நிகழ்வுகள்

// நன்றாற்ற லுள்ளுந் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //

வெள்ளி, 19 ஜூன், 2009

இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னியமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

எழுத்தாளர் புன்னியாமீன் 

     இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004 ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர். மேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர். 

     2006ஆம் ஆண்டில் இலண்டனில் வசிக்கும் புகழ்பெற்ற நூலகவியலாளர் திருவாளர் என். செல்வராஜா அவர்களின் வழிகாட்டலுடன் 'அயோத்தி நூலக சேவை'யின் பரிந்துரையின்படி 'இலண்டன் புக்ஸ்' எப்ரோட் நிறுவனத்தின் மூலமாக 4 மில்லியன் உரூபாய்க்கு மேலாகப் பாடசாலைப் புத்தகங்களைப் பெற்று இலங்கையில் உள்ள 115 நூல் நிலையங்களுக்குப் பெறுமதி மிக்க நூல்களை வழங்கினர். அதே நேரம் சிந்தனை வட்டத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு முதல் அனாதைச் சிறுவர்கள், அகதிச் சிறுவர்கள் போன்ற, சராசரியாக 300க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் விளம்பரங்கள் இன்றி உதவிகளை வழங்கி வருகின்றனர். தற்போது வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சிந்தனைவட்டம், இலண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்.நெற் இணையத்தளத்துடனும், சில புரவலர்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து இருபத்து எட்டு இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5 ஆம் தர புலமைப் பரிசில் தேர்வுக்குத் தோற்றும் நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு சிந்தனை வட்டப் பணிப்பாளர் எழுத்தாளரும் பதிப்பாளருமான புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது. 

 கேள்வி: வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி சற்று விளக்க முடியுமா? 

 பதில்: இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து 'புஜ்ய கல்வி அலகை' எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை. முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். இங்கு எந்த மக்களுமே இல்லை. அண்மைக் கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதி முகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்த அறிவித்தலின்படி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரி நிலையங்களில் உள்ளனர். வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரி நிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது. 

 கேள்வி : இதனை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவீர்கள்? 

 பதில் : இடம் பெயர்ந்துள்ள மாணவர்கள் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம். ஒன்று இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களை அவதானிக்குமிடத்து அவர்கள் அதிகளவிலான மானசீகமான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் மனோநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர். இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடறுத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பலப்பதும் உண்டு. இங்குள்ள நிலையை இன்னும் தெளிவு படுத்துவதாயின் ஆரம்ப வகுப்பில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு கற்பிக்கும் அவலமும் நலன்புரிநிலையப் பாடசாலைகளில் உண்டு. எனவே மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்பு படுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ள முடியாதிருப்பதைத் தங்களால் உணர்ந்து கொள்ள முடியும். கேள்வி: மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்புக்களைக் களைவதற்காக யாதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா? பதில்: இது குறித்து விரிவான விளக்கத்தை என்னால் தர முடியாது. இருப்பினும் மனஅழுத்தங்களுடன் கூடிய மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். இந்த செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே. அதற்காக வேண்டி இந்த மாணவர்களை விட்டுவிடமுடியாது. வட பகுதிகள் தமிழர் கல்வியால் எழுச்சி பெற்றவர்கள். கல்வியால் எழுச்சிபெற்ற சமூகம் கல்வியால் வீழ்ச்சி பெற்றுவிடக் கூடாது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டிய கட்டத்தில் உள்ளோம். ஏதேவொரு வழியில் ஓரளவுக்காவது கல்வியின்பால் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த விழைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். 

 கேள்வி : இங்குக் கற்கும் மாணவர்கள் காலை உணவைப் பெற்று வருகிறார்களா? 

 பதில் : முகாம்களில் வழங்க வேண்டிய உணவினையே பெற வேண்டிய நிலையில் இவர்கள் இருப்பதினால் அனைத்து மாணவர்களும் காலை ஆகாரத்தை எடுத்த பின்பே வருவார்கள் என்று கூற முடியாது. மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ்உணவு வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதே நேரம் நலன்புரி நிலையப் பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும் இயங்குவதை இங்கு குறிப்பிடல் வேண்டும். அதாவது காலையில் சில வகுப்புகள், மத்தியானம் சில வகுப்புகள், பின்நேரம் சில வகுப்புகள் என ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொதுவாக காலை 7.30 மணிமுதல் பி.ப 1.30 மணிவரை ஆறு மணிநேரம் இயங்கும். ஆனால் இங்கு இயங்கும் பாடசாலைகள் 3 அல்லது 4 மணிநேரமே இயங்கி வருகின்றன. கேள்வி: வட இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுள் தரம் 05 இல் பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக சிந்தனைவட்டம் சிறப்புக்இ கவனம் செலுத்தி வருவதாக அறிகின்றோம். தரம் 5வகுப்பை நீங்கள் ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்? பதில்: இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும். தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதே நேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் பணம் வழங்கும். (ஆண்டுதோறும் 5000 ரூபாய்) அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்பரீட்சை தரம் 5 - ஐ சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற வகையிலும் இப்பரீட்சை இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் இப்பரீட்சையை நாங்கள் முதற் கட்டமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம். 

 கேள்வி: நலன்புரி நிலையங்களில் தரம் 5 இல் கல்வி பயிலும் எத்தனை மாணவர்கள் அளவில் இருக்கின்றார்கள்? 

 பதில்: வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதிய உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும்.. இந்த மாணவர்களின் பரீட்சையை எதிர்நோக்கி நாம் செயல்பட்டு வருகின்றோம். கேள்வி: இந்த மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா? பதில்: இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப்படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர். 

