நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

செவ்வாய், 15 செப்டம்பர், 2009

நவிரமலையில் இடி விழுந்து நான்கு பேர் இறப்பு

சங்க இலக்கியங்களுள் பத்துப்பாட்டு வரிசையில் வைத்து எண்ணப்படும் நூல் மலைபடுகடாம் ஆகும்.இந்த நூல் செங்கண்மாவை(இன்றைய செங்கம்) ஆண்ட நன்னன்சேய் நன்னன் என்ற அரசனைப் போற்றிப்பாடும் நூலாகும்.இந்தப் பகுதி அழகிய மலையழகு உடையது.சங்க நூல்களில் நவிரமலை என்று குறிப்பிடப்படும் பகுதி இன்று பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையில் பல்வேறு ஓசைகள் எழும் என மலைபடுகடாம் நூல் குறிப்பிடும்.இந்த மலையை நான்காண்டுகளுக்கு முன் நான் நண்பர்கள் துணையுடன் ஏறி வந்தேன்(15.08.2005).அப்பொழுது எங்களுக்கு வழிகாட்டிய சாமியார் அவர்கள் இந்த மலையில் முன்பு ஏற்பட்ட இடி விபத்து பற்றி சொன்னார்.அவரும் அதில் பாதிக்கப்பட்டவர் என்றார்.அது பற்றி முன்பே என்பதிவில் எழுதியுள்ளேன்.

நேற்று இரவு(13.09.09) ஏற்பட்ட கடும் மழை,இடி காரணமாகச் சென்னையைச் சேர்ந்த நால்வர் இந்த மலையில் வழிபாட்டுக்குத் தங்கியிருந்தபொழுது இடி விழுந்து இறந்ததாகத் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.கோயிலில் வழிபாடு நிகழ்த்த சென்ற சென்னையைச் சேர்ந்த நால்வர் இரவு கோயிலில் படுத்திருந்தனர்.இரவில் பெய்த மழையுடன் இடி இடித்து நால்வரும் நான்கடி உயரத்துக்குத் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த ஆனந்த ராஜ்,இராஜி.கஜபதி,பாலன் ஆகிய நால்வரும் அதே இடத்தில் இறந்துள்ளனர்.இவர்களுடன் தங்கியிருந்த ஏனைய பதினைந்து பேரும் சிறிய காயங்களுடன் உயிர்பிழைத்தனர்.செய்தியறிந்த காவல் துறையினரும் மீட்புக்குழுவினரும் மலை உச்சிக்குச் சென்று இறந்தவர்களை ஏனை கட்டித் தூக்கிவந்தனர்.

மேலும் செங்கம் பகுதியில் பெய்த மழை இடியால் 5 மாடுகளும் 19 ஆடுகளும் இறந்துள்ளன.அடிக்கடி உயிர்ச்சேதம் விளைவிக்கும் இடியிலிருந்து மக்களையும் ஆடு,மாடுகளையும் காக்க மலையுச்சியில் இடி தாங்கி வசதி அமைப்பது அரசின் கடமையாக இருக்கவேண்டும்.

2 கருத்துகள்:

RAGUNATHAN சொன்னது…

ஐயா, தற்காலச் செய்தியை சங்க கால குறிப்புகளுடன் வழங்கியுள்ளீர்கள். மிக நன்று. எனினும் மாண்டவர்களை நினைக்கும் போது உள்ளம் வருந்துகிறது.

ஆரூரன் விசுவநாதன் சொன்னது…

சிறிய இடைவெளிக்குப் பிறகு, உங்கள் வலைக்கு வருகிறேன்.

வடிவமைப்பு அருமை. மிக அவசியமான இடுகை

நன்றி