரியர் பாலா
கவிஞர் பாலா என அறியப்பட்ட பேராசிரியர் பாலச்சந்திரன் அவர்கள் 22.09.2009 சென்னையில் தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை இன்று
(23.09.2009) காலை கல்லூரிக்குச் சென்றபொழுது நண்பர்கள் சொன்னார்கள்.
நான் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் பாலா பற்றி நன்கு அறிந்தேன்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் என் முனைவர் பட்ட ஆய்வு நடந்துகொண்டிருந்தபொழுது பேராசிரியரின் புதுக்கவிதை ஒரு புதுப்பார்வை என்ற நூல் என்னை ஈர்த்தது.அவரை நாகப்பட்டினத்தில் நடந்த பேராசிரியர் அரசமுருகுபாண்டியன் அவர்களின் திருமணத்தில் முதன்முதல் கண்டேன்.(1994அளவில்).அரசமுருகுபாண்டியனின் சில தலித் கவிதைகளும் என்ற நூலை வெளியிட்டுப் பேராசிரியர் ஆற்றிய உரை சிறப்பிற்கு உரிய ஒன்றாகும்.அதன் பிறகு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த பல்வேறு இலக்கியக்கருத்தரங்குகளில் கண்டு உரையாடியுள்ளேன்.அவரின் எளிமையும் அன்பு ததும்பும் சொற்களும் அவரை நம் உள்ளத்தில் பதியச்செய்யும்.அவரைக் காணுந்தோறும் அண்ணன் அரச முருகு பாண்டியனைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள் என்பார்.அண்ணனுக்குச் செய்தி சொல்வேன்.வழக்கமான அவர் சோம்பலால் தொடர்புகொள்ள மாட்டார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கவிஞர் பாலா பணி செய்ததால் பல்கலைக்கழகத்திற்குப் பெருமை ஏற்பட்டது.சாகித்திய அகாதெமி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர்.பேராசிரியர் சிற்பி உள்ளிட்டவர்களின் அன்புக்குரியவராக விளங்கியவர்.தமிழ்நாட்டு இளைஞர்களை அரவணைத்துக் கவிதைத் துறைகளில் அவர்களை ஈடுபாடு கொள்ளச்செய்தவர்.
மொழிபெயர்ப்புப் பணிகளாலும் படைப்பு நூல்களாலும் தமிழ் உலகில் அவர் புகழ் என்றும் நின்று நிலவும்.
பேராசிரியர் பாலா அவர்களை இழந்து வாடும் பேராசிரியர்கள்,மாணவர்கள்,அவர்தம் குடும்பத்தார் என அனைவருக்கும் என் ஆழ்ந்து வருத்தமும் இரங்கலும் உரிய!
பேரா.பாலா பற்றி மேலும் அறிய
http://www.chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=ce81bb2d-cb83-440b-abf5-9e976c3ec5e8&CATEGORYNAME=TCHN
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
2 கருத்துகள்:
மிகவும் வருத்தமான செய்தி! புதுக்கவிதை தொடர்பான அவரது புத்தகம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று. அன்னாரது குடும்பத்தார்க்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்.
வருந்த தக்க செய்தி. அவருடைய இழப்பு தமிழ் ஆர்வலர்களுக்கு ஈட்டு செய்யமுடியாத இழப்பு.அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
கருத்துரையிடுக