 கேள்வி: அப்படியாயின் ஆறு மாதங்களுக்கு மேல் பாடசாலை கல்வியையே பெறாத மாணவர்களுக்கு எந்த வகையில் வழிகாட்டலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்? 

 பதில்: பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர். 

 கேள்வி: இத்திட்டத்தைச் சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்கிறதா? அல்லது வேறும் அமைப்புக்களோடு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா? 

 பதில்: இத்திட்டத்தை சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. இந்த செயற்பாட்டுக்கு லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்'தினர் மற்றும் 'மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்' உட்பட லண்டனில் வேறு சில அமைப்புகள் வழங்கும் உதவியினாலேயே இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லக் கூடியதாகவுள்ளது. ஒரு மாணவனுக்கு 570 ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்று நடத்துகின்றது. 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மீதித் தொகையினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்'திரும், வேறும் சில அமைப்புகளும் வழங்க முன்வந்துள்ளன. இலங்கையிலிருந்து பாடத்திட்டத்திற்கு அமைய இவ்வினாத்தாள்களை தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக வினியோகித்தல் போன்ற கருமங்களை சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றனர். எமது இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார். கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மாணவர்களின் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றீர்கள்? பதில்: 180 நாட்களுள் இடம்பெயர்ந்த மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. அவ்வாறு நடக்குமாயின் வரவேற்கக்கூடிய விடயம். ஆனால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வட இலங்கை பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக சீர்குழைந்துள்ள நிலையில் இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. எவ்வாறாயினும் ஆறு மாதங்களுக்கு மாத்திரமல்ல. இன்னும் நீண்ட காலத்துக்கு வன்னிப் பிரதேசத்தில் நலன்புரிநிலையங்கள் இயங்குமெனக் கொண்டால் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால நலன்கருதி பல விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். 

 கேள்வி: அவ்வாறு யாதாயினும் திட்டம் வைத்துள்ளீர்களா? 

 பதில்: மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் வாழும் வரை எம்மால் ஆன உதவிகளை செய்யவே திட்டமிட்டுள்ளோம். எமது முதல் கட்டப்பணியின் பலாபலன்களை அவதானித்து இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை மையமாகக் கொண்டு சில வேலைத்திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம். எமது இந்த செயல்திட்டத்துக்கு பேராதனைப் பல்கலைக்கழக சில புத்திஜீவிகளும் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றனர். 

 கேள்வி: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் ஈழத்துத் தமிழர்களும் இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனரா? 

 பதில்: இவ்வளவு பாடங்களைக் கற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணையக்கூடிய ஒரு போக்கினை காட்டி நிற்கவில்லை. இன்று சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்தாலும்கூட புலம்பெயர்ந்த தமிழர்களால் கொள்கையளவிலான ஒருமைப்பாட்டினைக் காணமுடியவில்லை. இது விமர்சனங்களுக்கும், விளம்பரங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு காலம். அண்மையில் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் "வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் இன்றைய சூழ்நிலை வடபுலத்து தமிழர்களின் கல்வியை நேரடியாக 15 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளிவிட்டது" என்று கூறப்பட்ட கருத்து சிந்திக்கத்தக்கதே. அதாவது, இதன் உள்ளார்த்தமான கருப்பொருள் இன்னுமொரு புதியதொரு தலைமுறையினரால் தான் கல்வியினை கட்டியெழுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. எனவே, தற்போது உள்ள இளம் சந்ததியினரை குறிப்பாக மானசீக தாக்கங்களுக்கு உட்பட்டுள்ள இவர்களுக்கு நாம் செய்ய முடியும். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர். 

 கேள்வி: தமிழ் நாட்டில் வாழும் எமது உறவுகளின் செயற்பாடு தொடர்பாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்? 

 பதில்: தமிழ் நாட்டில் வாழும் உறவுகள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றியும், அகதிகள் பற்றியும் விசேட கரிசனைக் காட்டி வருவது ஆரோக்கியமான விடயமே. அதேநேரம், சில அரசியல்வாதிகள் இதனைக் குறுகிய நோக்கில் அவதானித்து அரசியல் இலாபம் தேட விளைவது வேதனைத் தருகின்றது. தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான வேண்டி பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல தமிழ் நாட்டில் உள்ள தனிப்பட்ட பரோபகாரிகளும் இம்மக்களைப் பற்றி சிந்தித்து யாதாவது தம்மால் ஆன உதவிகள் புரிவார்களாயின் இச்சந்தர்ப்பத்தில் பேருதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பரோபரிகாரிகள் உதவிகள் செய்யுமிடத்து இடம்பெயர்ந்தவர்களின் அத்தியாவசியத் தேவையென்பதைவிட சமூகத்தின் எதிர்கால நோக்கம் கொண்டு செயல்படுமிடத்து அதன் பயன் மிகவும் உச்சமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். ஏனெனில், தமிழ் நாட்டில் வாழக்கூடிய பல பரோபகாரிகளுக்கு இலங்கையுடனான நேரடியான தொடர்புகள், உறவுகள் காணப்படுகின்றன. எனவே, அவர்கள் மூலமாக உண்மை நிலைகளை அறிந்து உதவிகளை வழங்க முற்படுவார்களாயின் வரவேற்கக்கூடியதாக இருக்கும். இவ்விடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அரச மட்ட உதவிகள் ஒருபுறமிருக்க தமிழ் நாட்டில் வாழக்கூடிய பரோபகாரிகள் இலங்கை தமிழ் அகதிகள் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். 

 உரையாடியவர்: பொன்மொழிவேந்தன் 

2 கருத்துகள்:

Adriean சொன்னது…

பயனுள்ள இந்த பேட்டியை வெளியிட்டதிற்க்கு நன்றி.

முனைவர் கல்பனாசேக்கிழார் சொன்னது…

பயனுள்ள தகவல் வெளியிட்டமைக்கு நன்றி.